[X] Close

வறண்டுபோகும் கொல்லிமலை!- வேலைக்காக கேரளா செல்லும் விவசாயிகள்


kollimalai-drought

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 11:11 am
  • அ+ அ-

கி.பார்த்திபன்

விவசாயி அழுதால் நாடு அழியும்' என்பார்கள். ஆனால், இன்றோ நித்தம் நித்தம் விவசாயி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை விதைக்கும்போதும், "விளைச்சல் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் விலை கிடைக்குமா? குறைந்தபட்சம் கையைக் கடிக்காமல் வருவாய் கிடைக்குமா?" என்றெல்லாம் புலம்பியபடியே சாகுபடியில் ஈடுபடுகின்றனர்  உழவர் பெருமக்கள். அதேசமயம், உழவைக் கைவிட்டு, வேறு வேலை தேடிச் செல்லும் விவசாயிகளும் உண்டு.

இதேநிலைதான். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள விவசாயிகளுக்கும். போதிய மழையின்மை உள்ளிட்ட காரணங்களினால் கொல்லிமலையில்  விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் ஆறு, ஏரி, குளம் போன்றவை பெரும்பாலான மாதங்கள் வறண்டு, வானம் பார்த்தபூமியாய் காட்சியளிக்கின்றன. இதனால்பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வேலை தேடி கேரளாவுக்கு செல்லும் பரிதாப நிலை கண்ணீரை வரவழைக்கிறது.

நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது மூலிகை வளம் வாய்ந்த கொல்லிமலை. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கொல்லிமலை, கடல்மட்டத்திலிருந்து 3,500 அடி உயரம் கொண்டது. கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உப்பட்ட   14 ஊராட்சிகளில்  275 சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்.

காபி, மிளகு சாகுபடி

காபி, மிளகு, பலா, மரவள்ளி, வாழை, அண்ணாசி, நெல் போன்றவை பிரதானப்  பயிர்கள்.  காபி, மிளகு மட்டும் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.  இதற்கு இணையாக மரவள்ளி சாகுபடியும் உண்டு.  இங்கு விளைவிக்கப்படும் பயிர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம். செயற்கை உரங்கள் எதுவுமின்றி, மலை முழுவதும் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்யப்படுவதும், மூலிகை வளம்  நிறைந்த மலை  என்பதுமே இதற்கு காரணம்.

குறிப்பாக, கொல்லிமலையில் விளையும் மிளகு,  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களாலும் நேரடியாக வாங்கிச் செல்லப்படு
கிறது.  மலையடிவாரமான பேளுக் குறிச்சியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி, ஒரு மாதத்துக்கு நடைபெறும் சந்தைக்கு வந்தும் 
மிளகு உள்ளிட்ட விளை பொருட்களை  வாங்கிச் செல்கின்றனர். இங்கு விற்கப்படும் மிளகின் காரத்தன்மை பிரசித்தி பெற்றது.

இதேபோல, கொல்லிமலையில் நமரன் ரக வாழை விளைவிக்கப்படுகிறது. கொல்லிமலையில் மட்டுமே விளையும் சுவை மிகுந்த இந்தப் பழத்தை, மலைக்கு சுற்றுலாச்  செல்வோர், சோளக்காட்டில் உள்ள பழப் பண்ணையில் வாங்கிச் செல்லத் தவறுவதில்லை.

சராசரி மழையளவு குறைவு

இந்தப் பயிர்களுக்கு பாசன ஆதாரமாக,  மலையில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், ஏரி, குளம் மற்றும் கிணறுகள் விளங்குகின்றன. இந்நிலையில், காலநிலை மாறுபாட்டால் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரிக்கும் குறைவான அளவே  மழை பெய்கிறது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையவு 716.54 மில்லிமீட்டர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இதைவிட மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு உள்ளது.
போதிய மழையின்மையால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி,குளங்கள் பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகின்றன. வறட்சியின் இந்தக்  கோரப்பிடிக்கு கொல்லிமலையும் தப்பவில்லை. இங்குள்ள ஆறு, ஏரி, குளங்களில், குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் தண்ணீர் உள்ளது.

பெரும்பாலான மாதங்கள் வறட்சி நிலவுவதால், விவசாயத்தை ஆண்டு முழுவதும் மேற்கொள்ள இயலாத நிலையில் தவிக்கின்றனர் மலைக் கிராம விவசாயிகள். இதனால், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி,  கேரள மாநிலத்துக்குச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கொல்லிமலையைச் சேர்ந்த தமிழ்நாடு பழங்குடியினர் நலச் சங்கத் தலைவரும், விவசாயியுமான குப்புசாமி கூறும்போது,  "வறட்சியால் வாழ்விழந்த விவசாயிகளும்,  கூலித் தொழிலாளர்களும் கேரளாவுக்குச் செல்கின்றனர். இதனால், ஆண்டுக்காண்டு விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே செல்கிறது. வேலைக்காக வெளியூர் செல்வோர்,  மிளகு, காபி  அறுவடை சீசன் மற்றும் பண்டிகை சமயத்தில் மட்டும் கொல்லிமலை திரும்புகின்றனர். பின்னர், மீண்டும் வேலைக்காக கேரளா சென்றுவிடுகின்றனர். ஆண்டு முழுவதும் கொல்லிமலையில் விவசாயம் மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத்தரும்.

தடுப்பணைகள் அவசியம்

மலையில் உள்ள சிற்றாறுகளின் குறுக்கே,  தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தற்போதுள்ள தடுப்பணை
களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதனால், மழைக்காலங்களில் குறைந்த அளவே மழை பெய்தாலும், ஆறுகளில் வரும் தண்ணீர், தடுப்பணைகள் மூலம் தேக்கப்படும். இதன்மூலம் நிலத்தடி நீ்ர்மட்டம் உயர்ந்து, விவசாயம் மேற்கொள்ள உதவியாக இருக்கும்" என்றார்.

காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின்  கூட்டமைப்பு செயலர் செ.நல்லசாமி கூறும்போது,  "ஏரி, கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப்படுத்தினாலே தண்ணீர் அதிக அளவு தேங்கும். மேலும், தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டும் உயரும். அதிக அளவு மரங்களை கட்டாயம் வளர்க்க வேண்டும்.

மேட்டூர் அணையின் இடதுபுறத்தில் கால்வாய் வெட்டி, அதை திருமணிமுத்தாறு, சரபங்கா, வசிஷ்ட நதியுடன் இணைத்தால், நாமக்கல் மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்லும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close