[X] Close

பின்லாந்து செல்லும் பின்னலாடைத் தொழிலாளி மகன்!- சாதித்த அரசுப் பள்ளி மாணவர் பூவரசன்


finland-student

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 10:37 am
  • அ+ அ-

இரா.கார்த்திகேயன்

சாதிப்பதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல அரசுப் பள்ளி மாணவர்கள். இதை மீண்டும் நிரூபித்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் பூவரசன். கல்விச் சுற்றுலாவுக்காக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்குச் செல்லத் தேர்வாகியுள்ளார் படியூர் அரசு  மேல்நிலைப் பள்ளி  மாணவரான இந்த பூவரசன்.இவரது தந்தை இளையராஜா, தாய் ஜோதிமணி. தஞ்சாவூரைச் சேர்ந்த இவர்கள் பிழைப்புத்தேடி 20 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள். மூத்தவன் பூவரசன், மகள் பவித்ரா. காங்கயம் சிவன்மலை அருகேயுள்ள பெருமாள்மலைதான் பூவரசனின் சொந்த ஊர். 'படிப்பில் கெட்டிக்காரன்' என்று பள்ளி ஆசிரியர்கள் வாஞ்சையோடும், நெகிழ்ச்சியோடும் பாராட்டுகிறார்கள் பூவரசனை!

தமிழக பள்ளிக் கல்வித் துறை, 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களில்,  அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்  ஆகிய துறைகளில் சிறந்துவிளங்கும் மாணவர்களில்  50  அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது.  இதில்,  திருப்பூர் மாவட்டத்தில் தேர்வாகியுள்ள ஒரே  மாணவர் பூவரசன்தான் என்பது இந்த மாவட்டத்துக்கே  பெருமைதரக் கூடியது.

திருப்பூர்-காங்கயம் சாலையில் உள்ள படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் பூவரசனை சந்தித்தோம்.
“பெற்றோர் இருவரும் பின்னலாடை நிறுவனத்தில் வாரக் கூலித் தொழிலாளர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். நான், பெருமாள்மலையில் உள்ள  தனியார் பள்ளியில்தான் முதலில் படித்தேன். அங்கு 7-ம் வகுப்புக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலையில், படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

பார்வையற்றோருக்கான ஊன்றுகோல்

மிகுந்த சிரமத்துக்கிடையில்தான் என்னையும், தங்கையையும் படிக்க வைக்கிறார்கள். பள்ளியின் சூழல், ஆசிரியர்களின் அரவணைப்பான கல்வி மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால்,  எவ்வித இடையூறுமின்றி நான் கல்வி கற்பது தொடர்கிறது.  பள்ளி அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் நான் பங்கேற்றேன். கடந்த ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், பார்வையற்றோர் பயன்படுத்தும், `நடை ஊன்றுகோலில்’ பெல் அமைத்து, அவர்கள் குறிப்பிட்ட தூரம் சென்றதும், அது ஒலி எழுப்பும் வகையில் தயாரித்திருந்தேன். அதாவது, கண் பார்வையற்றவர்கள் ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டர் நடந்ததும், பாதையில் அடுத்தது என்ன உள்ளது என்பதை மனக்கண்  வழியே அறிந்துகொள்ளும் வகையில், இந்த மாதிரியை தயாரித்திருந்தேன். இதற்கு மாவட்ட அளவில் 2-ம் பரிசு கிடைத்தது.

இதன் மூலம், வீட்டுக்குள் சமையல்கட்டு தொடங்கி கழிவறை, படுக்கை அறை, அன்றாடம் நடந்து செல்லும் பாதையில்  உள்ளவற்றை எளிதாகக்  கண்டுபிடிக்க இயலும். 'இது பார்வையற்றவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என ஆசிரியர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் பாராட்டினர். இந்த மாதிரியை செய்ய உதவிய  ஆசிரியை சுதாஈஸ்வரி, தலைமை ஆசிரியை எஸ்.நாகரத்தினம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. அவர்களால்தான் கல்விச் சுற்றுலா செல்ல  வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

பள்ளி ஆசிரியைகள் கூறியபோது, “எதையும் ஆர்வமாகவும், கற்றுக்கொள்ளும் நோக்குடனும்  படிக்கும் மாணவர் பூவரசன். வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து  போட்டிகளில் பங்கேற்கும் மாணவர் அவர். அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அறிவியல் மற்றும்  கல்விச் சுற்றுலாவுக்காக பள்ளிக் கல்வித் துறை தமிழகம் முழுவதும் தேர்வு செய்த 50 மாணவர்களில் இவரும் ஒருவர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும்  20-ம் தேதி தொடங்கி,  30-ம் தேதி வரையிலான கல்விச் சுற்றுலாவில் இவர் பங்கேற்கிறார். இது எங்கள் கிராமப் பள்ளிக்கு கிடைத்த பெருமை” என்றனர்.

நெகிழும் பெற்றோர்!

பூவரசனின் பெற்றோர் கூறும்போது, "கூலி வேலைக்குச் சென்று, குடும்பத்தை காப்பாற்ற வேண்டியுள்ளதால், நாங்கள் எங்கள் ஊரை விட்டே வெளியில் எங்கும் சென்றதில்லை. அப்படிப்பட்ட நிலையில், எங்கள் மகன்  வெளிநாட்டுக்குச் செல்ல தேர்வாகியுள்ளதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை,  வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?  குடும்பத்தின் சூழ்நிலையை குழந்தைகள் உணர்ந்துவிட்டாலே, வாழ்வில் பாதி துயரங்கள் இருக்காது. மகன் பூவரசன், குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த மகன். படிப்பைத்தவிர வேறு எதிலும் பெரிதாக நாட்டம் இல்லை. 

செல்போனைக்கூட தேவையின்றிப் பயன்படுத்தமாட்டான். நன்றாகப் படிப்பதாக ஆசிரியர்கள் சொல்வார்கள். தொடர்ந்து பக்கபலமாக இருக்கும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
"மன அழுத்தம் இல்லாத குழந்தைகளின் கல்வித் தாயகமாக கல்வியாளர்களால் கொண்டாடப்படும் பின்லாந்து கல்வி முறை, தமிழகத்திலும் கடை பிடிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், திருப்பூர் மாணவர் பின்லாந்து நாட்டுக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அந்த நாட்டின் கல்விமுறையை மாணவர் பூவரசன் தெரிந்துவர வேண்டும்" என்றனர் கல்வியாளர்கள்.

ஜெய்வாபாய் பள்ளி ஆசிரியை தேர்வு

கல்விச் சுற்றுலாவில், 50 மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் திருப்பூர்,  ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியை சி.கலைவாணியும் ஒருவர். அவர் கூறும்போது,  “பள்ளியில் தயாராகும் அறிவியல் போட்டிகளுக்கு வழிகாட்டும் ஆசிரியையாக இருந்தேன். மூலிகைத் தோட்டம், பயோகாஸ் உட்பட அறிவியலை, அன்றாட வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான கட்டுரைகள்  தயாரிப்பில் மாணவர்களுக்கு உதவி வந்தேன். இந்நிலையில், வெளிநாட்டுச்   சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல 32 மாவட்டங்களில் இருந்து 64 பேரை முதல்கட்டமாக தேர்வு செய்தனர். அந்த 64 பேரில் இருந்து, நானும்,  மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் இமானுவேலு-ம் தேர்வாகியுள்ளோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close