[X] Close

கருவறை வரை செல்லும் காளைகள்!- 800 ஆண்டுகளாக தொடரும் வழிபாடு


bull-fights

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 10:35 am
  • அ+ அ-

எம்.நாகராஜன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து  15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோமவாரப்பட்டி ஊராட்சி. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பகுதியில் கிடைத்த நடுகல், முதுமக்கள் தாழி,  பழங்கால நாணயங்கள் மூலம் இவ்வூரின் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.இந்த  ஊரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆல்கொண்டமால் (பெருமாள்) கோயில் அமைந்துள்ளது. கால்நடைகளை தெய்வமாகப் போற்றும் இக்கோயிலில்  ஆண்டுதோறும் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 3 நாள்கள் `தமிழர் திருநாள் விழா` நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது.

இந்தக் கோயில் சுமார் 850 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. உடுமலை மற்றும் அதைச்  சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து  வழிபடுவது வழக்கம். கால்நடைகளின் நலனுக்காக வேண்டிக்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் மாட்டு வண்டிகளில் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதுதான் இக்கோயிலின் சிறப்பு. மேலும், தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், கோயிலுக்குள் கால்நடைகளைக்  கொண்டுசென்று வழிபடும் முறையும்  இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.அதேபோல, பக்தர்களின் நேர்த்திக் கடனாக கால்நடைகளை உபயம் வழங்கும் முறையும் இங்கு பின்பற்றப்படுகிறது. மண்ணால் செய்த பசு, காளை, குதிரை, நாய், பூனை ஆகிய பொம்மைகளைக் காணிக்கையாக வழங்கும்,  விநோத வழக்கமும் உண்டு.

தல வரலாறு

துவாபர யுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்-யசோதை தம்பதியிடம் மகனாக வளர்ந்த கண்ணன், கறவை மாடுகளை மேய்த்து வந்த காரணத்தால், பசுக்கள் நீங்காத செல்வத்தை அளித்தன. ஸ்ரீகிருஷ்ணரின் திருக்கண் பார்வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர். உடுமலை-செஞ்சேரிமலை செல்லும் சாலையில் ஆலமரத்தூர் என்ற அடர்ந்த காட்டில், கொடிய விஷமுள்ள பாம்புகள் வாழும் ஓர் ஆலமரத்தின் கீழ், சிவலிங்க வடிவில் புற்று இருந்தது. இந்தப்  பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் தாமாகவே பாலைச் சொரிந்தன. ஒரு நாள் பசு ஒன்றை, பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு பாதிக்காமல், பசுவின் விஷத்தை மாயவன் உண்டு பசுவைக்  காப்பாற்றினார். இதனால் அவர் `ஆல்கொண்டமால்` என்று பெயர் பெற்றார் என்பது ஐதீகம்.இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் திருமாலையும்,  சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபடத் தொடங்கினர். அந்த  வழிபாட்டு முறை தற்போதும்  தொடர்கிறது.

நடுகல் வழிபாடு

பெரும்பாலான  கோயில்களில் சிலைகளை வழிபடுவர். ஆனால்,  ஆல்கொண்டமால் கோயிலில் விஷ்ணு அவதாரங்களாக வடிக்கப்
பட்ட நடுகல் மூலவராக வணங்கப்படுகிறது. இவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மேல்பாகத்தில் கிருஷ்ணபகவானுக்கு இருமருங்கில் சூரியன், சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவிழாவின்போது பக்தர்கள் கறவைப் பாலைக்  கொண்டுவந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து,  திருநீரும்,  தீர்த்தமும் பெற்றுச் செல்வர்.  அந்த தீர்த்தத்தை  கால்நடைகள் மீது தெளிப்பதால், அவற்றுக்கு நோய்கள் வராது என்பது விவசாயிகளின்  நம்பிக்கை.இந்தக் கோயிலில் உற்சவராக திருமால் இருந்தபோதும், சிவ தலங்களில்  இருப்பதுபோல நந்தி இருப்பதும் இக்கோயின்  தனிச் சிறப்பு.

மண் உருவாரங்கள் ஆல்கொண்டமால் கோயில் விழாவையொட்டி அருகில் உள்ள புக்குளம் கிராமத்தில் மண்பாண்டக் கலைஞர்களால் பலவகையான மண் உருவாரங்கள் (பொம்மைகள்) உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை வர்ணம் தீட்டப்பட்டு,  பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை வாங்கிச் செல்லும் பக்தர்கள், கோயிலில் தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரைக்கொண்டு,  தாங்கள் கொண்டுவந்த உருவ பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர்.

மாட்டுப் பொங்கலனன்று ஈன்ற கன்றுகளை, கோயிலுக்கென்று அப்பகுதி விவசாயிகள் விட்டுவிடுவார்கள். கிராமங்களில் தன்னிச்சையாக சுற்றித்திரியும் அவற்றை சலங்கை மாடு அல்லது சலகெருது என அழைக்கிறார்கள்.  மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் உருமி இசைக்கு ஆடும் வகையில் இவற்றுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். 

கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வியல் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளில் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆல்கொண்டமால் கோயில் விழாவிலும் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்.

இதுகுறித்து கொங்கு மண்டல ஆய்வுமைய அமைப்பாளர் உடுமலை ஆர்.ரவிக்குமார் கூறும்போது, "சோமவாரபட்டி  என்ற ஊர்,  அக்காலத்தில் `அமரபுயங்கபுரம்` என்று அழைக்கப்பட்டுள்ளது. அங்கு `அமரபுயங்கீஸ்வரர்` எனும் சிவன் கோயிலும் உள்ளது. ஆல்கொண்டமால் கோயில் வளாகத்தில் உள்ள உள்ள கல்வெட்டில், மண் குடுவையுடன் ஒரு பெண் இருப்பதுபோல பொறிக்கப்பட்டுள்ளது.  பண்டைய பெருவழிப் பாதையாகவும் இப்பகுதி விளங்கியுள்ளது. வைணவர்கள் வருகைக்குப் பின்  இக்கோயிலில் பெருமாள் வழிபாடு அதிகரித்தது. மாடுகளை நேரடியாக கோயிலுக்குள் அழைத்துச் சென்று,  தீபாராதனை காட்டி வழிபடும் பழக்கம் வேறு எங்கும் இல்லை. இறைவனுக்குச் செய்யும் அத்தனை வழிபாடுகளும், பசுக்களுக்கும், காளை மாடுகளுக்கும் இக்கோயிலில் நடைபெறுவது குற்ப்பிடத்தக்கது' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close