[X] Close

வாயில்லா குழந்தைகளின் வளர்ப்புத் தாய்


dog-saver

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 11:01 am
  • அ+ அ-

க.ஆர்த்தி

பாலைப் பொழிந்துதரும் பாப்பா,  அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா; வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா" என்று அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார் மகாகவி பாரதியார். ஆனால், சக மனிதர்களிடமே அன்பு செலுத்தும் பழக்கம் குறைந்து வரும் சூழலில், பிராணிகளின் நலனைக் கவனிப்பவர்கள் கொஞ்சம் குறைவுதான்.

குறிப்பாக, தெருவில் நாய்களைக் கண்டால், கல் வீசித் துரத்துபவர்கள்தான் அதிகம். நாம் குடியிருக்கும் ஊர், தெரு, வீடு என அனைத்து இடங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள், ஒரு வகையில் நமக்குப் பாதுகாப்பு எனலாம். இரவில் தூங்கும்போது நாய் குரைத்தால், பெரும்பாலானோருக்கு எரிச்சல்தான் வரும்.  உண்மையில், அவை நம்மை எச்சரிக்கின்றன. தெரு நாய்கள் எனச் சித்தரிக்கப்பட்ட நாட்டு நாய்கள் நன்றிக்குப் பெயர் பெற்றவை.

இன்று வெளிநாட்டு நாய்களின் மோகத்தால், நாட்டு நாய்கள் தெருவுக்கு விரட்டப்படுகின்றன. தெருவிலும் அவற்றை நிம்மதியாய் இருக்க விடுவதில்லை நாம். குப்பைத் தொட்டிகளுக்குள்ளும், குப்பை வண்டிகளின் பின்னும் தனக்கான உணவைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன தெரு நாய்கள். இவ்வாறு பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் தருகிறார்  கோவை கவுண்டம்பாளையத்தில்  வசிக்கும் கீதா ராணி (63).

`ஸ்நேகாலயா விலங்குகள் காப்பகம்` என்ற அமைப்பைத் தொடங்கி,  15 ஆண்டுகளாக 700-க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை பாதுகாத்து வளர்த்து வருகிறார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட, கை, கால்களை இழந்த மாடுகள், கழுதைகள், குதிரைகளையும் பராமரித்து வருகிறார்.

 700-க்கும் மேற்பட்ட நாய்கள்அவரை சந்தித்தோம். "சிறு வயதில் எனது பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாய்கள்தான் எனது தோழிகள். வாகனங்களில் அடிபட்டு, ரத்தம் சிந்தி, காயங்களுடன் அலையும் நாய்களைப் பார்த்தால் நான் அழுதுவிடுவேன். உடனே, மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து காப்பாற்றுவேன்.  இவ்வாறு 700-க்கும் மேற்பட்ட நாய்களைக் காப்பாற்றி, வளர்த்துள்ளேன்.

தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, குப்பைத்  தொட்டியில் வீசப்பட்ட குட்டிகள், வளர்ப்பவர்களால் கைவிடப்பட்ட, நோயுற்ற நாய்கள், பூனைகள்,  ஊனமுற்ற நாய்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட விலங்குகளும்  இந்தப் பட்டியலில் உண்டு.

வாரத்தில் மூன்று நாட்கள் கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து, நான் வளர்க்கும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு,  பெங்களுருவில் இருந்து மருந்து வரவழைக்கிறோம்.

தினமும் 500 கிலோ உணவு

குட்டிகள், ஆண் நாய்கள், பெண் நாய்கள், நோய்த்  தொற்று உள்ள நாய்கள் என பிரித்து வைத்துப் பராமரிக்கிறோம். இதற்காக  5 பணியாளர்கள் உள்ளனர். தினமும் மூன்று வேளைக்கும் சேர்த்து 500 கிலோ உணவு தயாரிக்கப்படுகிறது. இடத்தை தூய்மை செய்யும் வேலை நாள் முழுவதும் இருக்கும். மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து, விலங்குகளைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் அழைப்புகளையும் உதாசீனப்படுத்தாமல், உடனடியாக அங்கு சென்று பிராணிகளை மீட்டு வருகிறோம்.  பலர் மனமுவந்து கொடுக்கும் நன்கொடையால் இன்று வரை நாய்களுக்கு உணவளிக்க முடிகிறது.

தற்போது நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஸ்நேகாலயாவில் உள்ள விலங்குகளைப் பராமரிக்க தனி இடம் ஒதுக்கித்  தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோவை மாவட்ட ஆட்சியரிடமும், நிலம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது,  வாடகைக்கு உள்ள இடத்தையும் சொந்தமாக வாங்குவதற்கான முயற்சியில் பலரது உதவிகளை நாடியுள்ளேன். என்னை நம்பியிருக்கும் இத்தனை உயிர்களையும், என் கடைசி மூச்சு உள்ள வரை  காப்பாற்றுவேன்" என்கிறார் உறுதியுடன்.

நாய்களைப் பற்றிப் பேசும்போது, அவற்றைக் குழந்தைகள் என்றே அழைத்த கீதா ராணியின்  ஜீவகாருண்யத்தை  உணர்ந்த மனநிறைவுடன் அங்கிருந்து புறப்பட்டபோது, `அனைத்து உயிர்களையும் நேசி` என்று கீதாராணி கூறிய வாசகம், என்றென்றும் மனதில் இருக்கும் என்றே தோன்றியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close