[X] Close

நம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்- ‘பிரிக்கால்’ விஜய்மோகனின் சக்சஸ் ஃபார்முலா


vijayamohan

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 10:58 am
  • அ+ அ-

த.செ.ஞானவேல்

“அவசரமாக ஓடுவதைவிட, நேரத்துக்குப் புறப்படுகிற விவேகமே முன்னேறுவதற்கு சிறந்த வழி. என்னுடைய வழிகாட்டிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு, நான் பின்பற்றுகிற வெற்றி மந்திரம் இதுதான். தந்தை தொழில் துறையில் முத்திரை பதித்தவராக இருந்தால், அடுத்து வருகிற தலைமுறைக்கு அதுதான் பெரிய சவால்.  நாம் எதைச் செய்தாலும், `உங்க ஐயா என்னெல்லாம் பண்ணாரு தெரியுமா?` என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். வெற்றிகரமாக தொழில் செய்ய வேண்டும் என்பதே முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு  சவாலாக இருக்கும். தொழில்துறையில் பெயர்பெற்ற குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்கள்,  முன்னோர் சம்பாதித்த நற்பெயர் கெடாமல், தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்கிற இரட்டை சவாலை எதிர்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவு அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்’’ என்கிறார்  `பிரிக்கால்` விஜய்மோகன்.

1974-ல் கோவையில் 3 ஆயிரம் சதுர அடியில் 30 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட `பிரிக்கால்` நிறுவனம், இன்று 6,000 பணியாளர்களுடன் வளர்ந்திருக்கிறது. ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரகாண்ட் என இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இந்தோனேஷியா, பிரேசில், செக் ரிபப்ளிக் என வெளிநாடுகளிலும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் துறையில் ரூ.1,800 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும்  `பிரிக்கால்` நிறுவனத்தை உருவாக்கிய விஜய்மோகன்,  இன்றும் `பணியாளர் அடையாள அட்டையை` அணிந்த பிறகே தொழிற்சாலைக்குள் நுழைகிறார்.

`பணத்தின் அவசியத்தைவிட, உழைப்பின் முக்கியத்துவத்தையே சொல்லி பெற்றோர் என்னை வளர்த்தனர்.  இதுவே பெற்றோர் எனக்களித்த அழியாத சொத்து. என் தேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்கிறேன்.  71 வயதை தாண்டிய போதும் செய்கிற எந்த வேலையையும் ரசித்து, அனுபவித்து மகிழ்ச்சியாகச் செய்ய முடியும்.  எப்போதும் செல்வந்தனாக என்னை உணரச் செய்வது இந்த மனநிலைதான்.

`பிரீமியர் மில்` என்ற பெயர் இந்திய அளவில் பிரபலமாக இருந்தது.  `நூலின் விலை இதுதான்` என பிரீமியர் மில் என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ, அதுவே மற்றவர்கள் நிர்ணயம் செய்கிற விலையாக இருக்கும்.  அந்த அளவு பெயர் பெற்ற நிறுவனத்தை பெரியப்பாவும், அப்பாவும் இணைந்து நடத்தினர்.  பெரியப்பாவின் தொலைநோக்குப் பார்வையும், அப்பாவின் செயல்திறனும் ஒன்றிணைந்து, நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்தது.

பெரிய தொழில் குடும்பங்களில் பிறந்தவர்கள், பெற்றோர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பாற்றினால் போதும்.  ஆனால், நான் பெரியப்பாவும், அப்பாவும் வெற்றிகரமாக நடத்திய டெக்ஸ்டைல் தொழிலைத் தொடர முடியாத நிலையில் இருந்தேன். பஞ்சாலைக்குள் சென்றால், காற்றில் மிதக்கும் பஞ்சுத்  துணுக்குகள் சுவாசப் பகுதிகளுக்குச் சென்று விடும்.  சிறுவயது முதலே எனக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால், முழுநேரத் தொழிலாக டெக்ஸ்டைல் துறையைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருந்தேன். வேறு தொழிலைத் தேட வேண்டிய கட்டாய சூழலில் இருந்தேன்.

ஆடம்பர வசதிகள் கிடையாது!

வசதியும், மதிப்பும் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், அவசியமற்ற வசதிகளை அப்பா எங்களுக்குத் தரவில்லை.  அடிப்படை வசதிகளைக் கேட்காமலேயே தருகிறவர், ஆடம்பர வசதிகளைக் கேட்டாலும் மறுத்துவிடுவார்.  எதுவாக இருந்தாலும், `கண்டிஷன்ஸ் அப்ளை` என்ற கட்டுப்பாட்டுடன் மட்டுமே, அது எங்களுக்குக் கிடைத்தது.
வீட்டில் கார் இருந்தாலும், நான் உட்பட, மூன்று சகோதரர்களும் சைக்கிளில்தான் பள்ளிக்குப் போவோம். எங்களைவிட வசதி குறைவாக இருக்கிற வீட்டுப் பிள்ளைகள் கூட காரில்தான் வருவார்கள். `காரில் போவதாக இருந்தால், மூன்று பேரும் ஒரே நேரத்தில் பள்ளிக்குக் கிளம்பி, மாலை ஒரே நேரத்தில் வீடு திரும்ப வேண்டும்.  சைக்கிளில் சென்றால், உங்கள் விருப்பம்போல பள்ளியில் மாலையில் விளையாடிவிட்டு வீடு திரும்பலாம்` என்றார் அப்பா.

முடிவெடுக்கும் வாய்ப்பு

`வசதிக்கும் மதிப்புக்கும் கார் பயணமா? சுதந்திரமான சைக்கிள் பயணமா?` என அலசிப் பார்த்து, முடிவை பத்து வயதில் நாங்களே எடுத்தோம். சுதந்திரமாக சைக்கிளில் போவதுதான் சிறந்தது என்று அப்பா புரியவைத்தார்.  எதையும் அதிகாரத் தோரணையில் திணிக்காமல், நாங்களே சிந்தித்து முடிவெடுக்கும் வாய்ப்புகளை அப்பா தொடர்ந்து வழங்குவார். நாங்கள் வளர்ந்த சூழலில், இதுபோன்ற முடிவெடுக்கும் சூழலையும், சுதந்திரத்தையும் பெற்றோர்கள் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

மனதுக்குப் பிடித்த விளையாட்டை விளையாட ஊக்கப்படுத்தும் அப்பா, உருண்டு புரண்டு விளையாடும்போது அழுக்காகிற உடைகளை நாங்களே துவைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.  வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும், `நம்முடைய வேலையை நாமே செய்ய வேண்டும்` என அவர் தந்த பயிற்சி, இன்றுவரை எனக்குள் உயிர்ப்புடன் இருக்கிறது. அறிவுரையாக சொல்லும் வார்த்தைகளைவிட, வாழ்ந்து காட்டும் செயல்களுக்கு ஆற்றல் அதிகம்.  எங்கள் வீட்டில் மூன்று கழிவறைகள் இருந்தன.  அவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பை மூன்று பிள்ளைகளிடமும் ஒப்படைத்தார் அப்பா.  `படிக்கிற பிள்ளைகள் இதையெல்லாம் செய்ய வேண்டுமா?` என்று யாரேனும் கேட்டால், “இதெல்லாம்தான் உண்மையான படிப்பு` என்று பதில் சொல்வார்.  பிள்ளைகளிடம், எதையும் திணிக்காமல், ‘எதற்காக இதைச் சொல்கிறேன்’ என்று உரையாடுவார்.  `அப்பா சொல்லிவிட்டாரே என்பதற்காக செய்யக்கூடாது. செய்யும் வேலையை விரும்பி, ரசித்து செய்யவேண்டும்` என்று புரியவைப்பார். 

அப்பாவின் இந்த வளர்ப்பு அணுகுமுறையால்,  `எந்த வேலையும் குறைந்த வேலையில்லை` என்கிற உணர்வு பள்ளியில் படிக்கும் காலத்திலேயே என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது.  `பிரிக்கால்` நிறுவனம் தொடங்கியபின், சில வருடங்கள்வரை தொழிற்சாலையில் சிறிய கோளாறால் ஓர் இயந்திரம் பழுதாகி நின்றுபோனால், உடனடியாக இறங்கி வேலை செய்ய எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.
நிறுவனத்தின் தலைவரே கிரீஸ் கறையோடு இறங்கி வேலை செய்வதைப் பார்த்தால், மற்ற பணியாளர்களும், `எல்லா வேலைகளையும் நாம் பார்க்க வேண்டும்` என்ற உணர்வுடன் செயல்படுவார்கள்.

பன்முகத் திறன்

பள்ளிக் காலத்தில், படிப்பைத் தாண்டி, விளையாட்டு, விநாடி-வினா போட்டி, விவாத மேடை என எங்களுக்குப் பிடித்த எதையும் செய்ய முடியும். தேர்வு நேரத்தில்கூட விளையாட்டை நிறுத்தியதில்லை. `படிப்பில் மதிப்பெண் குறைந்து விடுமே` என்று வீட்டில் யாரும் பயமுறுத்தியதும் இல்லை.
சொந்தமாக நிறுவனம் நடத்தும்போது, இந்த பன்முகத் திறன்தான் எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. அச்சம் இல்லாமல் வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொள்ள முடிந்தது.  வசதியான குடும்ப பின்னணியில் வந்து, நன்கு படித்த என் நண்பர்கள் பலர், சின்ன சறுக்கல் வந்தாலும் எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறுவதைப் பார்த்திருக்கிறேன்.  பள்ளி மட்டுமல்ல, வீடும் நான் கல்வி கற்ற இடமாகவே நினைக்கிறேன்.

தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்கிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ. முடித்தேன். மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருந்தாலும், முதலில் இயந்திரவியல் துறை சார்ந்த தொழிலில் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்று நினைத்தேன். அதனால், நேரடி தொழிற்பயிற்சி பெற ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடிவு செய்தேன்.  21 வயதில் என் வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவு இது.

எல்.எம்.டபிள்யு.வில் வேலை

இதன்படி, `லஷ்மி மெஷின் ஒர்க்ஸ்` நிறுவனத்தில் `அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி அனுபவம் பெறும் வாய்ப்பு வேண்டும்` என்று விண்ணப்பித்து இருந்தேன்.  என் ஆர்வத்தை மதித்து, அந்நிறுவனத்  தலைவர் ஜி.கே.தேவராஜுலு, எனக்கு சிறப்பு அனுமதியை வழங்கினார்.  நான் நன்றாக வேலை செய்கிறேனா என்ற தகவல் அறிக்கை அவரிடம் சென்று விடும்.  அதனால் நானும் முழுமையான ஈடுபாட்டுடன் வேலையைக் கற்றுக் கொண்டேன்.

ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது என்பதையும், ஊழியர்கள் எத்தகைய ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ள முடிந்தது.  இயந்திரங்களையும், அதை இயக்கும் மனிதர்களையும் புரிந்துகொள்ள இந்த அனுபவம் துணைபுரிந்தது.

அதன்பின், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருக்கும் `ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’யில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்தது.  அக்கல்வி நிறுவனத்தை நான் தேர்ந்தெடுக்க ஒரு சிறப்பு காரணம் உண்டு. `டைம் அண்டு  மோஷன் ஆய்வு` என்ற தத்துவத்தை தொழிற்சாலைகளுக்கு அறிமுகம் செய்து,  உற்பத்தியைப் பெருக்கிய `ப்ரெடரிக் டெய்லர்` என்ற மேதை படித்த கல்வி நிறுவனம் அது. ஒரு தொழிற்கூடத்தில் பணியாற்றும் பணியாளர், தன் கையெட்டும் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எடுத்து வேலை செய்யும்போது, உற்பத்தி அளவு அதிகரிப்பதையும், அதே பணியாளர் திரும்பியோ, எம்பியோ ஒரு பொருளை எடுத்து வேலை செய்யும்போது உற்பத்தி குறைவதையும் கண்டறிந்து `டைம் அண்டு மோஷன்` தியரியை உருவாக்கினார் ப்ரெடரிக் டெய்லர். இந்த ஆய்வு, தொழிற்சாலை வடிவமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்

இந்தியாவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்  துறை அவ்வளவாக அறிமுகமாகாத காலகட்டம் அது. ஓர் இயந்திரத்தைத் திறம்பட இயக்குவதை அறிந்துகொள்ள இயந்திரவியல் கல்வி போதும். உற்பத்தியோடு தொடர்புடைய தொழிற்சாலையில் பல்வேறு இயந்திரங்களையும், மனித வளத்தையும் ஒருங்கிணைத்துப் பணிபுரிய இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பு துணைபுரிந்தது. இதே படிப்பில்,  தொழிற்சாலையைத் திறம்பட நிர்வகிக்கும் எம்.பி.ஏ. பாடப் பிரிவையும் இணைத்து ஒரே படிப்பில் வழங்கினர். 

அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்கள், அந்த நாட்டின் கலாச்சாரத்துக்குப் பழகிக் கொள்ளவே ஓராண்டு பிடிக்கும். என்னால் சில வாரங்களில் பழகிக் கொள்ள முடிந்தது.  காரணம், நாங்கள் பள்ளியில் படிக்கும்போதே ரீடர்ஸ் டைஜஸ்ட், டைம், லைஃப், நேஷனல் ஜியாகரபிக் போன்ற அமெரிக்க பத்திரிகைகள் வீட்டுக்கே வரும்படி சந்தா கட்டியிருந்தார் அப்பா. அதனால், அமெரிக்காவின் இசை ரசனை, விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரம் முதல் அரசியல் கண்ணோட்டம்வரை எனக்கு அடிப்படை புரிதல் இருந்தது. வெளிநாட்டில் படிக்கும்போது, நம்முடைய வேலைகளை நாமே செய்துகொள்ள வேண்டும். வீட்டில் எடுத்துக் கொண்ட பயிற்சி எனக்குப் பேருதவியாக இருந்தது.

ஆட்டோமொபைல் துறையில்...

கோவையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். இந்தியா திரும்பிய பிறகு, எல்.ஜி. நிறுவனத்தின் எல்.ஜி.வரதராஜுலு, பிரிக்கால் நிறுவனம் தொடங்க துணையாக இருந்தார். `ஆட்டோமொபைல் துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது` என வழிகாட்டிய அவர், தொழிற்சாலையைத் தொடங்கும் வரையிலும் துணையாக இருந்து வழிநடத்தினார். அவருடைய வழிகாட்டல் எனக்கு தெளிவைக் கொடுத்தது.

பெற்றோர் உருவாக்கிய தொழிலில் ஈடுபட்டால், எல்லா பரிசோதனைகளையும் அவர்களே செய்து முடித்து, நம்மிடம் பாதுகாப்பான சூழலில் ஒப்படைப்பார்கள். புதிய தொழில் தொடங்கும்போது, முதலீடு வேண்டுமானால் அவர்களிடம் இருந்து பெறலாம். ஆனால், கஷ்ட நஷ்டங்களை நாமே எதிர்கொள்ள வேண்டும். தவறு நடந்து விட்டால், `உனக்கு எதற்கு இந்த வேலை? பேசாமல் அப்பாவின் தொழிலில் இணைந்து கொள்` என்று சொல்லிவிடுவார்கள்.  அத்தகைய சூழலில், மோட்டார் உதிரிபாக உற்பத்தியிலும், கம்ப்ரசர் உற்பத்தியிலும் ஈடுபட்ட எல்.ஜி. நிறுவனத்தை உருவாக்கி நடத்துபவரின் வழிகாட்டுதலே, சொந்தமாக தொழிற்சாலை தொடங்கும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. “பிரிக்கால்” நிறுவனத்திற்கு இது, வலுவான அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொடுத்தது.

59-வது வயதில் சறுக்கல்!

அறுபது வயது நிறையும்போது, என் தந்தை என்.தாமோதரன், தான் பார்த்து வந்த பிரீமியர் மில்லை எனது அண்ணனிடம் ஒப்படைத்து ஓய்வு பெற்றார்.  நானும்  60 வயதில் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் உழைக்கத் தொடங்கினேன்.  இறக்கம் எதுவுமில்லாமல், ஏற்றத்திலேயே பயணித்த என்னுடைய தொழில் துறை அனுபவத்தில், 2007-ல் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.  என் 59 வயதில் `பிரிக்கால்` நிறுவனத்தில் ஏற்பட்ட சறுக்கல், என்னை 65 வயதுவரை உழைக்க வைத்தது.  `பிரிக்கால்` நிர்வாகம்- தொழிலாளர்கள் நல்லுறவில் விரிசல் ஏற்படுத்தும் அளவு சூழ்ச்சியும், வஞ்சகமும் சூழ்ந்து நின்றது. சோர்ந்து போகாமல் மனவலிமையுடன் எதிர்கொண்டோம்..." 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close