[X] Close

வாழ்த்து அட்டை, ஸ்டாம்ப், போஸ்ட்மேன்; பொங்கல் வாழ்த்து கார்டு ஞாபகம் இருக்கா?


pongal-greetings

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jan, 2019 12:40 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பொங்கலுக்கு டிரஸ் வாங்கணும், கரும்பெல்லாம் வாங்கணும் என்பது போலவே முக்கியமான பர்ச்சேஸ் ஒன்று அந்தக்காலத்தில் உண்டு. அது... பொங்கல் வாழ்த்து அட்டைகள்! இவை நட்பையும் உறவையும் பலப்படுத்தின. பண்டிகைகளை இன்னும் குதூகலமாக்கின. விசேஷங்களை இன்னும் இன்னுமாக விரிவுபடுத்தின. 

ஆமாம். பொங்கல் வந்துவிட்டாலே, சிவகாசியில் இருந்து மொத்த தமிழ்நாட்டுக்கும் வாழ்த்து அட்டைகள் பல வடிவங்களில், பல வண்ணங்களில் விதம்விதமாக, ரகம்ரகமாக அச்சடிக்கப்படும். விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

போஸ்ட்கார்டு அட்டைகள், ஒரு கவரில் வைத்து அனுப்பப்படுகிற வாழ்த்து அட்டைகள், ஜிகினாக்களில் மின்னும் அட்டைகள் என ஏகப்பட்ட வெரைட்டிகள் வந்து கடைகளை அலங்கரிக்கும்.

பிள்ளையார், முருகன், சிவன், பெருமாள், ஆஞ்சநேயர் என கடவுள் படங்கள் ஒருபக்கம் இருக்க, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா வரை அட்டைகள் விற்பனைக்கு இருக்கும். இன்னொரு பக்கம், வயல்வெளி, அதனருகில் குடிசை வீடு, வாசலில் அம்மாவுடனும் அப்பாவுடனும் நிற்கிற ஒரு குட்டிப்பையன், சின்னப்பெண் என குடும்ப சகிதமான ஓவியம், மாட்டுவண்டியில் பயணிக்கும் குடும்ப ஓவியம், காளையை அடக்கும் வீரனின் ஓவியம்... சூரிய வழிபாடு செய்யும் குடும்பம் என பொங்கல் பண்டிகையை நினைவுபடுத்தும் ஓவியங்களும் இருக்கும்.

காந்திஜி, நேரு, எம்ஜிஆர், கலைஞர், இந்திராகாந்தி, காமராஜர் என அரசியல் தலைவர்களின் படங்களும் பிரமாதப்படுத்தும்.

கடைக்குச் சென்று, நமக்குப் பிடித்த வாழ்த்து அட்டைகளை சிலர் வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வாழ்த்துச் சொல்லுவார்கள். இன்னும் சிலர், யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்குப் பிடித்த படங்களை தேர்வு செய்து வாழ்த்துகளை எழுதி, அனுப்பிவைப்பார்கள்.

அத்தைக்கு எம்ஜிஆரைப் பிடிக்கும் சித்திக்கு சிவாஜியைப் பிடிக்கும் மாமாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் சித்தப்பாவுக்கு கமல் பிடிக்கும் தாத்தாவுக்கு சிவன், அக்காவுக்கும் மாமாவுக்கும் பெருமாள் படம், விவசாயம் செய்யும் பெரியப்பாவுக்கு சூரியோதயம் அல்லது விவசாயிகள் படம் என பார்த்துப்பார்த்து தேர்வு செய்து அட்ரஸ் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவைப்பார்கள்.

மற்ற நாட்களில் விடுமுறையாக இருக்கும் தபால்துறை அன்றைய நாளில் மட்டும் விடுமுறையாக இருந்தாலும் வேலைநாளாக இருக்கும். தபால்காரர் அன்றைக்குத்தான் ஏக வெயிட்டுடன், கட்டுகளுடன் பைகொள்ளாத அளவுக்கு சைக்கிளில் எடுத்துவருவார்.  போஸ்ட்மேனின் வரவுக்கு தெருவைப்பார்த்தபடியே இருப்பார்கள் பலரும்!

இதில் சிலர் வேண்டுமென்றே ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இரண்டு ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டாததால், ஃபைன் சேர்த்து நாலு ரூபாய் அழவேண்டும். இத்தனைக்கும் அந்த வாழ்த்து அட்டை ரெண்டுரூபாய் கூட இருக்காது. அழுதுகொண்டே ஃபைன் கட்டியதெல்லாம் ஒருகாலம்.

இன்னும் சிலர், தான் காதலிக்கும் பெண்ணுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவார்கள். ஆனால் பெயர் போடமாட்டார்கள். இப்படிக்கு உன் அன்புள்ள தோழி என்று போடுவார்கள். அல்லது பெயரில் உள்ள ஆங்கிலத்தின் முதல் எழுத்தை மட்டும் போடுவார்கள். அதில் அச்சடிக்கப்பட்டுள்ள வாசகத்துடன் இன்னும் சில வரிகள் எழுதி வாழ்த்துச் சொல்லுவார்கள்.

பல வீடுகளில் பொங்கல் வாழ்த்துகள் கொண்ட அட்டைகள், யாருக்கு அதிகம் வந்திருக்கிறது, யாருடைய வீட்டுக்கு அதிகம் வந்திருக்கிறது யார்யாரெல்லாம் நம் மீது அன்புகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் எடைபோட்டுப் பார்த்துக்கொள்வார்கள். ஆறேழு வருடங்களாக வந்திருக்கிற பொங்கல் வாழ்த்து அட்டைகளையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்களும் இருந்தார்கள்.

பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பாதததால் பிரிந்து போன உறவுகளும் முறுக்கிக்கொண்டு முகம் திருப்பிக் கொண்ட தோழமைகளும் கூட அந்தக் காலத்தில் இருந்தன என்றால் நம்புவீர்களா?

தீபாவளிக்கு பட்டாசு, ஆங்கிலப் புத்தாண்டுக்கு காலண்டர், டைரி, பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகள், மே மாதத்தில் நோட்டுப் புத்தகங்கள் என விருதுநகர், சிவகாசிப் பக்கம் எப்போது பண்டிகைகள் என வியாபாரம் களைகட்டும்.

போஸ்ட்மேனுக்கு தீபாவளிக்கு பலகாரம் கொடுப்பதும் பொங்கலுக்கு அஞ்சுரூபாயோ பத்துரூபாயோ தருவார்கள்.

எண்பதுகளின் இறுதி வரை, பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் இருந்தது, இன்றைக்கு எல்லோருக்கும் சேர்த்து முகநூலில் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, நிறுத்திக் கொள்கிறோம். இன்றைக்கு பொங்கல் வாழ்த்தும் இல்லை; வாழ்த்து அட்டைகளும் இல்லை. போஸ்ட்மேனையும் கூட பார்க்கமுடிவதே இல்லை!

பொங்கலாவது இருக்கே!

பொங்கலோ பொங்கல்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close