[X] Close

காற்றின் மொழியில் கபடி விளையாடும் தர்ஷினி


dharshini

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 10:34 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

கபடி கபடி கபடி என்று கூறியபடிதான் கபடி விளையாடுபவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், காற்றின் மொழியில் மௌனமாகவும், அதே நேரம் உடல் மொழியில் ஆக்ரோஷமாகவும் கபடி விளையாடுகிறார் கோவை தர்ஷினி. ஆம், இவரால் கேட்கவோ, பேசவோ முடியாது. ஆனால், இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு மைதானத்தில் புயலாய் ஓடிக் கொண்டிருக்கிறார் இவர். வறுமையில் வாடிய போதும், சர்வதேசப் போட்டியில் விளையாடுதையே லட்சியமாகக் கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்த மாணவி.

இந்த மாணவியைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன், அவரது பயிற்சியாளரை அணுகி, மாணவியை அல்லது அவரது பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றோம். காலை 6 மணிக்கு சுந்தராபுரம் வந்துவிடுங்கள் என்றார். `அவ்வளவு சீக்கிரமாகவா?` என்று ஆச்சரியமாக கேட்டதற்கு, `7 மணிக்குமேல் அந்தப்பெண்ணின் அப்பா-அம்மா கூலி வேலைக்குசென்றுவிடுவார்கள். அதனால் தான் சீக்கிரம் வரச் சொன்னேன்` என்ற போது தான், தர்ஷினி குடும்பத்தின் ஏழ்மை புரிந்தது.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள கணேசபுரத்தில் இரு சிறிய அறைகள் மட்டுமே உள்ள அந்த வீட்டுக்குச்சென்றபோது, தர்ஷினி வீட்டில் இல்லை. "பாப்பா டெல்லியில் நடக்கற `கேலோ இந்தியா` விளையாட்டுல கலந்துக்க போயிருக்கது என்றார் அவரது தாயார் ஜெயந்தி. இவரும், கணவர் பாலகிருஷ்ணனும் தனியார் நிறுவனத்தில் கூலி வேலைக்குச் செல்கின்றனர். ஒரு மகள், 2 மகன்கள்.

"பொறந்ததுல இருந்தே பாப்பாவால வாய் பேச முடியாது. காதும் கேக்காது. இருந் தாலும் அங்கன்வாடி ஸ்கூல்ல சேர்த்தோம். கத்துக்கற திறமையும், புரிஞ்சுக்கற சக்தியும் அதிகமாக இருந்ததால, ஒவ்வொரு எழுத்தா கத்துக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சா. அப்புறம்,  கணேசபுரம் மாநகராட்சிப் பள்ளியிலயும், 6, 7-ம் வகுப்புகள செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளியிலயும், ஏழாம்வகுப்புல இருந்து 12-ம் வகுப்பு வரைக்கும் மாநக ராட்சி துணி வணிகர் சங்கப் பள்ளிக்கூடத்து லேயும் படிச்சா.

சின்ன வயசுல நாட்டியமாட விரும்பி, கொஞ்ச நாள் டேன்ஸ் கத்துக்கிட்டா. அப்புறம் யோகா பயிற்சிக்குப் போனா. அந்த சமயத்துல, இலவசமா கபடி சொல்லித்தரும் விஸ்வநாதன் மாஸ்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனோம். கபடின்னா என்னான்னு கூட தெரியாது. அதனால், ஏதாவது சொல்லிக்கொடுங்கனு கேட்டோம். ரெண்டு நாள் கழிச்சு மீண்டும் விஸ்வநாதன் மாஸ்டரைப் பார்த்து, நார்மலான பொண்ணுங்களே கஷ்டப்படும்போது, இவ எப்படி கபடி கத்துக்குவானு கேட்டோம்.

`உடற்பயிற்சி எல்லாம் நல்லா செய்யறா. அதனால், கட்டாயம் கபடியும்நல்வா விளையாடு'வானு நம்பிக்கை யூட்டினார். சிக்கிரமே நல்லா விளையாட ஆரம்பிச்சா" என்றார்.

"தர்ஷினிக்கு எப்படி கபடி கற்றுத் தந்தீர்கள்?" என்று பயிற்சியாளர் விஸ்வ நாதனிடம் கேட்டோம். "தர்ஷினியின் உடற்பயிற்சியும், ஓடும் ஸ்டைலும் நன்றாக இருந்தது. பயிற்சி தொடங்கிய சில நாட்களிலேயே நன்றாக விளையாடத் தொடங்கிவிட்டாள். மற்ற பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதுபோல அல்லாமல், சைகைகளிலும், வரைந்து காட்டியும் விளையாட்டின் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தேன்.

பயிற்சி தொடங்கிய ஆறு மாதங் களிலேயே 2011-ல் ஈரோட்டில் நடைபெற்ற மாநில ஓபன் கபடிப் போட்டியில் ஜூனியர் அணியில் பங்கேற்று, சீனியர் அணியுடன் விளையாடினாள். இவரது சிறப்பான விளையாட்டைப் பார்த்த போட்டி அமைப்பாளர்கள், ரூ.2500 பரிசு வழங்கினர். அடுத்து கணேச புரத்தில் நடைபெற்ற மாநிலப்  போட்டியில், தமிழ்நாட்டின் சிறந்த கபடி அணியான ஒட்டன்சத்திரம் அணியுடன் மோதிய கோவை அணியில் தர்ஷினி சிறப்பாக விளையாடி பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு போலீஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தில், தர்ஷினின் மூவ்மென்டுகளைப் பலரும் பாராட்டினர். 

8-ம் வகுப்பு படிக்கும்போது மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில்,  தமிழக அணி தோல்வியைத் தழுவிய போதும், தர்ஷினியின் ஆட்டம் மெச்சத் தகுந்த வகையில் இருந்தது. அந்தப் போட்டியில், ஹரியானாவுடன் மோதிய ஆட்டத்தில், தமிழக அணியின் மொத்த புள்ளிகள் 28. அதில் தர்ஷினி எடுத்தது 21. அதேபோல, மேற்கு வங்கத்துடன் நடைபெற்ற போட்டியிலும் 27 புள்ளிகள் எடுத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். 10-ம் வகுப்பு படிக்கும்போது, தேசிய சப்-ஜூனியர் போட்டியில் தமிழக அணி 3-ம் இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் தர்ஷினி பிரதான நிலையில் விளையாடி, வெற்றியைத் தேடித் தந்தார்.கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற கோவை அணியில், தர்ஷினியின் பங்கு முக்கியமாய் இருந்தது. பிளஸ் 2 படிக்கும்போது, தேசிய அணியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. எனினும், பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, அந்த வாய்ப்பை தர்ஷினி மறுத்துவிட்டார். 

தற்போது கோவை இந்துஸ்தான் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம். (சி.எஸ்.) படித்து வருகிறார். கடந்த ஆண்டு தென்னிந்திய அளவில் பல் கலைக்கழகங்களுக்கு இடையிலானபோட்டியிலும், பாரதியார் பல்கலைக் கழகம் சார்பில்  பங்கேற்று சிறப்பாக விளையாடினார். தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் `கேலோ இந்தியா` போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். தேசிய அணியில் பங்கேற்று, இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள், நோக்கம் எல்லாம்" என்றார் பெருமையுடன்.

`ப்ரோ` கபடி லட்சியம்

மீண்டும் அவரது பெற்றோர் பால கிருஷ்ணன், ஜெயந்தியிடம் பேசினோம். "எப்பவுமே அவ வேலைய அவளே பாத்துக்குவா. ஏதாவது வேணுமுன்னா சைகை காட்டுவா. நல்லா விளையாடுற அதே நேரத்துல, சுமாரா படிச்சிடுவா. எதுக்கும் பயப்பட மாட்டா. வீட்டில இருந்து கிரவுண்டுக்கு நடந்தே போயிட்டு, வருவா. இருட்டு, சரியான பாதை வசதியில்லன்னாலும் கவலைப்படாம போயிட்டு வருவா. ஆரம்பத்துல, வெளியூர் போட்டிகளுக்கு அனுப்பும்போது, வாய் பேச முடியாம, காதும் கேக்காம எப்படி சமாளிப்பாளோனு பயமா இருந்துச்சி. இப்போ, டெல்லி வரைக்கும்போய் விளை யாடிக்கிட்டிருக்கா.

ஆனாலும், அவளுக்கு நல்ல சாப்பாடோ, வசதிகளோ செய்ய முடியலனு கொஞ்சம் ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது. ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுல கிடைக்கற பணம், குடும்பத்த நடத்தவே சரியா இருக்கு. இப்பகூட, மத்த பொண்ணுங்க வச்சியிருக்கற மாதிரி  நல்ல டிராவல் பேக் வேணுமுன்னு சைகையிலேயே கேட்டா. ஆனா, வாங்கித்தர முடியல. கொஞ்சம் பொறு கண்ணு.

காசு சேத்து, வாங்கித்தரேன்னு சைகையிலேயே சொல்லியிருக்கேன் பாக்கலாம். `ப்ரோ கபடி`யில விளையாடறதுதான் அவளோட கனவா நெனைக்கிறா. கட்டாயம் சாதிப்பா" என்றனர் கண்களில் மின்னும் நம்பிக்கையுடன்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close