[X] Close

கோயமுத்தூரு மண்ணு எடுத்து...நொய்யலாத்து தண்ணிய விட்டு... உயிர்த்தெழும் மண்பாண்ட தொழில்


clay-pot

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 10:31 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பயணிப்பவர்கள் கண்களில், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே வரிசையாக உள்ள மண் பானைக் கடைகள் புலப்படாமல் இருக்காது.சாதாரண நாட்களில் இதைப் பார்க்கும்போது,  ‘இப்போதெல்லாம் இதை யார் தான் வாங்குகிறார்கள்!’ என்று தோன்றும். அதுவே,  வெயில் கொளுத்தும் கோடைகாலம் தொடங்கிவிட்டால், ‘ஒரு மண்பானை வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி வைக்கலாமே. அந்த ஜில் தண்ணியை பருகலாமே!’ என்று ஆசை பொங்கும். அதற்கேற்ப, புதுவித மண்பானைகள், குழாய் வைத்து, மூடி வைத்து நவீனகாலத்துக்கு ஏற்ற வகையில் விதவிதமாக இங்கே வைக்கப்பட்டுள்ளன.

அதையும் தாண்டி, இப்போது பொங்கலுக்கும்  பானை விற்பனை சூடு பிடித்திருப்பதாக சொல்கிறார்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். இந்தப் பகுதியில் மட்டும் மொத்தம் 14-க்கும் மேற்பட்டமண் பானைக் கடைகள் அமைந்துள்ளன. அதில் முதலாவது  சந்திராவின் கடை.  “45 வருஷத்துக்கு முன்னால,  வால்பாறையில என் வீட்டுக்காரர் பரமசிவம் கடைபோட்டார். அப்ப இருந்து எனக்கு இதே தொழில்தான். 15 வருஷம் முன்னால இங்கே வந்தோம். வால்பாறையில இருந்த காலத்துல,  ஓரளவு வியாபாரம் இருந்தது. எஸ்டேட் தொழிலாளிக வாங்கிட்டு போவாங்க. அங்கே சுத்தமாக வியாபாரம் படுத்த பின்னாடிதான், இங்கே வந்தோம். 

`டாக்டருங்க அட்வைஸ்`

இந்த ரோட்டோரமா கடை போட்டது நாங்கதான். அப்புறம்தான் இத்தனை கடைங்க வந்துச்சு.

அப்ப வியாபாரம் ரொம்ப கம்மியாத்தான் இருந்தது. இங்கே மட்டும் கடைபோட்டா பெரிசா போணி ஆகாதுன்னு,  என் வீட்டுக்காரர் வடகோவையிலயும் கடைபோட்டிருக்கார். பூந்தொட்டி, பொங்கல் பானை, தண்ணிப் பானை சீசனுக்கு சீசன் ஓரளவுக்கு விற்கும். கூடவே அடுப்பு, லவ் பேர்ட்ஸ் கூண்டு சட்டியும் ரெகுலரா போகும். இப்ப ரெண்டு மூணு வருஷமா வியாபாரம் நல்லாவே நடக்குது. ஏன்னா டாக்டருங்க எல்லாம்,  `மண்சட்டி சமையல் செஞ்சு சாப்பிடுங்கன்னு` அட்வைஸ் பண்றாங்க. அதுலதான் நிறையபேர் இந்த மண்ணு பானைகளை தேடி வந்து வாங்கறாங்க” என்றார்.

“அப்ப, வருமானம் நல்லா கிடைக்குதுன்னு சொல்லுங்க” என்றதற்கு, “வருமானம் எங்கீங்க?

முந்தி இருந்ததுக்கு இப்ப பரவால்லேன்னுதான் சொல்லணும். நான் வச்சிருக்கிற இந்த அயிட்டங்கள்ல மட்டும் ஐம்பதாயிரம் முதலீடு இருக்கும்.  என் வீட்டுக்காரர் போட்டிருக்கிற கடையில இதை விட ஜாஸ்தியாவே பணம் போட்டிருப்போம். ஆனா ஒரு நாளைக்கு அம்பது ரூபாய்க்கும் விற்றிருக்கு. ஒண்ணும் விக்காத நாளும் இருக்கு. ஐநூறு ரூபாய்க்கு வித்தா பெரிய வியாபாரம்னு அர்த்தம். இந்த பொழப்புலதான், ஒரு பையன், 3 பொம்பளைப் புள்ளைகளை வளர்த்தியிருக்கோம். 

படிக்க வச்சு,  கல்யாணமும் கட்டிக் கொடுத்திருக்கோம். எங்களுக்கு இதை விட்டா வேற தொழில் தெரியாது. அதுலயே காலம் போயிடுச்சு. புள்ளைக, பசங்க எல்லாம் தொழில் மாறியாச்சு. இதுல எதிர்காலம் என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றார் கவலையுடன். இந்த கடைகள் இங்கே வரிசையாய்  இருப்பதற்கு, இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், கவுண்டம்பாளையம் உடையார் தெருவில் மண்பாண்டம் செய்பவர்கள் நிறைய இருப்பதுதான் காரணம். அவர்கள் பூர்வீகமாகவே இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அங்கே சட்டி, பானை, தந்தூரி அடுப்பு வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த தண்டபாணி என்பவர் கூறும்போது, “நாங்க எல்லாம் சின்னச்சின்ன வேலைகளைத்தான் செய்யறோம். இப்ப எல்லாம் பாண்டிச்சேரில இந்த தொழில் பெரிய அளவு நவீனமா மாறிடுச்சு. பிரஷர் குக்கர், ஃபிரிட்ஜ்ன்னு புதுசு, புதுசா `டை மோல்டிங்ல, மிஷின் மோல்டிங்`ல செய்யறாங்க. அது எல்லாம் மார்க்கெட்டுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு” என்றார்.அவரது தொழிலில் உள்ள சிக்கல், சிரமங்களைக் கூறும்போது, “இங்கே ஒரு காலத்துல ஊரே சிறுசாத்தான் இருந்துச்சு. ஊர் பூரா மண்பானை வேலைதான். சூளைங்க தான். ஊரே புகைமயமா இருக்கும். இப்ப அப்படி யில்லை. 30 குடும்பங்கதான் இந்த தொழிலை செய்யுது. அதுவும் சீஸன் போலத்தான்.

நான் அஞ்சாவது படிச்சேன். பத்து வயசுல மண்ணுல எறங்கினவன், மேல ஏறவேயில்லை. முந்தியெல்லாம் விறகு, மண் பிரச்சினை இருந்ததில்லை. 20 வருஷமா அதுக்கு ரொம்ப பிரச்சினை. 20 கிலோமீட்டர் போகணும் மண் எடுக்க, அதுக்கு தாசில்தார்கிட்ட லைசென்ஸ் வாங்கணும். அதுக்கும் புரோக்கர்ங்க இருக்காங்க. அவங்களுக்கு காசு கொடுக்கணும். குறிப்பிட்ட நயத்துல மண்ணா பார்த்து வாங்கணும். கார்த்திகை விளக்குகள், பெரிய சட்டி, சின்ன சட்டி, அடுப்பு, தந்தூரி அடுப்புன்னு அயிட்டங்களுக்கு தகுந்த மாதிரி, மாவு மாதிரி சலிச்ச மண்ணோட மணலும் கலக்கணும்.மழை பெய்ஞ்சா தொழில் செய்ய முடியாது. சட்டி காயவைக்க, சூளை போட எதுவுமே முடியாது. 

இத்தனை போராட்டத்தோடதான் தொழில் நடக்குது. இங்கிருந்து குன்னூர், ஊட்டி, திருப்பூர், பல்லடம், அவிநாசினு எல்லா இடங்களுக்கும் வியாபாரிங்க வாங்கிட்டு போறாங்க.

கோயமுத்தூர்ல பூ மார்க்கெட், வடகோவை, பீளமேடு, ஹோப்காலேஜ், சரவணம்பட்டின்னு எங்காளுகளே கடை வச்சிருக்காங்க. திருச்சூர், பாலக்காடு, மதுரை, பாண்டிச்சேரியில இருந்தெல்லாம் மண் ஜாடி, பூந்தொட்டி, திருஷ்டி பொம்மைகள் வருது. இங்கிருந்தும் அங்கே சட்டி, பானைகள் போகுது’’ என்றார்.

குவியலாய் ஒரு சக்கரத்தின் மீது களிமண் கலவை. சக்கரத்தை இவரே ஒரு கோல் கொண்டு சுற்றி விடுகிறார். பின்பு, சக்கரத்துடன் சுற்றும் களிமண் உருண்டையை தன் கைகளால் துழாவி,  தன் கை வாகுக்கு ஏற்ப நீவுகிறார். அப்படியே பானை உருப்பெருகிறது. அதை வெட்டி எடுத்து வரிசையில் வைக்கிறார். 

“இது ஆரம்பகட்ட வேலைதாங்க. இதுல பினிஷிங் வேலை இன்னமும் நிறைய இருக்கிறது” என்றவரிடம், பொங்கல் பானை விற்பனை குறித்து கேட்டபோது, “பெரிசா ஒண்ணும் சொல்ல முடியாதுங்க. இந்த தொழிலைப் பொறுத்தவரை, கார்த்திகை, பொங்கல், கோடைகாலம் மட்டும்தான் சீசன். அதுல, மற்ற ரெண்டையும் விட கோடை வெயிலுக்குத்தான் அதிகம் வியாபாரம் நடக்கும். இப்ப பொங்கப் பானை வியாபாரம் கொஞ்சம் கூடியிருக்கு. அதுக்காக, கோடை வெயில் வியாபாரத்தை தாண்டிடுச்சுன்னு சொல்ல முடியாது. அதனால அந்த வியாபாரத்துக்குத்தான் காத்துட்டிருக்கோம்” என்று முடித்துக் கொண்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close