[X] Close

கிரெடிட் கார்டு... நன்மையா? தொல்லையா?- கருத்தரங்கில் ருசிகர விவாதம்


credit-card

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 11:10 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான்`, `கடன் அன்பை முறிக்கும்... கட்டத் தவறி னால் எலும்பையும் முறிக்கும்” என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாத சட்டைப் பைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவற்றின்  தாக்கம் அதிகரித்துள்ளது.ஆனால், கிரெடிட் கார்டு என்ற கடன் அட்டையை வீட்டுக்குத் தேடி வந்து  கொடுத்து விட்டுச் சென்ற பின்னர், குண்டர்களோடு வாசல் வந்து, தட்டி இழுத்துச் செல்லும் சோகமும் உள்ளது. `கிரெடிட் கார்டா? அப்படின்னா என்ன?` என்று கேட்பவர்களும் உண்டு. ஒரு கடன் அட்டையில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த, மற்றொரு கடன் அட்டையை வாங்கியதாக புலம்புபவர்களும் உண்டு.

நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் அல்லது பணம் தேவையான நேரத்தில் உதவும் சிறந்த தோழன் கிரெடிட் கார்டு என்பதும் பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை. “இந்தக் காலத்துல யாருங்க வட்டியில்லாம கடன் கொடுக்கறாங்க” என்பவர்களுக்கு மத்தியில், `மறைமுக கட்டணம், அபராதம் என அநியாயமா புடுங்கறாங்க!’ என்பவர்களும் உள்ளனர்.  தேவையற்ற பொருட்களை கடனுக்கு வாங்கி, வட்டி, அசல் கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களில், பலர் தற்கொலைக்கும் முயற்சித்த கதைகளும் கிரெடிட் கார்டுகளுக்கு பின்னால் உள்ளன. மொத்தத்தில் கிரெடிட் கார்டு பாயாசமா அல்லது பாய்சனா என்பதில் கொஞ்சம் குழப்பம்தான்!

இந்தச் சூழலில், கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கு, பலரின் கவனத்தையும் கவர்ந்தது. “கிரெடிட் கார்டைப்பயன்படுத்துவதில் உள்ள நிபந்தனை கள், வழிமுறைகள்,  சட்ட நுணுக்கங் களை  முழுமையாகத் தெரியாமல் பயன்படுத்திவிட்டு,  பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளிலும், சட்ட சிக்கல்களுக்கும் உள்ளா கின்றனர் நுகர்வோர். 

வாங்கிய கடனுக்கு, அவர்கள் அறியாமலேயே  கூடுதல் வட்டி, அபராத தொகை,நடைமுறைக் கட்டணங்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகின்றனர். மேலும், கடனை திருப்பிச் செலுத்தாதவர் என்ற முத்திரையும், வருங்காலத்தில் நுகர்வோருக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ வங்கிகள் கடன் வழங்காத நிலையும் உருவாகிறது. எனவே, கடன் அட்டை பயன்பாட்டில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவதற்காக இந்தக் கருத்தரங்கைநடத்தினோம்” என்றார் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான சி.எம்.ஜெயராமன். கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு, சென்னை சிட்டிசன்ஸ் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்சன் குரூப் (சிஏஜி) அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், நுகர்வோர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இதில் பேசிய சிஏஜி அமைப்பு இயக்கு நர் சரோஜா, “கிரெடிட் கார்டுக்கான மறைமுகக் கட்டணங்கள் குறித்து நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், தேவையின்றி வட்டியும், அபராதமும் கட்ட வேண்டும். இதில் பிரச்சினை ஏற்பட்டால், ரூ.20 லட்சம் தொகை வரையிலான கோரிக்கை களுக்கு, வங்கிகளுக்கான பிரத்தியேக குறைதீர் மன்றத்தை அணுகலாம். இதைத் தாண்டி, நுகர்வோர் நீதிமன்றத்தையும் அணுகலாம்” என்றார்.

சிபில் ஸ்கோர்

சிபில் என்பது இந்திய கிரெடிட் இன்ஃபர் மேஷன் பீரோ நிறுவனம் என்பதன் சுருக்கம். கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு, கடன் பெற்றவர்களின் விவரங்களை, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தெரிவிக்கும். இந்த தகவல்கள் அடிப்படையில், கடன் வாங்குபவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடித்து, அவர்களுக் கான கிரெடிட் ஸ்கோரை வழங்குகிறது சிபில்.

“கடன் வாங்குவோர் சிபில் கிரெடிட் ஸ்கோரில் கவனமாக இருக்க வேண்டும். அந்த ரேட்டிங் குறைந்தால், சம்பந்தப்பட்டவர் மட்டுமல்ல, பிற்காலத்தில் அவரது மகன் அல்லது மகள்கூட கடன் பெற முடியாத சூழல் உருவாகும்” என்றார் சரோஜா.

பாரத ஸ்டேட் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் என்.ராமானுஜம் பேசும்போது, “தேவைக்கு மட்டும் கிரெடிட்கார்டைப் 
பயன்படுத்துங்கள். 45 நாட்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தி, வட்டி கட்டுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், வட்டி, கூடுதல் வட்டி, அபராதத்தைத் தவிர்க்க முடியாது. கடன் நிபந்தனைகளைத் தெளிவாகப் படியுங்கள். வட்டி விகிதத்தை சரியாகத் தெரிந்து கொண்டு, கடன் வாங்குங்கள்” என்றார்.

“சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட்கார்டு நண்பன். அதேசமயம், தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பயன்படுத்தி னாலோ அது ஸ்லோ பாய்சன்தான் “ என்றார் கருத்தரங்கில் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் மேலாளர் முருகானந்தம். சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு செயலர் வி.ஏ.சண்முகம் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close