[X] Close

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் துள்ளிக் குதிக்கும் முயல் வளர்ப்பு


rabbit-farm

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 11:07 am
  • அ+ அ-

வெள்ள முயல் ஓடுது, வேகமாக ஓடுது, குள்ள முயல் ஓடுது, குதித்து குதித்து ஓடுது,  நெட்டையான காதையே நீட்டி நீட்டி ஆட்டுது,  குட்டையான வாலையே குறுகுறுன்னு ஆட்டுது” என்று பள்ளிப் பருவத்தில் பாடியிருப்போம். தாவிக் குதித்துச் செல்லும் முயலைக் கண்டால் எல்லோருக்கும் ஆனந்தம்தான்.அதுமட்டுமா! விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் வழங்கி, துள்ளிக் குதிக்கச் செய்கிறது முயல் வளர்ப்பு.

தாவரங்களில் உள்ள புரதச் சத்தை, இறைச்சியாக மாற்றும் தன்மை கோழிகளுக்கு அடுத்து, முயல்

களுக்கு உண்டு. மிகுந்த சுவையுடைய முயல் இறைச்சியை பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில், முயல் இறைச்சி கொழுப்புச் சத்து குறைந்தது.  வயதானவர் கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள் என அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ண ஏற்றது முயல் இறைச்சி.

“காடுகளில் திரியும் முயலைப் பிடிக்க தடை உண்டு. அவற்றை வேட்டையாடவும் கூடாது. அதேசமயம், நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், பிளஷ் ஜெயண்ட், கலிபோர்னியா இனங்களைச் சேர்ந்த முயல்களை இறைச்சிக்காக வளர்க்கலாம். சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல்லில் உள்ள  கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு முயல் இனங்கள் வளர்க்கப்படுகின்றன.

விவசாயிகள், வேளாண் சாகுபடியுடன் முயல்களையும் வளர்த்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும். முயல் வளர்ப் புத் தொழிலை மேற்கொள்ள,  சிறந்த முயல்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். முயல்களை இரண்டு கிலோ  எடை இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். பெண் முயல் என்றால் குறைந்தபட்சம் 8 காம்புகள் இருக்க வேண்டும். ஆண், பெண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். ஆழ்கூள முறை, கூண்டு முறைகளில் முயல்களை வளர்க்கலாம்” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கால்நடை அறிவியல் துறை உதவிப் பேராசிரியை ப.சித்ரா.

ஆழ்கூள முறை, கூண்டு முறை...

முயல் வளர்ப்பின் தொழில்நுட்பங்கள் குறித்து அவர் மேலும் கூறியதாவது: முயல் பண்ணையை, நல்ல காற்றோட்டமான,  மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும். கான்கிரீட் தரை அமைத்து,  அதன்மேல் நெல் உமி, கடலைத்தோல், நறுக்கிய வைக்கோல், மரத்தூள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 6 முதல் 9 செ.மீ. வரை குவித்துவைக்க வேண்டும்.  வளர்ந்த ஆண் முயலுக்கு 5 சதுர அடி, தாய் முயலுக்கு 6 சதுர அடி, இளம் முயலுக்கு 2.5 சதுர அடி, குட்டிகளுடன் கூடிய தாய் முயலுக்கு 8 சதுர அடி இட வசதி ஏற்படுத்த வேண்டும்.

வயது, உடல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

இந்த முறையில் பொதுவாக கூண்டின் உயரம் 50 செ.மீ., அகலம் 60 செ.மீ. இருக்க வேண்டும். தேவைக்கேற்ப நீளம் இருக்கலாம். அதேசமயம்,   பெண் முயல் அடைக்கப்படும் கூண்டு 90 செ.மீ. நீளம், 75 செ.மீ. அகலம், 75 செ.மீ. உயரமும், ஆண் முயல் கூண்டு 75 செ.மீ., 45 செ.மீ. அகலம், 45 செ.மீ. உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும்.

தாய் முயல்கள் குட்டி ஈன்றவுடன், அந்தக் குட்டிகள்  10 நாட்களுக்கு கண்களைத் திறக்காது.  மூன்றாவது வாரத்துக்குப் பிறகு ஆண், பெண் முயல்களைப் பிரித்து வளர்க்க வேண்டும்.  ஐந்து அல்லது ஆறு மாதத்தில் பருவவயதை அடையும் முன்பு, ஆண் முயல்களை தனியாகப் பிரித்து வளர்ப்பதால், ஒன்றுக்கொன்று சண்டை யிட்டு இறப்பதைத் தவிர்க்கலாம்.

என்னென்ன தீவனம்?

முயலுக்கு தினமும் அடர் தீவனம், பசுந் தீவனம் அளிக்க வேண்டும். இத்துடன் கலப்புத் தீவனத்தையும் தயார் செய்து கொடுக்கலாம். மக்காச்சோளம் 28%, கம்பு 30%, கோதுமைத்தவிடு 25%,

கடலைப்புண்ணாக்கு 15%, தாது உப்பு

1.5%, உப்பு 0.5 % சேர்த்து கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். பசுந் தீவனமாக புல், கீரை  வகைகள், முள்ளங்கி, அகத்தி, வேலி மசால், குதிரை மசால், சூபாபுல், கல்யாண முருங்கை ஆகியவற்றைக் கொடுக்கலாம். வீட்டில் வீணாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். சுத்தமான குடிநீரை தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

வளரும் குட்டிகளுக்கு அடர் தீவனம் 40 கிராம், பசுந் தீவனம் 150 கிராம் கொடுக்கலாம். அதேபோல, வளர்ந்த முயல்களுக்கு (2-3 கிலோ எடை கொண்டவை) அடர் தீவனம் 60 கிராம், பசுந் தீவனம் 250 கிராம், சினை முயல்களுக்கு (2.5-3.5 கிலோ) 75 கிராம் அடர் தீவனம், 300 கிராம் பசுந்தீவனம், பாலூட்டும் முயல்களுக்கு (2-3 கிலோ) அடர் தீவனம் 150 கிராம்,  பசுந்தீவனம் 350 கிராம் கொடுக்க வேண்டும்.

பெண் முயல்கள் 6 வாரங்களில் இனப் பெருக்கத்துக்கு தயாராகி விடும் என்பதால், தாய் முயலிடமிருந்து பிரித்துவைக்க வேண்டும். ஒரு வயதான ஆண் முயல்களை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆண் முயலுக்கு 4 பெண் முயல்கள் என்ற விகிதத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

பெண் முயலுக்கு 16 நாட்களுக்கு ஒருமுறை பருவ சுழற்சி ஏற்படும். அதற்கேற்ப பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டில் அடைத்துவைக்க வேண்டும். முயலின் சினைக் காலம் 30-33 நாட்கள். ஓர் பெண் முயல், 6 முதல் 10 குட்டிகள் வரை ஈனும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close