[X] Close

முகம் நூறு: கேரளத்தின் தைரியலட்சுமி!


kerala-lakshmi

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 13:23 pm
  • அ+ அ-

கடலில் ஆர்ப்பரித்து எழுகின்றன அலைகள். பள்ளியில் படித்த அகடுகளும் முகடுகளும் போல நிலைகொள்ளாது ஏற்ற இறக்கமாக அலைபாய்கிறது கடல் மட்டம். வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க சுடிதார் துப்பட்டாவால் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு, கணவர் கார்த்திகேயனோடு கடலுக்குள் படகைத் தள்ளிச்சென்று துள்ளி ஏறுகிறார் ரேகா!

இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிமம் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கும் ரேகா சொந்தக்காரர். கேரள மாநிலம், திருச்சூரை அடுத்த சேட்வா பகுதிதான் இவரது பூர்வீகம். ஒரு பக்கம் தன்னுடைய நான்கு மகள்களைப் பொறுப்புடன் வளர்க்கிறார்; மறுபுறம் கடலோடிப் பெண்ணாகவும் தடம்பதிக்கிறார் ரேகா. ரேகாவும் அவருடைய கணவர் கார்த்திகேயனும் ஒரே படகில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்கின்றனர். அந்தச் சிறிய படகு மீன்பிடி வலைகளும் இவர்களின் வாழ்க்கைக் கதைகளுமாக நிரம்பிவழிகிறது.

காதலும் கடலும்

இன்ஜினை இயக்கிக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ரேகா. படகும் ஆழ்கடலில் மிதந்து ஓடத் தொடங்கியது.  

“எங்களுக்குத் திருமணம் முடிஞ்சு 20 வருசம் ஆச்சு. நாங்க ரெண்டு பேரும் வேற வேற சாதியைச் சேர்ந்தவங்க. ஆனா, காதலுக்கு முன்னாடி சாதி பெருசா தெரியலை. உறவுக்கார மாமா வீட்டுக்கு லீவுல வந்தப்போதான் இவங்களைப் பார்த்தேன். ரெண்டு பேருக்கும் இடையில் காதல் பூத்துச்சு. வீட்டுல சின்ன சின்னதா எதிர்ப்புகள் இருந்துச்சு. அதையெல்லாம் தாண்டி கல்யாணம் செஞ்சோம்.

மூத்த பொண்ணு மாயா ப்ளஸ் டூ படிக்கிறா. ரெண்டாவது மகள் அஞ்சலி பத்தாம் வகுப்பும் மூணாவது பொண்ணு தேவிப்பிரியா ஆறாவதும் கடைக்குட்டி லெட்சுமிப்பிரியா நாலாவதும் படிக்குறாங்க. வீட்டுல கஷ்ட ஜீவனம்தான். என்னோட வீட்டுக்காரரு ஒரு ஆளு கடலுக்குப் போய் நாங்க ஆறு பேரு சாப்பிடணும். நாங்க வைச்சுருக்குற இந்த சின்ன நாட்டுப் படகுல ரெண்டு பேரு மீன் பிடிக்கப் போகலாம். ஒருத்தர் படகை ஓட்டி வலை போட்டாலும், வலையில் இருந்து மீனை எடுத்துப் போட உதவிக்கு ஒரு ஆளு தேவை.

அப்போதான் யாரோ ஒருத்தரைக் கூட்டிட்டுப் போனா, சம்பளம் கொடுக்கணும். அது போச்சுன்னா, மிஞ்சுறதை வைச்சு ஆறு பேரு ஜீவிதம் பண்றது கஷ்டம்னு முடிவெடுத்தோம். அதுக்கு என்ன பண்றதுன்னு வந்த கேள்வியில்தான் நானே கணவரோடு கடலுக்குப் போகணும்னு முடிவெடுத்தேன். போகவும் செஞ்சேன். ஆனா, மொத்த ஊரும் ஒரு மாதிரி பார்த்துச்சு. பொதுவா பொண்ணுங்க கடல்ல இறங்கி, தொழிலுக்குப் போகமாட்டாங்க. 

அதனால என்னை ஊர்க்காரங்களே முதலில் ஏளனமா பார்த்தாங்க. ரெண்டு நாளுகூட தாக்குப்பிடிக்க மாட்டேன்னுலாம் சொன்னாங்க” என்று சொல்கிறார் ரேகா. ஊரார் பலவிதமாகப் பேசியபோதும் தன் குடும்பத்துக்குக் கைகொடுக்க, கடல் தொழிலுக்குப் போயே ஆக வேண்டும் என்கிற வைராக்கியம் ரேகாவிடம் இருந்தது. “நான் நாலு பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்கலாம். ஆனா, எனக்கு அம்மா இந்தக் கடல்தான்” என்றவாறே படகின் வேகத்தைக் கூட்டுகிறார்.

வாழவைக்கும் வைராக்கியம்

கடல் அனுபவமின்மையால் நம்மால் சமநிலையாக இருக்க முடியவில்லை. விசைப் படகுகளைப் போல வசதிகள் அதில் இல்லை. கைகளை அகலவிரித்தால் தண்ணீரைத் தொட்டுவிடலாம். படகின் வேகத்தில் உந்தப்பட்டு, கடல் நீர் முகத்தை நனைக்கிறது. ஆடி, அசைந்து எங்கே கவிழ்ந்துவிடுவோமோ என்கிற பயம் தோன்றுகிறது. இப்போது மெல்ல எழுகிறது ரேகாவின் கணவர் கார்த்திகேயனின் குரல்.

“தொடக்கத்தில் கடலுக்கு வந்த ஒரு வாரம் ரேகா வாந்தி எடுத்தாங்க. தொடர்ச்சியான தலைசுற்றலால் அவதிப்பட்டாங்க. பொதுவா கடல் தொழிலுக்குப் புதுசா வர்ற ஆம்பளைங்களே முதல் ரெண்டு வாரத்துல நிலைகுலைஞ்சு போயிடுவாங்க. ரேகா ரத்த வாந்திகூட எடுத்தாங்க. ஆனா, அதையெல்லாம் தாண்டுன வைராக்கியத்தில்தான் இதைச் சாத்தியப் படுத்தியிருக்காங்க” என்கிறார்.

புயலுக்குப் பின்னே

2017 நவம்பர் 30-ல் கேரளம், குமரி மாவட்டத்தில் கொடூரமாகத் தாக்கிய ஒக்கி புயல் இவர்கள் வாழ்வையும் அசைத்துப்பார்த்தது. அதற்கு முந்தையநாள் மீன் பிடிக்கக் கிளம்பிய இவர்கள் கடல் வழக்கம்போல் இல்லை எனத் தாங்களாகவே சுதாரித்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஆனாலும், கடலுக்குள் இவர்கள் கூண்டு கட்டி வளர்த்த கூண்டு மீன் தொழில் இல்லாமல் போனது.

ஒக்கி புயலின் கோரத்தால் கூண்டில் இருந்த மீன்கள் எல்லாம் காற்றின் போக்கில் தூக்கி வீசப்பட்டுவிட்டன. கடற்கரையை ஒட்டியிருந்த இவர்கள் வீடு சேதமானதுடன் இன்ஜின், வலை போன்றவையும் புயலுக்குத் தப்பவில்லை. அந்தப் பாதிப்பிலிருந்து இப்போதுதான் பொருளாதார ரீதியாக மீண்டுவருகிறது ரேகாவின் குடும்பம். வாடகை வீட்டில் வசித்தாலும் ‘கடல் அன்னை’ தங்கள் வாழ்வை வளமாக்குவார் என்னும் நம்பிக்கை மட்டும் இவர்களின் வீடு முழுவதும் நிறைந்திருக்கிறது.

ரேகா - கார்த்திகேயனின் நாட்டுப் படகு கரையை எட்டுகிறது. ரேகா படகில் இருந்து இறங்கி, கடற்கரையில் படகைக் கட்டுகிறார். கடல் அன்னையைத் தொட்டு வணங்குகிறார். கடல் தொழிலுக்குச் செல்லும்போது செருப்பு அணிவதில்லை.

கடற்கரையிலிருந்து விறுவிறுவென நடந்து வீட்டுக்குச் சென்றவர், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்குகிறார். அனைத்தையும் பார்க்கும்போது பெண் என்னும் பெரும் சக்தியின் வடிவமாகத் தெரிந்தார் ரேகா!

படங்கள்: என்.சுவாமிநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close