[X] Close

விரல் நுனியில் உலக சினிமா


world-cinema-bhaskaran

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 11:35 am
  • அ+ அ-

கோவையைப் பொறுத்தவரை, `உலக சினிமா, திரைப்பட விழா` என்றெல்லாம் பேசத் தொடங்கினால், உடனே சுட்டிக்காட்டப்படுபவர் `உலக சினிமா` பாஸ்கரன்(58). சர்வதேச தரத்தினால படம் குறித்து எந்த விவரம் தேவைப்பட்டாலும், கூகுளுக்குப் பிறகு இவரை நம்பி அணுகலாம். பிளாக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என உலக சினிமாக்களுடன், உள்ளூர் சினிமாக்கள் பற்றியும் இடைவிடாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார். திரைப்படம் இயக்க வேண்டுமென்ற இவரது கனவு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னரே குறும்பட வடிவில் பலித்தாலும், முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த இவரைத் தேடியபோது, கரும்புக்கடை இக்சான் பள்ளிவாசலில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல் ஆச்சரியப்படுத்தியது. "உலக சினிமா கதை இருக்கட்டும், முதலில் உங்க கதையை சொல்லுங்க?" என்றோம்.

"என் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள சீர்காட்சி. சிறு வயதிலேயே நிறைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்செந்தூரில் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறைக்காக சென்னையில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்றேன்.

அப்போதெல்லாம் குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரத்தில் ஒரு காட்சிக்கு டிக்கெட் வாங்கினால், இன்னொரு காட்சியையும் சேர்த்துப் பார்க்கலாம். இப்படி 30 நாட்களில் 60 சினிமாக்களைப் பார்த்தேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது தினமும் `நைட் ஸ்டடி` என்று பொய் கூறிவிட்டு, இரவுக் காட்சிப் படத்துக்குப் போய்விடுவேன். அப்போதெல் லாம் எனக்கு சிவாஜி படங்கள்தான் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் விவரம் தெரிந்தபிறகு, கே.பாலச்சந்தரை ரசிக்கத் தொடங்கினேன். கல்லூரி காலத்தில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ருத்ரையாவை ரசிக்கத் தொடங்கினேன். ஒரு டிகிரி வாங்க வேண்டுமென்பதற்காகத்தான் படித்தேனே தவிர,  எண்ணமெல்லாம் சினிமாவிலேயே இருந்தது.

1983-ல் கல்லூரிப் படிப்பு முடிந்த அடுத்த நாளே, சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். உதவி இயக்குநர் கனவில் சுற்றிக் கொண்டிருந்த நான், நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் அசோசியேட் டைரக்டர் பொன்மணிராஜனுடன் இணைந்தேன்.

கொஞ்சம் காலத்துக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, பொன்மணிராஜனுக்கு திரைப்படம் இயக்கும் சந்தர்ப்பம் கிடைக்கச் செய்தேன்.  ஆனால், எதிர்பாராதவிதமாக நான் அவரது குழுவிலிருந்து கழற்றிவிடப்பட்டேன். இந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் சென்னையிலிருந்து கிளம்பி, 1985-ல் கோவைக்கு வந்துவிட்டேன்.

வீடியோ கேசட்டும்...விளம்பரமும்...

அப்போது கோவையில் 100-க்கும் மேற்பட்ட வீடியோ கேசட் கடைகள் இருந்தன. மும்பையிலிருந்து ஆங்கிலப் படங்களின் கேசட்டுகளை வாங்கி, வீடியோ கடைகளுக்கு விற்பனை செய்தேன். பின்னர், பழைய தமிழ்ப்படங்களின் உரிமையை வாங்கி, அதை வீடியே கேசட்டாக மாற்றி விற்பனை செய்தேன்.

தொடர்ந்து, விளம்பரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். பல்வேறு நிறுவனங்களுக்கு 60 விளம்பரங்களை தயாரித்துக் கொடுத் தேன். திரைக்கதை நான் எழுதினாலும், இயக்கவில்லை.

இந்த சூழலில், எழுத்தாளரும், ஒளிப்பதி வாளருமான செழியன், ஆனந்த விகடனில் `உலக சினிமா` குறித்து எழுதத் தொடங்கினார். மொத்தம் 100 இயக்குநர்களின் சிறந்த படம் குறித்தும், அந்த இயக்குநர்களின் மற்ற படங்கள் குறித்தும் அவர்  எழுதினார். அத்தனை படங்களையும் தேடித் தேடி பார்த்தேன். அப்போதுதான் இந்திய, தமிழ்ப் படங்களுக்கும், சர்வதேச தரத்தினால படங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது.

உலகத் திரைப்படங்கள் மீது எனக்கு ஏற்பட்ட காதலால், `கோணங்கள்` திரைப்பட இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டேன்.  கோவையில் பல்வேறு திரைப்படங்களை திரையிட்டோம். 2010-ல் சிறுவர் சினிமா திரைப்பட விழாவை நடத்தி, `சில்ரன் ஆஃப் ஹெவன்`, `வே ஹோம்`, `ராபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்` உள்ளிட்ட படங்களைத் திரையிட்டோம். அதேபோல, காட் பாதர் படத்தின் 3 பாகங்களையும் அடுத்தடுத்த நாட்களில் திரையிட்டோம்.

2015-ல் கோணங்கள் திரைப்பட இயக்கத்திலிருந்து பிரிந்து, கோவை திரைப்பட இயக்கத்தைத் தொடங்கினேன். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை உலக சினிமாக்களையும், சனிக்கிழமை சர்வதேச சிறுவர் சினிமாக்களையும் திரையிட்டோம். சிறுவர்களுக்காக 3 திரைப்பட விழாக்கள், இரானிய திரைப்பட விழா, சீன திரைப்பட விழா, சர்வதேச திரைப்பட விழா என 6 திரைப்பட விழாக்களை நடத்தினேன்.

ஆனாலும், எனது இயக்குநர் கனவு 2018-ல் தான் பலித்தது. வள்ளுவத்தில் ஓர் அதிகாரமான `நாணுடமை` என்ற பெயரில் குறும்படத்தை இயக்கினேன்.  இந்திய திரைப்பட சங்க கூட்டமைப்பு சார்பில், கொல்கத்தாவில் நடைபெற்ற தெற்காசிய குறும்பட விழாவில், இந்திய பனோரமா பிரிவில் நாணுடமை திரையிடப்பட்டது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வுக்குப் பெயர்தான் நாணுடமை. இந்த உணர்வே, மீண்டும் தவறு செய்யாமல் தடுக்கக் கூடியது" என்றார் பாஸ்கரன்.

அது சரி, பள்ளிவாசல்ல எதுக்கு தங்கியிருக்கீங்க?

நண்பர் சாகுல் அமீது, `இஸ்லாமியர்கள் பற்றி ஒரு படமெடுத்துத் தரமுடியுமா?` என்று கேட்டார். அதுதான் இங்கே தங்கி, கடந்த 3 மாதங்களாக தோப்பில் முகமது மீரான், பிர்தௌஸ் ராஜகுமாரன் உள்ளிட்டோரின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 100 பேருக்கும் மேற்பட்டோரை சந்தித்துப் பேசியுள்ளேன். எளிய இஸ்லாமியரின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில், `பிள்ளையார்புரம் - இன்ஷா அல்லா` என்ற படத்தை இயக்க உள்ளேன். வரும் ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்கும்.

எப்படி `உலக சினிமா’ பாஸ்கரன்-ஆக மாறினீர்கள்?

2010-ல் செம்மொழி மாநாட்டின்போது `உலகசினிமா ரசிகன்` என்ற இணைய பதிவை (பிளாக்) தொடங்கினேன். நான் 3000  சினிமாக்களுக்குமேல் பார்த்துள்ளேன். அவற்றில் 300 படங்கள் குறித்து அந்த பிளாக்கில் எழுதினேன். அதிலிருந்து என்னை `உலக சினிமா பாஸ்கரன்` என்று நண்பர்கள் அழைக்கத் தொடங்கினர்.

உலக அளவில் எவை நல்ல சினிமாக்கள்?

ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, வாழ்வியலைப் பிரதிபலிக்கும் சினிமாக்கள் வந்தன. பிறகு ஹாலிவுட்டிலும் சர்வதேச தரத்திலான படங்கள் வந்தன. பின்னர், பல்வேறு நாடுகள் உலகத் தரத்திலான படங்களை வெளியிட்டன. அந்தந்த மண்ணின் வாழ்வியலைப் பிரதிபலிப்பவை நல்ல சினிமாக்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பாளர்கள்?

`பை சைக்கிள் தீவ்ஸ்` இயக்கிய இத்தாலி இயக்குநர் விட்டோரியா டிசிகா, இரானிய இயக்குநர்கள்  ஜாஃபர் பனாஹி, அபாஸ் கிராஸ்டமி, மஜித் மஜிதி, இந்தியாவின் சத்ய ஜித்ரே, ரித்விக் கட்டக், ஜி.அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

தமிழில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்? சர்வதேச தரத்திலான  தமிழ்ப் படம் என நீங்கள் கருதுவது எவற்றை?

பாலாஜி சக்திவேல், செழியன், லெனின் பாரதி ஆகியோரைக் குறிப்பிடலாம். குறிப் பாக,  செழியன்  இயக்கிய ‘டூலெட்’ பிப்ரவரியில் திரையிடப்பட உள்ளது. அதற்கு முன்பே, 100-க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவிட்டது. 28-க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துள்ளது.  அதேபோல,லெனின் பாரதியின்  மேற்குத் தொடர்ச்சி மலையும் முக்கியமான திரைப்படம். உலக சினிமா தரத்தில் வந்த ஒரு வணிக சினிமாவாக பரியேறும் பெருமாளைக் குறிப்பிடுவேன். இயக்குநர் மாரி செல்வராஜ், ஒரு முழுமையான உலக சினிமாவைப் படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

வழக்கமாக, உலக சினிமாக்களை பார்த்து காப்பியடித்து விட்டார்கள் என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மீது புகார் கூறுவார்கள்? இந்த நிலை நீடிக்கிறதா?

கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் க்ளைமாக்ஸ் தாக்கத்தில், ஐரோப்பிய படமான `அகா` இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் மக்களின் ரசனையும் மெல்ல மெல்ல மாறி வருகிறது.

எது நல்ல படம்?

நம் வாழ்வியலை, எவ்வித புனைவுகளுமின்றி, வணிக சமரசங்களுக்கு இடம் கொடுக்காமல்   பிரதிபலிக்கும் படங்களே நல்ல படங்கள். அதேசமயம், திரைமொழியும் முக்கியம்.

வேறு என்ன செய்கிறீர்கள்?

சென்னை சுயாதீன திரைப்பட இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி,  சென்னையிலும் உலகப் படங்களைத் திரையிட்டு வருகிறோம். அண்மையில், 58 வயதில், சென்னையில் இ.ஆர். ஸ்டுடியோவில் நடிப்பு வகுப்புக்குச் சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சிவாஜியும், கமலும் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்கள் என்று,  அவர்கள் உயரத்தைத் தொட இந்த ஜென்மம் போதாது...

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close