காளை மாடும்... கல் செக்கும்… பாரம்பரியத்தை மீட்கும் பொறியியல் பட்டதாரி

எஸ்.கோபு
உணவே மருந்து; மருந்தே உணவு என்ற நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையைத் தொலைத்து, பாரம்பரிய உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, நவீன யுக உணவுகளை நாடியதால்தான், சர்க்கரை, உடல் பருமன், ரத்த அழுத்தம் என தொற்றா நோய்களின் இருப்பிடமாய் மாறி வருகிறோம். நாகரிகம் என்ற பெயரில் நாம் இழந்துவிட்ட பாரம்பரியத்தில் ஒன்று கல் செக்கில் எண்ணெய் பிழியும் முறை.
தமிழகத்தில் பல நூற்றாண்டு காலமாக கல் செக்கு மற்றும் மரச் செக்கில்தான் உணவுக்கான எண்ணெய் வகைகளைப் பிழிந்து எடுத்துப் பயன்படுத்தினர்.
தமிழர்களின் பாரம்பரியமான இந்தத் தொழிலில், வாணியர் என்ற ஒரு பிரிவினர் நிபுணத்துவம் பெற்று விளங்கினர்.
1950-ம் ஆண்டுக்கு முன்பு வரைகூட எண்ணெய் ஆட்டி எடுக்கும் கல் செக்கு, மரச் செக்கு கருவிகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தன.
இந்த செக்குகளில் நிலக்கடலை, தேங்காய், எள் ஆகிய எண்ணெய் வித்துகளை , கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து ஆட்டி, எண்ணெயாகப் பிழிந்து எடுத்தார்கள். இந்த எண்ணெயை ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரத்தில் ஊற்றி, சில நாட்கள் சூரிய ஒளியில் வைப்பார்கள். இதனால் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சத்துகள் எண்ணெயில் கலந்துவிடும்.
பின்னர், சில்வர் பாத்திரத்தில் சேமித்து, மாட்டு வண்டிகள் மூலம் வீடு வீடாகக் கொண்டுசென்று எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர் வாணியர்கள். தரமான இந்த எண்ணெய், உணவுக்கு கூடுதல் சுவையையும், உடலுக்கு ஆரோக்கியமும் அளித்தது.
சுத்தமான, ஊட்டச் சத்து மிக்க செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் அண்டாமல், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். ஆனால், கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்த நடைமுறை வழக்கொழிந்து போனது. கல் செக்கு, மரச் செக்கு இருந்த இடத்தை ரோட்டரி, எக்ஸ்ப்ளோரர் இயந்திரங்கள் பிடித்துக்கொண்டன.
கல் செக்குக்கு மறுவாழ்வு
இந்த நிலையில், கல் செக்கு எண்ணைய் உற்பத்தியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பொறியியல் பட்டதாரி ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லிபேட்டை செக்கடியை சேர்ந்தவர் சிவசெண்பகம் (22). பொறியியல் பட்டதாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல் செக்கு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், ரயில்வே பாலம் அருகே கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார். இங்கு, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் கண்முன்னே கல் செக்கில் ஆட்டி எடுத்து தருகிறார்.
"காணாமல்போன கல் செக்கு முறையை, மீட்டெடுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று அவரிடம் கேட்டோம்.
"இயற்கை உணவு முறை, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் மக்களுக்கு தற்போது விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான எண்ணெய் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் கல் செக்கு அமைக்க முயன்றுவருகிறேன்.
கல் செக்கு, மரச் செக்கு,ரோட்டரி செக்கு, எக்ஸ்ப்ளோரர் செக்கு என 4 வகைகளில் எண்ணெய் பிழியலாம். கல் செக்கில் கல் உரலும், வாகை மரத்தினாலான உலக்கையும் பயன்படுத்தப்படுகிறது. மரச் செக்கில் வம்மரை மரத்தால் உரலும், வாகை மரத்தால் உலக்கையும் பயன்படுத்தப்படுகிறது. ரோட்டரி செக்கில், உரல், உலக்கை இரண்டும் இரும்பாலானது. இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுகிறது. எக்ஸ்ப்ளோரர் என்பது அதிநவீன இயந்திரங்கள் மூலம் எண்ணெய் எடுப்பது.
வெப்பமில்லா முறை
கல் செக்கில் 3 மணி நேரத்துக்கு, 35 கிலோ எள்ளைக் கருப்பட்டியுடன் ஆட்டுவோம், அதில், 17 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.390-க்கு விற்பனை செய்கிறோம். கல் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.290.
கல் செக்கில் கல்லால் உரலும், மரத்தால் உலக்கையும் பயன்படுத்தப்படுவதால், ஊராய்வின்போது வெப்பமில்லா முறையில் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படுகிறது. திறந்த வெளியில் எருது பூட்டி ஆட்டப்படும் செக்கில், 120 கிலோ எடையுள்ள மர உலக்கை, கல் உரலில் ஒரு நிமிடத்துக்கு ஒரு சுற்று மட்டுமே சுற்றும். இதனால் சூரிய ஒளியில் உள்ள சத்துகளை எண்ணெய் வித்துகள் ஈர்த்துக் கொள்ளும். கல் செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் உராய்வில் சூடாகாமலும், வேதிமாற்றம் அடையாமலும், உயிர் சத்துகள் அழியாமலும் இருக்கிறது.
ரோட்டரியில் உலக்கை, உரல் இரண்டுமே இரும்பு. இரும்பு உலக்கை ஒரு நிமிடத்துக்கு 35 முறை சுற்றும். இதனால் 60 டிகிரி வரை வெப்பம் உருவாகி, எண்ணெயில் உள்ள கொழுப்புகள், கெட்ட கொழுப்பாக மாறுகின்றன. அதிக வெப்பநிலையில் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதால், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துகள் வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன.
சுத்தமான எண்ணெயை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கலாம். எண்ணெய் வித்துகள் எந்த நிறத்தில் உள்ளதோ, அதே நிறத்தில்தான் எண்ணெயும் இருக்க வேண்டும். நல்லெண்ணெயில் கசப்பும், காரமும் இருக்க வேண்டும். கடலை எண்ணெயில் கசப்பும், காரமும் இருக்கக் கூடாது. தேங்காய் எண்ணெயை பிளாஸ்டிக், கண்ணாடி, எவர்சில்வர் என எந்தப் பாத்திரத்தில் ஊற்றி வைத்தாலும், குளிரில் நெய்போல உறைய வேண்டும்" என்றார் சிவசெண்பகம்.