[X] Close

தோடர் பழங்குடியின மக்களின் முதல் மருத்துவர் பாரதி


doctor-bharathi

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 11:24 am
  • அ+ அ-

ஆர்.டி.சிவசங்கர்

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா என்று பெண்மையைப் போற்றிய மகாகவி பாரதியின் வார்த்தைகளை மெய்ப்பித்திருக்கிறார் மற்றொரு `பாரதி`. பள்ளிப் படிப்பை முடித்தாலே பெரும் சாதனையாகக் கருதும் பழங்குடியினர் மக்களிடையே, தனது கடின உழைப்பு, விடாமுயற்சியால் தோடரின சமுதாயத்தின் மருத்துவர் கனவை நிறைவேற்றியுள்ளார் பாரதி. இந்த மக்களில் இருந்து உருவான முதல் பல் மருத்துவர். உலக அளவில் வெறும் 2000 மக்கள்தொகை மட்டுமே கொண்ட பழங்குடியினத்தவர் தோடர்கள். நவநாகரிக ‘டிஜிட்டல்’ உலகில், நமது கலாச்சாரம், பண்பாட்டைத் தொலைத்து வரும் சூழலில்,  பல நூற்றாண்டுகளாய் பண்பாடு, கலாச்சாரத்தைப் பாதுகாத்து, விடாமல் பின்பற்றி வருபவர்கள் பழங்குடியினர்.

பழங்குடியினரில் ஓர் அங்கமான தோடர் சமுதாயத்தில்இருந்து முதன்முறையாக ஒரு பெண் மருத்துவராகியுள்ளார். அந்த சமூகமே அவரைத் தலையில் வைத்துக்  கொண்டாடிக் கொண்டிருக்கிறது.அந்த சமுதாயத் தலைவர் மந்தேஷ்குட்டனின் மகள்தான் இந்த பாரதி. தன்னைப்போல தனது சமுதாயத்தில் உள்ளவர்களும் முன்னேற வேண்டுமென்பதில் உறுதியாக உள்ள பாரதி, பணம் கொடுக்க முடியாததால், எம்.பி.பி.எஸ். வாய்ப்புக் கிடைக்காமல், கவுன்சிலிங் மூலம் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததாக தெரிவித்தார்.

டாக்டர் கனவு

"நான் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த தோடர் இனப் பெண். அப்பா தோடர் சமுதாயத் தலைவர். அம்மா நேரு இந்திரா இல்லத்தரசி. அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். பின்னர், கோவையில் பிளஸ் 2 படித்து,  நல்ல மதிப்பெண் பெற்றேன்.`என் மகள் டாக்டருக்குப் படிக்க வேண்டும்` என்று அப்பா எனது சிறு வயதிலிருந்தே ஆசையாக பேசிக் கொண்டிருப்பார். எனக்கு 3  வயதானபோது, மாறுவேடப் போட்டியில் டாக்டர் வேடம் அணிந்து முதல் பரிசை  வென்றேன். அன்று முதலே டாக்டராக வேண்டுமென்ற ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

விளையாடும்போதுகூட பொம்மை ஸ்டெதஸ்கோப்பை வைத்துக்கொண்டுதான் விளையாடுவேன். எங்கள் சமுதாயத்தில் டாக்டர், கலெக்டர் போன்ற உயர் பதவிகளில் யாரும் இல்லை. மருத்துவத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதேஎன் ஆசை. பிளஸ் 2  முடித்த பின்னர்,  மருத்துவப் படிப்புக்கு
விண்ணப்பித்தேன். ஆனால், இடம் கிடைக்கவில்லை. லட்சக் கணக்கில் பணம் கொடுத்து, தனியார் கல்லூரியில்  எம்.பி.பி.எஸ். சேர எனக்கு விருப்பம் இல்லை.  இந்த நிலையில், கவுன்சிலிங் மூலம் பல் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது" என்றார் பாரதி.

கல்லூரி அனுபவங்களும் பதற்றம் நிறைந்த தாகவே இருந்ததாக அவர் கூறினார். "கல்லூரிக்குள் நுழைந்ததும் ஒருவித பதற்றம் இருந்தது. பாடங்கள் மிகவும் கடினமாக  இருந்தன. பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால்,மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் படிப்பது கஷ்டமாக இருந்தது. எனினும், கல்லூரியில் நல்லபயிற்சி கொடுத்ததால், தேர்ச்சி பெற்றேன்.  நான் தோடர் இனப்பெண் என்பது என் நண்பர்களைத்தவிர, வேறு யாருக்
கும் தெரியாது.  நான்3-வது ஆண்டு படிக்கும் போது சென்னையில் ஆங்கில நாளிதழ் நடத்தி  மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த பத்திரிகையில் `தோடர் இன முதல் பெண் டாக்டர்` என்று செய்தி வந்தது. 

அதன் பிறகே கல்லூரியில் எனக்கு மரியாதை அதிகமானது.  கல்லூரியில் பாடம்நடத்திய பேராசிரியர் கள் அனைவரும் என்னைப் பாராட்டி உற்சாகம் கொடுத்தனர். எங்கள் சமுதாய மக்கள் அனைவரும் 'எப்போது டாக்டராகி வருவாய்?' என்று கேட்பார்கள். எங்கள் கிராமத் துக்கு யார்சென்றாலும் `எங்கள் பெண் டாக்டருக்கு படிக்கிறாள்` என்று பெருமை யாக கூறுவார்கள். அதுஎனக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது"என்றார்  பாரதி. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பி.டி.எஸ்.முடித்துள்ள பாரதி,  பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சமுதாய மக்களுக்கு என்ன செய்வார்?

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரியின் மக்கள் தொகை சுமார் 7.5 லட்சம். இதில்,  பழங்குடியின மக்கள் தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சியில் 394 பேர், குன்னூர் நகராட்சியில் 122 பேர், உதகை வட்டத்தில் 4,329 பேர், குன்னூர் வட்டத்தில் 2,397 பேர், கோத்தகிரி வட்டத்தில் 6,197 பேர், கூடலூர் வட்டத்தில் 15,450 பேர் என மொத்தம் 28,889 பேர் வசிக்கின்றனர்.தோடர் இனத்தில் 29.52 சதவீதம், கோத்தர்  32.71,  குரும்பர் 18.13, முள்ளுக்குரும்பர்  38.15, இருளர் 21.78, பனியர்  11.27, காட்டுநாயக்கர்  இனத்தில்  9.03 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.இந்த ஆறு பழங்குடியின மக்களில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள் இருப்பதுடன், வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதால் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆனால், இருளர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் பழங்குடியின மக்கள்  போதிய அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை.கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்திவருகின்றனர்.

டாக்டராகும் பாரதி தனது சமுதாய  மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? "நீலகிரி மாவட்டத்தில் 70 கிராமங்களில்  2000 தோடர் இன மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். கிராமந்தோறும் சென்று இலவச  முகாம் நடத்தி, சிகிச்சை அளிப்பேன். இன்றும் சிலர் வேப்பங்குச்சியை வைத்துத்தான் பற்களைத்  துலக்குகிறார்கள். வயதானாலும் அவர்களது பற்கள் உறுதியாக உள்ளன. எனினும், தற்போது உணவுப் பழக்கம் வேறு. எனவே, பிரஷ் வைத்து துலக்கினால்தான் சுத்தமாகும். இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பற்களைப்  பாதுகாக்குமாறு அறிவுறுத்துவேன்.சிலர் புகை பிடிக்கிறார்கள். அதை நிறுத்தும்படி அறிவுறுத்தி, எங்கள் இனத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற முயற்சிப்பேன். படிப்பின் அவசியம் குறித்து வகுப்புகள் எடுத்து, அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கச் செய்வேன்.  அதேபோல, கிராமந்தோறும் சென்று தலைவலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்துவேன். எங்கள் சமுதாய மக்களுக்கு சுகாதாரம் குறித்து சொல்லிக்கொடுத்து, சிறந்த கிராம மக்களாக மாற்றுவேன். முக்கியமாக, எந்த நேரத்திலும் எங்களது பண்பாடு, கலாச்சாரத்தை மறக்க மாட்டேன்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close