[X] Close

தமிழில் படிக்கும் ‘கோண்டி மொழி' மாணவர்கள்- மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு


kondi-mozhi

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 11:22 am
  • அ+ அ-

 

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள `கோண்டி` நகருக்குச் சென்றபோது, கொஞ்சம் அந்நிய மொழியில் சில குழந்தைகள் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அதேசமயம், தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் செய்தார்கள். ஆச்சரியத்துடன் விசாரித்தபோது, அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது.  

மத்தியப் பிரதேசம், ஆந்திரம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் தாய் மொழி கோண்டி. கோண்டு இனத்தவரின் தாய்மொழியாக இது இருப்பினும், அந்த  இனத்தவரில் பாதி பேர் மட்டுமே இப்போது கோண்டி மொழியைப் பேசுகின்றனர். இந்த மொழிக்கு எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது என்றாலும்,  சிறப்பான நாட்டார் இலக்கியத்தைக் கொண்டுள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அது சரி, கோண்டி மொழி பேசும் குழந்தைகள், இங்கு தமிழ் படிக்க வந்தது எப்படி? அப்பகுதியில் சிறப்புப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கும், தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட (என்.சி.எல்.பி.) இயக்குநர் டி.வி.விஜயகுமாரை அணுகினோம். "கல்வி பயிலும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு  கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவர்களைப் பணிக்கு அனுப்புவதைத் தடுக்கும் வகையில் 1995-ல் கொண்டுவரப்பட்டது தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் திட்டம்.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த அலுவலகம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களது மறுவாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, ஜவுளி சார்ந்த தொழிற்சாலை கள், பவுண்டரிகள், ஆட்டோமொபைல், இன்ஜினீயரிங் தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான  குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்த்து, அடிப்படைக் கல்வி வழங்குகிறோம். இங்கு 8-ம் வகுப்பு வரையிலான பாடங்களைக் கற்பித்த பின்னர், முறைசார்ந்த பள்ளிகளில்  9, 10-ம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். தொடர்ந்து, மேல்நிலைக் கல்வி மட்டுமின்றி,  ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் மற்றும் தொழிற்கல்விகள்  பயிலவும் ஊக்குவிக்கிறோம்.

ஊசி மணி, பாசி மணி...

சில மாதங்களுக்கு முன் கோண்டி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி கோவை வந்தவர்கள், இப்பகுதியில் தங்கிவிட்டனர். மூலிகை மருந்து தயாரித்து விற்பது, ஊசி, பாசி மணி விற்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

தற்போது சுமார் 500 குடும்பத்தினர் இங்கு  வசிக்கின்றனர்.  வறுமையில் வாடும் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சில வீடுகள்  கட்டித்தரப்பட்டுள்ளன. மேலும், சிலர்  துணிகளால் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

குழந்தைகளின் கல்வியில் இவர்களுக்கு பெரிய ஆர்வம் எதுவுமில்லை. ஆய்வு செய்ததில் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளும், 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 35 குழந்தைகளும் பள்ளிக்கே செல்லாமல் இருந்தது தெரியவந்தது. நிறைய குழந்தைகள் பெற்றோருடன், ஊசி, பாசி மணி, மூலிகை மருந்து உள்ளிட்டவை விற்கச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உத்தரவின்படி, கடந்த ஜூலை மாதம் அந்தக் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம், கல்வியால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் புரியவைத்தோம். மேலும், கல்வி மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை உணரச் செய்தோம். முதலில் தயங்கினாலும், பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

அதேபோல, குழந்தைகளை அழைத்துக் கூட்டம் நடத்தி, படிப்பின் அவசியம் குறித்து விளக்கினோம். அப்பகுதியிலேயே ஒரு வாடகைக் கட்டிடத்தை தேர்வு செய்து, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பயிற்சி மையத்தைத் தொடங்கினோம். 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையத்தில் சேர்த்தோம்.  அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டோம்.

சுகாதாரமும், விளையாட்டும்...

சிறப்பு பயிற்சி மையத்துக்கு  ஆசிரியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் 30 குழந்தைகள் இங்கு வந்தனர்.  தற்போது 35 குழந்தைகள் பயில்கின்றனர்.  முதலில், சுத்தமாக இருப்பது, சுகாதாரத்தைப் பேணுவது, கை, கால் கழுவுவது, தினமும் குளிப்பது ஆகியவற்றைப் பழக்கப்படுத்தினோம். பின்னர், குழந்தைகளிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்தோம். பல்வேறு விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்தோம். தொடர்ந்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்தோம். அவர்களுக்கு புத்தகம், நோட்டுகள், சீருடை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. சமூக நலத் துறை மூலம் மதிய உணவும் வழங்கப்படுகிறது. அவ்வப்போது பல போட்டிகள் நடத்தி, குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்குகிறோம்.

இந்த 6 மாதங்களில் குழந்தைகள் நன்கு தமிழ் படிக்கவும், எழுதவும் செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது வயதுக்கு ஏற்றவாறு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். ஒவ்வொருவரது பெயரிலும் வங்கிக் கணங்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாதம் ரூ.400 ஊக்கத்தொகையும் வழங்கப்படு கிறது.  தற்போது, காகிதப் பைகள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள்  தயாரித்தல் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கிறோம்" என்றார்.

இந்த மையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை குளோரி பேட்ரஸ் கூறும்போது, "ஆரம்பத்தில் இந்தக் குழந்தைகளை ஒரு இடத்தில் அமரவைப்பதே சவாலாக இருந்தது. விளையாட்டு, கதை சொல்லல் என கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை வழிக்குக் கொண்டுவந்தோம். பாடங்களைப் பயில முதலில் கொஞ்சம் தடுமாறினார்கள். தற்போது தமிழில் நன்கு படிக்கவும், எழுதவும் செய்கின்றனர். மிகுந்த ஆர்வத்துடன் மையத்துக்கு  வருகின்றனர். தேவையின்றி யாரும் விடுப்பு எடுப்பதில்லை" என்றார்.

நிறைய படிக்க ஆசை...

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரெயான்-சரோஜினி ஆகியோர் ஊசி, பாசி மணி விற்றுப் பிழைக்கின்றனர்.  இவர்களது மகள் ரூப்லா(12)  கூறும்போது, "கடந்த 7 மாதங்களுக்கு முன்புவரை அம்மாவுடன் பாசி மணி விற்கச் செல்வேன். இங்கு பள்ளி தொடங்கியவுடன், அம்மாவுடன் செல்லாமல், தினமும் வகுப்புக்கு வந்துவிடுகிறேன். சக மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பயில்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தமிழில் எழுதவும், படிக்கவும் பழகியுள்ளேன்.  நிறைய படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டுமென்பது எனது ஆசை" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close