[X] Close

24 மணி நேரமும் `ஆவின்’ பால்- அசத்துகிறார் முன்னாள் ராணுவ அதிகாரி


24-hours-aavin

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 11:15 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

ஹோட்டலில் சர்வராகப் பணியாற்றினார். பிறகு 34 ஆண்டுகள் ராணுவப் பணி. இப்போது, 365 நாளும், 24 மணி நேரமும் `ஆவின்` பால் விற்றுக் கொண்டிருக்கிறார் கோவை ஒண்டிப்புதூர் கோபாலகிருஷ்ணன். "நான் மிலிட்டரிகாரனுங்க. அநியாய விலைக்கு பொருள வித்தா, தேசத்துக்கு துரோகம் செஞ்சவனாகிவிடுவேன். சுத்தமான பொருள, நியாயமான விலைக்கு கொடுக்கணும். வாடிக்கையாளர் நள்ளிரவில் கேட்டாலும் பால் இல்ல-னு சொல்லக்கூடாது. அதுதாங்க என்னோட லட்சியம்" என்கிறார் இவர்.

கோவை ஒண்டிப்புதூரில் இந்த `மிலிட்டரி`காரரின் ஆவின் பாலகம் பிரபலம். பகல், இரவு என எந்த நேரத்திலும், நியாயமான விலைக்கு பால் கிடைக்கும். பல அமைப்புகளால் பாராட்டுப்பட்ட கோபாலகிருஷ்ணனை சந்தித்தோம்.

"எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி. அப்பா ராதாகிருஷ்ணன் ஐயர். வைதீகம்தான் தொழில். நாங்க 3 பசங்க. நான் கடைசி. கிடைக்கும் சொற்ப பணத்தில் அம்மா ஞானாம்பாள் குடும்பம் நடத்தினாங்க. முடிகொண்டான் உயர்நிலைப்பள்ளியில் 
எஸ்.எஸ்.எல்.சி. படிச்சேன்.

குடும்பமே ராணுவத்தில்...

1962-ல் சீனா போரின்போது நான் 8 வயது மாணவன். அந்தப் போர்ல இந்தியாவுக்கு பின்னடைவு. மாட்டு வண்டியில லவுட் ஸ்பீக்கர் கட்டிக்கிட்டு ‘உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை’னு அறிவிச்சுக்கிட்டே போனாங்க. அப்ப,  `நம்ம குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிப்போமு-னு` எங்க அப்பா-அம்மா முடிவெடுத்தாங்க. பெரிய அண்ணன் சீனிவாசனை மிலிட்டரியில சேத்தாங்க. அவரு, அடுத்த அண்ணன் வெங்கட்ராமனையும், அதுக்கப்புறம் என்னையும் மிலிட்டரியிலே சேத்தாரு.

அதுக்கும் முன்னாடி எஸ்எஸ்எல்சி முடிச்சிட்டு, நான் வீட்டில் இருந்தேன். சாப்பாட்டுக்கே கஷ்டம். ஹோட்டல்ல வேலைக்கு சேந்தா சோறு கிடைக்குமுன்னு, மாயவரத்துல ஒரு ஹோட்டல்ல நான் சர்வர் வேலைக்குப் போனேன். ஒரு 6 மாதம் வேலை செஞ்சிருப்பேன். அப்புறம், பெரிய அண்ணன் என்ன, செகந்திராபாத் கூட்டிக்கிட்டுப்போய், கர்னல் உஜாகர்சிங் கிட்ட அறிமுகப்படுத்தினாரு. அப்ப எனக்கு பதினேழரை வயசு. என்னப் பாத்த கர்னல், "என்னப்பா, பால்குடி மாறாத பையன மிலிட்டரிக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்க. மீச கூட இல்ல. கிரவுண்டுல ஓட சொன்னா, மயக்கம்போட்டு விழுந்திருவான் போல இருக்கே'னு சொன்னார். ஆனாலும், அவரை சம்மதிக்க வைச்சு, என்ன மிலிட்டரியில சிப்பாயா சேத்தாரு அண்ணன்.

நல்லா வேல செஞ்சு முன்னுக்கு வரணு முன்னு, கடினமாகவும், நேர்மையாகவும் உழைத்தேன். 2003-ல் ஜெயப்பூர்ல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்ல அசிஸ்டென்ட் ரெக்ரூட்டிங் ஆஃபீசர். என்ன மாதிரியே கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவங்களுக்கு உதவணுமுன்னு நினெச்சேன். ஏழைக் குடும்பத்துல இருந்து வந்த இளைஞர்கள் நிறைய பேரை ராணுவத்துல சேர்த்தேன். நேர்மையாகப் பணியாற்றிய எனக்கு ஆர்மி கமாண்டர் விருது கொடுத்தார். அப்புறம் டெல்லியில சுபேதார் மேஜரா வேலை செஞ்சு, 2007-ல் பணி ஓய்வு பெற்றேன்.

என் அண்ணங்க 28 வருஷம் மிலிட்டரியில சர்வீஸ். நான் 34 வருஷம் சர்வீஸ். என் மகன் ஜி.ஹரிஹரன் இப்போ கொச்சி் கப்பல்படை தளத்தில் லெப்டினன்ட் கமாண்டர். என் மனைவி தனலட்சுமி, ஆர்மி பள்ளியில டீச்சரா வேலை செஞ்சாங்க. நான் எந்த ஊருக்குப் போனாலும், அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவேன். என்னோட உயர்வுக்குப் பக்கபலமா இருந்தது என் மனைவிதான். என் மாமனார் ஊர் கோவை. 1985-ல் கோவைக்கு வந்துவிட்டோம். 2007-ல் பணி ஓய்வுக்குப் பிறகு, கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனிக்கு குடிவந்துவிட்டோம். 2008-ல தனியார் கம்பெனில பொது மேலாளராக சேர்ந்து, 7 வருஷம் வேலை செஞ்சேன்.

முதியோரை உதாசீனப்படுத்தலாமா?

தினமும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகள்ல அதிகாலையில வாக்கிங் போவேன். அப்ப, சீனியர் சிட்டிசன்ஸ் நிறைய பேர் பாலுக்காக வரிசையில காத்திருப்பாங்க. அங்க பால் விக்கறவங்க, வயசானவங்கள மதிக்க மாட்டாங்க. `அரை லிட்டர் தான, கொஞ்சம் பொறுமையா இரு`னு சொல்லி, உதாசீனப்படுத்துவாங்க. பாலுக்கு காசு கொடுக்கும்போது, மீதமும் ரூ.1, ரூ.2-ஐ தரமாட்டாங்க. இத கேட்டா, மரியாதைக் குறைவா பேசுவாங்க. 

இதெல்லாம், என்ன ரொம்பகாயப்படுத்துச்சு. உடனடியாக ஆவின் நிறுவனத்துக்குப் போய், உதவிப் பொதுமேலாளராக இருந்த முருகாநிதி கிட்ட முறையிட்டேன். அப்ப, நீங்களே ஆவின் பாலகம் நடத்தறீங்களானு கேட்டாரு. உடனே சம்மதிச்சேன். அப்புறம், பொதுமேலாளர் சுமதி-யை அறிமுகப்படுத்தினாரு. 'நீங்க மிலிட்டரி மேன். ஆவின் பாலகம் நடத்துவதில் அனுபவமும் இல்ல. எப்படி நடத்துவீங்க?'னு கேட்டாங்க. `கொஞ்சம் டைம் கொடுங்க. நீங்களே வியக்கும் அளவுக்கு  ஆவின் பார்லர நடத்திக் காட்டறேன்'னு சொல்லி, அனுமதி வாங்கினேன்.

ஒண்டிப்புதூர்ல திருச்சி ரோட்டுல 2017 செப்டம்பர்ல இந்த ஆவின் பார்லர தொடங்கி னேன். மத்த கடைங்க மாதிரி, டீ,  காபி, பஜ்ஜி, போண்டா விக்கல. எண்ணெய் மிகுந்த பலகாரம் உடம்புக்கு கெடுதி. அதனால, ஆவின் தயாரிப்புகளான பால், தயிர், வெண்ணெய், நெய், பாதாம் பவுடர், பால்பேடா, மில்க் ஷேக் மட்டும்தான் விக்கறேன். பார்லர் முழுக்க ஏசி செஞ்சி, சுத்தமா வைச்சிருக்கேன். வெளியில் விக்கறதவிட ரொம்ப கம்மி விலைக்குத்தான் பொருட்களை கொடுக்கறேன்.

ஆவின் பார்லர் ஆரம்பிச்ச சமயத்துல, காலைல 4.30 மணிக்குத் தொடங்கி, இரவு 9.30 மணிக்கு மூடிவிடுவேன். ஒரு நாள் கடை 
மூடும் போது ஒரு ஆட்டோ டிரைவர் வந்தாரு.

`குழந்தைக்கு பால் வேணும். அம்மாவ பால் குடுக்கக் கூடாது-னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆவின் பால் வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க`னு சொல்லி, பால் வேணும்னு கேட்டார். அப்ப சுத்தமா பால் தீந்துபோச்சு. காலையிலதான் கிடைக்குமுன்னு சொன்னேன். அடுத்த நாள் காலையில 4.15 மணிக்கு கடைக்கு வந்தபோது, அந்த ஆட்டோ டிரைவர் நின்னுக்கிட்டிருந்தாரு.

கதறி அழுத ஆட்டோ டிரைவர் 

`என்னங்க`ன்னு கேட்டேன். `நைட்டு முழுக்க 15 கிலோமீட்டர் சுத்திவிட்டேன். பால்கிடைக்கல. குழந்தை பால் இல்லாம தவிக்குது`னு சொல்லி கதறி அழுதாரு.

எனக்கு மனசு ஒடஞ்சி போச்சி. இவ்வளவு பால் இருந்து என்ன பயன்? ஒரு குழந்தைக்கு பால் கொடுக்க முடியலயேனு நெனச்சேன். உடனே, ஆவின் நிறுவனத்தை அணுகி, 24 மணி நேரமும் பால் விக்க அனுமதி கொடுக் கணுமுன்னு கேட்டேன். அமைச்சர் அளவுல பர்மிஷன் கேட்டு, அப்புறம் அனுமதிச்சாங்க. 2018 ஜனவரி 1-ம் தேதி 24 மணி நேர ஆவின் பாலகமா இது மாறுச்சு. இரவுப் பணிக்கு ஒருத்தர வேலைக்கு சேர்த்து, 365 நாளும், 24 மணி நேரமும் பால் விற்பனை நடக்குது. ஆவின்ல இருந்து தினமும் 3 முறை பால் சப்ளை செய்யறாங்க.

ஒரு நாளு நைட்டு 2 மணிக்கு ஒரு பாட்டி, மயக்கம் போட்டு விழுந்துடுச்சி. பால் வாங்கித் தருமாறு டாக்டர் சொல்லியிருக்காங்க. பல இடத்துல தேடியும் கிடைக்காமல், என்னை அணுகி பால் வாங்கிப் போனாங்க. அடுத்த நாள் அந்தப் பாட்டியோட பேரன் கடைக்கு வந்து, கையெடுத்து கும்பிட்டு, பாட்டிய காப்பாத்திட்டீங்கன்னு சொன்னாரு.

நள்ளிரவில் ஆஸ்பத்திரிக்கு...

ஒரு சமயம், ரேஸ்கோர்ஸ் பகுதியில உள்ள குழந்தைகள் மருத்துவமனையில குழந்தையை  சேர்த்த முஸ்லிம் பெண் ஒருவர், நள்ளிரவுல என்னைய தொடர்புகொண்டு, `குழந்தைக்கு பால் வேணும், வாங்கிவரக் கூட ஆள் இல்ல. ஹெல்ப் பண்ணுங்க`னு கேட்டாங்க. நானே பால் எடுத்துக்கிட்டுப் போய், அவங்களுக்கு கொடுத்துட்டு வந்தேன். காசு கூட வேணாமுன்னு சொல்லிட்டேன்.

இந்த மாதிரி நிறைய சம்பவம். இரவு பால் விற்பனையால எனக்கு லாபம் எதுவுமில்ல. செலவுதான் அதிகம். ஆனாலும், பால் இல்லாம தவிக்கறவங்களுக்கு, உதவ முடியுதேன்னு ரொம்பவும் பெருமைப்படறேன்.பல அமைப்புங்க என்னைப் பாராட்டி இருந்தாலும், நெருக்கடியில இருந்து மீண்டவங்க தெரிவிக்கற நன்றிதான் உற்சாகம் கொடுக்குது. இப்பவெல்லாம், ஆவின் நிறுவனத்துல புதுசா பர்மிஷன் கேக்கறவங்ககிட்ட, `மிலிட்டரிகாரரோட  பார்லர பார்த்து, அதுமாதிரி நடத்துங்க'னு சொல்லிஅனுப்பறாங்க. அதுபோதுங்க" என்றார் பெருமிதத்துடன்.

கடின உழைப்பு அவசியம்

"இளைய தலைமுறைக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?" என்றோம். 'மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கணும். எந்த நேரத்துலேயும் சோம்பல் கூடாது. உற்சாகமா, கடினமா உழைக்கணும். சோதனை வந்தா பயப்படாம எதிர்கொள்ளணும். வீட்டுக்கும், நாட்டுக்கும் பாரமா இருக்காம, சமுதாயம், தேசத்துக்கு ஏதாவது செய்யனும். எல்லாத்தையும்விட ஒழுக்கம் முக்கியம்.

நான் மிலிட்டரியில 34 வருஷம் வேலை செஞ்சாலும்கூட, இதுவரைக்கும்  ஒரு சொட்டு மதுபானம் குடிச்சதில்லை. பனி கொட்டும் பிரதேசத்துல, கார்கில்  போர்ல கலந்துகொண்டேன். அப்பக்கூட, சிகரெட்டோ, மதுவோ தொடல. பார்லருக்கு முன்னாடி இருக்கற இடத்த வாடகைக்குக் கொடுங்க. டீ, பலகாரம் வித்துக்கறோம். மாதம் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வாடகை தர்றோமுன்னு பல பேரு முன்வந்தாங்க. எனக்கு மக்களோட ஆரோக்கியம்தான் முக்கியமுன்னு சொல்லி, உறுதியா மறுத்துட்டேன். அநியாய விலைக்கு பொருள வித்து, மக்கள ஏமாத்தி வாழ்றதக் காட்டிலும், நேர்மையா இருந்து கஷ்டப்படுவது மேல். இதத்தான் இளைஞர்களுக்கு சொல்ல விரும்பறேன்" என்று முடித்துக் கொண்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close