[X] Close

மடிய வேண்டும் மருத்துவத் தவறுகள்!


medical-mistakes-to-be-folded

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 11:57 am
  • அ+ அ-

‘இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ சேவை செய்த மாநிலம் தமிழகம்’ என்று சமீபத்தில்தான் டெல்லியில் விருது பெற்றது தமிழகத்தின் சுகாதாரத் துறை. அந்தப் பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்தப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி. தொற்று உண்டான கொடுமை, தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ஐ.வி. தொற்று தொடர்பாக 90-களில் இருந்த பதற்றமும் அச்சமும் தற்போது குறைந்திருக்கிறது. எனினும், இது பற்றிய முழுமையான புரிதல் அவசியம். ஹெச்.ஐ.வி. என்பது ‘எய்ட்ஸ்’ எனும் உயிர்க்கொல்லி பாதிப்பை உருவாக்கும் ஒருவகை வைரஸ் கிருமி. இது பாதுகாப்பில்லாத/தகாத பாலுறவு, சோதிக்கப்படாத ரத்தம், சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஊசி உள்ளிட்ட மருத்துவக் கருவிகள் ஆகியவற்றின் வழியாக அடுத்தவர்களுக்குப் பரவுகிறது. கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. கிருமி இருந்தால், அவருடைய வயிற்றில் வளரும் சிசுவுக்கும் அது பரவிவிடும். எனினும், சிசுவுக்கு நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நவீன மருந்துகள், சிகிச்சை முறைகள் உண்டு.

சாத்தூர் சம்பவம்

சாத்தூர் கர்ப்பிணிக்கு ரத்தசோகை நோய் இருந்திருக்கிறது. ரத்தம் செலுத்துவதற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு ரத்தம் இல்லை என்ற காரணத்துக்காக, சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து ரத்தத்தைப் பெற்று அவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள். அந்த ரத்தத்தைத் தானமாகக் கொடுத்தவர், தன் உறவினருக்காக அந்த ரத்தம் கொடுத்துள்ளார். பின்பு, வெளிநாடு செல்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான், ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. உடனே, அவர் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வந்து விஷயத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் அவரின் உறவினருக்கு வேறு ஒருவரது ரத்தத்தைச் செலுத்திவிட்டு, இவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமலேயே சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது.

பொதுவாக, ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெறப்படும்போது, அதில் ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா ஆகிய ஐந்து பாதிப்புகள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். அவை இல்லை என்று உறுதியானால் மட்டுமே அவரிடமிருந்து ரத்தத்தைப் பெற வேண்டும்.

அரசு அல்லது தனியார் ரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் தாங்கள் பெற்ற ரத்தத்தை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும்போது, அந்த ரத்தம் மேற்சொன்ன பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, ரத்த வங்கி மருத்துவரின் சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும். அப்படிக் குறிப்பிடாமல் அனுப்பப்பட்டிருந்தால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் மருத்துவமனையில் மேற்சொன்ன பரிசோதனைகளை அவசியம் செய்ய வேண்டும். அதன் பிறகே அடுத்தவருக்கு அந்த ரத்தத்தைச் செலுத்த வேண்டும். இதுதான் நடைமுறை.

மருத்துவக் கடமை

இந்த மாதிரியான ஒரு மருத்துவச் சங்கிலி அமைப்பில் ரத்த தானம் பெறும் ரத்த வங்கி ஆய்வாளர்கள், சேமிப்பாளர்கள், அதன் மருத்துவர், ரத்த தானம் செலுத்தும் மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் அதன் மருத்துவர் உள்ளிட்ட பலருக்கும் மருத்துவச் சேவைக்கே உரித்தான தனிப்பெரும் கடமை இருக்கிறது. ஒருவருக்கு உயிர் காக்கும் மருந்தாகத் திகழ்கின்ற ரத்தம் சமயங்களில் உயிர்பறிக்கும் பக்க விளைவுகளைக் கொண்ட ஆபத்தான ஆயுதமாகவும் மாறக்கூடும் என்பதை அவர்கள் அறியாமல் இல்லை. எனவே, ஒருவரிடமிருந்து ரத்தத்தைப் பெறுவதாகட்டும், அதை அடுத்தவருக்குச் செலுத்துவதாகட்டும் அந்தச் சங்கிலி அமைப்பின் ஒவ்வொரு கண்ணியிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கட்டாயம் அவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அங்கே மனிதத் தவறுகளுக்குத் துளியும் இடம்தரக் கூடாது. அவரவர் பொறுப்புணர்வில் வீழ்ச்சி இருக்கக் கூடாது. ரத்தம் ஏற்றுதல் ஓர் உயிர் காக்கும் நிகழ்வு என்பதை மறந்துவிடக் கூடாது.

சாத்தூர் நிகழ்வு மனிதத் தவறுகளால் ஏற்பட்டுள்ள அவலம் என்றால், அரசு ஆய்வகங்களில் தகுந்த அல்லது தரமான பரிசோதனைக் கருவிகள் இல்லாத குறையும் பணியாளர்களின் பற்றாக்குறையும் வழக்கமான நடைமுறைகளில் தவறுகள் ஏற்பட வழிவகுப்பதுண்டு. உதாரணமாக, ரத்ததானப் பைகளைக் குளிர்சாதனப்பெட்டியில் சரியான வெப்பநிலையில் பாதுகாக்காவிட்டால், அதில் சேமிக்கப்படும் ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது தவறான முடிவுகளைத் தந்துவிடும்.

அடுத்த பிரச்சினை இது: அரசு ரத்த வங்கிகளில்  தேவையான பணியாளர்கள் மற்றும் ரத்த வங்கி மருத்துவர்களைச் சுகாதாரத் துறை நிரந்தரமாக நியமிப்பதில்லை. கூடுதல் பொறுப்புள்ள மருத்துவ அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாக மேற்கொள்ள முடிவதில்லை. ஆய்வகப் பணியாளர்களிலும் தற்காலிகமாக வேலை பார்ப்பவர்களே அதிகம். சிவகாசி அரசு மருத்துவமனையில் தவறு செய்தவர்கள் தற்காலிகப் பணியாளர்கள் என்பதே இதற்குச் சாட்சி. ரத்த தானத்தைப் பொறுத்தவரை ஆய்வாளர்கள் கொடுக்கும் ரத்தப் பரிசோதனை முடிவுகளை அங்குள்ள மருத்துவர் நேரடியாகச் சரிபார்த்த பிறகே அடுத்தவருக்கு அந்த ரத்தத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், பல அரசு ரத்த வங்கிகளில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன.

தேவை விழிப்புணர்வும் உளவியல் சிகிச்சையும்

சாத்தூர் நிகழ்வைப் பொறுத்தவரை ரத்த தானம் செய்தவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டும், அவருக்குத் தெரிவிக்காமல் விட்டது முதல் தவறு. அப்போதே அவருக்கு முறையாக அதைத் தெரியப்படுத்தித் தகுந்த தடுப்பு சிகிச்சைகளை வழங்கியிருந்தால் இந்த விபரீதம் ஏற்பட வழியில்லாமல் போயிருக்கும்.

சாத்தூர் கர்ப்பிணிப் பெண் ஹெச்.ஐ.வி. தொற்றால் உடல்ரீதியான பாதிப்புகளால் துன்பப்படுவது ஒருபுறமிருக்க, மன உளைச்சலாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து தரப்படுவதோடு, தேவையான உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும். முக்கியமாக, ஹெச்.ஐ.வி. தொற்றைக் கட்டுப்படுத்தவும், அது எய்ட்ஸ் நோயாக வெளிப்பட்டால்கூட அதைக் கட்டுப்படுத்துவதற்கு நிறைய மருந்துகள் இருக்கின்றன. தாய், சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து வராது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைக்கும் சாமானியர்களின் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஆபத்பாந்தவனாகத் திகழ்வது அரசு மருத்துவமனைகள் மட்டுமே. சாத்தூர் சம்பவம்போல் நடைமுறைத் தவறுகள் நிகழும்போது, அரசு மருத்துவமனைகள் மேல் ஏழை எளிய, அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை குலைவதும் குறைவதும் வழக்கம். எனவே, சாத்தூர் நிகழ்வில் விதிகளை மீறிய எல்லாக் குற்றவாளிகள் மீதும் அரசு சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து, இனிமேல் இந்தத் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்வதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதும் தரமான, பாதுகாப்பான சிகிச்சைகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதும் காலத்தின் கட்டாயம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close