[X] Close

திசை திரும்புகிறதா விமான நிலைய விரிவாக்கம்?- கொங்கு மண்டலத்தின் பல ஆண்டு கனவு!


cbe-airport

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 10:34 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

கொங்கு மண்டலத்தின் பல்லாண்டு கோரிக்கையான கோவை சர்வதேச விமானநிலைய விரிவாக்கம் திசை திரும்புவதாகவும், முழு அளவிலான விரிவாக்கமே கோவைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்குமென்றும் தொழில், வணிகத் துறையினர் உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்த கோவை மாவட்டத்தின் அடையாளத்தை, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பஞ்சாலைகள் மாற்றின. 1888-ல் ஐரோப்பாவைச் சேர்ந்த சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் தொடங்கப்பட்ட  கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில், பஞ்சாலைகளுக்கு வித்திட்டது. தொடர்ந்து ஜவுளி சார்ந்த ஆலைகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. இதையடுத்து, இன்ஜினீயரிங் சம்பந்தமான தொழிற்கூடங்கள் உருவாகத் தொடங்கின.

ஜி.டி.நாயுடு, டெக்ஸ்டூல் பாலசுந்தரம், டெக்ஸ்மோ ராமசாமி கவுண்டர், ஜி.கே.சுந்தரம், ஜி.ஆர்.தாமோதரன் உள்ளிட்டோர் வெளிநாட்டில் படித்துவிட்டுவந்து, கோவையின் தொழில் துறையை மேம்படுத்தினர்.

இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக மாறிய கோவையிலிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

1940-ல் தொடங்கிய விமான சேவை

இந்த சூழலில்,  1940-ம் ஆண்டுகளில் கோவையிலிருந்து விமானசேவை தொடங்கியது. ஆரம்பத்தில் இந்தியன் ஏர்லைன்ஸின்  ஃபோக்கர், டக்ளஸ், ஆவ்ரோ வகை விமானங்கள் சென்னை, மும்பைக்கு இயக்கப்பட்டன. தொடர்ந்து, கொச்சி, பெங்களுருக்கு சேவைகள் தொடங்கின.

இந்த நிலையில், நவீன விமானங்கள் இயக்க வசதியாக ஓடுபாதையை விரிவாக்கத் திட்டமிடப்பட்டு, 1980-ல் விமானநிலையம் மூடப்பட்டது. சூலூரில் உள்ள ராணுவ விமான தளத்தில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, பயணிகள் விமானங்கள் அங்கு இறக்கப்பட்டன. 1987-ல் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர், மீண்டும் கோவை விமானநிலையம் செயல்படத் தொடங்கியது. 1995 முதல் பன்னாட்டு விமானசேவை தொடங்கியது. 2012-ல் இது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது கோவை விமான நிலையத்தி லிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொச்சி, புனே உள்ளிட்ட
நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜவுளி, தங்க நகை வியாபார மேம்பாட்டுக்காக கொல்கத்தா, அகமதாபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல, தற்போது கொழும்பு, ஷார்ஜா, சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மிகப் பெரிய தொழில் நகரமான கோவையிலிருந்து அதிக அளவிலான வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மற்றும் பாலக்காடு  மாவட்டங்களைச் சேர்ந்தோர் கோவை விமானநிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து, செல்கின்றனர். 

கோவை, திருப்பூரிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், பெரிய அளவிலான சரக்கு விமானங்கள் இங்கு வருவதில்லை. எனவே, சரக்கு விமான சேவையையும் அதிகரித்தால், ஏற்றுமதி உயரும் என்கின்றனர் தொழில்துறையினர்.

நிரந்தர அனுமதி!

விமானநிலையத்திலிருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்ல உள்நாட்டு விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் (Director General of Civil Aviation) அலுவலகத்தின்  உரிமம் அவசியம். கோவை விமானநிலையம்,  குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தற்காலிக உரிமத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்த உரிமத்தை அவ்வப்போது புதுப்பித்துப் பயன்படுத்தி வருகிறது. எனவே, நிரந்தர உரிமம் பெற விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

தற்போதுள்ள ஓடுதள பாதை சுமார் 9000 அடி நீளம் கொண்டது. இதில் ஏடிஆர் ரக விமானங்களை இயக்க அனுமதி உள்ளது. தற்காலிக அனுமதியில் 200 சீட் வரை கொண்ட போயிங், ஏர்பஸ் போன்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும், பெரிய அளவிலான சர்வதேச விமானங்களை இயக்க வேண்டுமெனில், ஓடுதளப் பாதையை, 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல்  அலுவலகத்தின் நிரந்தர உரிமத்தைப் பெறலாம். கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து  விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், 2010-ல் விரிவாக்கத்துக்கு இந்திய விமானநிலைய ஆணையம் உத்தரவிட்டது.  நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்கான உத்தரவும் மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்தும் பணியை கோவை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

எனினும், நிலங்களை கொடுப்பவர்களுக்கு வழங்கக் கூடிய இழப்பீட்டுத் தொகை தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், இந்தப் பணி தாமதமானது. விமானநிலைய மேம்பாட்டுக்கு 627 ஏக்கர் தேவை. ஓடுதள விரிவாக்கம் மூலம் விமானநிலையத்துக்கு நிரந்தர உரிமம் கிடைத்துவிடும். மேலும், கூடுதல் கட்டிடங்கள், வசதிகள், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. 

கூடுதல் தொகை வழங்க கோரிக்கை

இப்பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலமும், அரசுக்குச் சொந்தமான 30 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளது. இவற்றை கேட்டுப் பெற்றால், மீதமுள்ள 457 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டது. பின்னர், வேளாண் நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.900, கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு ரூ.1500 என தொகை நிர்ணயிக்கப்பட்டது.  நில  உரிமையாளர்களுடன் பல்வேறு கட்டங்களாக  பேச்சு
வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு  குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.3000 நிர்ணயிக்க வேண்டும். மேலும், கட்டிடத்துக்கும் சதுர அடிக்குரூ.3000 நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு நிர்ணயித்த தொகையை ஒப்புக்கொள்ளாதவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

365 ஏக்கர் போதுமானது!

இந்த நிலையில், கோவை விமானநிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கத்திடமிருந்து, மாவட்ட ஆட்சியருக்கு கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாற்று வழியில் விரிவாக்கத் திட்டத்தை நிறைவேற்ற, 365 ஏக்கர் போதுமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் இந்த திடீர் அறிவிப்பு, விரிவாக்கத்துக்காக வலியுறுத்தி வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விமானநிலைய விரிவாக்கத்துக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர்  டி.நந்தகுமார் கூறியதாவது: விமானநிலையத்தின் ஓடுதளப் பாதையை விரிவாக்கம்செய்ய வேண்டுமென்பதும், வெளி நாடுகளுக்கு கூடுதல் விமானம் இயக்க வேண்டுமென்பதும்தான் எங்களது பிரதான கோரிக்கை.

அமைச்சரின் முயற்சி...

இந்த நிலையில், விமானநிலைய விரிவாக்கத்துக்கு 627 ஏக்கருக்குப் பதிலாக, 365 ஏக்கர் போதுமெனக் குறிப்பிடப்பட்டு, விமானநிலைய இயக்குநரிட மிருந்து, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த மாற்றுத் திட்டத்தில், விமான ஓடுதள பாதை விரிவாக்கப் பணிகள் இடம்பெறாது. 

இது தொடர்பாக விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக தொடர்ந்து முயற்சித்து வரும், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்  சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் தெரிவித்தோம். அந்த சமயத்தில் டெல்லியில் இருந்த அவர், உடனடியாக தமிழக எம்.பி.க்களுடன், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்துப் பேசினார். விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாகப் பெற்றுத்தரும். எனவே, பழைய திட்டத்தின்படியே விமானநிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். விமானநிலைய விரிவாக்கப் பணிகளை திசை திருப்பாமல், முழு அளவிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கையாகும். 

அதேபோல, துபாய், கோலாலம்பூர், பாங்காக் நகரங்களுக்கு கூடுதல் விமானங் களை இயக்கினால், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு எளிதில் செல்லமுடியும். அதன்மூலம், தொழில், வர்த்தக் துறையினர் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் பயனடைவர். மருத்துவச் சுற்றுலா, கல்வி, சுற்றுலாத் துறைகளும் வளர்ச்சியடைந்து, ஒட்டுமொத்த கொங்கு மண்டல மேம்பாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்கும். திருச்சியிலிருந்து தினமும் 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையில், அதைவிடப் பெரிய தொழில் நகரமான கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்கினால் மட்டுமே, இங்கிருந்து சென்னை, திருச்சி, கொச்சி, பெங்களூரு சென்று, வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை மாறும். கோவை விமானநிலையத்துக்கான வருவாயும் அதிகரிக்கும்.

விமானநிலையங்களில் இரவில் தங்கி, பகலில் புறப்படும் விமானங்களுக்கு 28 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டது. இதையும் குறைக்க வேண்டுமென, உள்ளூர் அமைச்சர் மூலமாக, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று, 28 சதவீதத்தை ஒரு சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதன் காரணமாக, தற்போது  4 விமானங்கள் கோவை விமானநிலையத்தில் இரவு தங்கி, அதிகாலை நேரத்தில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கின்றன. மேலும், நள்ளிரவு சேவையான `ரெட் ஐ ஃப்ளைட்` சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் விமானங்களை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இயக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

`ஹப் அண்டு ஸ்போக்’ வசதி

கேரள மாநிலத்தில் 3-க்கும் மேற்பட்ட விமானநிலையங்களுக்கு `ஹப் அண்டு ஸ்போக்` அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை விமான நிலையம்  'ஹப் அண்ட் ஸ்போக்' விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால், உலகம் முழுவதும் செல்வதற்கு, இங்கிருந்தே விமான டிக்கெட் பதிவு செய்யலாம். குடியுரிமைசோதனை, பொருட்களை ஏற்றுவது போன்றவற்றையும் இங்கே முடித்துக் கொள்ள முடியும். எனவே, கோவை விமானநிலையத்துக்கும் ஹப் அண்டு ஸ்போக் அந்தஸ்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

`பாசா` ஒப்பந்தம்

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளைத் தலைவர் வி.லஷ்மிநாராயணசாமி கூறும்போது, "தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு விமான சேவை (பாசா) ஒப்பந்தத்தில், இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.  `பாசா` என்ற இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில்  வெளிநாட்டு நிறுவனங்கள் சில நாடுகளுக்கு நேரடியாக விமானசேவையை  மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தில் திருச்சி விமானநிலையம் இடம்பெற்றுள்ளது. சிறிய விமானநிலையமான கண்ணூர் விமானநிலையம்கூட இந்தப் பட்டியலில் உள்ளது. ஆனால், அதைவிட மிகப் பெரிய நகரமான, பொருளாதார வலிமைகொண்ட கோவை விமானநிலையம் பாசா பட்டியலில் இல்லை. எனவே, கோவை விமான நிலையத்தை இதில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

மிகப் பெரிய நகரமான கோவையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவும், வரவும் போதுமான விமானவசதி கிடையாது. வெளி நாட்டவர், சென்னை, பெங்களூரு, கொச்சி விமானநிலையங்களுக்கு வந்து, அங்கிருந்து கோவைக்கு வர வேண்டியுள்ளது.  இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில், வர்த்தகத் துறையினர் கோவைக்கு முக்கியத்துவம் தரத் தயங்குகின்றனர். ஏற்றுமதி, இறக்குமதி வளர்ச்சிக்கு விமானநிலைய விரிவாக்கம் மிக முக்கியமானது. கோவை விமானநிலைய விரிவாக்கத்தை 657 ஏக்கர் கொண்ட, பழைய திட்டப்படியே நிறைவேற்ற, உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. எனினும், விரிவாக்கப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கோவைக்கு வர வேண்டிய தொழில்,  வர்த்தகம், வேறு நகரங்களுக்குச் செல்வதைத் தடுக்க முடியும். ஏறத்தாழ 15 ஆண்டு கோரிக்கை திசை திரும்புவதை ஏற்க முடியாது" என்றார்.

இந்த நிலையில், புதிய திட்டப்படியே விமானநிலைய விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென சின்னியம்பாளையம் ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "365 ஏக்கரில் விமானநிலையத்தை விரிவுபடுத்தினாலே போதுமானது. இதனால், கட்டிடங்கள் பாதிக்கப்படுவதும் வெகுவாகக் குறையும். 650 ஏக்கர் விரிவாக்கம் என்பது தேவையற்ற பிரச்சினைகளுக்குத்தான் வழிவகுத்தது.  எனவே, விமானநிலையத்தின் மாற்றுத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close