[X] Close

மீண்டும் உயிர் பெறுமா மழைநீர் சேகரிப்புத் திட்டம்?


rain-water

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:50 am
  • அ+ அ-

டி.ஜி.ரகுபதி

மழை நீரே மண்ணின் உயிர் நீர். குளம், கிணறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும்,  குடிநீர்த்தேவை பூர்த்தியடையவும், பாசன வசதி மேம்படவும், உணவுப் பொருள் உற்பத்திக்குத் தேவையான நீர் தடையின்றி தொடர்ந்து கிடைக்கவும் மழைநீர் இன்றியமையாததாகும். முந்தைய காலங்களில் மாதம் மும்மாரி மழை பெய்தது என முன்னோர்கள் கூறுவர். ஆனால், பருவ மாறுதல், தட்பவெப்ப நிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பச் சூழல் போன்றவற்றால் மழை குறைந்து வருகிறது. கிடைக்கும் மழைநீரும் முறையாகச் சேகரிக்கப்படாமல் வீணடிக்கப்படுகிறது என்பது வேதனைக்குரியதாகும். 

தற்போதைய  சூழ்நிலையில் பழைய வீடுகளை  இடித்து, அடுக்குமாடிக் கட்டிடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.

இவ்வாறு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் விழும் மழைநீர், எங்கும் தேங்க வழியின்றி, சாலையில் வழிந்தோடி சாக்கடையில் கலந்து வீணாகிறது. சாக்கடைக்  கால்வாய், மழைநீர்க் கால்வாய் வழியாகச்  செல்லும் நீர் குளத்துக்குள் கலந்தாலும், நேரடியாக கட்டிடங்களில் இருந்து நிலத்துக்குச் சென்று நிலத்தடி  நீர்மட்டத்தை உயர்த்துவதில்லை. குளத்தில் தண்ணீர் தேங்குவதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால், கட்டிடப் பகுதிகளில் மழை நீர் உயருவதில்லை.

முன்பு மண் சாலைகளாக இருந்த வழித்தடங்கள் மற்றும் பெரும்பாலான சாலைகள், தார் சாலைகளாக மாற்றப் பட்டுள்ளன. இவ்வாறு தார் சாலைகளால் மழைநீர் நிலத்துக்குள் செல்வது தடைபடுகிறது.

ஜெயலலிதாவால் அறிமுகம்!

மழைநீரை வீணாக்காமல் சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க கடந்த 2001-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களின் மேற்கூரைகள், தரைப் பகுதிகளில் விழும் மழைநீர் வீணாகாமல்,  குழாய் மூலம் கொண்டுசென்று நிலத்துக்கடியில் சேமித்துவைப்பதே மழைநீர் சேகரிப்புத் திட்டமாகும்.

எவ்வாறு இருக்க வேண்டும்? 

கட்டிடங்கள், வீடுகள், குடியிருப்புகளின் மேற்கூரைகளில் வடியும் மழைநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில்,  மேற்கூரைகளைச் சுற்றி குழாய்கள் அமைத்து, அதன் மூலம் வரும் மழைநீர் நிலத்துக்குச் செல்லும் வகையில், அந்தக்  கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுமார் 10 அடி ஆழத்தில் குழிதோண்டி, நிலத்தடி நீர் செல்லும் வகையில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அரசு அறிவித்த சமயத்தில், அனைத்து வீடுகள், குடியிருப்புகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் முடங்கிவிட்டது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்புத்  திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே மாநகராட்சியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், கட்டிட உரிமையாளர்கள் வரைபடத்தைசமர்ப்பிக்கும்போது, அதில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இடம்பெறச் செய்கின்றனர். சிலர், கட்டிடங்களில் மழைநீர் சேமிப்புக் கட்டுமானத்தையும் அமைக்கின்றனர். ஆனால், அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர்சேமிப்புக் கட்டமானம் உள்ளதா என்றும், இருக்கும் கட்டுமானங்களில் தொடர்ந்து மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல்படுத்தப்படுகிறதா என்பதையும்அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

பெயரளவுக்கே திட்டம்!

மேலும், கட்டிட அனுமதி பெறும்போது மழைநீர் சேகரிப்புக் கட்டுமானம் ஏற்படுத்திவிட்டு, அது பழுதடைந்தால் புதுப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால்,  பல கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம், முழுமையான செயல்பாட்டில் இல்லாமல், பெயரளவுக்கே உள்ளது. குழாய்கள் உடைந்தும், பழுதாகியும் இருக்கின்றன.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் 4.70 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன.  தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிவித்தபோது,  அனைத்துக் கட்டிடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் இத்திட்டம் முறையாக கண்காணிக்கப்படவில்லை. இதனால், மழைநீர் சேகரிப்புத் திட்டம் 50 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆய்வு அவசியம்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜே.டேனியல் ஜேசுதாஸ் கூறும்போது, "மழை நீர்சேகரிப்புத்திட்டம் குடியிருப்புகளில்முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டம்  செயல்படுத்தாமல் இருந்தால், கட்டிட உரிமையாளர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close