[X] Close

தட்டித் தட்டித் திறந்த கதவுகள்...!- பின்னலாடை நகரின் வளர்ச்சிப் பின்னணி


tirupur-pinnaladai

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 10:57 am
  • அ+ அ-

த.செ.ஞானவேல்

இந்தியாவின் மான்செஸ்டர்னு சொல்லப்பட்ட மும்பை நகரத்தில்தான், ஜவுளித் தொழில் கொடிகட்டிப் பறந்தது. இந்த துறை சார்ந்து அரசு எடுக்கிற எல்லா கொள்கை முடிவுகளும் அந்த நகரத்தை மையப்படுத்தியே இருந்த காலம் உண்டு. இன்னைக்கு அந்தப் பெருமை மும்பைகிட்ட இருந்து கைநழுவிப் போயிருச்சு. அதுக்கு முக்கியமான காரணம், முதலாளி தொழிலாளி நல்லுறவு இல்லாம போனதுதான்.  ஒரு ஊரில் தொழில் நல்லா வளரணும்னா, இந்த ரெண்டு தரப்பும் ஒருத்தருக்கொருத்தர் உறுதுணையா இருக்கணும். திருப்பூர்ல எங்க ஏற்றுமதியாளர் சங்கம், இந்த உண்மையை உணர்ந்து செயல்பட்டது" என திருப்பூர் பின்னலாடை நகரமாக மாறிய வரலாற்றைத் தொடர்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சக்திவேல் 

"தொடக்கத்தில் இருந்தே தொழிற்சங்கங்களுடன் இணைந்து, அவங்க நியாயமான கோரிக்கைகளை முதலாளிகள் ஏற்கத் துணையா நின்னோம். அதேபோல, தொழிலாளிகளிடமும், நிறுவனங்களின் எதிர்பார்ப்பைப் புரிய வச்சிருக்கோம். ஆறு  லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிற திருப்பூர்ல, வேலைநிறுத்தம் இல்லாம சுமுகமா தொழில் வளர்ச்சி இருக்கு. அரசு, முதலாளிகள், தொழிலாளிகள் இந்த மூன்று தரப்புக்கும் உறவுப் பாலமா இருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்" என்று கூறிய  ‘பாப்பீஸ்’ சக்திவேல், சங்கத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பெரிய பட்டியலாகத் தருகிறார்

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது திருப்பூர்.  "தமிழக அரசுகிட்ட எங்களுக்கு ஒரு தொழிற்பேட்டை வேணும்னு கேட்டோம். மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்துல கேட்கச் சொன்னாங்க. அப்புறம் பிரதமர்கிட்ட நேரம் வாங்கி, எங்க தேவைகளைச் சொன்னோம். ‘இந்தியா என்கிற பெரிய நாட்டுல, திருப்பூர் மாதிரி சின்ன ஊரைப் பத்தி மட்டும் யோசிக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. சங்கம் ஆரம்பித்து எடுத்த முதல் முயற்சி இது. எல்லாரும் ஒற்றுமையா சேர்ந்து தேவைகளைச் சொன்னா, நல்லது நடக்கும்னு நம்பின எங்களுக்கு பெரிய ஏமாற்றமா போச்சு.
'இதுதான் எங்க தேவை'னு ஆட்சியாளர்களை நேரில் சந்திச்சு சொன்னதே பெரிய சாதனையாக நினைக்க வேண்டிய நிலைமை. எங்கள் தொடர் முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கலை. சங்கம் ஆரம்பிச்சதால எந்த பலனும் இல்லன்னு சிலர் நினைக்க ஆரம்பிச்சாங்க. 

பிரச்சினைகளை அரசாங்கமே தீர்த்து வைக்கட்டும்னு சும்மா இருக்க முடியல. ஏதாச்சும் மாற்றத்தைக் கொண்டுவந்தே தீரணும். மத்திய, மாநில அரசுகள் எந்தக் கோரிக்கையைக் கண்டுக்கலையோ, அதை சங்கத்தின் மூலமா செயல்படுத்திக் காட்டணும்னு முடிவு செய்தோம்.
8 மாதங்களில் 175 தொழிற்கூடம்

ஏற்றுமதி தொழில் செய்றவங்களுக்கு தனியா தொழிற்பேட்டையை எப்படி உருவாக்கிறதுன்னு சிந்திச்சு செயல்படுத்தினோம். உறுப்பினர்கள் எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம்போட்டு, 200 ஏக்கர் நிலம் வாங்கினோம். `எல் அண்டு டி` நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்து 175 தொழிற்கூடங்களை எட்டு மாதங்களில் கட்டி முடிச்சோம். ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புக் கொடுக்காத விஷயத்தை, ஒற்றுமையா நின்னு சாதிச்சுக் காட்டினோம். அரசு அதிகாரிகளே மனமுவந்து பாராட்டினாங்க. உறுப்பினர்களுக்கும் சங்கத்தின்மீது நம்பிக்கை வர ஆரம்பிச்சது.

திருப்பூரில் ஆயிரம் கோடி ஏற்றுமதி தொழில் வர்த்தக இலக்கை நிர்ணயம் செஞ்சிருந்தோம். அதை இரண்டு வருஷத்துல எட்டிப் பிடிச்சோம்.  ஆரம்பத்துல கிண்டல் பண்ணவங்க, அப்புறம் எங்ககூட இணைந்து செயல்பட்டாங்க. சாதிக்கணும்னு நினைக்கிறவங்க, செய்ய வேண்டியது ஒரேயொரு விஷயம். தொடக்கத்தில் மத்தவங்க செய்கிற கேலி, கிண்டல்களை கண்டுக்ககூடாது. தன்னம்பிக்கையை விட்டுடக் கூடாது. ஆயிரம் கோடியே பண்ண முடியாதுனு சொன்னவங்க, நாங்க பத்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயம் பண்ணப்ப கைத்தட்டிப் பாராட்டினாங்க. பெருசா யோசிக்கிறப்பதான் நம்ம பலம் நமக்குப் புரியும். ‘ஒரு சின்ன ஊர் இவ்வளவு நல்லா தொழில் பண்ணுதா’ என மத்திய அரசு எங்க பக்கம் திரும்பிப் பார்த்தது. மாநில அரசும் எங்க பிரச்சினைகளை காது கொடுக்க ஆரம்பிச்சது. கொஞ்சம்கூட சலிப்படையாமல் தட்டிக் கொண்டே இருந்தோம். அதுவும், ஒவ்வொன்றாகத் திறந்தது.

அரசியல் இல்லாத சங்கம்

`திருப்பூரில் தொழில் வளம் பெருக என்னென்ன செய்ய வேண்டும்?` நான் தலைவராக இருந்த 27 வருஷமும் இந்த ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் கண்டுபிடிக்கிறதுதான் எங்களோட முழுநேர சிந்தனையாவும், செயலாகவும் இருந்தது. அன்றாடப் பிரச்சினைகள், பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைப்பது மட்டுமே ஒரு சங்கத்தின் வேலை இல்லை. அதுல ரொம்பவே தெளிவா இருந்தோம். பிரச்சினைகளே வராம இருக்க என்ன வழின்னு தேடி, அதைச் செய்யறதுதான் நோக்கமா இருந்துச்சு. சங்கம் தொடங்கினப்பவே சில விதிமுறைகளை உருவாக்கி உறுதியாக கடைப்பிடித்தோம். சங்கப் பொறுப்பாளர்கள் பொது வேலை காரணமாக பயணம் போறது, தங்கறதா இருந்தாலும், அவங்க சொந்த செலவுல பண்ணனும்னு முடிவு பண்ணோம். அதேமாதிரி, சங்கத்தில் அரசியல் கலந்துடக்கூடாதுங்கிறதுல கவனமா இருந்தோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  திருப்பூருக்கு நல்லது நடக்க இந்த முடிவுதான் காரணம்.

உலக அளவில் ஆயத்த ஆடையில் பிரபலமா இருக்கிற எல்லா பிராண்ட்களுக்கும் திருப்பூர்ல இருந்து துணி ஏற்றுமதி ஆகுது. அரசாங்க ஒத்துழைப்பு இல்லாம எங்களால தொழில் செய்ய முடியாது. அரசியல் புகுந்துட்டா, ஒரு ஆட்சியில் நல்லது நடந்தாலும், அடுத்து வர்ற ஆட்சியில் எங்களுடைய எல்லா செயலுக்கும் அரசியல் சாயம் பூசிடுவாங்க. எனக்கு மூன்று முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிற சூழல் இருந்தும், அரசியலைத் தவிர்த்திருக்கேன். அந்த உறுதியைப் பலர் பாராட்டினாங்க.

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

ஒருமுறை திருப்பூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு வந்து, தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான லாரிகள் 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தொழில் நிறுவனங்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தன. பொருட் செலவும், நேரத்துக்கு தண்ணீர் கிடைக்காமலும் ரொம்ப கஷ்டப்பட்டோம். பொதுமக்கள் குடிநீருக்கே கஷ்டப்பட்டாங்க.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தமிழக அரசுடன் இணைந்து அரசு-தனியார் கூட்டு முயற்சியின் மூலம், பவானி ஆற்றிலிருந்து திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வந்தோம். எங்களின் மைல்கல் முயற்சிகளில் இதுவும் ஒன்று. ரூ.1000 கோடி முதலீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டமும், பாதாள சாக்கடைத் திட்டமும் கொண்டு வந்தோம். மக்கள் குடிநீருக்கே கஷ்டப்படும்போது, தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் கொண்டு வருவது சுயநலமாகத் தோன்றியது. அதனால், திருப்பூர் மாநகரத்துக்கும், அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தைச் சேர்த்தே செயல்படுத்த முடிவெடுத்தோம்.

இதனால் பணமும், காலமும் அதிகம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. குடிநீர்த்  திட்டத்தை பாதாள சாக்கடைத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ஆண்டுகணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆனாலும், அனைவருக்கும் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தியபோது, மக்கள் மனதார வாழ்த்தினார்கள்.

தமிழகத்தில் பல ஊர்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை வந்தாலும், திருப்பூர்ல வராம இருக்க இந்த திட்டமே முக்கிய காரணம். அதேபோல,  பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வரலைன்னா, திருப்பூர் மாநகராட்சியா உயராம போயிருக்கும். கோவையின் இன்னொரு கிளை நகரமா இருந்த திருப்பூர் தனி மாவட்டமானதும், நகராட்சி, மாநகராட்சினு படிப்படியா வளர்ச்சி நோக்கிப்  போவதற்கும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முக்கியமான பங்களிப்பை தந்திருக்கு.

சமூக நலனில் கவனம்

ஒரு ஊருக்கு தொழில் வளர்ச்சி மட்டுமே போதாது. சமூக வளர்ச்சியும் இருக்கணும். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், சமூக நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள்னு அனைவருடனும் இணைந்து வேலை செய்த காரணத்தால், திருப்பூருக்குக் கிடைத்த நன்மைகள் இவை. 
இதுக்காக சென்னைக்கும், டெல்லிக்கும் எத்தனை கூட்டத்துக்கு போயிருப்பேன்னு கணக்கே இல்ல. அதிகாரிகளின் அறை வாசல் முன்னால் காத்துக் கிடந்திருக்கேன். தொழில் வளர்ச்சிக்கு தொழிற்சாலையில் வேலை செய்வதுபோலவே, அரசாங்க அலுவலகங்களிலும் வேலை செய்யணும். அங்கதான் தொழில் ரீதியான அரசு கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. டெல்லியில் உட்கார்ந்து திட்டம் போடுறவங்களுக்கு, ‘நாங்களும் இருக்கோம். எங்களையும் கவனிங்க’னு தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்போம். இப்ப ஜவுளி அமைச்சகம் எடுக்கிற முக்கிய கொள்கை முடிவுகளில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பங்களிப்பு கணிசமா இருக்கும்.

பிரதமரின் பாராட்டு

‘சங்கம் சங்கம்னு இருந்தா நம்ம பொழப்ப எப்படிப் பாக்கிறது’னு ஒரு கேள்வி மனசுக்குள்ள அப்பப்ப வந்து போகும். பொது வேலையில் தானா முன்வந்து ஈடுபடுகிற யாருக்கும் ஈகோவோ, தன்னலமோ வந்துடக் கூடாது. நான் பொதுவேலைகளுக்காக செலவழிக்கிற நேரம், தனிப்பட்ட முறையில் என் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படாம போகலாம். ஆனா, பல நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்குப் பயன் அளித்தது. என்னோட நேரத்தின் மதிப்பு பலமடங்கு மதிப்பு வாய்ந்ததா இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கூட்டத்தில பேசும்போது, ‘சக்திவேல்போல 25 பேர் நாடு முழுவதும்  கிடைத்தால், இன்னும் சிறப்பாக வளர்ச்சியை எட்ட முடியும்’னு பாராட்டினது நான் பார்த்த வேலைக்குக் கிடைத்த அங்கீகாரமா இருந்தது.

இன்று பாப்பீஸ் நிறுவனம் 50 நாடுகளுக்கும் மேல், ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. அனைத்து பிரபலமான பிராண்டுகளிலும் நாங்கள் தயாரித்த ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. என்னுடைய தம்பியும், மகனும் தொழிலில் இணைந்து கொண்டபிறகு, ’பாப்பீஸ்’ நிறுவனத்துக்கு 25 சதவீத நேரத்தையும், சங்க நடவடிக்கைகளுக்கு 75 சதவீத நேரத்தையும் ஒதுக்கினேன். எக்ஸ்போர்ட் தொழிலோடு, ஹோட்டல் துறையிலும் கால் பதித்திருக்கிறது பாப்பீஸ். மத்த வேலைகளைப் பார்க்காம, என்னோட நிறுவன வளர்ச்சியில் கவனம் செலுத்தும்படி நண்பர்கள் வலியுறுத்திட்டே இருந்தாங்க.  ‘பாப்பீஸ்’ குழும நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்றோம். எங்களைவிட பல மடங்கு அதிகமாக வர்த்தகம் செய்பவர்கள் திருப்பூரில் நிறைய பேர் இருக்காங்க.

தனிப்பட்ட முறையில் ‘என் நிறுவனம் இத்தனை கோடி ஆண்டு வருமானம் ஈட்டியது’னு சொல்வதைவிட, ‘திருப்பூரில் இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகம் நடந்தது’ என்கிற புள்ளிவிவரமே என்னை செயலூக்கத்தோடு இருக்க வைத்தது.

குறைந்த முதலீட்டில் அதிக வர்த்தகம்

திருப்பூர் ஜவுளித் துறையில் இந்திய அளவில் கவனம் ஈர்க்க முக்கிய காரணம், இங்கே குறைந்த முதலீட்டில் அதிக வர்த்தகம் செய்யலாம். ரூ.20 லட்சம் முதலீடு இருந்தால், ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யமுடியும். பஞ்சு நூலாக ஆவதில் தொடங்கி, ஏற்றுமதி வரை இந்த ஊரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. ஆர்டர் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, நூல் வாங்குவதில் இருந்து, ஏற்றுமதி தரத்தில் உடைகள் தயாரிப்பது வரை அனைத்தையும் ‘ஜாப் ஒர்க்’ கொடுத்து வாங்கிவிட முடியும். இந்தளவு வசதிகள் நம் நாட்டில் எந்த தொழில் நகரத்திலும் இல்லை. ரூ.27 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடக்குது என்றால், அரசாங்கத்துக்கு எவ்வளவு வரி கட்டியிருப்போம்னு கணக்குப் போட்டு பாருங்க.

புதிய தொழில்முனைவோர்

ஏற்கெனவே தொழில் செய்பவர்களுக்கு தொழில் செய்ய நல்ல சூழலை உருவாக்குவதைப்போலவே, ஏற்றுமதி தொழிலில் ஈடுபட புதிய தொழில்முனைவோரை வரவேற்பதும், வழிகாட்டுவதும் எங்களின் கடமையாக கருதுகிறோம். அதற்காக பல திட்டங்களை உருவாக்கி, வெற்றிகரமா செயல்படுத்தி இருக்கோம்.

தொழிலில் ஏற்படும் திடீர் நஷ்டம், ஏமாற்றம் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்னு எனக்கு நல்லாவே தெரியும். தவறுகள் நடக்காம இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். புதுசா ஏற்றுமதி தொழில் செய்ய வர்றவங்க, வெளிநாட்டிலிருந்து ஆர்டர் கொடுக்கறவங்களைப் பற்றிய விவரங்களை சங்கம் மூலமா சரிபார்த்துக்கலாம். இதன் மூலமா ஏமாற்றி தொழில் செய்கிற எத்தனையோ பேரை அடையாளம் கண்டு, அவங்களோடு தொழில் உறவை ஏராளமானவர்கள் தவிர்த்தாங்க. அதேமாதிரி,  புதுசா ஏற்றுமதி தொழில் செய்ய வர்றவங்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும், அனுபவம் உள்ளவங்க தீர்த்து வைக்கத் தயாரா இருப்பாங்க. எல்லாவிதத்திலும் சங்கம் மூலமா வழிகாட்டல் கிடைக்க ஏற்பாடு செஞ்சோம்.

ஒற்றுமையே உயர்வு

அதேபோல, டிசைனிங், டெக்னாலஜி, வர்த்தகக் கண்காட்சினு பல செயல்பாடுகளை சின்னதும் பெரியதுமா செஞ்சிக்கிட்டே இருப்போம்’’ என்று  சாதனைகளை அடுக்கும் சக்திவேல், 27 ஆண்டு காலம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக வெற்றிகரமாக இயங்கிய பின்னணியையும் விளக்குகிறார். 

"நாம என்ன வேலை செய்றோம்னு மத்தவங்க கவனிச்சிட்டே இருப்பாங்க. அதனால் பொறுப்பாளர்கள், பொறுப்போட நடந்துக்கணும். மற்றவர்களின் மாற்றுக்கருத்துகளைக் கேட்கணும். முதல்முறையே எல்லாம் மாறிடும்னு எதிர்பார்க்கக் கூடாது. மாற்றம் எப்பவுமே மெதுவா ஆரம்பிச்சு, வேகமாக நடக்கும். அதுக்குரிய பொறுமை வேணும். தொழில் மட்டும் வளரணும்னு நினைக்காம, தொழில் நடக்கிற ஊரின் வளர்ச்சியையும் சேர்த்து சிந்திக்கணும். எல்லாரையும் இணைத்து ஒற்றுமையா செயல்படணும். இதுதான் என்னோட அனுபவம்”. 

நீரோடைபோல தன் பணிகளைப் பட்டியலிடுகிறார் சக்திவேல். தொழில் துறையில் அவருடைய பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. பல்வேறு விருதுகளையும், கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்றிருந்தாலும், ‘திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர்’ என்கிற பதவியே சக்திவேல் அவர்களின் பெரும்பங்கு வாழ்வை எடுத்துக்கொண்டது.
தனிப்பட்ட வெற்றிகளைக் காட்டிலும், பொதுப்பணியின் மூலம் அனைவருக்கும் கிடைத்த நன்மைகளில் மனநிறைவு கொள்கிறார் சக்திவேல். சமூக வளர்ச்சியோடு இணைந்த தொழில்வளர்ச்சியை வலியுறுத்திச்  சொல்கிறது திருப்பூர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close