[X] Close

வாழ்வாதாரத்தை மீட்க போராடும் விவசாயிகள்- தொண்டாமுத்தூரில் இன்று மாநாடு


farmers-summit

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 10:59 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' என்று உழவுத் தொழிலைப் போற்றினார் வள்ளுவர். ஆனால், 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களது வாழ்வாதாரத்தை மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றன விவசாய சங்கங்கள். சேற்றில் கால் வைத்து, நாம் சோற்றில் கை வைக்க காரணமாக இருந்த விவசாயிகள் தற்போது பல்வேறு காரணங்களால் வாழ்வை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்ற நிலை இருந்தது. ஆசியாவில் விவசாயத்தில் தன்னிறைவைக் கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவுக்கும் இடமிருந்தது. நாட்டின் பாரம்பரியமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்டிருந்தது.ஆனால், ஒவ்வொரு 30 நிமிடத்திலும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டே இருக்கிறார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை இழந்திருக்கிறோம்.

வறட்சி, வெள்ளம்,  பருவமழை பொய்த்தல், பூச்சித்தாக்குதல், வன விலங்குகளால் அழியும் பயிர்கள், விளைச்சலின்மை, இடுபொருள் தட்டுப்பாடு, போலி விதைகள் என தொடர் தாக்குதல்களைச் சமாளித்து மகசூல் எடுத்தாலும், போதிய விளை கிடைக்காமல், வீதியில் வீச வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். உலகுக்கே உணவளித்தாலும், விவசாயிக்கு உணவளிக்கவோ, அவர்களது குறைகளைத் தீர்க்கவோ யாருமில்லை என்கின்றனர் விவசாயிகள். நாடு முழுவதுமே பல்வேறு கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை சீர்கேடு உள்ளிட்டவற்றால் பல குடும்பங்கள் விவசாயத்தை விட்டே வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

கொங்கு மண்டல தேவைகள்

தமிழகத்தில், காவிரி நீர் பிரச்சினை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள், நீராதாரங்கள் பராமரிப்பின்மை, வறட்சி நிவாரணம் கிடைக்காதது என விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். இந்த சூழலில், கொங்கு மண்டல விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி:

விவசாயத்தையே பிரதானமாகக் கொண்ட கொங்கு மண்டலம், அதன் அடையாளத்தை தக்கவைக்கவே போராடிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வேளாண் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. விவசாயத்தில் ஈடுபடு வோரும் ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருக்கிறது.

ஆனைமலை ஆறு,  நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா பாசனத் திட்டம், அவிநாசி-அத்திக்கடவு, ஆணை மடுவு அணைக்கட்டுத் திட்டம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாகத் தள்ளுபடி 
செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.  எவ்வளவு பாடுபட்டு விளைவித்தாலும், போதிய விளை கிடைக்காமல் தவிக்கும் நிலையே நீடிக்கிறது. விளை பொருள் நிர்ணயம் தொடர்பாக முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை, நீண்டநாட்களாக கிடப்பிலேயே உள்ளது.

நொய்யல் நதி உள்ளிட்ட பல்வேறு நதிகளும், அவறறின் நீர்வழிப் பாதைகளான வாய்க்கால், கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளாலும், தூர் வாரப்படாததாலும், குப்பை, கழிவுகளாலும் வீணாகி வருகின்றன. நீராதாரங்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை அவசியமாகும்.

கோவையில் தென்னை, பாக்கு அதிக அளவு விளைந்தாலும், விவசாயிக்கு லாபம் குறைவுதான். எனவே, இவற்றுக்காக விளை பொருள் ஏற்றுமதி மையத்தை அமைக்க வேண்டும். வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம், மத்திய, மாநில அரசுகளில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போன்றவையும் விவசாயிகளின் கோரிக்கைகள்.

பிளாஸ்டிக் தடைக்கு வரவேற்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், மாற்றுப் பொருளாக இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தக் கோரியும் பல மாதங்களுக்கு முன்பாகவே போராடினோம். தற்போது, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தற்போது சிறுதானியங்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கவும், மூலிகைச் செடிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவவும் அரசு முன்வர வேண்டும். புலிகள் காப்பகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டபோது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராடியது.

தற்போது விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதனால்,  வேளாண்மை பாதிக்கப்படுவதுடன், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்க நேரிடும். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட்டு, கேரள மாநிலத்தைப் போல, நெடுஞ்சாலையோரம் நிலத்துக்கு அடியில் குழிதோண்டி, அதன் வழியாக மின் வயர்களைக் கொண்டுசெல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தற்போது விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும்போது, மிகக் குறைந்த தொகையே நிர்ணயிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு, விவசாய நிலத்துக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

யானை, காட்டுப்பன்றியால் சேதமடையும் பயிர்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி தீத்திபாளையம் பெரியசாமி கூறும்போது, "கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் வன அடிவாரத்தையொட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகளால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். 

தொண்டாமுத்தூர், மதுக்கரை, பன்னிமடை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் யானை, காட்டுப்பன்றிகளால் வாழை, தென்னை, சோளம், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் பெரிதும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. அதுமட்டுமின்றி, தோட்டத்தில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தவிடு, புண்ணாக்கு, அரிசி மூட்டைகளையும் அவை விட்டுவைப்பதில்லை. 

மேலும், தோட்டத்தில் நடப்பட்டுள்ள வேலிக் கற்கள், மோட்டார், தண்ணீர்க் குழாய்கள், சொட்டுநீர்ப் பாசன உபகரணங்கள் அனைத்தையும் நொறுக்கி விடுகின்றன. விவசாயிகள் பலர் யானைகளால் உயிரிழந்துள்ளனர். வன விலங்குகளுக்குத் தேவையான உணவு, தண்ணீரை வனத்துக்குள் ஏற்படுத்தியும், யானை தடுப்பு அகழிகளைப் பராமரித்தும் அவை ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும். 

காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொல்வதற்கு உள்ள நிபந்தனைகளைத் தளர்த்துவதுடன், இது தொடர்பான உத்தரவை அமல்படுத்த வேண்டும். யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, விளை பொருட்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் யானைகளைப் பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மீண்டும் அவை ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும். விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீட்டை, உரிய காலத்தில் வ்ழங்குவது அவசியம்.  யானைகள் தடுப்பு மின்வேலிகள் அமைக்க 50 சதவீத மானியத்தில் உபகரணங்கள் வழங்க வேண்டும்" என்றார்.

 நீராதாரங்கள் மீட்பு தீர்மானம்

கோவை தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று (டிச. 29) காலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட 14-வது மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.

சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், செயலர் பி.திருஞானசம்பந்தம், துணைத் தலைவர் ஆர்.மூர்த்தி அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். பேரூர் ஆதிண் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கிவைக்கிறார். தமிழக  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் வே.துரைமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆவின் தலைவர் கே.பி.ராஜு, கவிஞர் கவிதாசன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு, ஆக்கிரமிப்பு நீராதாரங்கள் மீட்பு உள்ளிட்டவை தொடர்பாக இதில் விவாவதிக்கப்படுவதுடன், விவசாயிகளின் கோரிக்கைகள்,  பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதையொட்டி, பழங்குடி மக்களின் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close