[X] Close

சங்கம் அமைத்த சக்திவேல்! - உலகமே திரும்பிப் பார்த்த ‘டாலர் சிட்டி’


dollar-city

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 10:53 am
  • அ+ அ-

த.செ.ஞானவேல்

உழைப்பு உன்னை முன்னேற்றும் என்று படித்திருக்கிறோம். உழைப்பு ஊரையே முன்னேற்றும் என்பதுதான் திருப்பூரின் வரலாறு.'தேனீக்கள் உழைத்து சேர்த்த தேனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளாலாம்.  ஆனால், தேனீக்களிடம் இருக்கும் உழைப்பை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது’ இந்த உண்மை, ஒட்டுமொத்த திருப்பூர் மாவட்டத்துக்கும் பொருந்தும்."மழை பொய்த்து, விவசாயம் மக்களைக் கைவிட்டாலும், மக்கள் தங்கள் உழைப்பைக்  கைவிடவில்லை”  என்று திருப்பூரின் தொழில் வளர்ச்சியை சொல்லத் தொடங்குகிறார்  ‘பாப்பீஸ் சக்திவேல்'. உலகின் பிரபலமான ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு, ஏற்றுமதி தரத்திலான ஆடைகளை உற்பத்தி செயயும்  ‘பாப்பீஸ்’ நிறுவனத்தின் தலைவர். திருப்பூர் ஏற்றுமதி தொழிலின் தவிர்க்கமுடியாத சாதனை முகம் பாப்பீஸ்’ சக்திவேல், பத்ம சக்திவேலாக உயர்ந்த கதை பல திருப்பங்களைக் கொண்டிருக்கிறது.  

"1984-ம் ஆண்டு வரைக்கும் திருப்பூரின் மொத்த ஏற்றுமதி தொழில் மதிப்பு பத்து கோடிக்கும் குறைவு. 2016-ம் ஆண்டில் திருப்பூர் ஏற்றுமதி தொழிலின் மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி. இந்த வளர்ச்சியில் பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்பும், ஆயிரக்கணக்கான முதலாளிகளின் கனவும் இருக்கு. மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம், இப்ப எந்த கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தாலும், 'திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்' கருத்தையும் கேட்டே முடிவு செய்கிறது” என்று சங்கம் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிற சக்திவேலின் வாழ்வனுபவமும்,  திருப்பூர் ஏற்றமதியாளர் சங்கத்தின் வளர்ச்சியும் இரட்டை தண்டவாளமாக இணைந்தே பயணிக்கின்றன.

உழைப்பு மட்டும்தான் சொத்து

"50 வருஷத்துக்கு முன்னால வரைக்கும் திருப்பூர் பகுதியின் முதன்மைத் தொழில் விவசாயம்தான். பெரும்பாலான விவசாய நிலங்கள் மழை இல்லாம, வானம் பார்த்த பூமியாக மாறிடுச்சு.  வறட்சியும், வறுமையும் சூழ்ந்திருந்த வாழ்க்கையில், எங்க மக்கள்கிட்ட இருந்த ஒரே சொத்து உழைப்பு மட்டும்தான்.  இன்னைக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முதலாளிகளில் 70 சதவிதம் பேர், முன்னாள் தொழிலாளிகள். உழைப்பை  தொழிலுக்கு மூலதனமாக்கி ஜெயிச்சாங்க. திருப்பூர்ல வெற்றிகரமாக தொழில் செய்கிற எல்லாருமே தன்னம்பிக்கை மனிதர்கள்தான். 

நான் இந்த ஊர்ல பொறக்கலையே தவிர, வேர்ப்பிடிச்சு, திருப்பூர்லதான் வளர்ந்தேன். எங்கப்பா சி.எஸ்.ஆறுமுகம், தமிழக காவல் துறை அதிகாரி. காக்கி உடுப்ப பார்த்தாலே  பெரிய மரியாதை இருந்த காலம். 'போலீஸ்காரர் மகன்'னு எங்க போனாலும் மதிப்பா நடத்துவாங்க. மூணு முறை ஜனாதிபதி விருது வாங்கின அப்பாமேல எல்லாருக்கும் மரியாதை. அவரை மாதிரி நாமளும் பெரிய போலீஸ் அதிகாரி ஆகணும்னு நினைச்சதுண்டு.

எந்த வேலை செய்தாலும் நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழணும்ன்னு சின்ன வயசுலேயே தோணுச்சு. ஆனா, எங்க அப்பா ‘என் பசங்க யாரும் அரசாங்க உத்யோகத்துக்கு வரக்கூடாது’னு சொல்லிட்டாரு.  'எந்த முடிவையும் சொந்தமா எடுக்க முடியலை. மேலதிகாரிகள் தப்பு செஞ்சாலும்  தலையாட்ட வேண்டியிருக்கு. அரசியல்வாதிகள் குறுக்கீடும் அதிகமா போச்சு. இப்படியே போனா, அரசாங்க உத்தியோகத்துக்கு இப்ப இருக்கிற மதிப்பு,  எதிர்காலத்துல இருக்குமான்னு தெரியலை. அதனால வேணாம்’னு சொன்னாரு.  அப்பா பேச்சுக்கு குடும்பத்துல எப்பவும் மறுபேச்சு இருக்காது.

செயல்முறை அனுபவத்துடன் படிப்பு

தனியார் வேலைக்குத்தான் போகமுடியும்னு தெரிஞ்ச அப்புறம், படிக்கிறதுல கொஞ்சம் ஆர்வம் குறைஞ்சு,  பியூசி ஃபெயில் ஆகிட்டேன். அந்தக் காலத்துல 'பாஸானா காலேஜ், பெயிலானா மேரேஜ்’னு கிண்டலா சொல்லுவாங்க. எனக்குத் தொடர்ந்து படிக்கணும்னு ஆசை. ஆனா, ஃபெயில் ஆகிட்டு ஊருக்குள்ள இருக்க விருப்பம் இல்ல. எங்கப்பா, என் வாழ்க்கையில் புதிய வாசலை திறந்து வெச்சாரு.

ஜாம்ஷெட்பூர்ல டாடா நிறுவனத்துல ஆட்டோ மொபைல் துறையில் மூன்று வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஜெர்மனி நாட்டு ’பென்ஸ்’  நிறுவனத்தோட  சேர்ந்து, டாடா நிறுவனம் ட்ரக் உற்பத்தி பண்ணாங்க.  அங்க மூணு வருஷம், செயல்முறை அனுபவத்தோட படிப்பு. திருப்பூர்ல இருந்து சென்னைக்குப் போய்  படிச்சாலே, வெளிநாடு போய் படிச்ச மாதிரி. அப்ப, நான் ஜாம்ஷெட்பூர்ல படிச்சேன். அந்த ஊரை ‘இண்டஸ்ட்ரியல் டவுன்’னு  சொல்லுவாங்க. ஆனா, அது ஒரு ‘இன்டர்நேஷனல் டவுன்’ மாதிரி இருக்கும். வெள்ளக்காரங்க ஜாம்ஷெட்பூர்ல தங்கி வேலை செய்வாங்க.
வெள்ளைக்கார வாழ்க்கை

நான் தங்கின விடுதியோட வார்டன், கனடா நாட்டுப் பெண்மணி. 'வேலையை ஈடுபாடா  செய்யணும், வாழ்க்கையை அனுபவிச்சு வாழணும்’ங்கிற இரண்டு வாழ்க்கைப் பாடங்களை அங்க வந்து வேலை செய்த வெள்ளைக்காரங்ககிட்ட  கத்துகிட்டேன். ‘மேற்கத்திய இசை’ கேட்கிற அளவு ரசனையை வளர்த்துகிட்டேன். ஆங்கிலப் படங்கள் பார்க்க பிடிக்கும். சுத்தமா உடுத்தி, ஸ்பூன்ல சாப்பிட்டு, ஸ்டைலா இங்கிலீஷ்ல பேசுறதுனு, டிப்ளமா படிச்ச அந்த மூணு வருஷமும் வெள்ளைக்காரங்க மாதிரி வாழ்க்கை. அம்மா கையில சாப்பிட முடியலங்கிறதை தவிர வேற குறை இல்லை.
விலை உயர்ந்த பென்ஸ் வாகனங்கள் உற்பத்தியாகிற விதத்தைப் பக்கத்துல இருந்து பார்த்த நான், வாழ்க்கையில் பென்ஸ் காரை வாங்கி ஓட்டணும்னு கனவு கண்டேன். வாழ்வில் பெருசா சாதிக்கணும்’னு மனசுல விதை விழுந்த இடம் ஜாம்ஷெட்பூர்தான்.

‘ஏ மெக்கானிக்'

படிப்பு முடிஞ்சு ஊரு திரும்பினதும், ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனேன். புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைக்காத சூழலில் வேலை பார்க்க விருப்பமில்லை. இனிமே, யாருக்கும் கைகட்டி வேலை செய்யாம,  சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு பண்ணேன்.  படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி, ‘மோட்டார் வாகன சர்வீஸ் செண்டர்’ போட்டேன். ஒரு வருஷம் நடத்தினப்ப, 5 ரூபா கொடுத்து சர்வீஸ் பண்றவங்ககூட ‘ஏ மெக்கானிக்’னு கூப்பிடுவாங்க.

ஒரு போலீஸ் அதிகாரி மகன் ஒழுங்கா படிக்காம ‘மெக்கானிக்’ கடை நடத்துறான்னு ஊர்ல சொல்ல ஆரம்பிச்சாங்க. ’நான் வெறும் மெக்கானிக் இல்ல’னு எத்தனை பேருக்குப்  புரிய வைக்க முடியும்? அப்புறம், சொந்தத் தொழிலுக்கு மூடுவிழா நடத்திட்டு, திரும்பவும் வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கப் போனேன். விசுவாமித்ரர் உருவாக்கின திரிசங்கு சொர்க்கம் மாதிரி, கீழேயும் இல்லாம,  மேலேயும்் போகாம அந்தரத்துல நிக்கிற மாதிரி உணர்வு.  வாழ்க்கையில் தொடர்ந்து தப்பு பண்றோமுன்னு  தன்னம்பிக்கை குறைய ஆரம்பிச்சது. அப்பாவும் என்னைப் பத்தி கவலைப்பட ஆரம்பிச்சாரு.

புதிய பாதை

திருப்பூர்ல, குடும்ப நண்பர் ஒருத்தர் ‘ஜே.ஜே.  பேஷன்’னு ஒரு டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திட்டு இருந்தாரு. 
அந்தத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்குனு அவர் சொன்னதும், அப்பா என்னை நம்பி ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு தந்தார். என் மேல நான் வெச்சிருந்த நம்பிக்கையைவிட, பெத்தவங்க வெச்ச நம்பிக்கை ரொம்ப அதிகம். எந்த வேலையிலும் நான் ஒழுங்கா இல்லங்கிற பேரு இருக்கும்போதும், என்னை நம்பினாங்க. ‘இதுல தோத்துடவே கூடாது’னு மனசுல வெறிகுணம் வர ஆரம்பிச்சது. அங்கிருந்துதான் எனக்கான பாதையை நானே போட ஆரம்பிச்சேன்.
மூணு மாசம் ‘ஜே.ஜே பேக்டரில’ போய் வேலை செய்து, ஜவுளித் தொழிலோட அரிச்சுவடியைப் படிக்க ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் பஞ்சு எப்படி நூலாகுதுன்னுகூட எனக்குத் தெரியாது.

எப்படி வந்தது `பாப்பீஸ்?’

திருப்பூர்ல எல்லாரும் தொழிலாளியா வேலையைக் கத்துகிட்டு, முதலாளி ஆவாங்க. நான் முதலாளியா நிறுவனத்தை ஆரம்பிச்சிட்டு, தொழிலாளியா வேலையைக் கத்துகிட்டேன். 1973-ம் ஆண்டு நிறுவனம் ஆரம்பிச்சேன். ‘பாப்பீஸ் ஆல்சோ ஃப்ளவர்’னு ஒரு ஆங்கிலப் படம் அப்போ ரிலீஸ் ஆச்சு. அந்தப் பேரு ஸ்டைலா இருக்கிறதால, ’பாப்பீஸ்’னு பேர் வெச்சேன். எல்லாம் நல்லாதான் போயிட்டிருந்தது.  நான் தொழிலில் ஜெயிச்சி, எங்கப்பா பெருமைப்படுற மாதிரி வரணும்னு உழைக்க ஆரம்பிச்சப்ப, முதல் இடி விழுந்துச்சு.  

மாரடைப்பு ஏற்பட்டு அப்பா திடீர்னு இறந்துட்டாரு. இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்தப்ப, காவல் துறையில் ரொம்ப பிரஷர் இருந்த நேரம். வேலைப் பளுல, அப்பா  உடம்பைக்  கவனிக்காம விட்டுட்டாரு. குடும்பத்தோட அச்சாணி கழண்டு விழுந்த மாதிரி நிலைதடுமாறிப் போனோம். அதுவரைக்கும் உலகம் தெரியாத எங்க அம்மா பழனியம்மாள்,  காவல் தெய்வம் மாதிரி எழுந்து நின்னாங்க. அவங்க  தன்னம்பிக்கை, எங்க குடும்பம் தடுமாறாம காப்பாத்துச்சு. அப்பாவோட இழப்ப கடந்து தொழில்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

ஏற்றுமதி நிறுவனம்

‘ஏற்றுமதி’ தொழிலில் இருக்கும் ரிஸ்க் பத்தி எதுவுமே தெரியாம நானும் 1978-ல், ஏற்றுமதி தொழிலில் இறங்கினேன். திருப்பூர் அப்போதான் ஏற்றுமதி தொழிலில் அடியெடுத்து வெச்ச நேரம். வட இந்திய வியாபாரிகள் கையில்தான் மொத்த தொழிலும் இருந்துச்சு. எனக்கு இந்தியும், இங்கிலீஷும் தெரிஞ்சது தொழில் செய்ய கொஞ்சம் வசதியா இருந்துச்சு.  ‘இந்த நிறுவனம் இவ்வளவு ரூபாய்க்கு வர்த்தகம் பண்ணலாம்’னு கோட்டா சிஸ்டம் இருந்த காலம். உற்பத்தியே பண்ணாத நிறுவனங்கள், ‘எக்ஸ்போர்ட் லைசென்ஸ்’ வெச்சிருப்பாங்க. குறைஞ்ச விலையில் நம்மகிட்ட  வாங்கி, அதிக விலைக்கு  விப்பாங்க.

தற்கொலை முடிவை நோக்கி...

மும்பையில் அப்படி ஒரு நிறுவனத்துக்கூட பங்குதாரர்  ஒப்பந்தம் போட்டு ஏற்றுமதி பண்ணேன்.  எங்கிட்ட பொருளை வாங்கி வித்துட்டு  ரூ.78 லட்சம் ஏமாத்திட்டு போயிட்டாங்க. கடன் வாங்கி,  தொழில் செய்கிற ஒருத்தனுக்கு அவ்ளோ பணம் நஷ்டம்னா, அதில் இருந்து தப்பிக்க ஒரேவழி தற்கொலை செய்து கொள்வதுதான். நானும் அந்த முடிவை நோக்கியே நகர்ந்தேன்.   என் ஃபேக்டரிக்கு பேங்க்காரங்க சீல் வெச்சிட்டாங்க. வெளியில் தலைகாட்ட முடியலை. நான் இறப்பதற்குள்  முடிந்த அளவு கடனை வசூலிக்க, கடன் கொடுத்தவர்கள் முயற்சி செய்தார்கள். மீள முடியாத துயர சூழ்நிலை.
‘தற்கொலை செய்து, கடன் தொல்லையில் இருந்து  நான் தப்பிக்கலாம். ஆனா, என் குடும்பம் வாழ்நாள் எல்லாம் பழிசுமக்கும். எங்கப்பா பெருமைப்படும்படி வாழ நினைச்ச எனக்கு, போலீஸ்காரர் பையன் ஏமாத்திட்டான்னு அவப்பெயர் வாங்கிக்  கொடுத்திருப்பேன். அப்பா இறந்தபோது, குடும்பத்தை தூக்கி நிறுத்திய அம்மா எனக்கு துணையா நின்னாங்க. தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தராது’னு புரிய வெச்சாங்க. 

மறுபிறவி தந்த உழைப்பு

ஒருவகையில் அது எனக்கு மறுபிறவி.  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, வங்கி அதிகாரிகளிடமும், கடன் கொடுத்தவர்களிடமும் பேசினேன்.  'நான் செத்துப்போனா உங்க பணம் வராது. நம்பிக்கையா இறங்கி உழைச்சா உங்க பணத்தை திருப்பித் தரமுடியும். உங்களுக்கு எது வேணும்?’னு கேட்டேன். பிரச்சினையைப் பார்த்து பயந்து ஓடாம, எதிர்கொண்டு துணிச்சலா நின்னா, வழி தானாக பிறக்கும். எனக்கும் பிறந்துச்சு. 4 வருடம் கடனுக்கு கால நீட்டிப்பு வாங்கி, கடுமையாக உழைச்சேன். இரவு எது, பகல் எதுன்னு தெரியாத உழைப்பு. ‘எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவான் சக்திவேல்’னு எனக்கு நானே சொல்லிக்குவேன். இரண்டு வருடத்தில் எல்லா கடனையும் அடைத்து மீண்டு வந்தேன். ஒருவேளை தன்னம்பிக்கை இல்லாமல் தற்கொலை செஞ்சிட்டிருந்தா, இரண்டு ஆண்டில் தீரக்கூடிய பிரச்சினைக்கு ஒரு வாழ்நாளை பலிகொடுத்திருப்பேன். கடவுளும், கடவுள்போல என் அம்மாவும் என்கூட நின்னாங்க. ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலின் சூட்சுமம் புரிய ஆரம்பிச்சது.

எனக்கு நடந்தது போலவே, இன்னும் பலர் கஷ்டத்தில் இருப்பதையும் கவனித்தேன். தொழிலில் குழப்பமோ, பிரச்சினையோ வந்தால், பாதிக்கப்பட்டவர்களின் குரலை, சமூகத்துக்கும், அரசாங்கத்துக்கும் கொண்டு சேர்க்க ஒரு அமைப்பு அவசர அவசியம் என்பது புரிந்தது.  'ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்’ போன்ற மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற பல அமைப்புகள் இருந்தாலும், அதில் வட இந்தியர்களின் ஆதிக்கமே இருந்தது. அங்க தமிழுக்கும், தமிழருக்கும் மரியாதை இல்லை. அந்த நிலைமைய மாத்த அமைப்பு தேர்தலில் போட்டியிட்டேன். தென்னிந்திய உறுப்பினர்கள் ஆதரவு கிடைச்சது. 37 வயதில்,  ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கழகத்தின் இயக்குநரா ஆனேன். அந்தப் பதவிக்கு தென்னிந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் நான்தான். அங்கிருந்து என்னுடைய ‘பொது வேலை’ தொடங்கிடுச்சு.

`நிட்வேர் அசோசியேஷன்’

அடுத்து திருப்பூரில் தொழில் செய்த ஏழு பேரைக் கொண்டு ‘நிட்வேர் அசோசியேஷன்’ தொடங்கினோம். திருப்பூரின் தேவையை தீர்மானமாக இயற்றி, அரசிடம் சமர்ப்பித்தோம். டெக்ஸ்டைல் துறையில், தமிழகத்தின் குரல் டெல்லியில் இருப்பவர்களின் காதில் முதன்முதலாக விழத்தொடங்கியது. முன்னேற வேண்டும் என்கிற வெறியோடு திருப்பூர் மாவட்டமே  உழைத்த  காலம் அது.

ஏற்றுமதியாளர்கள் சங்கம்

சிறிய குழுவாக இல்லாமல், அனைவரும் ஒருங்கிணைந்து அமைப்பாக செயல்பட்டால், இன்னும் தொழில் வளம் பெருகும் என்கிற நம்பிக்கை உருவானது. அதனால், இன்னும் பலரை இணைத்து 1990-ம் ஆண்டு ‘திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்’ தொடங்கினோம். முதல் பத்திரிகையாளர் சந்திப்பில், திருப்பூர் ஏற்றுமதியில், ஆயிரம் கோடி வர்த்தகமாக இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அறிவித்தோம்.

ஆயிரம் கோடி கனவு? 

பேராசை பிடித்து விட்டதாக என் காதுபடவே சொன்னார்கள். நான் நடந்து போகும்போது, ‘ஆயிரம் கோடி போகுது பாரு’ என்று கிண்டல் செய்தனர். ‘பகல் கனவு’ காண்பதாக சொன்னாங்க. தனிப்பட்ட முறையில் தோல்வியின் கசப்பு எப்படி இருக்கும்னு நல்லாவே எனக்கு தெரியும். சவாலாக இதை எடுத்துக் கொண்டோம். கரை சேர்வது எப்படி என்று தெரியாமலேயே கடலில் குதித்தது போலதான் இருந்தது" என்ற சக்திவேலிடம், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுமாறு கூறினோம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close