[X] Close

வட மாவட்டங்களில் பருவ மழையளவு பற்றாக்குறை: தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை


rain-reporttss

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 06:39 am
  • அ+ அ-

சி.பிரதாப்

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை யளவு 920 மிமீ. இதில் வடகிழக்கு பருவத்தில் மட்டும் 440 மிமீ மழை பெய்யும். அதாவது நமது ஆண்டு சராசரியில் 49 சதவீத மழை இந்தப் பருவத்தில்தான் கிடைக்கும். எனவே, வடகிழக்கு பருவமழை நமக்கு மிக முக்கியமானது. இந்த ஆண்டு பருவ மழை இயல்பைவிட அதிகமாக பெய் யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறாக 20 சதவீதம் வரை மழை பற்றாக் குறையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “வட கிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த பருவக்காலத்தில் இதுவரை 334 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 22 சதவீதம் குறைவு. டெல்டா, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் சில பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. தருமபுரி, சென்னை, கரூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரியில் 50 சதவீதமும், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலுார், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் மழையளவு குறைந்துள்ளது.

இனி பெரிய மழைக்கான வாய்ப்பு கள் குறைவு. எனவே, இந்த ஆண்டு 20 சதவீதம் வரை பருவமழை பற்றாக் குறையாகிவிடும் சூழல் ஏற்பட்டுள் ளது’’ என்றனர்.

சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ராஜ் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு எதிர் பார்த்தப்படி பருவமழை அமையாதது ஏமாற்றம்தான். கடல் வெப்பம் மற்றும் ஈரப்பதக் காற்று நமக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது. குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து உரு வான லுபான், தித்லி, கஜா, பெய்தி ஆகிய 4 புயல்கள் நமக்கு பெரிய அளவு மழை தரவில்லை.

கஜா புயலின்போதும் மழை குறைந்து, பலத்தக் காற்று மட்டும் வீசி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. வட தமிழகத்தில் பெரிய அளவில் மழை பற்றாக்குறையாகியுள்ளது. சென்னையில் மட்டும் 52 சதவீதம் மழை குறைந்துள்ளது. இதனால் வட மாவட்டப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ளது. அதற்கேற்ப அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

சமீபகாலமாக மழைப்பொழிவு பரவலாக இல்லாமல் ஒரு சில இடங் களில் பெய்துவிடுவது நமக்கு பெரிய சிக்கலாக உள்ளது. இதற்கான காரணி கள் குறித்து பிரத்யேக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்’’என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகரின் பயன்பாட்டுக்கு மாதந்தோறும் ஒரு டிஎம்சி அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. பருவ மழை பொய்த்துவிட்டதால் இப்போது தலைநகருக்கு முக்கிய குடிநீர் ஆதார மான புழல், பூண்டி, செம்பரப்பாக்கம், சோழவரம் ஏரிகளில் 1.5 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது.

எனினும், வீராணம் ஏரி, மேட்டூர் அணையில் போதுமான நீர் இருக்கிறது. இதுதவிர கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டம், கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்தல் உட்பட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோடையில் மட்டும் சிரமங்கள் ஏற்படலாம்.

தென்மேற்கு பருவக்காலத்தில் பெய்த மழையால் மற்ற மாவட் டங்களின் நீர்நிலைகள் கணிசமான அளவு நிரம்பியுள்ளன. இதனால் 2016-ம் ஆண்டை போல வறட்சி இருக்காது’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close