[X] Close

பூட்டிய வீடு, கடைகளில் திருட்டை தடுக்க காவல் துறையின் சிசிடிவி, ஆப் வசதியை பயன்படுத்த மக்களிடம் ஆர்வம் இல்லை: மதுரை நகர போலீஸ் ஆதங்கம்


madurai-people-hesitant-to-use-cctv

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 12:25 pm
  • அ+ அ-

மதுரை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் செய்து தரும் கண்காணிப்பு கேமரா, `ஆப்' வசதியைப் பயன்படுத்த மக்களிடையே போதிய ஆர்வம் இல்லை என காவல்துறை அதிகாரி ஆதங்கத்துடன் கூறினார்.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 24 காவல்நிலையங்கள் செயல்படுகின்றன.  இக்காவல்நிலையங்களில் குற்றப் பிரிவு
போலீஸாருடன், சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸாரும் இணைந்து நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பூட்டிய வீடுகளில் திருடர்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர்.  தல்லாகுளம், கூடல் புதூர், அண்ணா நகர், புதூர் போன்ற காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருடும் சம்பவங்கள் சற்று அதிகமாக நடப்பது போலீஸார் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட் டைத் தடுக்க  காவல்துறை சார்பில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கும் திட்டம் (எல்எச்எம்எஸ்) கடந்த 10 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக மதுரை எம்பி. கோபாலகிருஷ்ணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 65 சிசிடிவி கேமராக்களை வாங்கிக் கொடுத்தார்.
இந்த கேமராக்களைக் கொண்டு தல்லா குளம், புதூர், கூடல்புதூர் காவல்நிலையப் பகுதியில் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வீடு, கடைகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்  உரிமையாளர்கள் அருகிலுள்ள காவல்நிலையம் அல்லது  மதுரை நகர் காவல்துறை அறிமுகம் செய்துள்ள  ‘எஸ்ஓசி’ என்ற ஆப்பில் ‘எல்எச்எம்எஸ்’ எனும் அப்ளிகேஷனில் முகவரியுடன் தகவல் களைத் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவிப்பதால், மக்கள் ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பும் வரை சம்பந்தப்பட்ட வீட்டில் கேமராக்கள் பொருத்தி ஆன்லைனில் போலீஸார் கண்காணிப்பர். தேவையெனில் வீட்டு உரிமையாளருக்கும் ஆன்ட்ராய்டு போனில் பார்க்க வசதி செய்து தரப்படும்.

ஆனால், இந்த வசதியைப் பயன்படுத் துவதில் மக்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் இதுவரை 40 பேர் மட்டுமே  காவல்துறையின் சிசிடிவி வசதியைப் பயன்படுத்தி உள்ளனர். காவல்துறையே முன்வந்து செய்து கொடுக்கும் இந்த வசதியைப் பயன்படுத்த மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 

குற்றங்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்போது  பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிப்பது மிகவும் குறைவுதான். நகரில் குற்றங்களைத் தடுக்க  சிசிடிவி கேமராக்களை நகர் முழுவதும் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.  தனியார் நிறுவனங்களின் உதவியுடன்  கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இதில் பொதுமக்கள், வர்த்தகர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். வீடு, கடைகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் கண்காணிப்பு கேமரா வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதுரை நகரில் தல்லாகுளம், கூடல்புதூர் காவல்நிலையங்களைத் தவிர, பிற காவல்நிலையப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வர்த்தகர்களும் காவல்துறையின் கண்காணிப்பு கேமரா  வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தங்களின் உடமைகள் பாதுகாக்கப்படும், குற்றச்செயல்களையும் குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

- என்.சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close