[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 32 - ரவி – வின்செண்ட் - ஸ்ரீதர்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 19 Nov, 2018 10:42 am
  • அ+ அ-

”நான் கொஞ்சம் பேசட்டுமா?” என்ற ராமின் குரலில் இருந்த தன்மை சட்டென ஸ்ரீதரை அமைதியாக்க வைத்தது. “ம்” என்று சொல்லிவிட்டு காத்திருந்தான். ராம் கொஞ்சம் நிதானமாய் மூச்சை இழுத்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் பண்ணது எல்லாமே தப்புத்தான் ஸ்ரீதர். தமிழ் சினிமால ஹீரோவா நடிக்க முயற்சி பண்ணின சில வருடங்கள்ல சான்ஸ் கிடைச்ச பாக்யவான் நானாத்தான் இருப்பேன். நீங்க சினிமா பத்தி பேசும் போதெல்லாம் “ஆ”னு பார்த்திட்டிருப்பேன். எத்தனை நாலேட்ஜ், விஷன்னு.

அதே போல ராமராஜ் சார். எல்லாரும் என்னை ஹீரோவா நம்பாத போது என்னை ஹீரோனு நம்புனவர் மட்டுமில்லை என்னையே நம்ப வச்சவரு. அவருக்கு நான் கடன்பட்டிருக்கேன். ஒரே நேரத்துல உங்க படத்துலேயும், அவரு படத்துலேயும் சான்ஸ் வரும்னு நான் நினைக்கலை. வந்திருச்சு.

ராமராஜ் சார் படமும் வேணும் உங்க படமும் வேணும்னு மனசு சொல்லிச்சு. பேராசை தான். பட். யோசிச்சு பாருங்க என்னை போல வாய்ப்பு தேடுறவனுக்கு இந்தாடானு ரெண்டு ப்ராஜெக்ட் வந்தா என்ன செய்வான்?குழம்பிப் போய் நிப்பான். நான் நிக்காம ரெண்டு பேரையும் சீட் பண்ணிட்டேன்.

அட்லீஸ்ட் உன் கிட்ட நான் சொல்லியிருக்கலாம். தைரியமில்லை. ராமராஜ் படம் சின்னப்படம். உங்களது ஒரு ரெகுலர் கம்பெனி. ஒரு வேளை அவரு படம் ஏதாச்சும் ஆயி நின்னுப் போயிருச்சுன்னாங்குற பயம் கூட என்னை அப்படி சிந்திக்க வைச்சது.

தப்பா நினைக்காதீங்க. அன்னைக்கு நான் ஹூமிலியேட் ஆனதுனால என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் ப்ரோடியூசர் கிட்ட பேசிட்டேன். இனி பண்ண மாட்டேன். ஒரு ப்ராஜெக்ட் நல்லா வரணும்னா எல்லாரும் ஒருமிச்சு வேலை பார்த்தா மட்டுமே நடக்கும் அது சரிவராதுனு உங்க மனசுல பட்டுச்சுன்னா. ஐயம் ரெடி டூ லீவ். தேங்க்ஸ் பார் த ஆப்பர்சூனிட்டி” என்ற போது ராமின் குரல் லேசாய் உடைந்து, கரகரத்தது.

ஸ்ரீதர் ஏதும் பேசாமல் இருந்தான். ராமின் குரலில் பதட்டம் இல்லை. மிக நேர்த்தியாய் கட்டமைக்கப்பட்ட வார்த்தைகளாய் இல்லாமல் மனதில் இருந்த விஷயத்தை அப்படியே கொட்டியதாய் தான் தெரிந்தது.

அப்படியே நடித்தாலும் ஸ்ரீதருக்கு அவன் கெஞ்சல் பிடித்திருந்தது. இத்தனை இறங்கி வந்தவனை சதாய்ப்பது ப்ராஜெக்டுக்கு நியாயமில்லை என்று நினைத்தான். ஒரு இயக்குனர் தன் படத்துக்கான கதை திரைக்கதை வசனத்தை விட, அதிகமாய் தன் டீமை மேய்க்க, பயன்படுத்த, திறமையை வெளிக்கொணர உழைக்க வேண்டும் என்று ராஜா சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இப்போது புரிந்தது.

“ஓக்கே.. ஸ்டாப்பிட்.. போதும் உன் எக்ஸ்பிளனேஷன். இன்னும் ரெண்டு நாள்ல ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவுது. தொடர்ந்து பத்து நாள் சேம் சாப்ட்வேர் கம்பெனி ஷெட்யூல். பீ ரெடி. வி வில் ராக் ” என்று போனைக் கட் செய்தான்.

ராமுக்கு சற்றே நிம்மதியாய் இருந்தது. இத்தனை தன்மையாய் தான் யாரிடமும் பேசியதாய் அவனுக்கு நினைவில்லை. முடிக்கும் போது ஸ்ரீதர் தன் வீம்பை விட்டுக் கொடுக்காமல் பேசினான் என்றாலும் தனக்கு கோபம் வரவில்லை என்பதைக் குறித்து ஆச்சர்யப்பட்டான். நித்யாவின் வாட்ஸப்பில் “தேங்க்ஸ்:” என்று மெசேஜ் அனுப்பினான். பதிலுக்கு ஆர்ட்டின் வந்தது.

***********************

ரவிக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை. சட்டென தனக்கென்று யாரும் இல்லாததை உணர்ந்தான். முழுக்க, முழுக்க, மணியை நம்பி தான் இருப்பது புரிந்தது. பணமிருக்கிறதோ இல்லையோ? அதிகாரம் மனிதனை வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கும்.

ஆனால் மணியின் அதிகாரம் இதோ தன்னை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது என்ற கோபம் தான் அவனுக்குள் மண்டியது. டாஸ்மாக் போய் அரை பாட்டில் விஸ்கியை வாங்கி அப்படியே மடக்கிக் குடித்தான். சரக்கும் போதையும் ஒரே வேகத்தில் ஜிவ்வென ஏறியது.

“டேய். நீயெல்லாம் என் நண்பனா? நண்பன் நான் ஊரெல்லாம் கடன்பட்டு கஷ்டத்துல இருக்கேன். நீ இங்க சினிமா எடுக்குறேன்னு ஜல்சா பண்னுறியா?.” என்று திருப்பூர் மணி தங்கியிருக்கும் ப்ளாட்டின் வாசலில் நின்று கத்தினான்.

கோபத்தோடு கதவை தட்டினான்.

“ஐயோ.. சாரி.. சாரி.. தப்பா பேசிட்டேன். நீயில்லாம நான் இன்னைக்கு எங்க? புரியுது. நான் தான் தப்பு பண்ணிட்டேன். கொஞ்சம் மன்னிச்சு ஏத்துக்கப்பா” என்று கதவின் முன் மண்டியிட்டு கெஞ்சினான். திறக்கவேயில்லை. கோபம் சுர்ரென மண்டைக்கு எழுந்தது.

“ங்கொ** நண்பன்னு மரியாதை விட்டு கெஞ்சுனா மிஞ்சுரியா?. நான் யாருன்னு காட்டுறேண்டா” என்று பெரிதாய் கதவை நோக்கி கத்தி ஓங்கி அடித்து “திற.. திறடா” என்று கத்திக் கொண்டிருந்த அதே வேளையில் எதிர் ப்ளாட் ஆட்கள் திருப்பூர் மணிக்கு போன் அடித்தார்கள்.

“உங்க ப்ரெண்டு கதவை திற திறன்னு பூட்டின ப்ளாட் கதவை திறக்க சொல்லி கலாட்டா பண்ணிட்டிருக்காருங்க. கொஞ்சம் பேசுங்க. ஒரே ரோதனையா இருக்கு” என்று கால் செய்ய, மணியின் தலை வின்வின்னென்று வலித்தது. கோபமாய் போலீஸுக்கு போன் செய்தார்.

ஆள் இல்லாத வீட்டின் கதவை தட்டி கலாட்டா செய்தோம் என்று புரியாமல், உள்ளே இருந்துட்டே போலீஸ விட்டு என்னை தூக்குறியா? உன்ன நான் விட மாட்டேன்? என்று போதையில் கருவிக் கொண்டே ரவி ஜீப்பில் ஏறினான்.

***********************

அதே சாப்ட்வேர் கம்பெனியில் புதிய ஷெட்யூல் ஆரம்பமானது.காலையில் முதல் ஷாட்டிலேயே ராமின் மீதான ஸ்ரீதரின் இன்வால்வ்மெண்ட் பார்த்து நிலைமை சுமூகமானதை புரிந்து கொண்டது யூனிட். முக்கியமாய் தயாரிப்பு தரப்பு அல்லக்கைகள்.

“எல்லாம் அன்னைக்கு நீங்க போட்ட போடு. பொட்டிப் பாம்பா அடங்கிட்டாரு இயக்குனரு” என்று சுரேந்தரிடம் தூபம் போட்டார்கள். ப்ரேமி மிக அழகாய் தெரிந்தாள் ஒவ்வொரு ப்ரேமிலும். சுரேந்தர் மானிட்டரின் முன் உட்கார்ந்து அவளை ரசிக்க ஆரம்பித்தவுடன்.  வின்செண்ட் அவளுக்கென முக்கியத்துவத்தை கொடுத்து லைட் செய்ய ஆரம்பித்திருந்தான். அது அவருக்கு பிடித்திருந்ததை புரிந்து கொண்டான். 

ஒவ்வொரு ஷாட்டையும் டைரக்டர் ஓகே செய்த பின் சுரேந்தரைப் பார்த்து புன்னகைத்தான். சுரேந்தர் கட்டை விரலைக் காட்டி பாராட்டினார். இதையெல்லாம் ஸ்ரீதர் பார்த்துக் கொண்டேயிருந்தான். வின்செண்டின்  நடவடிக்கைகள் கொஞ்சம் அதீதமாய் இருந்ததை உணர்ந்தான்.  அடுத்த ஷாட்டுக்கு ப்ரேமியின் க்ளோசப்.

”வின்செண்ட் இது கொஞ்சம் எமோஷனலான ஷாட் தான் லைட்டிங் கொஞ்சம் டல்லா இருந்தாலும் ஓக்கே. ரொம்பவும் ஏஸ்தடிக்கா இருந்திறப் போவுது போன ஷாட்கள் மாதிரி” என்றான்.

”அப்ப ஹீரோயினை அழகா காட்டக்கூடாதுங்கிறீங்க? அப்படித்தானே ஸ்ரீதர்? “ என்றான் சத்தமாய். ஸ்ரீதருக்கு அவனுடய சத்தம் அதீதமாய் பட்டது. அவனின் குரல் கேட்டு சுரேந்தர் “ஏன் ?” என்றது இன்னும் ஆபாசமாய் இருந்தது. பதில் சொல்லாமல் ஸ்ரீதர் கவனிக்காதது போல அமைதியாய் இருக்க, சுரேந்தர் “டைரக்டர். உங்களத்தான் ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்ட தொனியில் நட்பில்லை.

 எரிச்சலான ஸ்ரீதரை காசியின் பார்வை அமைதியாக்கியது. எரிச்சலை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த சேரிலிருந்தே “வின்செண்ட் சொன்னத செய்ங்க. சும்மா விளையாடிட்டு” என்றான்.

“அலோ.. நான் ஒண்ணும் விளையாட வரலை. வேலை தான் பார்த்துட்டிருக்கேன்” என்றான் கோபத்துடன்

“என் கிட்ட காட்ட வேண்டிய கோபத்தை அவருகிட்ட காட்டுறியா டைரக்டர்? நான் பேக்கப் சொல்லிட்டு போய்ட்டேயிருப்பேன்” என்றார் சுரேந்தர். மொத்த செட்டும் அமைதியாய் இருந்தது.

எல்லோரும் ஸ்ரீதரையே பார்த்தார்கள். நிலமை மிகவும் மோசமாய் இருப்பதை உணர்ந்த வின்செண்ட் “சார்.. விளையாடாதீங்க சார்.. வேலை நிறைய இருக்கு. ஸ்ரீதர் சொல்றது கரெக்ட் தான். டேய் ராட்னம் அந்த ஹெசெம்மை தூக்கி பின்னாடி வை” என்று சத்தம் கொடுக்க , சட்டென நிலமை சீராக, வின்செண்ட் சுரேந்தரைப் பார்த்து கண்ணடிக்க, ஸ்ரீதர் இறுக்கமாகவே இருந்தான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 31 - https://bit.ly/2DMmKjA 

பகுதி 30https://bit.ly/2PhnvHg

பகுதி 29 https://bit.ly/2yKX2aY

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close