[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 31 - ஈகோ


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 10 Nov, 2018 12:50 pm
  • அ+ அ-

”அவரு என்னை அடிப்பாரு பிடிப்பாரு உங்களுக்கு என்னாங்க.. அவர் காலைப் பிடிச்சி இழுக்குறீங்க போதையில. பாருங்க இப்ப” என்று ஆஸ்பிட்டல் வாசலில் ராமராஜைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான் ரவி.

ராமராஜ் ஏதும் பேசவில்லை. ரவிதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்தபடியால் அமைதியாய் இருந்தனர். நர்ஸ் வந்து கூப்பிட உள்ளே சென்றார்கள்.

தலையில் கட்டோடு இருந்தார் திருப்பூர் மணி. வந்திருந்த அனைவைரையும் நிமிர்ந்து பார்த்தவர் ரவியை பார்த்ததும், கண்கள் கோபத்தில் விரிய ஆரம்பித்தது. “நீ வெளிய போ.. இனி ஆபீஸ் பக்கம் தலைக் காட்டக் கூடாது” என்று கத்திய போது இரும ஆர்மபித்தார். 

”இல்ல மணி. .ராமராஜ் சார் தான் போதையில. .உன் காலை..” என்று  சொல்ல ஆரம்பிக்க, மணி வேகமாய் இருமியபடி கையை வெளியே என்பது போல காட்ட, உடனிருந்த ராம், ரவியை கை பிடித்து வெளியே அழைத்துப் போனான்.

”அண்ணே அவரு கோவத்துல இருக்காரு.. இப்பப் போய் ஏன் திரும்ப பேசிட்டிருக்கீங்க?”

“போன்னா. எங்க போவேன்?”

“ஒரு ரெண்டு நாள் வெளிய எங்காச்சும் தங்குங்க.. அவரு தனியா இருக்கும் போது போங்க எல்லாம் சரியாயிரும்” என்ற ராமை கண்கலங்க நிமிர்ந்து பார்த்தான். ராமின் பேச்சில் இருக்கும் உண்மை அவன் கண்களில் தெரிந்தது. ஏதும் பேசாமல் கிளம்பினான்.

வெளியே வந்த திருப்பூர் மணியை பார்த்ததும் நித்யா “எப்டி இருக்கீங்க சார்?” என்று ஆதரவாய் வினவ.. சட்டென அவள் கை பிடித்து “என்னை மன்னிச்சிரும்மா.. அவன் பண்ண தப்புக்கு” என்று கையெடுத்து கும்பிட்டார். கண் கலங்கினார்.

அவரின் கலங்கிய கண்களைப் பார்த்த நித்யாவும் கண்கலங்க, ராமராஜ் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர, “சரி சரி. .எல்லாம் ஒண்ணுமில்லை. நித்யா நீ ராமோட கிளம்பு. சார். வண்டியேறுங்க.. நான் உங்களை ட்ராப் பண்ணுறேன்” என்று அவரை வண்டியில் ஏற்றி டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தார்.  வண்டியை கிளப்பும் போது ஏதோ நினைவு வந்தவராய் “ஆமா ரவி எங்க?” என்று ராமராஜிடம் வினவ, மணியை வழியனுப்ப வந்த ராம் கார் கண்ணாடிக்குள் தலையை விட்டு, “நான் தான் அவரை ஒரு ரெண்டு நாள் வர வேண்டாம் உங்க கோபம் தணியிற வரைக்கும்னு சொல்லி அனுப்புச்சேன்” என்றான்.

சற்று நேரம் யோசித்தவர், பெரிதாய் மூச்சு விட்டு “வரட்டும் . நீங்க கிளம்புங்க ராமராஜ்” என்றார்.

 

நித்யாவும், ராமும் ஒன்றாய் பைக்கில் ஏறி வீடு வரைக்கும் ஏதுவுமே பேசவில்லை. நித்யாவை ட்ராப் செய்துவிட்டு “நான் கிளம்பறேன்.” என்றவனை கை பிடித்து நித்யா நிறுத்தினாள்.

“இந்த மாதிரி பார்ட்டிக்கு நான் வந்திருக்கக்கூடாதுல்ல” என்றாள்.

“சே.சே.. நீ ஏன் அப்படி நினைக்குற. இம்மாதிரியான பார்டியில இதெல்லாம் சகஜம். பட்.. வி ஹேவ் டு பி கேர்புல் தட்ஸ் ஆல். நடந்த எதுக்கும் உனக்கும் சம்மந்தமில்லை. டோண்ட் ஃபீல் கில்டி” என்றான்.

நித்யா அவன் கைகளை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள். எதற்கு என்று தெரியாமல் மளுக்கென கண்ணீர் வழிந்தது. “ஏய்.. என்ன இது குழந்தை மாதிரி.. நத்திங் ஹேப்பண்ட்” என்று வண்டியிலிருந்து கீழிறங்கி அவளை தன்னுடன் அவளுடய ப்ளாட்டுக்கு அழைத்துச் சென்றான். அவளுடய பேக்கிலிருந்து சாவியை எடுத்து திறந்து உள்ளே அவளை சோபாவில் அமர வைத்து, ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

நித்யாவுக்கு அவனின் செய்கைகள் மிகவும் பிடித்தது. இத்தனை அதுரமாய் யாரும் அவளை ஆறுதல்படுத்தியதில்லை என்று தோன்றியது.  அம்மா இருந்திருந்தால் கூட “நீ எதுக்கு டீ ஆம்பளைங்க குடிக்குற இடத்துல போய் நின்னே?”’என்று தான் கேட்டிருப்பாள் என்று தோன்றியது.

“நான் கிளம்பட்டுமா? கீப் காம்” என்று கிளம்பியவனை கைபிடித்து இழுத்து அணைத்து, “தேங்க்ஸ்” என்று விடுவித்தாள் . அவளின் இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்காத ராம் யோசித்தபடி அமைதியாய் கிளம்பினான்.

 

நித்யாவின் வீட்டிற்கு வெளியே வந்ததும் வண்டியில் ஏறி சற்றே யோசித்தான் “ஸ்ரீதரின் ஈகோவை டச் பண்ணாமல் அவனை கன்வின்ஸ் பண்ண வேண்டியது உன் பொறுப்பு” என்று நித்யா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. போன் எடுத்து ஸ்ரீதருக்கு அடித்தான். ரிங் போய் கட்டானது. மீண்டும் ரெண்டு முறை அடித்தான். மூன்றாவது முறை போனை எடுத்தான். “சொல்லுங்க ஹீரோ சார்” என்றான் ஸ்ரீதர்.

“உங்க கிட்ட பர்சனலா பேசணும்?”

“என்ன ஹீரோ சார்.. வேற ஏதாச்சும் புதுப் படத்துல கமிட்டாயிட்டீங்களா?” என்ற ஸ்ரீதரின் குரலில் அநியாய கிண்டல் இருந்தது. ராமுக்கு அது தெரிந்தாலும் அமைதியாய் இருந்தான்.

“உங்க கோபம் புரியுது  ஸ்ரீதர். உங்க கிட்ட நேர பேசணும்”

”நேர என்னத்த பேசப் போறீங்க? ஆல்ரெடி கமிட்டாயிட்டீங்க. உங்கள தூக்க முடியாதுன்னு உங்களுக்கு தெரியும். ஸோ. நீ என்னடா பெரிய சு……….ன்னு சொல்லாம சொல்லப்போறீங்க அதானே?”

“இல்லை ஸ்ரீதர். உங்களுக்கு என்னை காஸ்ட் பண்ணது பிடிக்கலைன்னா. நானே வெளிய போய்டுறேனு சொல்லத்தான் உங்களுக்கு போன் பண்ணேன்.” என்றான். எதிர் முனையில் சற்றே அமைதி.

“ஏன் நீ வெளியப் போய் படம் ட்ராப் ஆகுறதுக்கா?. ராம் உன்னை செலக்ட் பண்ணி ஹீரோவாகினது நானு. ஆனா உனக்கும் எனக்கும் பிரச்சனைங்கிற போது நீ போய் நின்னது ப்ரொடியூசர் கிட்ட.ஸோ. உனக்கு தெரியும் அந்த முட்டாக் …. எப்படி என்னை வச்சி செய்வானு. என்னை மேனிபிலேட் செய்ய சுரேந்தர பிடிக்கிற அளவுக்கு உனக்கு தெரிச்சுருக்கு. இல்லையா?’

“அப்படியெல்லாம் இல்லை ஸ்ரீதர். அன்னைக்கு நான் கொஞ்சம் ஹுமிலியேட் ஆயிட்டேன் யார் கிட்ட போய் சொல்றதுன்னு தெரியலை. அதும் அவரே கேட்ட போது இன்னும் அவமானமாயிருச்சு. இல்லாட்டி சொல்லியிருக்க மாட்டேன்.:

“அப்ப நான் உன்னை கமிட் பண்ணும் போதே என் படத்தை தவிர வேற படத்துல கமிட்டாகக்கூடாதுனு அவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் என் பட மொத நாள் ஷூட்டிங் போது உன் பட விளம்பரம் வர்றது என்னை ஹுமிலியேட் பண்ணும்னு உனக்கு தெரியாதவனா என்ன?”

ராமினால் ஏதும் பதில் பேச முடியவில்லை.

“எத்தனை அசிங்கமா இருந்திருக்கும் எனக்கு. அட்லீஸ்ட் மொத நாள் நாளைக்கு விளம்பரம் வருதுன்னாவது சொல்லியிருக்கலாம் இல்லை. நான் எனக்குன்னு சில கோட்பாடுகளை வச்சிட்டு வேலை செய்யுறேன் அதுக்கு யாரு சரிப்பட்டு வர்றாங்களோ அவங்களை வச்சித்தான் எனக்கு படம்.

எப்ப அது ஆட்டம் காண ஆரம்பிக்குதே அங்கேயே என் பவர் குறைய ஆர்மபிச்சிரும். டைரக்‌ஷன்குறது வெறும் கதை வசனமில்லை. 24 கிராப்டுல இருக்க்கிறவங்களையும் கட்டி இழுத்து, இவன் நம்ம திறமையை சரியா பயன்படுத்திக்குவான்னு புதுசா வர்றாவங்களும், இவன் ஒழுங்கா வேலை செய்யுறான் அவனுக்கு தோதா நாமளும் இருக்கணும்னு எக்ஸ்பீரியன்ஸ் ஆளையும் அவனவன் ஈகோவை டச் பண்ணாம வேலை வாங்குறது தான் டைரக்டரோட முக்கியமான விஷயம். அது உன் ஒருத்தனால அடிப்பட்டிருச்சுன்னா. எப்படி என்னால அதை சரி பண்ண முடியும்?’

ராமுக்கு தன் தவறு மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் உறைத்தது.

“இன்னைக்கு ஒருத்தனுக்கு படம் கிடைக்கணும்னா.. கிட்டத்தட்ட ப்ரோடியூசர் காலை கழுவி குடிக்காத கொறதான். அத்தனையும் மீறி சுரேந்தர் மாதிரியான ஆட்களோட தினசரி இம்சைகளைத் தாண்டி நான் ஜெயிக்க நீயெல்லாம் துணையாயிருபேனு நம்பினேன். ஏமாத்துன உன்னை எப்படி நான் நல்லா நடத்துவேன்னு எதிர்பார்க்குற? நான் என்ன புத்தனா?”

”நீ அன்னைக்கு நடந்துக்கிட்ட முறை எனக்கு பிடிக்கலை  உன் வரைக்கும் நான் உன்னை காக்க வச்சது ஷூட் பண்ணாம விட்டது தப்பாயிருக்கலாம். ஆனா அங்க நான் டைரக்டர்ங்குற அதிகாரத்தை நீ ப்ரோடியூசர வச்சி உடைக்கப் பார்த்த, அப்ப  உன்னை வச்சித்தான் என் அங்கீகாரத்தை நிலை நிறுத்தணும். இல்லாட்டி நான் நிக்க முடியாது.” என்றான்.

“நீங்க பேசிட்டிங்களா? நான் கொஞ்சம் பேசட்டுமா?“ என்றான் ராம்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 30https://bit.ly/2PhnvHg

பகுதி 29 - https://bit.ly/2yKX2aY

பகுதி 28 - https://bit.ly/2OPlGB3

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close