[X] Close

குரு மகான் தரிசனம்16: சுரைக்காய் சுவாமிகள்


guru-mahan-dharisanam-16

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 14:26 pm
  • அ+ அ-

திருவை குமார்

சித்தர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல அன்றும் – இன்றும் – என்றும், ஏன் இந்தப் பிரபஞ்சம் உருளும் காலம் வரை கூட வாழ்பவர்கள். வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

அடுத்து நாம் தரிசிக்கும் மகான்... சுரைக்காய் சுவாமிகள்.

பெயரே விசித்திரமாக இருக்கிறது என்கிறீர்களா? வேங்கடவனின் திருத்தலமான திருப்பதிக்கும் அவரது மருமானின் திருத்தலமான திருத்தணிகைக்கும் இடைப்பட்ட புத்தூர் கிராமத்திற்கு கிழக்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்ததுதான் நாராயண வனம் எனும் கிராமம். இதனை நாராயணவரம் என்றும் அழைப்பது உண்டு. உருவத்தில் சற்றே குள்ளமாக, மாநிற தேகத்துடன் தலைநிறைய பெரிய முண்டாசுடன் கிழிந்த உடை அணிந்தபடி வலம் வந்த மகான் இவர்.

இந்த நாராயணவனத்தையே தனது இருப்பிடமாக்கிக் கொண்டு தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் அருள்பாலித்தார்.

அது சரி! சுவாமிகளின் பெயருக்கு முன்னதாக சுரைக்காய் ஏன்?

இவரது இயற்பெயர் ராமசாமி என்றே பதிவாகி உள்ளது. இருப்பினும் நன்றாக முற்றிப்போய் ஓடாகிப்போன இரு சுரைக்காய் குடுக்கைகளையே தனது சொத்தாக்கி வைத்திருந்த மகான், தான் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்வாராம். ஒன்றை உணவுக்காகவும், ஒன்றை தண்ணீருக்காகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கூடவே இரு நாய்களை கயிற்றால் கட்டி அவற்றையும் தன்னுடன் நடத்திச் செல்வாராம்.

மகானின் மொழியை அவர் பேசுவதை யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்துகொண்டுவிட முடியாதாம். மறைமுகமாகவே பொருள் உணர்த்திப் பேசுவாராம். குறை என்று கூறி கண்ணீரோடு வருவோருக்கு கவலை தீர்க்கும் களிம்பாக இருந்தார் சுவாமிகள்.

சுவாமிகளிடம் விளையாட்டாக எவரேனும்  “உங்கள் வயது என்ன சுவாமி?”… என்று கேட்டுவிட்டால் ‘ஒரு ஐநூறுன்னு வச்சுக்கோ’’ என்பார்.  கூடவே, “திருத்தணிக்கும் திருப்பதிக்கும் கோயில் கட்ட கல்லு மண்ணு சுமந்த ஒடம்பாக்கும்”… என்று முறுவலிப்பார்.

ஆரம்ப காலங்களில் திருப்பதி, நகரி போன்ற ஊர்களில் தான்பாட்டுக்கு திரிந்துகொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவரது அமானுஷ்ய சக்திகள் வெளி உலகத்துக்கு தெரிய வரவே – சமூகம் அவரை கொண்டாடத் தொடங்கியது.

நோய் என்று வந்தோர்க்கு மூலிகை சாற்றினையும், திருநீறு கலந்த நீரையும் சுரைக்காய் குடுக்கையில் தருவார் சுவாமிகள். வந்தவருக்கு வந்த நோயானது அடுத்த நொடியே பறந்துபோயிருக்கும்.

அப்படிதான் அன்றொரு நாள் அந்தி சாயும் வேளையில் சற்றேறக்குறைய முப்பதே வயதான பெண் ஒருத்தி, கலங்கிய விழிகளுடன் கண்ணீர் ததும்ப வந்து நின்றார்.

மகானோ ஆழ்நிலை தியானத்தில்!... என்ன செய்வது என்ற மனநிலையில் அந்தப் பெண் மலைத்து நின்றிருக்கும்போது, அடுத்த விநாடியே அவரது விழித்தாமரைகள் மலர்ந்து அவளை நோக்கியதுடன் கேள்வியும் கேட்டது. “ஏண்டீம்மா? உன் புருஷன் மேலே வந்து என்னையப் பார்க்க பயப்படறானோ?”… என்றதும் எதிர் நின்றவளுக்கு வியப்பு தாங்கவில்லை.

எப்படி இது சாத்தியம்?... தான் எதுவுமே சொல்லாதபோது…? என்ற மலைத்திருந்தவளை நோக்கி மகான் சொன்னார். “என்ன பாக்குறே? இதோ இவன்தான் எங்கிட்ட சொன்னான்”… என்று கை நீட்டிய இடத்தில் நின்றிருந்தது ஒரு குரங்கு.

அவள் அழுதபடி சொன்னாள். “சரும வியாதியால்  உடல் எங்கும் புண் பரவிபோயிற்று… அந்த வேதனையால் அவர் மேல வரலை”… என்றாள்.

“காயம் சிறுசா இருக்கும்போதே வந்திருக்கலாமே! இப்போ கண்கலங்குறயே பெண்ணே! காலம் ஒன்றும் ஓடிப்போல, சடுதில குணமாக்கிடலாம்!” என்று சொல்லிவிட்டு, கண் மூடித் தியான நிலைக்குச் சென்றார். நொடிப்பொழுதில் எழுந்து விடுவிடுவென மலை உச்சி ஏறத்துவங்கினார்.

அப்பெண்ணோ அங்கேயே சிலை போல் நின்றாள்.

சற்று நேரம் கடந்த நிலையில், சென்றவர் திரும்பி வந்தார்… வந்தவர் கையில் ஒரு பழுத்த சுரைக்காய் காத்திருந்தது. பெண்ணுக்கு எதிராக சுரைக்காயை இரண்டாகப் பிளந்தவர் – அதற்குள் மூலிகை களிம்புகளை சதும்ப நிரப்பினார். ‘பெண்ணே! இதை தினமும் இரவு நேர வேளையில் உன் கணவனுக்கு உடம்பு முழுவதும் தட வி விட்டு தனியே படுக்க வைத்துவிடு! காலையில் வழக்கம்போல் குளியல்! மீண்டும் இரவு களிம்பு தடவல்… இப்படியாக ஒரு மண்டலம் செய்ய வேண்டும். நீயும் பாய், துணி, படுக்கை தவிர்த்து உலர் தரையில் படுத்து ஒரு வேளை மட்டுமே உணவு ஏற்று ஈசனைத் துதித்து வரவேண்டும்”…. என்று உத்தரவிட்டார்.

விம்மிய குரலில் சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்த அப்பெண் கிளம்பத் தயாராகையில் மீண்டும் ஒரு உத்தரவு போட்டார்.

“இந்த சுரைக்காயை வீட்டு பூஜை அறையில் மட்டும்தான் வைக்க வேண்டும். தப்பித் தவறியும் சமையலறை பக்கம் கொண்டு போகக்கூடாது!” என்றார்.

ஆமோதித்தவாறே அந்தப்பெண் மலையடிவாரம் வந்துசேர்ந்தபோது கணவனின் கண்களில் ஆவல் பொங்கியது. மகான் சொன்னதெல்லாம் சொன்னவள் சமையலறையின்  பக்கம் போகக்கூடாது என்று சொன்னதை, சொல்ல ஏனோ மறந்துபோனாள்.

வினை அங்கு விஸ்வரூபம் எடுத்தது.

இரவில் களிம்பு பூசிப்படுத்தவன்… நடு இரவில் தண்ணீர் குடிக்க எழுந்து சென்ற நிலையில் வழியில் வைத்திருந்த சுரைக்காயை – பத்திரமாக எடுத்துச் சென்று சமையலறையில் வைத்தான். அவ்வளவே!

 காலையில் கணவனிடம் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று ஆவலாய் பார்க்க வந்தவளுக்கு பதற்றம் பற்றிக்கொண்டது.

புண்கள் இன்னும் அதிவேகமாக பரவி கண்களை இமைக்கக்கூட அனுமதிக்கவில்லை.

“எங்கே தவறு நேர்ந்திருக்கும்?”… என்று யோசித்தவள் கணவனிடம் கேட்டாள்!

“எங்கே அந்த களிம்பு?”…

அவன் சொன்னான்… “சமையலறையில் பத்திரமாக வைத்துள்ளேன்”…

அவ்வளவுதான்… அத்தனையும் புரிந்துபோனவளாக தன் அறியாமையை நொந்து கொண்டாள். கண்களில் நீர் கோர்த்தன. ஆனாலும் நொடியும் வீணாகமல் கணவனை கையுடன்  அழைத்தபடி சித்தபுருஷரின் பாதங்களில் விழுந்து அரற்றினாள். 

மகான் கண்கள் அக்னியை கக்கும் விதமாக இருந்தது. அடுத்த நொடியே, அவரது கரங்கள் உயர்ந்து அவளது கணவனது கன்னங்களில் ‘பளார்’ என இடியென இறங்கியது. தட்டாமாலை சுற்றியது போலிருந்தது… அடிவாங்கிய கணவனுக்கு! ஆனால், அவர் விட்ட அறை அவருக்கல்ல!... அவரது நோய்க்கு என்பது அடுத்த சில நாட்களிலேயே தெரிந்துபோனது! அந்த நோய் முற்றிலும் தீர்ந்து போனது.

அக்காலத்தில் கொடும் நோயாக கருதப்பட்ட ராஜபிளவை, தொழுநோய்… போன்றவை வெறும் வேப்பிலை மஞ்சள் கொண்டே ஓட ஓட விரட்டியுள்ளார். இது மட்டுமல்ல! பில்லி, சூனியம் உட்பட எல்லா பாதைகளையும் தீர்த்துவிடுவதில் வல்லமை கொண்டவர்.

தான் ஒரு படிக்காத முட்டாள்… என்பதாகவே பறைசாற்றி கொண்டாரே தவிர, வேதங்கள், ஆகமம், இதிகாசம், புராணங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரை எல்லாமே அத்துப்படி. எங்கு எது பற்றி கேள்வி கேட்டாலும் நொடியில் பதில் பறந்து வரும். அன்பு, பொதுநலம்,  இந்த இரண்டு வரிகள் மட்டுமே அவரது வாழ்வின் தாரக மந்திரங்கள்.

சுவாமிகள் பிறந்த ஊராக சொல்லப்படும் நாராயணவனம் எனும் தலம் ஏதோ சாதாரண சிற்றூராக நினைத்துவிட  வேண்டாம். திருமலையான் தனது மனையாளான பத்மாவதியை கரம் பற்றிய தலமாக அறியப்படுகிறது.

சுவாமிகள் வாழ்ந்த காலம் பற்றிய சரியான குறிப்புகள் இல்லையே தவிர கி.பி.1770-ஆம் ஆண்டு வாக்கில் புதூரில் ஒரு சத்திரம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கியபோது இவரிடம் ஆசி பெற்றதாக  குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளனவாம்.

சரியாக சொல்லுவதென்றால் ஆங்கிலேய அதிகாரிகளான கர்னல் ஆல்காட் மற்றும் மேடம் ப்ளாவட்ஸ்கி போன்றோர் மகானின் பாதம் பணிந்து ஆசிகள் வாங்கியதாக குறிப்புகள் உள்ளன.

நமது சுவாமிகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடும் ஆற்றல் இருந்தது. இது அனைவருக்குமே தெரியும். அப்படிதான் ஒருநாள் பக்தர்களிடையே சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்த நமது சுவாமிகள்… “போ… போ… எல்லோரும் போங்க... பக்கத்துல ஒரு குளத்துல ஒருபொண்ணு  மூழ்கி உயிர விடப்போறாள். போய் காப்பாத்துங்க...”

அங்கிருந்த அனைவரும் ஓட்டமாயோடி குளம் தேடி அலைந்து அதைக்கண்டுபிடித்தனர். ஆனால் அங்கே அதுமாதிரி எதுவும் சம்பவம் நடக்கவேயில்லை… என்றறிந்து திரும்பவும் சுவாமிகளிடம் ஓடினர். அவரோ, “போங்க… போங்க… நான் சொன்ன குளம் அதல்ல!... வேற… வேற… !” என்றதும் மீண்டும் ஓடினர், தேடினர். அப்பெண்ணை கண்டனர்.

சுவாமிகள் சொன்னது போலவே தற்கொலை முயற்சியில் பாதிகுளம் வரை சென்றிருந்தாள். பாய்ந்து சென்ற ஆண்கள் அவளை கரை சேர்த்து புத்தி கூறி அனுப்பிவைத்து பெருமூச்சு விட்டார்கள்.

அதேபோல்தான், ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தனது ஒரே பேத்தியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அவருக்கு மகானிடம் அதீத பக்தி. இந்த நிலையில் திடீரென அவளது பேத்தியை ஏதோ ஒரு நோய் பீடித்துவிட்டது. அதுமுதல் அவளது தேகம் மெலிய ஆரம்பித்து… எலும்பும் சதையுமாக மாறிப்போனாள். பேத்தியின் நிலையறிந்த பதறிய பாட்டி… உடனடியாக மகானிடம் ஓடிவந்து கதறினாள்.

“சாமீ! எத்தனையோ டாக்டரெல்லாம் பார்த்தாச்சு… ஆனால், நோவு புடிபடல… நீங்கதான் என் பேத்திய காப்பாத்தி கரை சேர்த்துடணும்” -  மகான் மெளனமாக தலையசைத்து பூமியில் கரம்பதித்து ஒரு பிடி மண் எடுத்து பேத்தியின் கைகளில் தந்து… ‘போ! இதே உன் மருந்து’… என்று அனுப்பிய அடுத்த ஒரு வாரத்தில் நோய் தீர்ந்தது. பப்ளிமாசாக மாறிப் போயிருந்தாள்.

இதை அறிந்த ஒரு வண்ணான் – தனது ராஜபிளவை நோயை போக்கி அருளச்சொல்லி மகானை நாடினான்.  அந்த நாட்களில் ராஜபிளவை என்பதும் பிளேக் என்பதும் கொடும் நோய்களாக பார்க்கப்பட்டன. நோய்க்குள் மாட்டிக்கொண்டால் மீள்வது கடினம். கிட்டத்தட்ட பத்மவியூகம் போல்! ஆனால், நமது சுவாமிகளுக்கு இதெல்லாம் சர்வசகஜம். தன்னை நாடி வந்தவனுக்கு புளி கரைசல் கொடுத்து அதன் மீது தடவி வரும்படி சொன்னார். புளிக்கரைசலில் அந்த ராஜபிளவை மாயமாகிப் போனது.

இப்பேர்ப்பட்ட மகான் தனது மண்ணுலக வாழ்வுக்கு நாள் குறித்துக் கொண்டு அதை தனக்கு நெருக்கமான பக்தர்களான, புருசோத்தம நாயுடு, பாப்பைய செட்டியார் இருவரிடம் தெரிவித்தார். இரவு வழக்கத்திற்கு அதிகமாக பத்து லிட்டர் தண்ணீர் குடித்தார். ஆனாலும், மலம் எதுவும் கழிக்கவில்லை.

மறுநாள், முந்தையநாள் மகான் தங்களுக்கு அறிவுறித்தியபடி நூற்றி ஐம்பது குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து – வடக்கு திசை நோக்கி அமர்ந்த சுரைக்காய் சித்தர் மீது ஊற்றினார்கள்… நேரம் சரியாக இரவு பனிரெண்டு மணி. சித்தர் தனது அபய ஹஸ்தம் காட்டி அவர்களிடம் கற்பூரம் காட்டி தேங்காய் உடைக்குமாறு கூறினார். எல்லாம் சைகைதான்!

அவரது உத்தரவுப்படியே செய்துமுடிக்க, அடுத்த நொடியே புருஷோத்தம நாயுடுவின் தோள்பட்டையில் சாய்ந்து… இறைவனடி  சேர்ந்தார். அடுத்த தினம் அவரது மெய்யுடல் சமாதியில் வைக்கப்பட்டது. (09.08.1902). அன்றுதான் எழாம் எட்வர்டு மன்னர் முடிசூட்டிய நாள்.

சுரைக்காய் சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள இடம் திருப்பதியிலிருந்து 39-கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து சரியாக மூன்று கி.மீ. தொலைவு.

திருப்பதி செல்லும்போது அப்படியே சுரைக்காய் சுவாமிகளின் திருச்சமாதியில் தரிசியுங்கள்.

- தரிசனம் தொடரும்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close