[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 28 - PACK UP!


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 20 Oct, 2018 12:29 pm
  • அ+ அ-

சுரேந்தர் அப்படி சொன்னது கூட தப்பில்லை. அது அவர் முடிவு. ஆனால் அதை முக்கிய டெக்னீஷியன்கள் எதிரில் சொன்னது மஹா தப்பு.

டைரக்டர் மீதான மரியாதை குறையும். இம்மாதிரியான விஷயத்துக்கு டைரக்டரின் ரியாக்‌ஷன் முக்கியம். ஆனால் ரியாக்‌ஷன் எல்லாம் முதல் பட இயக்குனருக்கு அவ்வளவு ஈசியாய் வாய்க்காது. அப்படி வாய்க்காத பட்சத்தில் அல்லக்கையிலிருந்து மேனேஜர் வரை வாலாட்டுவார்கள். டைரக்டர் மூலம் செய்ய முடியாததை தயாரிப்பாளர் வரை கொண்டு செல்வார்கள்.

நாலு வரிக்கு ஒரு முறை , உங்களுக்காகதான் பொருத்துட்டு வேலை செய்யுறோம் என்பது போல சொல்வார்கள். இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்குமிடையே முட்ட ஆர்மபிக்கும். படத்துக்கு எழுதிய திரைக்கதையை விட மிக நுணுக்கமாய் ஆட்டம் ஆட திரைக்கதை எழுத வேண்டியிருக்கும்.

ஸ்ரீதருக்கு அந்த நிலைமை முதல் நாளே வந்தது அவனது துரதிருஷ்டம். அதை பயன்படுத்தியது அவன் அறிமுகப்படுத்திய ஹீரோ எனும் போது கோபம் மண்டியது. போன் செய்து, டேட் வாங்கி, கதை சொல்ல  அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, வருஷக்கணக்கில் உட்கார்ந்து நெய்த கதையை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒரு அரை மணி நேரத்தில் சொல்ல முடியுமா? ஒன்லைன்ல கதை சொல்லுங்க பாப்போம். என்று சினிமாவையே கரைத்துக் குடித்தார்ப் போல பேசுகிறவர்களை எல்லாம் தாண்டி. இந்த சுரேந்தர் போன்ற சுய அரிப்பு பிடித்தவனின் வீண் பெருமைக்கெல்லாம் குனிந்து, பேசி படம் வாய்ப்பு பெற்று, வாய்ப்பு கொடுத்தால் அவன் நம் மீது ஏறி நிற்கிறான் எனும் போது கோபம் மண்டத்தான் செய்யும். சட்டென தன் சீட்டிலிருந்து எழுந்தான் ஸ்ரீதர்.

எழுந்தவனை காசி சட்டென குறுக்கிட்டு நிறுத்தி, கையில் சிகரெட் ஒன்றை எடுத்துக் கொண்டு “கொஞ்சம் வா” என்று தனியே அழைத்துப் போனான். அவர்கள் போவதைப் பார்த்து வின்செண்ட் லேசாய் சிரித்துக் கொண்டான்.

“என்ன  சண்டப் போடப் போறியா?’

“பேசலாம்னு கிளம்பினேன்”

“என்னானு?”

“ நீங்க இப்படி பப்ளிக்கா இனிமே பேசாதீங்கனு”

“நீ சொன்னா கேட்டுட்டுத்தான் மறுவேல பாப்பானா அவன்? நீ வேற. உனக்கு தெரியாதது இல்லை ஸ்ரீதர். அவன் ஒர் தற்பெருமை முட்டாள். உன்னையெல்லாம் விட நான் தான் டாப்புன்னு காட்ட தெரிஞ்சே பப்ளிக்கா சொல்லிட்டு போயிருக்கான். நீ ரியாக்ட் பண்ணா.. படம் நகராது. பல்லக் கடிச்சிட்டு இரு..

ஷெட்யூல் ப்ரேக் ஆகாம போகணும். உனக்கு ராம்கிட்ட டீல் பண்றது கஷ்டமா இருந்தா நான் டீல் பண்ணிக்கிறேன். ஷூட் எந்த விதத்துலேயும் நின்னுற கூடாது ஸ்ரீதர்”

என்று அவன் தோள் அணைத்து, அவனிடமிருந்து சிகரெட்டை வாங்கி ஒரு ப்ஃப் அழுத்தமாய் இழுத்துவிட்டு, அவனிடம் கொடுத்தான் காசி. அவன் சொன்னதில் இருந்த உண்மை ஸ்ரீதருக்கு புரிந்தது. மிச்சமிருந்த சிகரெட்டை ஊதி முடித்து, மொபைலை எடுத்து டைம் பார்த்தான். ப்ரேக் முடியும் நேரம்.

“ஸ்டார்ட் பண்ணுவோம்” என்று காசியின் முதுகில் தட்டி பரபரவென உள்ளே போனவன் “வின்செண்ட்..கமான் லெட்ஸ் ஸ்டார்ட்” என்று சொல்லியபடி உள்ளே போக, ராமிடம் காட்ட முடியாத, கோபமும், அதிகாரமும் வின்செண்டை அழைத்த விளியில் இருக்க, அவனின் முகம் லேசாய் சுருங்கியது.

அடுத்தடுத்த காட்சிகளையும் ப்ரேமியை வைத்தே எடுத்தான். “ஸ்ரீதர் தேவையில்லாமல் ஈகோ பார்க்காதே’ என்ற காசியிடம். “க்ளோஸ் எல்லாம் முடிச்சிரலாம். மாஸ்டர் லாஸ்டா வச்சி எடுத்துருவோம். லைட்டிங் பண்ண லேட்டாயிருச்சுன்னா” என்றான் ஸ்ரீதர். 

க்ளோஸ் எல்லாம் முடித்த போது கிட்டத்தட்ட நாலரை மணி ஆனது. “வின்செண்ட் இதே சீனுக்கு மாஸ்டர் வச்சிரலாம். காசி ஹீரோவுக்கு சீன் சொல்லிரு” என்று ஹீரோ என்ற வார்த்தைக்கு எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுத்து சொன்ன ஸ்ரீதரைப் பார்த்து “லைட்டிங் பண்ண லேட்டாகுமே பரவாயில்லயா?” என்று குரலில் நக்கலோடு கேட்ட வின்செண்ட்டை ஆச்சர்யமாகப் பார்த்தான் ஸ்ரீதர்.

சுர்ரென கோபம் வர பதில் சொல்ல எத்தனித்த போது காசி குறுக்கே வந்து “பண்ணிரலாம்  வின்செண்ட் உன்னால முடியாததா? சின்ன மாஸ்டர் தான்”என்று  அவன் தோள் அணைத்து  ஸ்கிரிப்ட் பேடைக் காட்டி காட்சியை விளக்க ஆர்மபித்தான். ராம் மெல்ல அவனருகில் கொஞ்சம் தயக்கமாய் போய் உடன் நின்று கொண்டு, பின்னால் நின்றிருந்த ஸ்ரீதரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்கிரிப்டை கவனிக்கலானான்.

*****************************

ராமராஜின் படத்தின் விளம்பரம் வந்தது முதல் நித்யாவின் போன் அடித்துக் கொண்டேயிருந்தது. அப்பா அம்மா இறப்புக்கு பிறகு இருக்கியா? இல்லையா? என்று கேட்கக்கூட இல்லாத உறவினர்கள் எல்லாம் வாழ்த்துகளை போனிலும், பேச யோசித்தவர்கள் வாட்ஸப்பிலும் வாழ்த்திக் கொண்டிருக்க, ராமிடமிருந்து எந்த மெசேஜும் வராதது கண்டு யோசனையானாள். ராமராஜுக்கு போன் அடித்தாள். எதிர்முனையில் உற்சாகமாய் “சொல்லும்மா” என்ற அவரின் குரல் ஒலித்தது.

“விளம்பரம் நல்ல ரீச் சார். எங்கெங்கேர்ந்து எல்லாம் போன்.”

“ஆமா. சரி.. ஒரு வேலை பண்ணு. நீ உடனே புறப்பட்டு ஆபீஸ் வரியா? ஒரு மேகஸின்ல உன் அட்டைப் படம் போட ஸ்டில் எடுக்க வர்றேனு சொல்லியிருக்காங்க. ராமோட சேர்ந்து கொடுக்கலாம்னுதான் பார்த்தேன். பட்.. அவனுக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்ல அதான் டிஸ்டர்ப் பண்ணலை. நீ வா.”

“நீ பாட்டுக்கு ஸ்கூட்டில வந்துறாத.. ஆட்டோவோ கால்டாக்ஸியோ புடிச்சிட்டு வா..” என்று போன் கட் செய்தார்.

நித்யா ஆபீஸ் போன போது கொஞ்சம் களேபரமாய் இருந்தது. பத்திரிக்கை போட்டோகிராபர், ஒரு நிருபர் என ஹாலில் உட்கார்ந்திருக்க , அவர்களுக்கு வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தாள். போட்டோ செஷன் நடந்தது முடிந்து “அடுத்த வார இஷ்யூல போட்டுருவோம் ராமராஜ்” என்று கை குலுக்கி விடை பெற்றார்கள்.

அவர்கள் ஷூட் செய்த போது எடுத்த ஒர்க்கிங் ஸ்டில்களை உடனடியாய் தன் மொபைலில் எடுத்து  அதை சுரேஷிடம் ஆன்லைன் நியூஸாக போடச்  சொல்ல,  நொடிகளில் ராமராஜின் படத்துக்கான பத்திரிக்கை ஸ்டில் ஷூட் என பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பரவ, ராமராஜுக்கு அடுத்தடுத்து கால்கள் வர ஆர்மபித்தது. முகம் முழுவதும் சந்தொஷம்.

“ஆமா சார்.. இப்பத்தான் போட்டோ புடிச்சிட்டு போனாங்க.. நம்ம அஸிஸ்டெண்ட் அதை எடுத்து ஆன்லைன்ல போட அனுப்புனான். அதுக்குள்ள இத்தனை பேருக்கு ரீச் ஆயிருச்சு” என்று திருப்பூர் மணியிடம் உற்சாகத்தோடு சொல்ல, “லட்ச ரூபா ஆன்லைனுக்கு மட்டும் கொடுக்கப் போறோம் இது கூட செய்யலைன்னா எப்படி ?“ என்று ரவி  அலட்சியமாய் சொன்னதை மணி, ராமராஜ் இருவரும் விரும்பவில்லை. ராமராஜ் சட்டென அறையை விட்டு வெளியேறினார்.

“அக்கவுண்ட் சொல்லுற வேலை எனக்கு மட்டும்தான் புரியுதா?’ என்று ரவியை கடிந்தார் மணி.

“இல்லைப்பா.. செலவு பண்ணாம விளம்பரம் வந்துருமா? . அப்புறம் உன்கிட்ட ஒரு ஹெல்ப்பு.. “ என்று இழுத்தான். என்ன என்பது போல ரவியை நிமிர்ந்து பார்க்க “ஒண்ணுமில்லை. ஒரு பத்து லட்சமாவது கொடுத்தா சில்லறை கடனையெல்லாம் அடைச்சிட்டு நிம்மதியா வேலை பாப்பேன். கொஞ்சம் அரேஞ்ச் பண்ணேன்” என்று இழுத்தான்.

மணி அவனை தீர்க்கமாய் பார்த்து  “உனக்கு நான் கொடுத்துருக்குற இந்த வேலையே ஹெல்ப்பு தான். இதுக்கு மேல எதிர்பார்காத.. ஷூட்டிங் ஆர்மபிச்சா செலவு நிறைய இருக்கு” என்று ரவியின் பதிலுக்கு எதிர்பாராமல் அறையை விட்டு கிளம்பினார் மணி. ரவியின் முகத்தில் ஈயாடவில்லை.

ராமராஜ் முகத்தில் உள்ளே போன போது இருந்த சந்தோஷம் வெளீயே வந்த போது இல்லை. என்பது நித்யாவுக்கு புரிந்தது. அவளின் மொபைலில் ராம் வாட்சஸப் அனுப்பியிருந்தான்.  அவளின் பேஸ்புக் போட்டோவை பார்வார்ட் செய்து ‘வாழ்த்துக்கள்” என்று. பதிலுக்கு “எனக்கெல்லாம் வெறும் ஸ்டில் ஷூட் தான் அங்க உனக்கு நிஜ ஷூட்டிங்கே போய்ட்டிருக்கு” என்று அனுப்பினாள்.

“இது வரை ஒரு ஷாட் கூட நடிக்கவில்லை” என்று ராம் மெசேஜ் அனுப்பிய போது மணி 6.30.

ஸ்ரீதரின் ஷூட்டிங் பேக்கப் ஆகியிருந்தது.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 27 - https://bit.ly/2yLqYTs

பகுதி 26 - https://bit.ly/2Cg0cpD

பகுதி 25 - https://bit.ly/2EuhX7A

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close