[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 27 - ஹீரோவை மாத்து!


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 15 Oct, 2018 12:57 pm
  • அ+ அ-

ஸ்ரீதர் ஏன் தன்னை ஷாட்டிலிருந்து வேண்டாம் என ஏன் சொன்னான் என்று புரியாமல் ராம், ஸ்ரீதருக்கு பக்கத்தில் போட்டிருந்த சேரில் போய் அமர்ந்து மானிட்டரை பார்க்க ஆரம்பித்தான். ஸ்ரீதர் ஏதுவும் பேசவேயில்லை. 

ப்ரேமிக்கு மட்டுமான ஷாட்டுக்கான லைட்டிங்கை வின்செண்ட் செய்ய ஆரம்பித்தான். 

அவனுக்கும், சுரேந்தரின் அல்லக்கைகளுக்கும் கூட ஏதும் புரியாவிட்டாலும், ஷாட்டில் ப்ரேமி மட்டுமே இருப்பதைப் பார்த்து “சார்.. டைரக்டர் சரியான ஆளு … உங்களை இம்பரஸ் பண்ண மொத ஷாட் உங்காளுக்கு வைக்குறாரு” என்று ஏத்திவிட, சுரேந்தர் அபத்தமாய் இளித்தார். 

முதல் ஷாட்டுக்கான லைட்டிங் செட் செய்யப்பட்டு வின்செண்ட் ஓகே சொல்ல, ஸ்ரீதர் கண் மூடி கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு, “கேமரா.. லைட்ஸ்.. ஆக்‌ஷன்” என்றான். 

மொத்த அரங்கும் நிசப்தமாய் இருக்க, ப்ரேமி ப்ரேமுக்குள்ளே வந்து மந்தகாசமாய் சிரித்தாள். எதிரே இருக்கும் கேமராவைப் பார்த்து “ஹாய்” என்று கை நீட்டினாள். 

ஸ்ரீதர் “கட்”என்றான். மொத்த கூட்டமும் கைதட்டியது.  

அடுத்தடுத்து ப்ரேமியின் காட்சிகள், ஆபீஸ் எக்ஸ்டீரியர் போன்ற காட்சிகளையே எடுக்கும்படியாக லைட் செய்யச் சொன்னான். 

ஸ்ரீதரிடம் தனக்கான காட்சி எப்போது என்று கேட்க நினைத்து அருகே போகும் போதெல்லாம் விலகிப் போனான். 

அடுத்த ஷாட் எடுக்கும் முன்பு ப்ரொடக்‌ஷனைக் கூப்பிட்டு மானிட்டர் பக்கத்தில் வேறு யாருக்கும் சேர் போடக்கூடாது என்று கண்டிப்பாக சொன்னதன் பேரில் அவன் அருகில் இருந்த சேரை எடுத்துவிட, ராம் சிறிது நேரம் அவனருகில் நின்று விட்டு, வருத்தமாய் அந்த அறையில் இருந்த பேனுக்கு அருகே சேர் போட்டு உட்கார்ந்தான்.

மிகவும் அவமானமாய் இருந்தது அவனுக்கு. அப்படியே எழுந்து போய்விடலாமா? என்று கூட தோன்றியது. என்ன காரணம் என்று தெரியாமல் நிச்சயம் போகக் கூடாது என்று முடிவெடுத்து கண் மூடி அமர்ந்திருந்தான்.

“எது வேணுங்கிறத முடிவு பண்ண வேண்டியது நீ ரெண்டுத்தையும் போட்டுக் குழப்பிக்காதே “ என்று நித்யா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. 

விளம்பரம் பார்த்து கை குலுக்கிய பிறகே அவன் தன் ஷாட்டை மாற்றினான். ஸோ.. அதுதான் கோபம். என்ன பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான். மதியம் வரை எந்த காட்சிக்கும் அவன் அழைக்கப்படவேயில்லை. 

லஞ்ச்ப்ரேக்கில் எல்லோரும் சாப்பிட அழைக்க, டயட்டிலிருப்பதாய் சொல்லி அமைதியாய் இருந்தான். அவன் சாப்பிடாமல் இருப்பதை வின்செண்ட் பார்த்து “ப்ரதர் வாங்க. என்ன தனியா உட்கார்ந்திட்டிருக்கீங்க?” என்று அழைக்க, சுரேந்தரின் அல்லக்கைகளுக்கு விஷயம் போனது.

ஹீரோவுக்கு ஏதோ கோபம் போல என்றவாறு செய்திகள் போக.. சுரேந்தர் அவனை தன் இடத்துக்கு அழைத்தார். “என்ன தம்பி சாப்பிடலையாமே?

“அப்படியெல்லாம் இல்லை சார்.. பசிக்கலை அத்தோட டயட் வேற” என்றான் சுரத்தேயில்லாமல்.

“உனக்கு ஷாட் வைக்கலைன்னு கோபமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..”

சுரேந்தர் ஒரு கணம் யோசித்தார். ”சரி நீங்க போங்க” என்று ராமை அனுப்பி வைத்துவிட்டு, அல்லக்கைகளை அழைத்து ”டைரக்டரை கூப்பிடு” என்றார்.

அவர்கள் வந்து அழைத்த போது ஸ்ரீதர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “சாப்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, பொறுமையாய் சாப்பிட்டு முடித்து ஒரு தம் அடித்துவிட்டு, கடலைமிட்டாயை மென்றபடி வந்தான். 

கூப்பிட்டவுடன் வராமல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வருவதை சுரேந்தர் விரும்பவில்லை. 

“என்ன டைரக்டர்.. ஒரே நாள்ல கெத்து காட்ட ஆரம்பிச்சிட்டீங்க?”

“சார்.. நான் என்ன சார் பண்ணேன்?”

“கூப்டா ஒடனே வர மாட்டீங்களோ?”

ஸ்ரீதருக்கு சுர்ரென கோபம் வந்தது. சட்டென அடக்கிக் கொண்டான். அசட்டுத்தனமாய் சிரித்தபடி “சாரோட ப்ரொடக்‌ஷன்ல சிக்கனும் மட்டனுமா போட்டீங்களா? அதான் கொஞ்சம் ருசிச்சு சாப்டு வந்தேன்” என்று சொன்னதும் சுரேந்தர் முகம் முழுவதுமாய் சிரித்து “சரி ஏன் ராமுக்கு ஷாட் வைக்கலை?’ என்றார்.

இந்தக் கேள்வியை ஸ்ரீதர் எதிர்பார்க்கவில்லை. “எடுக்கணும் சார்.”

“காலையிலேந்து ஒரு ஷாட்  கூட எடுக்காம இருக்கீங்கன்னா. ஏதாச்சும் பிரச்சனையா?

ஸ்ரீதர் அவரை அமைதியாய் பார்த்தான். தான் எவ்வளவோ சொல்லியும் ராமராஜின் படத்தில் நடிப்பதும், அவனுக்கு கூட சொல்லாமல் ஸ்டில் ஷூட் நடத்தி விளம்பரம் வெளியாவதை அவன் விரும்பவில்லை. “கொஞ்சம் ஆட்டிட்டியூட் சரியில்லை அதான்” என்றான்.

“நீ கூடத்தான் ஆட்டிடியூட் சரியில்லாம கூப்டா அரை மணி நேரம் கழிச்சு வர்ற.. அதுக்கு நான் என்ன பண்ண? ஷூட்டிங்கை நிறுத்திறலாமா?” என்றார்.

இந்த கேள்வியை ஸ்ரீதர் எதிர்பார்க்கவில்லை.

“நம்ம படத்துல கமிட் ஆன பிறகும் சொல்லாம கொள்ளாமல் வேற படத்துல கமிட் ஆயிருக்கான். இன்னைக்கு விளம்பரம் வந்திருக்கு ஒரு வார்த்தை சொல்ல வேணாம்? நம்ம படம் எவ்வளவு பெருசா எடுத்திட்டிருக்கோம். இந்த மாதிரி சின்ன படம் பண்ணி காலியாயிருச்சுன்னா நம்ம படத்துக்குத்தான் பாதிப்பு” என்று அவன் மேல் கோபம் வரும்படி ஏற்றி விட்டான். 

இவனை சும்மா விடக்கூடாது வேறு எவனையாவது கூட ஹீரோவாய் அறிமுகப்படுத்தலாம் என்று மனதில் முடிவெடுத்திருந்தான். 

“ஓஹோ.. அதானா உன் பிரச்சனை?” என்பது போல ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டிருந்த சுரேந்தரின் காதில் இருப்பதிலேயெ நெருக்கமான அல்லக்கை “நல்ல விஷயம் தானே.. நீங்க கை வச்ச யாரு சோடை போனதில்லை. உங்க ராசித்தான் நம்ம ஹீரோவுக்கு அடுத்த படம் கமிட்டாயிருச்சு. “ என்று அவர் ப்ரேமிக்காக பில்டப் செய்ய, சுரேந்தர் பொதுவாய் எடுத்துக் கொண்டு பெருமிதமானார். 

அதீதமாய் சிரித்தார். 

வின்செண்ட் அவர் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதரின் முகம் போனப் போக்கை பார்த்தான்.   

“ராம்” என்று சத்தமாய்  இருந்த இடத்திலிருந்தே அவனை அழைக்க, ஓரமாய் சேரில் உட்கார்ந்திருந்தவன் திடுக்கென எழுந்து என்ன என்பது போல வின்செண்டைப் பார்க்க, இங்க வா என்பது போல சைகை செய்தான். 

வின்சென்ட் அவ்வாறு ராமை தன் அனுமதியின்றி அழைத்ததை ஸ்ரீதர் விரும்பவில்லை.  ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தான். ராம் மெல்ல அருகில் வந்து நின்றான். அருகில் சேர் ஏதுமில்லை. “ப்ரொடக்‌ஷன் ரெண்டு சேர் எடுத்துட்டு வாங்க” என்றான் வின்செண்ட்.

சேர் வந்து அமர்ந்தபின் “தம்பி ரொம்ப சந்தோஷம் நம்ம படத்துல கமிட்டான ராசி உங்களூக்கு அடுத்தபடம் கிடைச்சிருக்குனு சாருக்கு ரொம்ப சந்தோஷம்’ என்றது அல்லக்கை. 

சுரேந்தர் சிரித்துக் கொண்டே “டைரக்டர் தான் கடுப்பாயிட்டாரு” என்று போட்டுக் கொடுக்க.. ஸ்ரீதர் நெளிந்தான். தன் கட்டுப்பாட்டை யூனிட்டில் இழந்துவிடுவோமோ என்று லேசாய் பயம் வந்தது. 

“உன்னை தூக்கிறலாம்னு சொல்றாரு டைரக்டர்.” என்று அவன் முகத்தையே பார்த்தார் சுரேந்தர்.

”தயாரிப்பாளர் உங்க இஷ்டம் சார்” என்றான் சட்டென்று.. அவனின் பதில் வின்செண்டுக்கு பிடித்திருந்தது. சட்டென சிரித்தான். 

அவன் சிரித்தது ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. தன் முடிவுதான் என்று ராம் சொன்னது சுரேந்தருக்கு பிடித்திருந்தது. 

“டைரக்டர் என்ன சொல்றது.. நான் சொல்லுறேன் நீதான் நம்ம படத்துக்கு ஹீரோ.. “ என்று ஸ்ரீதரைப் பார்த்து “என்ன சொல்றீங்க டைரக்டர்?” என்றார் அழுத்தமாய். 

ஸ்ரீதர் அமைதியாய் அவரின் அருகே சென்று “உங்களோட பேசணும்” என்றான். அவன் குரலில் இருந்த அமைதி சுரேந்தருக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் அடங்கித்தான் வர்றான் என்று மனதினுள் நினைத்தபடி, எழுந்து அவனை அழைத்துக் கொண்டு தனியே போனார்.

தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனுக்கு ஒன்றை நீட்டினார். தானும் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து, அவனுடயதையும் பற்ற வைத்தார். ஆழமாய் இருவரும் ஒரு பஃப் இழுத்துவிட்டு, மெல்ல புகையை விட்டார்கள். இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். 

“என்ன யோசிச்சிட்டே இருக்கீஙக் டைரக்டர்? என்னவிஷயம் சொல்லுங்க”

“சார். ராம் நம்ப படத்துக்கு வேணாம் சார். ” என்றான் ஸ்ரீதர். 

“சரி. வேணாம். அப்ப யாரு ஹீரோ..? “ 

“ரெண்டு நாள் ப்ரேக் விட்டுட்டு தேடிருவோம் சார்.”

“நீதான் ஆளைக் கொண்டு வந்த. நீதான் இவன் சூப்பரா வருவான்னு சொன்னே.. இப்ப அவன் உன்னை கேட்காம வேற படத்துல நடிக்கப் போறானு தெரிஞ்சதும் உனக்கு கோபம் வருது. கரெக்ட் வர வேண்டியதுதான். ஆனால் உன் கோபமோ, உன் ஈகோவோ என்னை அபெக்ட் பண்ணக் கூடாது. 

ரெண்டு நாள் ப்ரேக்குல ஆரம்பிச்சா. தொடர்ந்து ஆள் கிடைக்கிற வரைக்கும் நின்னுட்டேயிருக்கும். எல்லாரையும் உன் கண்ட்ரோல்ல வச்சிக்கிறத உன் கடமை. அந்த கடமைய மீறாம மெயிண்டெயின் பண்றது உன் திறமை. பட். உன் திறமையின்மையால் நான் நஷ்டப்பட முடியாது. 

நீ அவன் கிட்ட காம்ப்ரமைஸ் பண்ணுவியோ, இல்லை கால்ல விழுவியோ எனக்கு அதைப் பத்தி கவலையில்லை. நான் ஒரு வாட்டி முடிவெடுத்து அறிவிச்சிட்டேன்னா.. மாத்த மாட்டேன். இல்ல மாத்தித்தான் ஆகணும்னா.. சொல்லு மொத்த டீமையும் மாத்திர்றேன். உன்னையும் சேர்த்து. செலவு பண்ண காசு மயிராப் போச்சு” என்று தன் கடைசி ப்ஃபை இழுத்து புகையைவிட்டு, சிகரட் துண்டை தன் காலால் நசுக்கிவிட்டு, இடத்தை விட்டு நகர்ந்தார். 

ஸ்ரீதர் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 26 - https://bit.ly/2Cg0cpD

பகுதி 25 - https://bit.ly/2EuhX7A

பகுதி 24 - https://bit.ly/2NHQGhc

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close