[X] Close

தொங்கட்டான் - 30 : திருட்டு நகை ரோதனை!


thongattan-30-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 15 Oct, 2018 10:33 am
  • அ+ அ-

 - மானா பாஸ்கரன்

தன்னை கழுகுப் பொடியனுங்க தேடிட்டு வந்த தகவலைக் கேட்ட நிமிஷத்தில் இருந்து முருகேசுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. அய்யாதுரை பத்தர் கடையில் இருந்த  டாக்கர் பயலை கூப்பிட்டு, முடிகொண்டானுக்குப் போய் மேற்படி தகவலை மச்சான் பக்கிரியிடம் சொல்லிவிட்டு வருமாறு சொன்னான். தகவல் நாலா பாக்கமும் பறந்தது.

மாரி பத்தரையும் அய்யாதுரை பத்தரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தலைவர் கே.வி.டி பத்தரைப் பார்க்கச் சென்றனர்.   அவர் இன்றைக்குக் கடைக்கு வரவில்லை என்று தெரிந்தது. ‘முருகேசு நேரத்தை வளர்த்த வேண்டாம்பா. கே.வி.டி வீடு எருத்திக்காரத் தெருவில்தான் இருக்கு. நேரா அங்கேயே போயிடுவோம்’’ என்றார் மாரி பத்தர். 

அவர் சொன்னது போலவே  மூன்று  பேரும் வேகுவேகுவென்று தியாகராஜ அக்ராஹாரத்தைத்  தாண்டி,  நாகை ரஸ்தா வழியாக ஆண்டாத் தெருவை அடைந்தார்கள். அங்கே  குளோப் டைலர் கடை வாசலில் பிச்சக்கண்ணு பத்தரும்,  பூந்தோட்டம் ஜெயாராம பத்தரும்  தயாராக நின்றுகொண்டிருந்தனர்.  எல்லோரும் ஒன்றாக திரண்டு எருத்திக்காரத் தெருவுக்குச் சென்றனர். அங்கே - அந்த ஓட்டு வில்லை வீட்டுக்குள்  ஒரு  பிரம்பு சாய்வு நாற்காலியில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தார் கே.வி.டி பத்தர்.  

எல்லோரும் சரசரவென்று உள்ளே சென்றனர். வந்தவர்களை எல்லாம் ‘’வாங்க வாங்க...’’ என்று வரவேற்று  உட்காரச் சொன்னார்.  உட்கார்ந்த நொடியில்  தான் வந்திருக்கும் விஷயத்தை முருகேசு  கடகடவென ஒப்பித்தான். மற்றவர்கள் எல்லாம் முருகேசு சொல்வதை  மவுனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லா தகவல்களையும் கேட்டுக்கொண்டிருந்த கே.வி.டி,  தன் வீட்டின் முன்ஹாலில் ரேடியோ ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்த  தனது மகன் ராஜமாணிக்கத்தை அழைத்து, வந்திருக்கும் எல்லோருக்கும் காபி கொடுக்கச் சொன்னார்.  பித்தளை டபரா செட்டில் மணக்க மணக்க  காப்பி வந்தது. எல்லோரும் குடித்தார்கள்.  

முருகேசு மட்டும் குடிக்க முயற்சித்தான்... ஆனால் அவன் தொண்டையில் காப்பி இறங்க மறுத்தது. பதற்றமும் பயமும் அவனை அழுத்தியது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தது.இப்போது கே.வி.டி தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். 

’’முருகேசா  நீ சொல்ல வேண்டியத சொல்லிட்டே.  இப்ப நான் உன்கிட்டே நேரிடையாவே கேக்கறேன். நீ எளம்பு பொடியன்கிட்டேர்ந்து  நகை ஏதாச்சும் வாங்கினியா?’’ என்றார் கே.வி.டி.

மரபெஞ்சில் உட்கார்ந்திருந்த முருகேசு துள்ளிக் குதித்து எழுந்து... ‘’அண்ணே  நான் தெய்வமா நினைக்கிற பட்டற சுத்திய மேல சத்தியம் உடுறேன்... நான் அப்புடி எதுவும் வாங்கலண்ணே... இன்னும் சொல்லட்டுமா... நான் வடவாத்துலேர்ந்து  இந்தத் திருவாளூருக்கு கடை வைக்க வந்து இன்னும் வல்லிசா ஒரு வருசம் கூட ஆகலை. இன்னும் இந்த ஊருல நெறயப் பேருக்கிட்டே பழகவே இல்ல... என் மேல இப்படின்னு கழுகுப் பொடியனுங்க  தேடிட்டு வந்தது  ரொம்ப அவமானமா இருக்குண்ணே...’’ என்றான்  முருகேசு. 

அவன் அப்படி சொல்கிறபோது அவன் கண்களில் தண்ணீ முட்டிக்கொண்டு வந்து நின்றது.  வேட்டி முனையை எடுத்து கண்ணைத் துடைத்துக்கொண்டான் அவன்.

‘’முருகேசு  கவலப்படாத... நாம எல்லாரும் பொறப்பட்டுப் போயி... தென்னனைப்  பார்ப்போம். அவருக்கிட்டே நடந்ததை எல்லாம் சொல்லி, அவரையும் கூப்பிட்டுட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். நாம  தனியா போனோம்னா நம்மள  கழுகுப் பொடியனுங்க  எகிருவானுங்க.  ரொம்ப கெப்புற புடிச்சவனுங்க.  கட்சிக்காரரோட போனாக்க கொஞ்சம் தணிஞ்சு பேசுவானுங்க...’’ என்றார் கே.வி.டி.

அவர் சொல்கிற ஆலோசனையும் நல்லதாகவேப்பட்டது எல்லோருக்கும். கே.வி.டி எழுந்து தலை வழியா போடுகிற சட்டையை மாட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டார். கே.வி.டி எப்போதும் எங்கேயும் நடந்து போக மாட்டார். சைக்கிளில்தான் போவார். 

அவரது சைக்கிளின் முன்னால் வலை கூடை இருக்கும்.   அதற்குள் ஒரு மு.ரா.சன்ஸ் பை கிடக்கும். அதுதான் அவரது டிரேட் மார்க் அடையாளம். எல்லோரும் நடந்து வருகிறார்கள் என்று அவர் அவரது சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்தார்.

அவரிடம் பிச்சக்கண்ணு பத்தர் சொன்னார்: ‘’அண்ணே.. இந்த கழுகுப்  பொடியனுங்கள நெனச்சா நம்ம கம்மாளனுங்க யார் மேல வேணும்னாலும் குத்தம் சொல்லலாம். இது நமக்கு என்னைக்கும் டேஞ்சர்ண்ணே. இதுக்கு ஒரு வாவுவழி காணணும்ணே... இப்படியே போனா நம்ம சிம்லானுவோனுக்கு மதிப்பு மரியாதை இல்லாமப் போயிடும்...’’ என்றபோது, அவர் சொல்வதை ஆதரிக்கிற மாதிரி  ’’காமாராஜ நாடாரு காலத்துல இருந்த மாதிரி போலீஸெல்லாம்  இப்ப இல்ல... இப்ப உள்ளவன்லாம் கை நீட்ட ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்றார் மாரி பத்தர்.

பேசிக்கொண்டே தெற்கு வீதியில் இருந்த தி.மு.க பிரமுகர் தென்னன் வீட்டுக்கு வந்தனர். வீட்டு வாசலில் நிரந்தரமாக கீற்றுப்பந்தல் போட்டிருந்தது. வாசலிலேயே கலைஞர் கருணாநிதியும் கு.தென்னனும் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் பெரிய  போட்டோ  சட்டம் போட்டு மாட்டியிருந்தது. 

வாசலில் நின்று கொண்டிருந்த தென்னனின் மகன் கு.தெ.முத்து வந்திருக்கும் இவர்களை எல்லாம் பார்த்து... ‘’பத்தருங்கள்லாம் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கீங்க... அப்பா உள்ளே இருக்காரு. வரச் சொல்றேன்...’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். 

சற்று நேரத்துக்கெல்லாம் தோளில் போட்டிருந்த  கருப்பு - சேப்பு துண்டு தரையைத்  தொட வந்தார் தென்னன்.  வந்த வேகத்தில் எல்லோரையும் பார்த்து கையெடுத்து  கும்பிட்டு ‘’வணக்கம் வணக்கம்...வாங்க வாங்க...’’ என்றார் புன்னகையுடன்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு கே.வி.டிதான் பேச ஆரம்பித்தார்.

‘’இவரு முருகேசன். எல்லையம்மன்  சன்னதியில பட்டற வெச்சிருக்காரு. ரொம்ப நல்லப் புள்ள. யாரோட வம்பு தும்புக்கும் போவாது. தானுண்டு தன்னோட வேல உண்டுன்னு இருக்கிற ஆளு. இவரோட கடைக்கு ரெண்டு போலீஸ்காரங்க தேடிட்டு வந்திருக்காங்க... என்னமோ இவரு திருட்டு நகைய வாங்கிட்டதா பிராது. விசாரிக்கணும்னு ஸ்டெஷனுக்கு வரச் சொல்லியிருக் காங்க. புள்ளாண்டான் ரொம்ப  பேஸ்தடிச்சுப் போயிட்டாரு. அதான் உங்கக்கிட்ட விஷயத்தை சொல்லி... செய்யாத குத்தத்துக்கு என்னங்க விசாரணை வேண்டியிருக்குன்னு நீங்க வந்து கேக்கணும். 

இதுல  இன்னொரு விஷயமும் இருக்கு. போலீஸ்காரங்க நினைச்சா  நகை செய்ற எவன் மேல வேணும்னாலும் குத்தம் சொல்லி புடிச்சிட்டுப் போயிடலாம். அவங்க சம்பாரிக்க எங்க ஆளுங்கள பலி கெடாவா ஆக்கக் கூடாதுல்ல. அதான் உங்கள  கையோட கூட்டிட்டுப் போயிடலாம்னு  வந்தோம்...’’ என்றார் கே.வி.டி.

‘’அதானே விஷயம் நான் உடனே வர்றேன்... ஸ்டேஷன்ல  சிங்காரவேலுன்னு ஒருத்தர் இன்ஸ்பெக்டரா  இருக்காரு. நம்ம மன்னை  நாராயணசாமிக்கு வேண்டியப்பட்ட ஆளுதான். கவலைப்படாதீங்க... ‘’ என்று  சொல்லிக்கொண்டே அவரும் இவர்களுடன் புறப்பட்டார்.

ஸ்டேஷனுக்குள்  சென்றபோது,  தகவல்  அறிந்து  முடிகொண்டானில்  இருந்து வேர்க்க விறுவிறுக்க  வந்த  பக்கிரியும்  நின்றான்.  மச்சானைக்  கண்டதும்தான்  முருகேசுக்கு தெம்பு வந்தது.

‘’முருகேசு  மாப்ள கவலப்படாதீங்க... ‘’ என்றான் ஒசக்க  கையை  உயர்த்தி.

ஸ்டேஷனுக்குள் சரசரவெறு நுழைந்த கு.தென்னன்,  கையோடு கே.வி.டியையும் முருகேசுவை மட்டும் அழைத்துச் சென்றார். மற்றவர்கள் எல்லாம் வெளியிலேயே நின்றுகொண்டார்கள். வந்திருந்த பத்தர்கள் அனைவருக்குமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது புது அனுபவமாக இருந்தது. 

சேப்பு தொப்பி போலீஸைக் கண்டாலே ஒரு பயமும்   ஒரு மரியாதையும் இருந்த காலம் அது. சைக்கிளில் டபுள்ஸ் போனாலோ, ராத்திரியில் போகும்போது  சைக்கிளில் லைட் (டைனமோ) இல்லை என்றாலோ  போலீஸ் மடக்கிப் பிடித்து ஃபைன் போடும் காலம் அது. சைக்கிளில் லைட் இல்லை என்பதற்காக மெயின் ரோட்டில் போகாமல், இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து புறப்படுகிற ஆசாமிகள்தான்  இதோ ஸ்டேஷனுக்கு வந்திருக்கும்  இவர்கள். 

ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்துக்கொண்டு  நின்றார்கள்.  போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில்  இருந்த அசீனா ஆட்டிறைச்சிக் கடையில் இருந்து வந்த  ஆட்டாம்புழுக்கை நாற்றம் குடலைப் புடுங்கியது. முக்கை பொத்திக்கொண்டு நின்றார்கள். 

ஸ்டேஷனுக்குள் சென்றவர் மூன்று பேரையும் உட்காரச் சொன்ன இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, அரசியல் கட்சி பிரமுகரான கு.தென்னனிடம் சம்பிரதாயத்துக்காக குசலம் விசார்த்துவிட்டு... வந்த விஷயம் என்னவென்று விசாரித்தார்.

இன்ஸ்பெக்டரிடம்  தென்னன் வந்த விஷயத்தை சொன்னார்.

‘’ஆமாம்...  நம்ம கடாரங்கொண்டான்ல ஒரு வீட்டுல திருட்டு போயிட்டு. அண்டா குண்டா ஆணைக்கா குவளை வரைக்கும் விட்டு வைக்கல. சுத்தமா தொடச்சி எடுத்துட்டுப் போயிட்டானுங்க. இது நடந்து ஆறேழு மாசம் இருக்கும். முந்தா நாளு   நம்ம கல்லுப்பாலத்துக்கிட்டே ஒரு அக்யூஸ்ட் மாட்டினான். அவனை லாடம் கட்டினதுல உண்மையக் கக்கிட்டான். அந்தக்  கம்னாட்டி பயக்குட்டிதான் கடாரங்கொண்டான்ல வூடு பூந்து விளாசியிருக்கு. 

திருடுன பொருளையெல்லாம் என்னடா செஞ்சேன்னு கேட்டப்ப...  பித்தளங்கள கும்மாணம் போயி கும்பேஸ்வரன் கோயிலுக்கு பக்கத்துல உள்ள ஒரு பாத்திரக் கடையில வித்திருக்கான். நகைங்கள மாயாரம், தஞ்சாவூரு போயி வித்துருக்கான். மிச்சம் இருந்த ஒரு சங்கிலியத்தான் இங்க எல்லையம்மன் கோயில்ல உள்ள ஒரு பத்தருக்கிட்டே வித்தேன்னான்.  எந்தப் பத்தர்னு சொல்லுடான்னு கவட்டைல குத்தி கேட்டப்பத்தான் பஞ்சாப் நேஷனல் பேங்குக்கு எதிர்த்தாப்ல இருக்கிற ஒரு பத்தர் கடைய கை காட்டினான். அதான் அவரை நாங்க விசாரிக்க கூப்பிட்டோம்’’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘’சார் நான் அப்படி எந்த நகையும்  யாருக்கிட்டேயும் வாங்கலை சார். திருட்டு நகையை வாங்கி பொழைக்க வேண்டிய நெலமையில நான் இல்லீங்க...’’ என்றான்  முருகேசு.

‘’இன்ஸ்பெக்டர் சற்று தலையைத் திருப்பி... ரைட்டருக்கு பக்கத்தில் உட்கார்ந்து காது குடைந்துகொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருத்தரை சைகையிலேயே கையை காட்டி அழைத்தார்.

அவர் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்து ‘அய்யா...’ என்று  கஞ்சிப் போட்ட  பருத்தித் துணி மாதிரி விறைப்பாக நின்றார்.

‘’போயி லாக்கப்புல இருக்குல்ல  ஒரு நாயி... அதை இப்படி இழுத்தா...’’ என்றார் நாராசமாக.

அந்த கான்ஸ்டபிள் சென்ற வேகத்தில் அரைகுறை  ஆடையில், பரட்டைத் தலையுடன் இருந்த ஒருவனைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து இன்ஸ்பெக்டர் முன்னால் நிறுத்தினார்.

அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ‘’டேய் இவரை பார்த்திருக்கியா..?’’ என்றார் சத்தம்போட்டு.

‘அவன் பதில் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் சிலுப்பினான்.

பக்கத்தில் நின்ற  கான்ஸ்டபிள் அவனது  செவுளில் பொளேர் என்று ஒரு அறையை விட்டு...’’அய்யா கேட்குறாரு... தெனாவட்டா தலையை ஆட்டுற... ஒழுங்கா பதில் சொல்லுடா...’’  என்றார். அதைப் பார்த்த தென்னனுடன் வந்திருந்த கேவிடிக்கும் முருகேசுக்கும் குலை நடுங்கியது.

‘’இல்லையா... பார்த்ததில்ல...’’என்றான் அந்த ஆளு.

‘’டேய் நல்லா பார்த்துச் சொல்லு... உதை திம்பே...’’ என்றார் மறுபடியும் உரக்கக் குரலில் இன்ஸ்பெக்டர்.

‘’இல்லய்யா... நான் இவரைப் பார்த்தது இல்லீங்கய்யா...’’ என்றவனிடம் ‘’நேத்து ராத்திரி கடைத்தெரு அழைச்சிட்டு போனப்ப இந்தக் கடைதான்னு இவரு கடையத்தானே கை காட்டினே?’’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘’ம்...நான் சங்கிலி கொடுத்த கடை வாசல்ல மூங்கி பிளாச்சி கேட்டு போட்டிருந்திச்சு...’’ என்றான் அந்தத் திருடன்.

’’அந்த ஆளு சொல்ற மூங்கி பிளாச்சி கேட்டு எங்கடையிலும் இருக்குங்க... ஆனா  எல்லையம்மன்  சந்நிதித்  தெருவுல ஏகப்பட்ட கடையில மூங்கி பிளாச்சி கேட்டுதான் போட்டிருக்கும்...’’ என்றான்  முருகேசு. 

‘’டேய் இதெல்லாம் ஒரு அடையாளமாடா... நல்லா பார்த்து சொல்லுடா இவருக்கிட்டேதான் சங்கிலிய கொடுத்தியா?’’

‘’இல்ல... இவர நான் பார்த்ததே இல்லீங்க..’’ என்றான் அந்த திருடன்.

’’கான்ஸ்டபிள் இந்தப் பய கெப்புரு பிடிச்சுப் பேசுறான். அவன்கிட்டே உண்மைய வேற மாதிரிதான் வரவழைக்கணும்... அவனை உள்ளே போட்டு அடை...’’ என்று சொல்லிவிட்டு...தென்னனிடம் ‘’சார் அவன் என்னமோ குழப்புறான். நான் பார்த்துக்கிறேன். 

இவரு இல்லன்னு ஆயிட்டு... அதனால அவரை அழைச்சிட்டுப் போங்க... கவலைப் படாதீங்க..,. உங்க பேரு என்ன சொன்னீங்க... ம்... முருகேசன். முருகேசன் நான் பார்த்துக்கிறேன்... நிம்மதியா போயி வேலை பாருங்க.... ’’ என்று சொல்லி எல்லோரையும் அழைத்துக்கொண்டு தென்னன் ஸ்டேஷனில் இருந்து திரும்பினார்.

- தொங்கட்டான் அசையும்....

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close