[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் - 30 : அஷ்டமி, நவமி பாப்பீங்களா?


chinnamanasukkul-seena-perunchuvar-30

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 11:12 am
  • அ+ அ-

-நாகூர் ரூமி

ஒரு குழந்தை, ஒருநாள் தன் அம்மாவுடன்  ஒரு பார்க்குக்குப் போனது. கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு ஒரு ஆண்ட்டியிடம், ‘மணி என்ன ஆண்ட்டி?’ என்று கேட்டது. ‘மணி பதினொன்னும்மா’ என்று ஆண்ட்டி சொன்னார். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு இன்னொருவரிடம் நேரமென்ன என்று கேட்டது. ’பதினொன்னு பத்து’ என்று அவர் சொன்னார். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு இன்னொருவரிடம் நேரமென்ன என்று கேட்டது. ‘பதினொன்னு பதினஞ்சு’ என்று அவர் சொன்னார். உடனே அந்தப் பெண்குழந்தை தன் அம்மாவிடம், ‘மம்மி, ஏன் நேரம் கேட்டா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சொல்றாங்க? ஒரே நேரத்தை ஏன் யாருமே சொல்லமாட்டேங்கிறாங்க?’  என்று கேட்டதாம்!

அந்தப் பெண்குழந்தை மாதிரி  நாம் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை. காலம் ஆகிக்கொண்டிருப்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஐ மீன், காலம் போவதைப்பற்றி. ஆனால் நமக்குத்தான் நல்ல நேரம், கெட்ட நேரம், அஷ்டமி, நவமி, தசமி, பஞ்சமி என்று வகை வகையான காலக்கணிப்புகள் உள்ளனவே! ஆனால் எவ்வளவு நுட்பமாக காலத்தைக் கணித்துப் பிரித்து நாம் வைத்திருந்தாலும் எதைப்பற்றியுமே அக்கறைகொள்ளாமல்தானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

அஷ்டமி, நவமி என்றவுடன் அதுபற்றி இங்கே கொஞ்சம் சொல்லிவிடலாம் என்று கருதுகிறேன். நாம் செயலாற்றாமல் காலதாமதம் செய்வதற்குத்தான் இவ்வகையான சமஸ்கிருதச் சொற்களைப்  உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவைகளுக்குள் உள்ளது ஒரு கணிதம் மட்டுமே. 

ஒரு நாள் எனக்குத் தெரிந்த ஓர் அக்காவின் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு ஃபளாட் வாங்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக அவர் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார். என் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட் அம்பத்தூரில் உள்ளது, அவர் அதை விற்பதாக உள்ளார், போய்ப்பார்க்கலாமா என்று கேட்டேன். உடனே அந்த அக்கா, ’இன்னிக்கி அஷ்டமி, நாளக்கி நவமி, நாளை மறுநாள் போய்ப்பார்க்கலாம்’ என்று சொன்னார்.

அஷ்டமி, நவமி என்றால் என்ன? இன்று ஏன் போய்ப்பார்க்கக் கூடாது என்று கேட்டேன். ’உனக்கெல்லாம் அது புரியாது. ஆனால் எனக்கும் விளக்கம் தெரியாது, ஆனால் இந்த ரெண்டும் நல்ல நாளில்லைன்னு மட்டும் தெரியும்’ என்று கூறினார்.

’ஏன், அஷ்டமி நவமியில நீங்க சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் என்று யாரும் போறதில்லையா? ஆஸ்பத்திரி, பேங்க், ஆஃபீஸ் போவதில்லையா? எமர்ஜன்ஸி ஆபரேஷன் செய்வதில்லையா’ என்று கேட் டேன்.

அதற்கு அந்த அக்கா, ’நீ எப்போதுமே இப்படித் தான். எடக்கு மடக்காகப் பேசுவே’ என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

’இல்லக்கா, நா எனக்குத் தெரிஞ்ச விளக்கம் சொல்றேன் கேட்டுக்குங்க. ஓகேயா’ என்றேன். ’சரி சொல்லு பாக்கலாம்’ என்றார். நான் எனக்குத் தெரிந்த விளக்கத்தைக் கூறினேன்.

பூமி, சந்திரனெல்லாம் சுற்றிக்கொண்டே இருப்பதால் மாதத்திற்கு ஒரு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அமாவாசை அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டத்தான் பிரதமையிலிருந்து சதுர்த்தசிவரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர்கள் வடமொழியில் இருப்பதால் நாமும் புரியாமல் திண்டாடுகிறோம்.

உதாரணமாக பவுர்ணமி அல்லது அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை, அதாவது முதல் நாள். துவிதை என்பது இரண்டாம் நாள். ’தோ’ என்றால்  ஹிந்தியில் இரண்டு தெரியுமில்லையா?  திரிதியை மூன்றாம் நாள். ’திரி’ என்றால் மூன்று அல்லவா? இங்கிலீஷிலும் ’த்ரி’ என்றால் மூன்றுதானே! சதுர்த்தி நாளாம் நாள். சதுரம்னா நாலு பக்கம் உள்ளது, தெரியும்தானே? பஞ்சமி-ன்னா அஞ்சாம் நாள். ’பாஞ்ச்’ன்னா ’அஞ்சு’ அல்லவா? ஐந்து நதிகள் ஓடுறதுனாலதான் ஒரு மாநிலத்துக்கு ’பஞ்சாப்’-னு பெயர். ’ஆப்’ன்னா தண்ணி. பாஞ்ச் ப்ளஸ் ஆப் பஞ்சாப். புரியுதா? சஷ்டி-- ன்னா ஆறாம் நாள். சப்தமி-ன்னா ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள்னா ஏழு ஸ்வரங்கள் தெரியும்தானே? அஷ்டமின்னா எட்டாம் நாள். எட்டு கோணல்களை உடைய மஹாபாரத பாத்திரம் அஷ்டாவக்கிரன் தெரியும்தானே? சித்தர்களுடைய எட்டு வகையான அற்புதங்கள் அஷ்டமா சித்திகள், சரியா? நவமி-ன்னா ஒன்பதாம் நாள். நவகிரகங்கள்னா ஒன்பது கிரகங்கள் அல்லவா? தசமி என்றால் பத்தாம் நாள். ’தஸ்’னா பத்துதானே? பத்து அவதாரம் என்பதைத்தானே தசாவதாரம்னு சொல்றோம்? கமல் படம் ஞாபகம் வருதா? ஏகாதசி-ன்னா பதினொன்றாம் நாள். ’ஏக்’ உடன் ’தஸ்’! துவாதசி-ன்னா பன்னிரண்டாம் நாள். ’தோ’ உடன் ’தஸ்’!  திரியோதசி-ன்னா பதிமூன்றாம் நாள். ’திரி’ன்னா மூனு. ஏற்கெனவே சொன்னேன். மூன்று உடன் ’தஸ்’. அதாவது பதிமூணு. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள். சதுர் (சதுரம்) அதாவது நாலு ப்ளஸ் பத்து. சதுர்த்தசிக்கு அடுத்தது பவுர்ணமி, இல்லன்னா அமாவாசை  அக்கா. இதில எங்க அக்கா நல்ல நாள் கெட்ட நாள் இருக்குன்னு கேட்டேன். நான் சொன்ன விளக்கம் கேட்டு அக்கா ஆச்சரியப்பட்டு பாராட்டினார். தெளிவு பெற்றார் என்றே சொல்லவேண்டும்.

ஆனால் நான் இதைச் சொல்ல வந்ததற்குக் காரணம் எனக்கு அது தெரியும் என்று காட்டுவதற்கு அல்ல. எதையாவது காரணம் காட்டி காரியங்கள் ஆற்றுவதை மனிதர்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதைப்புரிந்துகொள்ளத்தான் சொன்னேன்.

’கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். அதைப்பின்பற்றுங்கள். போய்க்கொண்டே இருங்கள், அதன் முட்களைப்போல’ என்று சாம் லெவன்ஸன் என்ற அமெரிக்க எழுத்தாளர் மிக அழகாகக் கூறினார். சோம்பேறித்தனமாக ஓரிடத்தில் நின்றுவிடாமல் செயலாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்.

’கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு’ என்று சொல்வோமல்லவா? அதுபற்றி மறைந்த எங்கள் அண்ணன் கவிஞர் ஜஃபருல்லாஹ் இப்படிச் சொல்வார். ‘அப்படிச் சொல்வது தவறு. கல்லாதது உலகளவு மைனஸ் கைமண்ணளவு என்றுதானே சொல்லவேண்டும்’ என்று கேட்பார்! அவரது கணித தர்க்கம் சரிதான். போய்விட்டதை கழித்துத்தானே ஆகவேண்டும்? ஆனால் காலம் நகரவே நகராது என்பதைப்போலல்லவா நாம் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்! ஸாரி, தப்பாகச் சொல்லிவிட்டேன், செயலற்று நகராமல் நின்றுகொண்டிருக்கிறோம்!

ஜூலை 21, 1969. இது என்ன தேதி என்று நினைவிருக்கிறதா? என் பிறந்த நாள், திருமண நாளே நினைவில் இருப்பதில்லை. இதுவேறயா என்கிறீர்களா? சரிதான். நானே சொல்லிவிடுகிறேன். மனிதன் முதன் முதலாக நிலவில் காலடி எடுத்து வைத்த தேதி இது. இமாலய சாதனை என்று சொல்வோமே, அதைவிடப் பெரிது. ஏனெனில் இமயம் பூமியில் இருப்பது. இது பூமிக்கு மேலே விண் வெளியில் நிகழ்த்தப்பட்ட சாதனை. பகீரதப் பிரயத்தனம் என்றும் இதை வர்ணிக்க முடியாது. ஏன்? அது கீழ்நோக்கிய பயணம். சிவபெருமான் தலையிலிருந்து கங்கையை கீழே கொண்டுவர எடுக்கப்பட்ட மகாமுயற்சி அது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?

நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் யார்? இந்தக் கேள்விக்கு உடனே நீல் ஆம்ஸ்ட்ராங் என்று நாம் பதில் சொல்லிவிடுவோம். ஆனால் அந்தப் பெருமை ஆல்ட்ரினுக்குத்தான் போயிருக்க வேண்டும்! ஏன், எப்படி? அவர்தான் அப்போலோ என்ற அந்த விண்கலத்தின் பைலட். ஆம்ஸ்ட்ராங்க் ’கோ-பைலட்’தான்.

விண்கலம் நிலவில் தரையிறங்கியபின் முதலில் பூமியிலிருந்து வந்த உத்தரவும் பைலட் என்ற வகையில் ஆல்ட்ரினுக்குத்தான். “பைலட் ஃபர்ஸ்ட்” என்ற உத்தரவு வந்தவுடன் ஆல்ட்ரின் செயல்படவில்லை. சில விநாடிகள் தாமதித்தார். தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். அந்தக் குதிரை அச்சத்தால் செய்யப்பட்ட குதிரை! ஆமாம். நிலவின் தரை பூமியைப்போல இல்லாமல் அப்படியே உள்ளே இழுத்துக்கொள்ளுமோ? புதைகுழியாக இருக்குமோ என்றெல்லாம் சில விநாடிகள் யோசித்தார்.

ஆனால் அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று பூமியில் இருந்த உத்தரவு கொடுக்கும் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதல்லவா? எனவே, அடுத்த உத்தரவு வந்தது. “கோ பைலட் நெக்ஸ்ட்”. அவ்வளவுதான். உடனே காரியத்தில் இறங்கினார் ஆம்ஸ்ட்ராங். தன் இடதுகாலை முதலில் எடுத்து வைத்து நிலவில் இறங்கினார்! ஆமாம்! நமக்குத்தான் வலது காலை எடுத்து வைத்து நுழைவது புனிதமானது. அமெரிக்கர்கள் பாவம், அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. மன்னித்துவிடலாம். போகட்டும். மனிதன் முதன் முதலில் தன் இடது காலைத்தான் நிலவில் வைத்தான்!

ஆனால் அந்தக்கணம் உலக வரலாறு மாறியது. நிலவில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று புதிய வரலாறு பதிவானது. ”ஒரு மனிதனைப் பொறுத்தவரை இது ஒரு சின்ன அடிதான். ஆனால் மனிதகுலத்துக்கு இது ஒரு ராட்சச தாவல்” என்று அழகாக அந்நிகழ்ச்சியை வர்ணித்தார் ஆம்ஸ்ட்ராங்.

ஒரு சில விநாடிகள் தாமதித்ததால் மனிதகுலத்தின் சாதனை வரலாறு மாறிப்போனது. என்ன காரணம்? நிகழ்காலத்தில் இல்லாமல், இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என்ற கற்பனை எதிர்காலத்தில் ஆல்ட்ரின் வாழ்ந்ததால்தான். காலம் பொன்னானது என்று சொல்வார்கள். அது தவறு. பொன்தான் காலம் போன்றது. காலத்தைவிட மதிப்பு மிகுந்தது இந்த உலகில் எதுவுமே இல்லை.

நாம் நூறு ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால் நம்மிடம் இருப்பது 52,560,000 விநாடிகள்தான் (என் கணக்குப்படி)! அதில் பாதி ஆண்டுகள் நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். பாதி ஆண்டுகள் என்று சரியாகச் சொல்லிவிட முடியாது. பகலிலும்கூடத்தான் நாம் தூங்குகிறோம். கேட்டால் குட்டித்தூக்கம், பூனைத்தூக்கம் என்று அதை நாம் நியாயப்படுத்துகிறோம். எப்படிப் பார்த்தாலும் நாம் விழித்திருக்கும் காலம் ரொம்பக் குறைவு. விழித்திருக்கும்போதுகூட நாம் தூங்குகிறோம்! எப்படி என்கிறீர்களா? பூட்டைப் போட்டு ’கேட்’டைப் பூட்டிவிட்டு சரியாகப் பூட்டியிருக்கிறதா என்று பூட்டை மறுபடியும் இழுத்துப்பார்த்தால் பூட்டும் நேரத்தில் தூங்கிவிட்டோம் என்றுதானே அர்த்தம்?!

அதோடு டிவி சீரியல், அரசியல், நாட்டு நடப்பு, உலக நடப்பு என்று நாம் காலவிரயம் செய்வது அதிகம். இதையெல்லாம் கழித்தால் நாம் நமக்காக, நம் இலக்குகளுக்காக வாழும் கணங்கள் மிகமிகக்குறைவு. ஆனால் இதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. ஏதோ பல ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதைப்போலத்தான் நாம் நடந்துகொள்கிறோம், இல்லையா?

மஹாபாரதத்தில் ஒரு அழகான கதை வருகிறது. குட்டிக்கதை. அதிலும் நமக்கான செய்தி உண்டு. ஒருநாள் மஹாராஜா யுதிஷ்டிரனைப் பார்க்க ஒரு ஏழை வருகிறார். தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படி கேட்கிறார். மஹாராஜா என்று சொன்னதால் இது நடந்தது பாரதப்போருக்குப் பின் என்பதை எளிதில் யூகிக்கலாம்! நான் இப்போது வேலையாக இருக்கிறேன், நாளைக்கு வா என்று யுதிஷ்டிரன் கூறினான். அதைக்கேட்ட பீமன், ‘எல்லாரும் கேட்டுக்கொள்ளுங்கள், யுதிஷ்டிரன் நாளைவரை நிச்சயம் உயிரோடு இருக்கப்போவதாக நம்புகிறான்’ என்று உரக்கக் கூறினான். அதைக் கேட்ட யுதிஷ்டிரன், உடனே அந்த ஏழையை அழைத்து அப்போதே அவனுக்கானதைக் கொடுத்து அனுப்பினான்.

இறப்பை நினைத்து நாம் நம் காரியங்களை ஆற்றுவோமேயானால் நம்மால் நிச்சயமாக காலதாமதம் செய்யவே முடியாது என்பதை இந்தக் கதை அழகாகக் கூறுகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இறப்பை வைத்துக் காரியங்கள் ஆற்ற விரும்புவோம்?

ஆனால் அதுவே வாழ்க்கை. அதுவே இனிய வாழ்க்கைப் பயணம்!

- நிறைவுற்றது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close