[X] Close

எதிரே நம் ஏணி! 28: புலிகள் பூனையாகலாமா?


ethire-nam-yeni-tirupur-krishnan

  • திருப்பூர் கிருஷ்ணன்
  • Posted: 08 Oct, 2018 11:07 am
  • அ+ அ-

திருப்பூர் கிருஷ்ணன்

 விரும்பியதைச் செய்தல் என்ற கோட்பாட்டில் இன்று சில பெண்ணியவாதிகள் அதிரடியாக ஒரு வகைப்பட்ட பெண்ணியத்தை முன்வைக்கிறார்கள். நம் நாட்டு மண்ணுக்கு முற்றிலும் பொருந்தாத அந்தப் பெண்ணியப் போக்கு என்ன தெரியுமா?

தங்களுக்குப் பாலியல் சுதந்திரம் வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். அதாவது திருமணக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்வதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், யாரோடு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழும் பாலியல் சுதந்திரம் தங்களுக்கு வேண்டும் என்றும் அவர்கள் வித்தியாசமான ஒரு கோட்பாட்டைப் பேசுகிறார்கள்.

காலஞ்சென்ற எழுத்தாளர் அநுத்தமா இந்தக் கோட்பாட்டை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சக பெண் எழுத்தாளர்களை விட்டுக் கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. ஒரு தொலைக்காட்சியில் இந்தக் கோட்பாடு பற்றி அவரிடம் வினா எழுந்தபோது, `பெண்கள் இப்போதுதான் வாயில்படியை விட்டு வெளியே வருகிறார்கள், அப்படி வரும்போது வாயில்படி கொஞ்சம் தடுக்கிறது, அதனால்தான் இத்தகைய கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன, போகப்போக நிலைமை சீராகிவிடும்!` என்று பதில் சொன்னார் அவர்.

 கற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்றார் பாரதி. `கற்பு நிலையென்று சொல்லவந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!` என்பன பாரதி வரிகள். ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமண பந்தம் பாலியல் ஒழுங்கை வரைமுறைப்படுத்துகிறது.

 பரத்தைமை சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. திருக்குறள் பரத்தைமையை எதிர்க்கிறது. `பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்` என்று அத்தகைய உறவைக் கண்டிக்கிறார் வள்ளுவர். கம்பன் காவியம் ஏக பத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் பெருமையைப் பேசுகிறது.

 பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதும் அதை ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவானதாகக் கருதுவதுமே நம் தேசம் ஏற்கக் கூடிய பெண்ணியமாக இருக்க முடியும்.

பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அதே அளவிலான பாலியல் கட்டுப்பாடுகள் தேவை என்பதும் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழ்வதே இல்லறத்தின் சிறப்பு என்பதும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கான விதிகள். இத்தகைய அடிப்படை விதிகளைப் புறக்கணிக்கிற போது வாழ்க்கை சிக்கலாகும். தனிமனித வாழ்வு மட்டுமல்ல, சமூக வாழ்வே உருக்குலையும் நிலையும் உருவாகும்.

குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துவிட்டால் பின் மனிதனுக்கு அன்போ பாதுகாப்போ தரக்கூடிய வேறு அமைப்பு ஏதுமில்லை. குடும்பம் என்ற நாகரிகமான இந்த அமைப்பு, பலப்பல நூற்றாண்டுகள் மனிதன் வாழ்ந்து பார்த்துக் கண்டுபிடித்துக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. இதை உருக்குலைப்பது சுலபம். ஆனால் பின்னர் இன்றுள்ளது போல இந்த அரிய அமைப்பை நிர்மாணிப்பது கடினம்.

பணிவாழ்வில் முன்னேறுவதும் பொருளாதார உயர்வடைவதும் ஆண் பெண் இருவருக்கும் தேவைதான். ஆனால் குடும்ப வாழ்வைத் துறந்து அடையும் முன்னேற்றம் நிம்மதியைத் தராது. முன்னேற்றம் என்ற சொல் பணம், பதவி இரண்டை மட்டுமே முன்னிறுத்தியதாகப் பார்க்கப்படும் தவறான கண்ணோட்டம், நம் வாழ்வில் சிக்கல்களைத் தான் உருவாக்கும்.

மன நிம்மதியோடும் உடல் ஆரோக்கியத்தோடும் வாழும் வாழ்வே நாம் அடையவேண்டிய அதிகபட்ச எல்லை. அவற்றை விடுத்து நாம் அடையும் எந்த உயர்வும் உண்மையான உயர்வல்ல. 

இல்லற வாழ்வில் குழந்தைகளுக்கு எத்தகைய உரிமையைக் கொடுப்பது, அப்படிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் முன்னேற எப்படி வழிவகுப்பது என்ற வினாவும் எழுகிறது.

வெளிதேசங்கள் பலவற்றில் பெற்றோர் குழந்தையைச் சாதாரணமாகக் கூடக் கண்டிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பெற்றோர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஒரு குழந்தை விளையாட்டாகத் தொலைபேசியில் காவல்துறைக்குச் சொன்னால் கூடப் போதும். அந்தப் பெற்றோர் கடும் விளைவுகளை எதிர் கொள்ள நேரும். அங்குள்ள சட்டங்கள் அப்படி.

அந்தச் சட்டங்களுக்கு அங்கே நியாயங்களும் உள்ளன. நம் தேசத்தில் உள்ளதுபோல் அங்கு `பெற்றோர் குழந்தைகள் பாசம்` என்பது வாழ்நாள் வரை தொடர்ந்து இறுக்கத்தோடு வருவதல்ல. பறவை மற்றும் விலங்குகளின் பாசத்தைப் போன்ற பாசமே பல நாட்டு மக்களிடம் நிலவுகிறது. அந்தத் தற்காலிகப் பாசமும் அழுத்தமாக இல்லாமல் நீர்த்துப் போகும்போது, சொந்தப் பெற்றோரே தங்கள் குழந்தைகளை எதிரிபோல் நடத்திக் கொடுமை செய்யக்கூடிய சூழல்களும் அங்கு நேரலாம். ஆகையால் அங்குள்ள சூழல்களுக்கு ஏற்ப அங்கு சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

பறவைகளும் விலங்குகளும் தாய்மைப் பராமரிப்புத் தேவைப்படும் காலகட்டத்தில் மட்டுமே தாய்ப்பாசத்தை வழங்குகின்றன. கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ இரையெடுத்து வந்து ஊட்டுகிறது தாய்ப்பறவை. விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க மறப்பதில்லை. இந்த ஒப்பற்ற தாய்மையுணர்வை இயற்கை அனிச்சையாகவே எல்லா உயிரினங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. உயிரினங்கள் வழிவழியே தழைக்க இந்த உணர்வுதான் துணைநிற்கிறது.

ஆனால் விந்தை என்னவென்றால் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து அவை பறந்தபின்னர் அந்தத் தாய்ப்பறவைக்கும் குஞ்சுக்கும் இடையே எந்தவித பந்தமும் இருப்பதில்லை. விலங்கினத்திலும் அப்படியே. நாய்க்குட்டிகள் வளர்ந்தபின் தங்கள் தாய் நாயைச் சார்ந்து வாழ்வதில்லை. கூட்டம் கூட்டமாக வாழும் யானை போன்ற விலங்கினங்களில் கூட, குட்டியாக இருக்கும்போது தாய் விலங்கிற்கு இருக்கும் பாசம், அந்தக் குட்டி பெரிதாக வளர்ந்தபின் மறைந்துவிடுகிறது. 

ஆனால் கலாசாரத்தில் உலகுக்கே வழிகாட்டியாக விளங்கும் தகுதி படைத்த இந்தியாவில் பெற்றோர் குழந்தைகள் உறவு தற்காலிகமானதல்ல. நிரந்தரமானது. உயிரின் இறுதிநாள் வரை உடன் வரக்கூடியது. அவ்வளவு ஏன்... தாய் தந்தையர் உயிர் போன பின்னரும், திதி தர்ப்பணம் என்றெல்லாம் தொடரக் கூடிய உன்னத உறவு அது.

வெளிதேசங்களில் தந்தையர் தினம் என்றும் அன்னையர் தினம் என்றும் கொண்டாடப்படும் மரபு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதற்கான கட்டாயத் தேவையும் இருக்கிறது. ஏறக்குறையப் பதினைந்து வயதில் பெற்றோரை நிரந்தரமாகப் பிரிந்து வேறு இல்லம் சென்று தங்கள் வாழ்வைத் தங்கள் விருப்பப்படி நடத்தும் குழந்தைகள், பின்னர் வருடம் ஒருமுறை இத்தகைய தினங்களின் போதுதான் தங்கள் பெற்றோரை வந்து சந்திக்கிறார்கள்.

புலியைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொண்ட பூனையைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் பூனையைப் பார்த்து ஒரு புலி ரப்பரால் தன் கோடுகளை அழித்துக் கொண்டு பூனையாக முயல்வதுண்டா? இந்தியாவில் இப்போது அதுதான் நடக்கிறது!

அன்னையர் தினம், தந்தையர் தினம் என்ற தேவையெல்லாம் நம் கலாசாரத்தில் இல்லவே இல்லை. நாம் எல்லா நாளையும் பெற்றோர் தினங்களாகப் போற்றி, பெற்றோரோடு இணைந்து வாழும் கலாசாரப் புலிகள். ஆனால் இப்போதெல்லாம் தாய்க்கும் தந்தைக்கும் அன்னையர் தின, தந்தையர் தின வாழ்த்துக்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் குழந்தைகள்! வேடிக்கைதான் இது. என்றாலும் அந்த தின வாழ்த்துக்களைச் சொன்ன பிறகு, தங்கள் பெற்றோரை வெளிதேசத்தவர் போல் அவர்கள் கைவிட்டுவிடுவதில்லை என்பது ஓர் ஆறுதல்.

வெளிதேசங்களில் இத்தகைய தினங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் இருவரையும் ஒரே இல்லத்தில் மறுபடி வந்து சந்திக்க முடியுமா? அதற்கும் உத்தரவாதம் இல்லை. அவர்களின் தாயும் தந்தையும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து வேறு வேறு வாழ்க்கைத் துணைகளோடு வேறு வேறு இல்லங்களில் வாழத் தொடங்கியிருப்பது அங்கெல்லாம் சகஜம். 

அப்படியானால் தாயைத் தனியாகவும் தந்தையைத் தனியாகவும் தனித்தனி வீடுகளில் குழந்தைகள் சந்தித்துத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் நேரும். பல தேசங்களில் இப்படியெல்லாம் தான் பெற்றோர் தினம் கொண்டாடப் படுகிறது.

 நம் தேசத்தின் பண்பாட்டு வேர்கள் அலாதியானவை. நம் முன்னேற்றம் என்பது எப்போதும் தனியானதல்ல. கணவனும் மனைவியும் இணைந்து முன்னேறுவார்கள். குழந்தைகளோடு குடும்பமாக முன்னேறுவார்கள். அந்த முன்னேற்றத்தில் ஒருவர் லேசாய்ச் சறுக்கினாலும் அது வெளியே தெரியாது. வெளியுலகம் அவர்களைத் தனித்தனியே பார்க்காது. ஒரு குடும்பமாகத்தான் பார்க்கும். இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் என்றுதான் நம் அறிமுகங்களே அமையும்.

  இத்தகைய கலாசாரத்தால் நமக்கு மட்டுமல்ல, நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் ஒரு பெரிய நன்மை உண்டு. நம் தேசத்தில் முதியவர்களை அவரவர் குடும்பமே பராமரிக்கிறது. பாசத்தின் காரணமாக யாரும் யாரையும் விட்டுக் கொடுப்பதில்லை. தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் பாசத்தை விடக் கூடுதலான பாசம் தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே நிலவுகிறது. தந்தைக்கு மகன்மேல் உள்ளது அன்புதான். ஆனால் தாத்தாவுக்குப் பேரன் மேல் உள்ளது பேரன்பு!

அதனால் முதியவர்கள் பாசத்தோடு இல்லத்தை அலங்கரிக்கிறார்கள். பெரும்பாலான வீடுகள் முதியோரை மதிக்கும் இல்லங்களாகத்தான் இன்றளவும் திகழ்கின்றன.

வெளிதேசங்களில் முதியோரைப் பராமரித்தல் என்பது அரசாங்கத்திற்கு அதிகச் செலவினத்தை ஏற்படுத்தும் ஒரு கட்டாயக் கடமை. இந்தியாவில் அந்தப் பெரும் செலவினம் அரசுக்கு இல்லை. நம் நாட்டில் முதியோர் அரசாங்கத்தைச் சார்ந்து வாழாமல் குடும்பத்தைச் சார்ந்து வாழும் நிலை இருப்பது கொண்டாடத் தக்க ஒரு கலாசாரப் போக்கு என்கிறார் பத்திரிகையாளரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி.

இப்போதுதான் வாழ்க்கைச் சூழல், பணிவாழ்வின் தாக்கம் இவை காரணமாக முதியோர் இல்லங்கள் பெருகத் தொடங்கியுள்ளன. முதியோர் இல்லம் பெருகுவது சரியா? நம் முன்னேற்றத்தில் நேர்ந்துவரும் இன்றைய இந்தப் போக்கை நாம் என்ன விதத்தில் எதிர்கொள்வது?

  `முதியோர் இல்லம்` என்பதும் நம் கலாசாரத்தின் பெருமைக்குரிய ஒரு பிரதிபலிப்புத்தான் என்றால் வியப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் கூற்றில் உண்மை உள்ளது. அது....

 - இன்னும் ஏறுவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close