[X] Close

குருமகான் தரிசனம் 15: வரகூர் நாராயண தீர்த்த சுவாமிகள்!


guru-mahan-dharisanam-15

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 11:57 am
  • அ+ அ-

திருவை குமார்

இல்லற வாழ்க்கையில் இன்பமாக இருக்கும் போதே, திடீரென  சந்நியாச வாழ்க்கைக்கு மாறிச் சென்ற கணவனையும்… கணவனது நிலைமையானது கள்ளங்கபடமற்றது, காலச்சக்கர சுழற்சியில் கிருஷ்ணனால் இந்த வாழ்க்கை தனக்கு விதிக்கப்பட்டது… என்று மனதார ஏற்று கணவனுக்கு சந்நியாச தர்மத்தைக் கொடுத்து உதவிய பத்தினியையும் அறிந்திருக்கிறீர்களா?

வெல்லத்தூர் – இந்த சிற்றூர் அமைந்தது ஆந்திர மாநிலத்தில். இங்குதான் நம் சுவாமிகள் ஜனனமானார். ‘இளமையில் கல்’ – என்ற வாக்கினை முழுமையாக ஏற்று – வேத அத்யயனத்தை முற்றுமாகக் கற்று முடித்து வாலிப வயதை அடைந்தார்.

அடுத்தது  விவாகம். இந்த பந்தத்தில் தங்களின்  மகனை ஈடுபடுத்திவிட்டால் தங்களது கடமையும் முடியும். காலாகாலத்தில் பேரக்குழந்தைகளுடன் காலம் கடத்தலாம் என்ற பேராவலில்  மணம் முடித்து வைத்தார்கள் பெற்றவர்கள்.

சுவாமிகள் பெயர் சொல்லவில்லையே… நாராயணனே அவரது திருநாமம். மணம் முடித்த   அடுத்த நாளிலேயே சாஸ்திரம் படிக்கும் பணியை மேற்கொண்டார். இல்லறம் நல்லறமாகவே நடந்தது. ஆனால் பரந்தாமன் – தன்னுடைய ஒளியான நாராயணன் என்கிற அந்தணச் சிறுவனை இங்கு அனுப்பி வைத்த நோக்கமே வேறல்லவா?

சும்மா இருப்பானா?... பாற்கடலில் சயனித்தவாறே தனது லீலா வினோதத்தை தொடங்கினான்.

அன்றும் வழக்கம்போல் நாராயணன் சாஸ்திர நிமித்தமாக பக்கத்து கிராமத்துக்குச் சென்று வழக்கமான பாதையான சிறு நதியைக் கடக்கத் தொடங்கினான். பாதி தூரமே வந்திருப்பான். திடீரென… ஊழி கால பிரளயம் போல் நீர்ப் பிரவாகம் கிடுகிடுவென உயர்ந்து நாராயணனின் உச்சி சிகையைத் தொட்டுச் சென்றது. இன்னும் சில நிமிடத் துளிகள் தாமதித்தால் ‘ஜல சமாதி’ என்று நாராயணனுக்குப் புரிந்து போனது. எல்லாம் அறிந்தவன்தான் என்றாலும்,  அவனது நினைவுகள் புது மனைவி, பெற்றோர், உற்றார் உறவினர்கள், கல்வி, சாஸ்திரம் என்று சுழன்றடித்தது.

பரந்தாமனின் எண்ண அஸ்திரம் அவனின் மனதில் தாக்கியது. இக்கட்டான நிலைகளில் பிராமணர்கள் சந்நியாச நிலையை மேற்கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொன்னது மட்டுமல்லாமல்… ஆதிசங்கரரின் சந்நியாசப்படலமும் நினைவில் நின்றது. அன்னை ஆர்யாம்பாளுக்கு தெரியாதது போலவே நயமாகப் பேசி – சந்நியாசம் கேட்டு வாங்கிக் கொண்ட பேரொளியின் நினைவு… நிதானப்படுத்த சற்றும் தாமதியாமல் – இன்று இந்த வினாடி முதல் சந்நியாசம் பெற்றேன் என்று வாக்களித்தார்.

அடுத்த நொடியே அந்த நீர் பிரவாகம் வற்றிப்போனது.

நாராயணருக்கு சகலமும் புரிந்தது. ஆனால், கடுமையான கவலை பற்றிக் கொண்டது!. இல்லம் சென்றால் மனைவிக்கு என்ன பதில் சொல்வது? அக்னி சாட்சியாக மணம் முடித்து நடுவிலேயே இல்லறம் நழுவிச்செல்ல எனக்கு அனுமதி தா...என்பது அறமா?... தர்மமா?...

பேச்சு வர தவித்தது. நா குழறியது!... இருப்பினும் இல்லம் வந்து சேர்ந்தார். அடுத்த நொடியே ‘ஆ!’ என்ற அலறலுடன் மனைவி சப்தமிட்டாள். இவருக்கோ ஒன்றும் புரியவில்லை… ஆனால், மனைவியே அழுகையினூடே அதைத் தெரிவித்தும் விட்டாள்.

“நானென்ன தவறு செய்தேன்? ஏனிந்த காவி உடை கோலமும்… கமண்டலமும், தண்டமும்? ஆரண்யம் செல்லும் அளவு நானென்ன குறை வைத்தேன்?...”  - நாராயணர் அதிர்ந்து போனார். “என்னது? நான் காஷாயம் தரித்து கமண்டலம் ஏந்தினேனா?”

தன்னையே தான் பார்த்துக் கொண்டார். ஆனால், மனைவி சொல்வது போல் ஏதும் இல்லை.

‘என்ன ஆயிருக்கும் பகவானே?’… என்றபோது பரந்தாமனின் லீலாவிநோதம் தெரிந்து போனது. தன்னால் சொல்ல முடியாததை அவனாகவே அடையாளம் காட்டிவிட்டானோ என்னவோ?

உண்மை! மனைவியின் கண்களுக்கு அவர் சந்நியாச உடையிலேயே காட்சியளித்தார். மிகவும் கிருஷ்ண பக்தி கொண்ட மனைவி நொடிப்பொழுதில் அனைத்தும் புரிந்து கொண்டு, கணவனிடம் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்தும் கொண்டாள்.

அப்படி ஒரு உத்தரவாதம் தந்திருக்காவிட்டால் ஆற்று வெள்ளம் அவரை அடித்துப் போயிருக்கும் என்பதையும் உணர்ந்தவள்… அவரை இல்லற வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி - ஸ்ரீகிருஷ்ணரின் ஸ்தானத்தில் அவரை அமர்த்தி பூஜிக்கத் தொடங்கினாள்.

நாராயணனின் திருநாமம் சந்நியாசத்துக்குப் பிறகு நாராயண தீர்த்தர் என்றாயிற்று.

முறைப்படி ஒரு பெரியவரை அணுகியே தன்னுடைய சந்நியாச தீட்சையை பெற்றுக் கொண்டார். அந்தக் குருவே இவருக்கு குரு போதேந்திர சுவாமிகளைப் பற்றி அறிமுகம் செய்து வைத்து அவரது பாதக் கமலங்களைப் பற்றிக் கொள்ளச் சொன்னார்.

இதை ஏற்ற தீர்த்தர் பலப் புண்ணிய தலங்களை தரிசித்தபடியே திருப்பதி வந்து சேர்ந்தார். அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருந்து திருவேங்கடவனை தூர நின்று தரிசிப்பதும், கோயிலை வலம் வருவதுமாகவே இருந்து வந்தார்.  

அன்றும் அப்படியே தரிசித்துக் கொண்டிருந்தபோது திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த தட்டு நிறைய திண்பண்டங்களுடன் அவர் முன் அமர்ந்து தின்றான்… தின்றான்… தின்றபடியே இருந்தான். தட்டில் திண்பண்டங்கள் தீர்ந்தன. மீண்டும் அதை நிரப்பி வந்தான். தின்றான்… தின்றான்… மீண்டும் மீண்டும் இது நிகழவே தீர்த்தர் பார்த்தார். “அப்பனே! உன் வயிறு வலித்துவிடுமே! அந்த வலியைத் தாங்க மாட்டாயே!” என்றார்.

அதற்கு அச்சிறுவனோ “ஆமாம்! உண்மைதான். சரி! என்னை உனக்கு நினைவில் கொள்ள முடியவில்லையா?” என்றான். கூடவே “நான்தான் கோவிந்தன். உன் கூடவே கல்வி கற்றவன்…” என்றான். விதிர்த்துப்போன நாராயணர்,  ‘ ஏனப்பா கல்வி காலம் முடிந்து பல வருடமாகிவிட்டன. இன்னுமா நீ வளராமல் இருக்கிறாய்?’என்றார்.

“ஆம்! என்ற சிறுவனிடம் மீண்டும் கேட்டார். உன் வயிறு வலிக்காதா?”…

அடுத்த நொடி அந்த வலி அவரைப் பிடித்து புரட்டிப் போட்டது. துடித்துப் போனார். தூர நின்ற அச்சிறுவன் அவரருகே வந்து, “ இரு, நான் அதைப் போக்குகிறேன்” … என்று அவரது வயிற்றில் கை வைக்கும் முன்பாகவே தனது ஞான திருஷ்டியில் வந்திருப்பவன் சாட்சாத் கிருஷ்ணனே”… என்று உணர்ந்து, “ வேண்டாமே! வலி அப்படியே இருந்து விடட்டும். உன் மலர்க் கரங்களை எனது சிரசில் வைத்துவிடேன்!” … என்றார்.

அதன் படியே தன் வலக்கரத்தை அவரின் சிரசில் வைத்தான். அந்தக் கணமே மாயமாகிப் போனான். புளகாங்கிதமாகிப்போன அப்புனிதர் யாத்திரையை வயிற்றுவலியுடனே தொடங்கினார்.

குரு தரிசனம் வேண்டுமே? போதேந்திரரை சந்திக்க வேண்டாமோ?... என்ற பரிதவிப்பில் நடந்தார்… நடந்தார்… நடந்தார். அந்த நாராயணனோ அதற்கு முன்பாகவே குரு போதேந்திராளை தன் வசமாக்கிக் கொண்டுவிட்டான்.

ஆம்! அவர் காலம் முடிந்து போயிருந்தது. குருவின் அதிஷ்டானம் அமைந்த கோவிந்தபுரத்திலேயே ஒருசில மாதங்கள் தங்கி பகவத் கைங்கர்யம் செய்துவிட்டு தினமும் குருவின் சமாதிக்கு அருகிலேயே படுக்கவும் செய்தார். ஏன் தெரியுமோ?

இரவு நெருங்க… நெருங்க குரு போதேந்திராள் ராம நாமா ஜபம் ஒலிக்கத் துவங்கும். அதை செவியுற்ற சிஷ்யனாக… பக்தி மார்க்கத்தின் மகத்துவம் உணர்ந்து கொண்டு மீண்டும் பூரணனாக தனது பயணம் துவங்கினார்.

தற்போது வந்து சேர்ந்த இடம் திருவையாறு எனப்படும் பஞ்சநதக்ஷேத்ரம். இங்கேயே தங்கிவிட முடிவு செய்தவர் ஒருநாள் காவிரி நதிதீர க்ஷேத்திரங்களை தரிசிக்கும் பொருட்டு கிளம்பினார். வழியில், திருக்கண்டியூர் தலத்திலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் இடைப்பட்ட வேளையில் – அந்த வயிற்றுவலி அவரை வாட்டி வதைக்கவே, விநாயகர் ஆலயம் ஒன்றில் இளைப்பாறினார். அடுத்தநொடியே அசதியில் உறங்கிப் போனார்.

உறக்கம் தந்திட்ட அந்த உத்தகோபாலன் வலிக்கு தீர்வும் கூட கனவிலே பகிர்ந்தான். “நீ உறங்கி எழுந்ததும் முதலில் எவர் முகத்தில் முழிக்கிறாயோ… அதன்பின் போ!… உன் வலி உன் முன்னேயே போய்விடும்”…

உதயகாலத்தில் விழித்தெழுந்த அந்த உத்தமோத்தருக்கு – முதல் தரிசனம் ஒரு பன்றியினுடையது. தயங்காமல் அதன் பின் நடந்தார். காரணம் அவர் எங்கு அமர்ந்திருந்தாரோ அந்த கோயிலின் பிள்ளையாரே அவருக்கு அதை உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

பன்றியைத்தொடர்ந்து போக… அது மெதுமெதுவாக  அசுர வேகமெடுத்தது. காடு, மேடு, வயல், வரப்பு, வாய்க்கால் என்றெல்லாம் இழுத்துச் சென்று இறுதியில் ஒரு வெங்கடேசப்பெருமாளின் திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் சென்று மறைந்துபோனது.

திடுக்கிட்டார் தீர்த்த நாராயணர். “ இனி என்ன செய்வது?” - யோசிக்கும் முன்பாகவே அசரீரி ஒலித்தது. “இதே உன் இருப்பிடம். இனி உன் வலி இருக்காது. பக்தி மார்க்கமே உன் வாழ்க்கை”…

அந்தத் தலமே இப்போது வரகூர் என்றழைக்கப்படுகிறது. அதனிருந்து சற்று தொலைவில் உள்ள திருப்பூந்துருத்தி என்ற தலத்திலேயே தனது கிருஷ்ண பக்தியை நிலைநாட்டி வந்த மகான் அந்த ஊரிலேயே ஜீவன் முக்தி ஆனார்.

குருவாயூரப்பனுக்கு ‘நாராயணீயம்”  எவ்வளவு முக்கியமோ இங்கு ‘கிருஷ்ணலீலா தரங்கிணி’ – மிக பிரபலம். தரங்கிணி என்பது ஒரு நதியின் பெயர்.  ஸ்ரீகிருஷ்ணனின் பாலலீலைகள் முழுவதையும் இந்தக் காவியத்தில் அழகு நயம்பட வடிவமைத்து தந்துள்ளார் நாராயண தீர்த்தர்.

நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்ட ஶ்ரீநாராயணீயத்தை அந்த குருவாயூரப்பனே அங்கீகரித்தது போல, ஸ்ரீரீநாராயண தீர்த்தரின் ‘ஶ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணியை’ வரகூர் வெங்கடேச பெருமாளே அங்கீகரித்ததுடன் மட்டுமல்லாமல் தரங்கிணி இசைக்கப்படும்போது தனது கால் சலங்கைகளை ஆட்டி நடனமாடுவாராம். அந்த சலங்கை சப்தத்தை பலரும் கேட்டு அனுபவித்திருக்கிறார்கள்.

கிருஷ்ணலீலா தரங்கிணி ஏதோ சாமானியமான நூலாக இயற்றப்படவில்லை.  12 – தரங்கங்களையும், 153 – கீர்த்தனங்களையும், 302 – ஸ்லோகங்களையும், 31 – சூர்ணிகைகளையும் … கொண்டு தொடுக்கப்பட்ட நவரத்ன ஹாரம் அது!

நமது சுவாமிகளின் இயற்பெயர் கோவிந்த சாஸ்த்ருலு. ‘தள்ளவஜ்ஹுல’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த மகான் 1650-ம் ஆண்டில் தோன்றி 1745-ல் சமாதி நிலை அடைந்தார்.

இன்றும் அவர் குடிகொண்டிருக்கும் வரகூர் திருப்பூந்துருத்தி கிராமத்தில் கிருஷ்ணபக்தி, நதியின் அலைபோல்  ததும்பிக்கொண்டே இருக்கிறது.

- தரிசனம் தொடரும்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close