[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 29 : ரோலக்ஸ் மனசு


chinnamanasukkul-seena-perunchuvar-29

  • நாகூர் ரூமி
  • Posted: 06 Oct, 2018 10:19 am
  • அ+ அ-

நாகூர் ரூமி

என் உறவினர் ஒருவரின் மகளின் திருமண விழாவில் அவர் தன் மருமகனுக்குக் கொடுத்த அன்பளிப்புகளில் ஒன்று ரோலக்ஸ் வாட்ச். மணமகன் வீட்டாரும்  பதிலுக்கு மணமகளுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தனர். ரோலக்ஸ்கள் கைமாறின. கேமராக்கள் பளிச்சிட்டன. புன்னகைகள் பரிமாறப்பட்டன. இனிதே திருமணம் நடந்தேறியது.

சரி, இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொள்ளுதல், பரிசளித்தல், மாண்டி ப்ளாங்க் பேனா குத்திக்கொள்ளுதல், பரிசளித்தல், இப்படி ரொம்ப ரொம்ப காஸ்ட்லி பொருள்களையெல்லாம் வாங்குதல் அல்லது பரிசளித்தல் ஒருவித மனநிலையின் வெளிப்பாடு. அது சரியான மனநிலையா தவறானதா என்பது விவாதத்துக்குரிய விஷயம். அந்த மனநிலை சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஆனால் ரோலக்ஸ் மனநிலை என்பது செல்வ மனநிலை என்று இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ரோலக்ஸ் மனநிலை இரண்டு விதமானது. ஒன்று செல்வத்தை அள்ளும். இன்னொன்று வறுமையை எள்ளும். முன்னது சரியானது. பின்னது மிகமிகத் தவறானது. ஏனெனில் யாரை கீழாக எண்ணி அந்த ரோலக்ஸ் மனநிலை எள்ளுகிறதோ அதே நிலைக்கு, அல்லது அதைவிட மோசமான நிலைக்கு அந்த எண்ணம் அவர்களைத் தள்ளிவிடும்.

இது நான் கொடுக்கும் சாபமல்ல. இதுஒரு விதி. பிரபஞ்ச விதி. நல்லதைத் தக்கவைத்துக் கொள்ளவும், தீயதைத் தடுத்துக்கொள்ளவும் இந்த விதிகளை ஒருவர் பயன்படுத்தியே ஆகவேண்டும். அலட்சியப்படுத்த முடியாது. அலட்சியப்படுத்தினால் அதள பாதாளத்துக்குப் போய்விடுவார்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருவர் ரோலக்ஸ் வாட்ச் கட்டியிருக்கிறார். இன்னொருவர் எச்.எம்.டி வாட்ச் கட்டியிருக்கிறார். இருவரும் ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்து பிரயாணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ரோலக்ஸ் வாட்ச்சின் விலை பல லட்சங்கள். என் உறவினர் வீட்டில் கொடுக்கப்பட்ட வாட்ச்சின் விலை முப்பது லட்சம். ஆனால் எச்.எம்.டி வாட்ச்சின் விலை சில ஆயிரங்கள்தான்.

இப்போது எச்.எம்.டி வாட்ச் கட்டியிருப்பவரைப் பார்க்கும் ரோலக்ஸ் மனநிலை எப்படி இருக்கும்? ‘ம்ஹும், பிச்சக்காரப்பய, எச்.எம்.டி கட்டியிருக்கான். நான் ரோலக்ஸாக்கும்’ என்று நினைத்தால் விரைவிலேயே அவன் பிச்சைக்காரனாகப் போகிறான் என்று அர்த்தம்! ஏன்? அது வறுமை மனநிலையின் வெளிப்பாடு. ரோலக்ஸ் வாட்ச்சும் எச்.எம்.டி வாட்ச்சும் ஒரே நேரம்தான் காட்டும் என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை! விலை மிக அதிகம் என்பதற்காக நேரத்தையும் கூட்டிக்காட்டுமா என்ன? அப்படிக் காட்டினால் அதைத் தூக்கி சாக்கடையில் எறிந்து விடுவார்கள்!

ஒரு மனிதனின் மதிப்பு அவன் பயன்படுத்தும் பொருள்களில் இல்லை. ஏன், எந்தப் பொருளிலிலுமே இல்லை. மனிதனின் மதிப்பு மனிதனுக்குள் இருக்கிறது. அவன் மனிதனாகப் பிறந்திருக்கிறானே, அதிலேயே இருக்கிறது. இந்த உலகில் என் பிரதிநிதியைப் படைத்திருக்கிறேன் என்று இறைவன் சொல்வதாக திருக்குர்’ஆன் கூறுகிறது (02:30). ஆமாம். எல்லா மனிதனும் இறைவனின் பிரதிநிதி! அப்படியானால் எப்படி யோசிக்க வேண்டும்? ராஜா மாதிரி யோசிக்க வேண்டும். அதுதான் ரகசியம்.

அதேபோல, எச்.எம்.டி வாட்ச் கட்டியிருப்பவன் ரோலக்ஸ் வாட்ச் கட்டியிருப்பவனைப் பார்த்து வியந்தாலும் அது தவறான மனநிலைதான். அவனுக்கும் வறுமை மனநிலை இருக்கிறது என்று அர்த்தம். அந்த எச்.எம்.டியைத் தாண்டி அவனால் போகவே முடியாது. எச்.எம்.டியை இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்தக் காரணமும் இல்லாமல் எந்த அளவுக்கு வசதி படைத்தவர்களை நாம் வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு நம் மனதுக்குள் வறுமை மனநிலை ஏறிவிட்டதென்று அர்த்தம். இதை scarcity mindset என்று உளவியலாளர் மிகச்சரியாகக் கூறுகின்றனர். அடுத்தவர் பெறும் வெற்றியைக் கண்டு மனம் புழுங்கினாலும் இதே மனநிலையில் இருப்பதாகத்தான் அர்த்தம்!

அதற்கு பதிலாக நாம் செல்வமனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது abundance mindset என்று கூறப்படுகிறது.

அதைத்தான் நான் ரோலக்ஸ் மனநிலை என்று கூறுகிறேன்.

தான் மட்டும் வெற்றியோடும் வளத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் எல்லாருக்கும் அவ்வித சூழ்நிலையை உருவா(க்)க வேண்டும் என்று சரியான ரோலக்ஸ் மனநிலை நினைக்கும். அடுத்த மனிதரோடு நல்லுறவு வைத்துக்கொள்ள உங்களால் முடிந்தால், உங்களால் எல்லாரோடும் இனிமையாகப் பழக முடிந்தால் உங்களுக்கு சரியான ரோலக்ஸ் மனநிலை உள்ளது என்று அர்த்தம்.

தொழில் என்றாலே சேவை என்றுதான் அர்த்தம். பணம் தானாகவே உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்று My Life and Work என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் கூறுகிறார் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஹென்றி ஃபோர்டு. உங்களது லாபத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கள் தவறான ரோலக்ஸ் மனநிலையில் உள்ளீர்கள். பணம் என்பது ரத்தம் மாதிரி. அது ஓரிடத்தில் தேங்கி நிற்கக்கூடாது. அப்படி நின்றால் நீங்கள் செத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அது ஓடிக்கொண்டே இருந்தால்தான் நீங்கள் உயிரோடு இருப்பதாக அர்த்தம் என்று அழகாகவும் ஆழமாகவும் சொன்னார் ஓஷோ.

கொடுத்துக்கொண்டே இருந்தவர்கள்தான் உடல் விட்டுச் சென்ற பின்னும் நினைவுகொள்ளப்பட்டுக்கொண்டே, அதாவது உயிர்  வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். வள்ளல்கள் கர்ணன், சீதக்காதி, அப்துல் ஹகீம், அழகப்பச் செட்டியார், ராணி ராசமணி, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, காட் ஸ்டீவன்ஸ் ஆக இருந்த யூசுஃப் இஸ்லாம், பாகிஸ்தானில் ஏழைகளுக்காக முதன் முதலாக கான்ஸர் மருத்துவமனை நிறுவிய முன்னாள் கிரிக்கட் வீரர், தற்போதைய பிரதமர் இம்ரான் கான் – இப்படி சமுதாயத்துக்கு ஏதாவது செய்துகொண்டே இருந்தவர்கள்தான் எப்போதுமே இருப்பவர்கள். அவர்கள்தான் உண்மையான செல்வந்தர்கள். 

பணத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் அறிவை, உங்கள் சேவையை, உங்கள் ஆறுதலை, உங்கள் திறமையை – இப்படி உங்களால் கொடுக்க முடிந்த எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுப்பவர்களே கொடுத்து வைத்தவர்கள். கொடுப்பவர்களே பெற்றுக்கொள்வார்கள். அதுதான் சரியான ரோலக்ஸ் மனநிலை.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்.

என்று திருவள்ளுவரும் இத்தகைய மனநிலை பற்றியே பேசுகிறார். கொடுத்து உதவும் பண்பில் இன்பம் துய்க்க முடியாதவன் கோடிகோடியாக செல்வம் சேர்த்திருந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை என்று அடித்துக் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசிப்பது வறுமை மனநிலை. என்னால் எதையெல்லாம் கொடுக்க முடியும் என்று யோசிப்பது ரோலக்ஸ் மனநிலை. என் வாழ்க்கையை, எனக்கான சூழலை நானே உருவாக்குகிறேன் என்று அந்த மனநிலை நினைக்கும். ஆனால் வறுமை மனநிலையோ தன்னை சூழ்நிலையின் கைதியாக உணரும்.

மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று சிலரைக் கேட்டுப் பாருங்கள் ‘ஒரு கோடியா’ என்று மூக்கில் விரலை வைப்பவர்கள் வறுமை மனநிலை  கொண்டவர்கள். ஒருகோடியா என்று சாதாரணமாக, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கேட்பவர்கள் ஏற்கனவே கோடீஸ்வரராக இருப்பவர்கள் அல்லது வருங்கால கோடீஸ்வரர்கள்! ரோலக்ஸ் மனநிலையாளர்கள் பெரிது பெரிதாக யோசிப்பவர்கள். வறுமை மனநிலை கொண்டவர்கள் நிறையை பணம் வந்தால்கூட அதைத் தாங்க முடியாதவர்கள். அவர்களாள் பெரிதாக எதையும் கற்பனை செய்யக்கூட முடியாது.

ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. பாப் ப்ராக்டர் என்று ஒரு அமெரிக்க எழுத்தாளர் இருந்தார். The Secret என்ற திரைப்படத்திலும் புத்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கர். அவர் மாதம் 4000 டாலர் சம்பளத்துக்கு தீயணைப்புத் துறையில் பாதுகாப்பாக வேலை பார்த்து வந்தார். ஆனால் ‘மனம் தரும் பணம்’ என்ற நூலின் ஆங்கில மூலநூலைப் படித்துவிட்டு பத்தாண்டுகளில் 25,000 டாலர்கள் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, வேலையை விட்டார்!  பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருந்த நிரந்தர வேலை! எந்த மடையனாவது இப்படிச் செய்வானா என்று தோழர்கள், தெரிந்தவர்களெல்லாம் நினைத்தனர். கிண்டலடித்தனர். ஆனால் பாப் ப்ராக்டர் அந்த ’ரிஸ்க்’கைத் தெரிந்தே எடுத்தார். என்னானது? சொந்தக் கம்பனி ஒன்றைத் தொடங்கினார். ஒரே ஆண்டில் 1,25,000 டாலர்கள் சம்பாதித்தார்!

வாழ்க்கை என்பது ஒரு தடை தாண்டும் போட்டி. தடைகளையெல்லாம் வாய்ப்பாகவே பார்ப்பார்கள் ரோலக்ஸ் மனநிலையாளர்கள். ஆனால் அவைகளைத் தடைகளாகவே பார்ப்பார்கள் பின்னவர்கள். பிரச்சனைகளைவிட தன்னையே பெரியாத நினைப்பார்கள் முன்னவர்கள். பிரச்சனைகளை பெரிதாக நினைப்பார்கள் பின்னவர்கள். முன்னவர்கள் பணத்தை தங்களுக்காக வேலைசெய்ய வைப்பார்கள். பின்னவர்களோ பணத்துக்காக வேலை செய்வார்கள்!

மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இன்னொன்று உண்டு. அதுதான் நேரம். நாளைக்கே கோடீஸ்வரனாக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. எல்லாவற்றுக்கும் உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

ரோலக்ஸ் மனநிலையாளர்கள் சராசரியாக ஒரு மாதத்துக்கு இருபது அல்லது முப்பது மணி நேரம் தங்கள் வருமானத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றும் வறுமை மனநிலை கொண்டவர்கள் இரண்டு மூன்று மணி நேரத்துக்கு மேல் சிந்திப்பதில்லை என்றும் ஒரு கணக்கு கூறுகிறது. இங்கே முக்கியம் எத்தனை மணி நேரம் என்பதல்ல. பணத்தட்டுப்பாடு ஏற்படும்போதெல்லாம், ‘அடடா, நாம் மட்டும் ஒரு கோடீஸ்வரனாக இருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காதே’ என்று நினைப்பதல்ல. வருமானம் பெருகவெண்டும் என்ற தொடர்ந்த, தீவிரமான சிந்தனை, கற்பனை வேண்டும். அதைத்தான் இந்த கணக்கு உணர்த்துகிறது.

இன்னொரு மிகமுக்கியமான விஷயம் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல். ரோலக்ஸ் மனநிலையாளர்கள் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர்கள். அவர்கள் தொலைக்காட்சிக்கு முன்னால்  சோஃபாவில் போடப்பட்ட உருளைக்கிழங்குகளைப்போல அமர்ந்துவிடுவதில்லை. டிவி பார்ப்பதே ஒரு பாவமான காரியம் என்று சொல்லவரவில்லை. ஆனால் நாமெல்லாம் செய்வதைப்போல சீரியல் பார்க்காத நேரங்களில் மற்ற வேலைகளைப் பார்ப்பதைப்போல ரோலக்ஸ் மனநிலையாளர்கள் செய்வதில்லை. அவசியமானால் அவர்கள் டிவியும் பார்ப்பார்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்னால் நடிகை ராதிகா  உருவாக்கிய ’சித்தி’ என்ற சீரியல் தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் தூள் கிளப்பிக்கொண்டிருந்தது. வழக்கம்போல சில ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக ஓடிய அந்த சீரியலின் நாயகியான ராதிகாவை ஒரு பத்திரிக்கை பேட்டி கண்டது. ’சித்தி’ சீரியலில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் சீரியல் பார்ப்பதில்லை’ என்பதுதான்!

செருப்படி என்பது அதுதான். அது நமக்கான செய்தி. வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாதவர்கள், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகிறோம் என்ற நினைப்பில் இருப்பவர்களுக்கான செய்தி அது! இப்படி வாழ்க்கை என்பதே டிவி பார்த்ததுபோக மீதி உள்ள நேரம்தான் என்று இருப்பவர்கள் என்ன மனநிலைகொண்டவர்கள் என்று நினைக்கிறீர்கள்?

டிவி மட்டுமல்ல, முகநூல், வாட்ஸப், இன்ஸ்டாக்ராம் போன்ற அவசியமான சனியன்களையும் நாம் கவனமாகவும் குறைவான நேரத்துக்கும்தான் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதே ரோலக்ஸ் மனநிலையாளர்களாகவே நாம் தொடர உதவும்.

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்...

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close