[X] Close

தொங்கட்டான் 29 : சைக்கிளில் வந்த சிவப்பு தொப்பி போலீஸ்காரர்கள்!


thongattan-29-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 02 Oct, 2018 10:57 am
  • அ+ அ-

மானா பாஸ்கரன்

குருநாதர் முருகவேல் பத்தர் வந்து பக்கத்தில் வந்து நிற்பதையே கவனிக்காமல் ... நெருப்போட்டில்  பவுனை  உருக்கிக்கொண்டே  சிவராமனிடம் ’’டேய்  செவராமா... பறக்காவெட்டின்னா என்னடா?’’ என்றான் பாலுச்சாமி. அவன் அப்படிக் கேட்டதற்கு சிவராமன்  பதிலேதும் சொல்லாமல் குருநாதரைப் பார்த்து சிரித்து வைத்தான்.

‘’ம்.. பறக்காவெட்டின்னு உன்ன யார்டா அப்டி சொன்னது?’’ என்றார் குருநாதர்.

அப்போதுதான்  குருநாதர் வந்ததைக் கவனித்த பாலுச்சாமி நாக்கைக் கடித்துக்கொண்டு... ‘’ம்... அண்ணே... வாள் கம்பி வாங்கப் போனேன்ல. அங்க செட்டியார்தான் என்னைப் பாத்து பறக்கா வெட்டின்னாரு...’’ என்றான்.

‘’எப்பப் பாத்தாலும் எல்லாத்தையும் அவசர அவசரமா செய்ற பயலுக்குத்தான் அப்டி பேரு. சரியாத்தான் சொல்லியிருக்காரு செட்டியாரு. நீ  சாப்பிடறப்ப பாரேன்... அவசர அவசரமா... எங்கேயோ பார்த்துக்கிட்டு சோத்த தூக்கி தூக்கி வாய்ல விட்டெறிறே... ’’ என்றார்.

அதைக் கேட்டு சிவராமன் குலுங்கி குலுங்கிச் சிரித்தான். பத்தர் அப்படிச் சொன்னதும் பாலுச்சாமிக்கு வெட்கம் கொடலை புடுங்கித் தின்றது. எதுவும் பேசாமல்   ஊதுகுழாயை ஒரு கையிலும் ரெக்கிரோட்டை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு... உஃப்  உஃப்  உஃப் என்று நெருப்பை ஊதி பவுனை  உருக்கினான்.  

குகைக்குள் பவுன்  உருகும் தருவாயில் இருந்தது. நன்றாக கடகடவென  பவுன் உருகுவதற்காக    நமச்சாரக் கட்டியை சிறிது உடைத்து  கொஞ்சம் தூளாக்கி, நெருப்போட்டுக்குள்  இருந்த குகைக்குள் போட்டான்.  இப்போது நெருப்பு ஜுவாலையின் நிறம் நீலமானது. நமச்சார நெடி  பட்டறை முழுதும் எழுந்து பரவியது.  நெருப்போட்டில் இருந்து  நெருப்பு மாதிரியே இருந்த குகையை வெளியே எடுத்து... தயாராக வைத்திருந்த கட்டி விடுகிற கல்லில்  குகையைச் சாய்த்தான்.  அதில் இருந்த  மண்ணெண்ணெயில்   உருகிய பவுன்  நீண்டு  ஓடியது. அதன் மீது நெல் உமியை எடுத்து தூவி... ரெக்கிரோட்டால் பவுன் கட்டியை எடுத்து தண்ணீரில் நனைத்தான் பாலுச்சாமி.  தண்ணீரில்  பவுன் கட்டி நனைந்தபோது  ச்சுர்... என்ற சத்தம் காதை நிறைத்தது. 

  உருக்கி எடுத்த பவுன் கட்டியை எடுத்து பட்டறையில் வைத்து சதுரிக்க ஆரம்பித்த பாலுச்சாமியின் தலையில் தட்டினான் சிவராமன்.

‘’டேய் தாய்க்கு தலைப்புள்ளய தலையில தட்டக்கூடாதுன்னு தெரியாதா  ஒனக்கு?’’ என்றான் மெல்லிய கோபத்தோடு.  

'’அப்டீன்னா எங்கே தட்டலாம்னு  நீயே சொல்லுடா ராசா..?’’என்றான் கிருத்துருவமாக சிவராமன்.

‘’டேய்... எனக்கு முந்தியே பத்தருக்கிட்டே வேல கத்துக்க வந்துட்டேங்கிற கெப்புருடா ஒனக்கு.’’ என்றான் அவனைப் பார்த்து பாலுச்சாமி.

‘’என்னங்கடா அங்க சத்தம்...’’ என்று முருகவேல் பத்தர் ஒரு அதட்டல் போட அவனவனும் வாலை சுருட்டிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தார்கள்.

&&&& &&&&&

ரு  நகை செய்கிறபோது... அதை ஒரே  அச்சியில் பதிந்து செய்துவிட முடியாது. அதில் நிறைய வழிமுறைகள் இருக்கிற  தொழில் சூட்சுமம் எல்லாம்  ஒவ்வொன்றாக ப் புரிய ஆரம்பித்தது பாலுச்சாமிக்கு.  தன்னிடம் வேலை கற்றுக்கொள்ள வந்திருக்கும் பட்டறக்குடத்தானுக்கு  கிளிப்பிள்ளைக்கு சொல்லுவது போல சொல்லிக் கொடுப்பார் முருகவேல் பத்தர். 

ஒரு நகை ஒவ்வொரு பகுதி பகுதியாகத்தான் செய்ய முடியும்.  தங்க நகை செய்கிறபோது  ஒவ்வொரு பகுதியையும் இணைத்து இணைத்து முழு நகையாக உருவாக்க, அதில் பொடி வைத்து ஊதுவார்கள். அந்த பொடியில்  சில வகைகள் இருப்பதும், அதன் தன்மைகள் வேறு வேறாக இருப்பதும் நாளடைவில் பாலுச்சாமியின் அறிவுக்குப் புலப்பட ஆரம்பித்தது.

பவுன் நகைகளை பத்த வைக்க, அதில்  வைத்து  ஊதப்படும் பொடிக்கு  பவுன் பொடி என்று  பெயர். அந்தப் பொடியை உருவாக்கும் முன்பாக... மட்டம் என்கிற ஒரு உலோகக் கலவையை உருவாக்கிக் கொள்வார்கள். அதாவது,   வெள்ளி எடையில் பாதியளவு செம்பு (காப்பர்) வைத்து உருக்கினால் கிடைப்பது  மட்டம். இரண்டு  மடங்கு மட்டம் ஒரு மடங்கு பவுன் வைத்து உருக்கினால் பவுன் பொடி கிடைக்கும்.  இந்தப் பவுன்  பொடியைத்தான்  தங்க நகைசெய்யும்போது  ஊதுவார்கள்.  இன்னொரு பொடி வகை உள்ளது. அதற்கு கொடமூடி என்று  பெயர்.  வெள்ளி இரண்டு மடங்கு, செம்பு ஒரு மடங்கு,  பித்தளை  அரை  மடங்கு வைத்து உருக்கினால் கிடைப்பது கொடமூடி.  இந்தக் கொடமூடியை பவுன் நகைகளுக்கு வைத்து ஊதமுடியாது.  வெள்ளி நகைகள் , வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் காப்புகளை பத்த வைக்க பயன்படுத்துவார்கள் என்பதெல்லாம்   அத்துபடியான போது   ஒரு முழு நகையையே தன்னால் உருவாக்கிட முடியும் என்கிற நம்பிக்கையை பெற்றிருந்தான் பாலுச்சாமி.

*** ****

முருகேசு  நகை பட்டறை வைத்து ஆறேழு மாசம் ஆகியிருந்தது.   அவனது கடைக்கு பக்கத்துக் கடைகளில்    அய்யாதுரை பத்தரும்,  கும்மோணம் மாரி பத்தரும்  பட்டறை வைத்திருந்தனர்.  இதில் அய்யாதுரை பத்தர் எனாமல் பிளேட்டிங் வேலையில் கில்லாடி. மாரி பத்தர்  கல் நகைகளை செதுக்கித் தருவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.  முருகேசுக்கு அவர்கள் இருவரிடத்தும் அவ்வளவாக ஓட்டுதல் இல்லை.  அவர்கள் பத்து வார்த்தை பேசினால்  இவன்  போனாப் போவுது என்று ஒரே  ஒரு வார்த்தை   பேசுவான். அதனாலேயே அவர்களுக்கு இவனை பிடிக்காமல் போய்விட்டது, தொழில் செய்ய வந்த இடத்தில் எல்லாரிடத்தும் கலகலவென்று பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்று மாரி பத்தரின் நினைப்பு. ஆனால் முருகேசுவின் குணாம்சம் தன்னோட நினைப்புக்கு எதிராக இருந்ததால்... சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார் மாரி பத்தர்.

 சாயந்தரமானால் முருகேசு  பட்டறையில் லைட்டை போட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு ஓடம்போக்கியாற்றங்கரைக்கு வெளிய இருக்க ப் போவான். சுருட்டு குடிக்கும் பழக்கமும்  முருகேசுக்கு இருந்ததால்... தினமும்  சாயந்தரமானால் ஆற்றங்கரைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். அப்படி  ஒரு புதன் கிழமை அவன் ஆற்றங்கரைக்கு சென்றிருந்தபோது இரண்டு சிவப்புத் தொப்பி வைத்த போலீஸ்காரர்கள்  ரெண்டு சைக்கிளில் முருகேசுவைத் தேடி வந்தார்கள். அவனது  பட்டறை சாத்தியிருந்ததால், பக்கத்து  கடைக்காரரான மாரி  பத்தரிடம் சென்று அந்த  போலீஸ்காரர்கள்  விசாரித்தார்கள். 

‘’அவன் ஆத்தங்கரைக்கு வெளிக்கு இருக்க போயிருக்கான் சார். இதோ வந்துடுவான். என்ன சார் விஷயம்?’’ என்று விசாரித்தார் மாரி பத்தர்.

’’ஓண்ணுமில்ல... ஒரு திருட்டுப் பய எங்ககிட்டே  மாட்டியிருக்கான். அவன வெச்சி வெளுத்ததுல உண்மைய கக்கிட்டான்... அதான் இந்த ஆளைத் தேடி வந்தோம்...’’ என்றனர் அந்த போலீஸ்காரர்கள்.

கொஞ்ச நேரம்  காத்திருந்துவிட்டு...’’இந்த ஆளு வந்தாக்கா உடனடியா ஸ்டேசனுக்கு வரச் சொலுங்க...’’ என்று மாரி பத்தரிடம் சொல்லிவிட்டு அந்த போலீஸ்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

அவர்கள்  வந்த சைக்கிள்  வடக்குப் பக்கமாக சென்றுத்  திரும்பியிருக்கும், முருகேசு வடக்குப் பக்கமிருந்து  வந்தான். வந்தவன் தனது கடைக்கருகில் நிற்கும் மாரி பத்தரை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடியே தனது பட்டறையைப் போய் திறந்தான். அவன் கடையைத் திறந்து உட்கார்ந்த பிறகு, அவனிடத்தில் விறுவிறுவென்று வந்தார் மாரி.

தனது பட்டறைக்குள் வந்த மாரியை நிமிர்ந்து பார்த்த முருகேசு... மெலிதாக ‘’என்னண்ணே...?’’ என்றான். 

‘’ஒண்ணுமில்ல முருகேசா... ரெண்டு கழுகுப் பொடியனுங்க வந்தானுங்க. என்னன்னு கேட்டேன் உன்னயத்தான் தேடிக்கிட்டு வந்ததா சொன்னானுங்க. ஏதோ ஒரு எளம்பு பொடியன் மாட்டியிருக்கானாம். அவன வெங்காரிச்சிருக்கானுங்க. அப்போ அவன் என்ன சொன்னானோ தெர்ல. அதுக்காகத்தான் உன்னைய தேடி வந்ததா சொன்னானுங்க... நீ வந்ததும் உன்னை ஸ்டேஷனுக்கு வந்து  பாக்கச் சொன்னானுங்க...’’ என்றார் மாரி.

அதைக் கேட்ட  முருகேசுக்கு முகமெல்லாம் வெளுத்து சிவந்தது. போட்டிருந்த சட்டை வேர்வையால் நனைந்து கசகசத்தது. முகத்தில் பயத்தின் ரேகைகள் ஓடியதைக் கண்டுபிடித்த மாரி பத்தர் அவனிடத்தில் ‘’ஏம்பா...  பெருக்கடப் பொடியன்ட்டேர்ந்து ஏதாச்சும் எளம்பு பொருளை வாங்கிட்டியா... எதா இருந்தாலும் கழுகுப் பொடியன்கிட்டே உண்மையப் பேசு. ஸ்டேஷனுக்கு போனா... தனியா போவாதே. நேரா போயி கே.வி.டி பத்தர போயி பாரு. இத மாதிரின்னு  சமாச்சாரத்தை சொல்லு. அவர் என்ன சொல்றாரோ அத மாதிரி நடந்துக்க. முடிஞ்சா முடிகொண்டானுக்கு உன்னோட மச்சான் பக்கிரிக்கு செய்தி சொல்லிவிடு...’’ என்றார்.

மாரி விளக்கமாகவும் ஆதரவாகவும் பேசிய வார்த்தைகள் முருகேசுக்குள் குடிகொண்டிருந்த பயத்தின் அளவைக் குறைத்தது.

‘’சரிண்ணே... நீங்க சொல்றா  மாரி கே.வி.டிய போய் பார்க்கிறேன்...’’ என்றான் முருகேசு.   

தொங்கட்டான் அசையும்


 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close