[X] Close

24-சலனங்களின் எண் -26


24-cable-sankar-series

  • கேபிள் சங்கர்
  • Posted: 29 Sep, 2018 11:53 am
  • அ+ அ-

”பப்ளிக்குல நாம க்ளோஸா காட்டிக்க வேண்டாம் நித்து” என்றவனை சற்று நேரம் உற்று பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி, தன் உடைகளைத் தேடி எடுத்து அணியலானாள். அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாதது அவளின் மனதை காயப்படுத்திவிட்டோம் என்று ராமுக்கு உணர்த்தியது. ஏதும் பேசாமல் அவனுடய உடைகளை அணிந்து கொண்டவன், கிளம்ப எத்தனித்தான். அவனின் கையைப் பிடித்து நிறுத்திய நித்யா, இன்னொரு கையில் ஒரு கோப்பையில் காப்பியை நீட்டினாள். 

“குடிச்சிட்டு போ” என்றாள்.

ராம் அவளை ஏறிட்டுப் பார்த்தபடி அவளிடமிருந்து காப்பியை வாங்கி ஒரு சிப் குடித்தான். “நான் நம்ம நல்லதுக்காகத்தான் சொல்லுறேன் நித்து” என்றான் தயங்கியபடி.

”எதுவும் சொல்ல வேணாம். இனி நாம் எக்ஸ்பிரஸ் பண்ணலை. ஓகே. காப்பி சாப்டு கிளம்பு” என்றவளை இழுத்து அணைத்தான். அவனிடமிருந்து விலக லேசாய் திமிறினாள். இன்னும் இருக்க அணைத்தான். அமைதியாய் இருந்தாள். அவளிடமிருந்த எதிர்ப்பு விலகியதை உணர்ந்து அவளை தன் கைகளிலிருந்து விடுத்து “இப்ப நான் எது சொன்னாலும் கோபமாத்தான் இருக்கும். நீ அமைதியானவுடனே சொல்றேன்” என்று கிளம்பினான்.

“நீ கமிட்டாயிட்டேனு தெரிஞ்சா உன் ரசிகைகள் எல்லாம் மனசொடிஞ்சி போயிருவாங்க இல்லை” என்று கிண்டலடித்துவிட்டு, சிரித்தபடி “நீ கிளம்பு” என்று அவன் முதுகை பிடித்து வாசலை நோக்கித் தள்ளினாள். அவன் திரும்பிப்பார்க்க, “போடா நோ ஹார்ட் பீலீங்ஸ்” என்று சிரிக்க அவன் கிளம்பி போனான். அவன் போன திசையை கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

ரவிக்கு தூக்கமே வரவில்லை. அநாயசமாய் லட்ச ரூபாய் ஒரு நாள் செலவு என்பது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதற்கு காரணம் அவனுக்கு இருந்த கடன். மணி நினைத்தால் தன் பிரச்சனையை பத்துநாள் ஷூட்டிங் செலவில் முடித்துவிடலாம். ஆனால் செய்ய மாட்டேன் என்கிற முடிவில் இருப்பவனிடம் கேட்டால் கிடைக்காது என்று தெரிந்தாலும் மீண்டும் கேட்டால் கிடைக்குமோ என்கிற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. சரக்கை எடுத்து ராவாக அடித்தபடி தன் நண்பர்களுக்கு போன் அடித்தான். பல பேர் அவனின் ராத்திரி சரக்கு புலம்பல்களுக்கு பழக்கமானவர்களாய் போனதால் எடுக்கவில்லை. சில பேர் திரும்பக் கூப்பிடுவதாய் கட் செய்தார்கள். எப்படி பேசினாலும் எடுக்கக்கூடிய நண்பனுக்கு கடைசியாய் போன் அடித்தான்.

“ஹலோ”
“சொல்லு மச்சி”
“இன்னைக்கு ஷூட்டிங் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?”
எதிர்முனை பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “ஒரு லட்சம் “ என்று பெருமூச்சு விட்டான் ரவி.

“இத்தனை செலவு பண்றானே உன் கஷ்டத்தை சொல்லி கேட்க வேண்டியதுதானே?”
“கேட்டேன் மாட்டேனுட்டான்.”
“உன்னால எத்தனை பிஸினெஸ் முடிச்சிருக்கான் இதைக்  கூட செய்ய மாட்டானாமா?”
“ம்ம்.. உனக்கு தெரியுது. அவனுக்கு தெரியலையே” என்ற லேசாய் குழறலோடு அழ ஆர்மபித்தான் ரவி.
அவன் அழ ஆரம்பித்ததும் எதிர் முனை ஆட்டோமேட்டிக்கா ஆப் செய்துவிட.. கட் செய்யப்பட்ட போனை முகத்துக்கு முன்னே வைத்தபடி “உனக்கு நான் எத்தனை வியாபாரம் முடிச்சிக் கொடுத்திருக்கேன். நீ எனக்கு மாட்டேனு சொல்லலாமா மணி?” என்று திரும்பத் திரும்பக் கேட்டபடி மட்டையானான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்ரீதரின் பட வேலைகள் படு சுறுசுறுப்பாய் நடை பெற ஆரம்பித்தது. இசையமைப்பாளராய் ரெண்டு மூன்று பேரிடம் பேசினான். நண்பர்களாய் இருந்தும் ஏனோ உடனே படம் பண்ண முடிகிற சூழ்நிலையில் இல்லை என்று கை விரித்தார்கள். குறிப்பாய் சமீபத்திய ஹிட் இசையமைப்பாளரான குகேஷை கேட்ட போது, “இல்ல ப்ரோ.. மூணு படம் ஒர்க் போயிட்டிருக்கு. உனக்கே தெரியும் நான் ஒரு படமெடுத்தா அதுல எவ்வளவு டெடிக்கேட்டா ஒர்க் பண்ணுவேன்னு. ராஜா சார் படம் கூட ஒண்ணு வந்திருக்கு.  அவர் கம்போஸிங் எப்ப கூப்பிடுவாருனு தெரியலை. நீ வேற உடனே ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றே.. என்னால லேட் ஆக வேணாமில்லை?” என்றான். ஸ்ரீதருக்கு புரிந்தது  ராஜாவின் சின்னத்தனம்.  

மனசுக்கு கஷ்டமாய் இருந்தாலும் சிரித்தபடி வெளியே வந்தான். தெரிந்த நண்பர்களீடம் எல்லாம் இசையமைப்பாளர் இருந்தால் சொல்லும் படி கேட்க அடுத்த ரெண்டொரு நாளில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் டெமோ சிடீயுடன் வந்தார்கள். சில பேர் தங்களுடய ஸ்டூடியோவுக்கு அழைத்து நல்ல ஒலியமைப்பில் தங்களது பாடல்களை போட்டுக் காட்டினார்கள். சில பாடல்கள் அம்மாதிரியான ஸ்டூடியோ அமைப்பில் கேட்ட போது நன்றாக இருப்பதாய் பட்டாலும் மனதில் நிற்க வில்லை. யாரிடமும் சிட்சுவேஷன் சொன்னால் பாடல் போட தயாராக இல்லை. இருப்பதை போட்டுக் காட்டி கமிட் ஆக மட்டுமே ஓகே சொல்லிக் கொண்டிருந்த வேலையில், வந்தவன். நரசிம்மன். கதையில் வரும் நான்கு சிட்டுவேஷன்களை சொல்லி இதற்கான ட்யூனை போட்டுட்டு வாங்க என்றதும் ஏதும் பேசாமல் பாடல்களின் காசென்ப்டை எழுதி வாங்கிக் கொண்டு போனவன் அடுத்த நாளே இமெயில் நான்கைந்து ட்யூன்களை அனுப்பினான். நன்றாகவே இருந்தது. அழைத்து அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தான்.  முதல் பாடல் தயாராக, சுரேந்திரனுக்கும் பாடல் மிகவும் பிடித்துப் போக, ப்ரேமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து  அவளின் தோள் மீது கை வைத்தபடி பாடலை திரும்பத் திரும்ப்  கேட்கிற சாக்கில் அவள் மீது சாய்ந்து கொண்டேயிருந்தார்.

ஷுட் தேதி பிக்ஸ் ஆக வர்ற அக்டோபர் 18 பூஜைப் போட்டுப்பம் என்று தேதி குறித்து செயல் பட ஆரம்பித்தார்கள். ஆர்டிஸ்டுகளுக்கான ட்ரஸ் மற்றும் படத்தில் வரும் பேக்ரவுண்ட் பொருட்களீன் நிறங்களைக் கூட மிக பொறுமையாய் தெரிந்தெடுத்தான் வின்செண்ட். அவனிடம் பேசும் போது லேசான பெண் தன்மையை உணர ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

அடுத்தடுத்த நாட்களில் லொக்கேஷன் பார்க்க ஆர்மபித்தான். ஒரு சேஸிங் சீனுக்காக மொட்டை மாடியை தேடிக் கொண்டிருக்க, “எதுக்கு மாஸ்டரைகூட்டிட்டு வந்து காட்டிருங்க” என்ற காசியை பார்த்தான் ஸ்ரீதர்.  அவன் சொல்வதில் நியாயம் இருப்பதாய் ஸ்டண்ட், மாஸ்டரை போனில் அழைத்தான்.”மாஸ்டர் சேஸிங் சீனுக்கு லெக்கோஷன் பார்க்கணும். வேளச்சேரியில சென்னை சில்க்ஸ் பக்கத்துல இருக்கோம். வர்றீங்களா?” என்றான். 
அடுத்த அரை மணி நேரத்தில் மாஸ்டர் ஆஜராக., மொட்டை மாடிக்கு போக லிப்டை அழுத்தினான் ஸ்ரீதர். “நீங்க லிப்டுல போங்க. நான் நடந்து வர்றேன் “ என்றார் மாஸ்டர். படியேறுவதுதான் அவரது இரும்பு உடம்புக்கு காரணமாய்  இருக்கும் என்று தோன்றியது  அடுத்தடுத்து வேறுவேறு லோக்கேஷன்களைப் பார்த்துவிட, ஒவ்வொரு மொட்டை மாடிக்கும் அது எத்தனை மாடியாக இருந்தாலும் படியேறியே வந்தார். ஒரு கட்டத்தில் ஓய்ந்தார். “நாளைக்கு பார்த்துக்கலாமா சார்” என்று மூச்சிரைத்தார். 

“அட வாங்க மாஸ்டர். லிப்ட்ல போலாம் ‘ என்று ஸ்ரீதர் அழைக்க.. ஒரு கணம் பார்வையை தழைத்துக் கொண்ட மாஸ்டர் “இல்ல வேணாம் சார். எனக்கு க்ளோஸ்ட் இடத்துல போபியா இருக்கு. என்னால ப்ளைட், பாத்ரும்னு லிப்ட் மாதிரி எடத்துல உட்கார மாட்டேன். அப்படியே மூச்சு முட்டி செத்துருவேன் போல மயக்கமா வரும். என்னால அந்த போபியாவ விட்டு வெளிய வர முடியலை. இதுனால எத்தனையோ அதர் லேங்குவேஜ் படங்களை மிஸ் பண்ணியிருக்கேன். நூறு அடி உயரத்திலேர்ந்து குதிக்க சொல்லுங்க சட்டுனு குதிச்சுருவேன். மாஸ்டருக்கு லிப்டு பயம்னு வெளிய சொன்னா சிரிப்பாங்க” என்றார் தயக்கமாய். ”கொஞ்சம் முயற்சி செய்தால் சரியாகும் மாஸ்டர் ஆனா அத நீங்க நம்பணும். அப்பத்தான் சரியாகும்” என்ற ஸ்ரீதர் அதன் பிறகு, அவரை கம்பெல் செய்யவேயில்லை.

லொக்கேஷன் எல்லாம் பிக்ஸாகி, முதல் நாள் ஷூட்டிங். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான அத்தனை முஸ்தீப்புகளும் நடந்து கொண்டிருக்க, ஸ்ரீதர் கொஞ்சம் பதட்டமாய் இருந்தான். லொக்கேஷனில் தம்மடிக்க வசதியில்லாததால் மாடிக்கு போய் அடித்துவிட்டு வந்தான். சுரேந்தர் வழக்கம் போல தன் அல்லக்கைகளின் துதிப் பாடலோடு சிரித்துக் கொண்டே, வந்திருந்த ரிச் கேர்ள்ஸ்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். 

“மொத ஷாட் நீயும், ப்ரேமியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறீங்க. ஜஸ்ட் ஒரு லுக், அட அழகா இருக்காளேங்குற ஃபீல் மட்டும் தான்” என்று காட்சியை ராம், ப்ரேமி இருவரையும் வைத்து விளக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

வின்செண்ட் தன் அஸிஸ்டெண்டுகளை சத்தம் போட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தான். ரொம்பவே முனைந்து அவன் வைத்திருந்த முதல் ஷாட் ப்ரேமில் மிக அழகாய் தெரிந்தது. ஒன்றுக்கு மூன்று முறை எல்லாவற்றையும் செக் செய்துவிட்டு “ஓகே ஸ்ரீதர் நான் ரெடி” என்றான் வின்செண்ட்.

முதல் ஷாட் வைக்கப் போகும் போது  உள்ளே வந்த சேது தினசரி பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தை காட்டி, ராமுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரும்  பாராட்டி ராமின்  கைகுலுக்கினார்கள். அதில் ராமராஜின் பட விளம்பர்த்தில் ராமும் நித்யாவும் நெருக்கமாய் இருந்தார்கள். ராம்  யாரையும் நேரடியாய் கண் நோக்கி பார்க்கமல தாழ்த்தபடியே பார்த்துக் கொண்டிருக்க,, ஸ்ரீதரும் விளம்பரத்தைப் பார்த்தான். 

“வின்செண்ட் பர்ஸ்ட் ஷாட் ப்ரேமிக்கு  மட்டும். ப்ரேமிங் மாத்திருங்க. ராம் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று மானிட்டரிலிருந்து கண் எடுக்காமல் சொன்னான் ஸ்ரீதர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close