[X] Close

குரு மகான் தரிசனம் 14: குதம்பைச் சித்தரே போற்றி!


guru-mahan-dharisanam-14

குதம்பைச் சித்தர்

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 13:28 pm
  • அ+ அ-

திருவை குமார்

நட்சத்திரக் கூட்டணியில் அஸ்வினி தொடங்கி ரேவதி வரையிலுமான 27 நட்சத்திரங்கள் இருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இவை நான்கும் தோஷமற்ற நட்சத்திரங்களாகவும் திருமண காலத்தில் இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 10 பொருத்தம் பார்ப்பதே அவசியம் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது ஜோதிட  சாஸ்திரத்தில்.

ஆனால், இதற்கும் மேலாக… மேலினும் மேலாக ஒரு அந்தஸ்தை ஒரு நட்சத்திரம் பெற்றிருக்கிறது தெரியுமா? அதுவே விசாகம் நட்சத்திரம். குருபகவானின் நட்சத்திரமாகிய  இதுவே நட்சத்திரங்களின் தலைவன்.

யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மட்டுமல்லாமல் வீட்டில் நடைபெறும் பல்வேறு விதமான பூஜைகள், ஹோமங்களிலும் நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் விசாக நட்சத்திரத்திற்கான மரியாதையை.

எதற்காக இந்த முன்னுரை என்று வாசக அன்பர்கள் நினைக்கலாம். இப்போது நாம் பார்க்கவுள்ள அருட்பெரும் மகானாகிய ஶ்ரீகுதம்பைச்சித்தரின் அவதார நட்சத்திரம் விசாகம்!

முதலில் குதம்பை என்ற சொல்லுக்கு விளக்கம் பார்த்தோமெனில் காதில் அணியும் ஒருவகை தொங்கட்டான் என்று தெரிகிறது. ஆணாகப் பிறந்திட்ட பாலகனுக்கு காதில் எதற்கு அந்த அணிகலன்?  என்றுதானே அடுத்த சந்தேகம் எழுகிறது. ஆண் வாரிசாகப் பிறந்திட்ட அந்த சிசுவோ பார்ப்பதற்கு பெண் குழந்தை போல் பரிமளித்தது.

நவரசமும் முகமும் நர்த்தனமாட… பார்த்தாள் அந்த புண்ணியத்தாய்! அவனது காதிலே ஆசை ஆசையாக ஒரு அணிகலனைத் தொங்கவிட்டு அழகு பார்த்தாள். அந்த அணிகலன் ஆடும்போதெல்லாம் பரவசப்பட்டு தனது குழந்தைக்கு ‘குதம்பை’ என்றே பெயர் வைத்து விளிக்க ஆரம்பித்துவிட்டார்.

வயது பதினாறு வரை தாயை பிரியாத சேயாகவே குதம்பையார் இல்லம் சுற்றி வந்தார். கணநேரம் கூட தாய் முகம் காணாமல் இருக்க மாட்டார். தாயோ மகனை எங்கும் தனித்து விட மாட்டாள்.

உற்றார் உறவினர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மகனை தனித்து சிந்திக்க விட்டதில்லை.  பெற்ற தாயும் தந்தையும் அப்படியிருந்துவிடலாம். ஆனால், உமையொருபாகன்  சும்மாயிருப்பாரா?

தன்னால் தரணிக்கு அனுப்பப்பட்டவனுக்கு கடமை என்னவென்று கருத்திலிட வேண்டாமா!... என்று தயை கொண்டார். சித்தராகச் சென்றார் சிறுவனிடம்… கோடி சந்திரப் பிரகாசமாக ஜ்வலித்திட்டவரை பார்த்திட்ட அந்நொடியே உலகம் மறந்த சிறுவன்… ‘உத்தரவுக்கு காத்திருக்கேன் அடியாரே!’ என்று இதழ் பொத்தி பணிவு காட்டினான்.

“பிள்ளாய்! நீ யாரென்று நினைத்தாய். திருமண பந்தத்தில் சுழன்று கணவனாக, தந்தையாக கடமையாற்ற வேண்டியவன் என்றா நினைக்கிறாய்? உண்மை அதுவல்ல! சென்ற பிறவியில் ஒரு மாபெரும் தவத்தில் கண்ணுற்று இருந்தபோது சுழன்றடித்த பெரும்புயலில் உயிர்நீத்து இப்பிறவி கண்டிருக்கிறாய்! உனக்கு இறை தரிசனம் வேண்டும்தானே? உடனே புறப்பட்டு வா” என்று கூறிச் சென்றார்.

அதுவரை தாய் மட்டுமே உலகம் என்றிருந்த குதம்பை, மலர்ச்சியான முகத்துடன் தாயிடம் சென்றார். உள்ளதை உள்ளபடி சொன்னார். அன்னைக்கு அதிர்ச்சி ஆகாசம் தாண்டியது. அதிர்ந்தாள். அழுதாள். அவனுக்கு நல்ல வார்த்தைகளாக கூறினாள்.

“மகன்… என் மகன் நீ!... இப்போது என்னவோ சித்தனைப் போல் பேசுகிறாய். வேண்டாம் குதம்பை குமாரனே! துறவறம் துவர்ப்பானது. இல்லறம் இனிப்பானது… குழந்தைகளைப் பெற்றெடுத்து என்னைப் பாட்டியாக்கி மனம் குளிரச் செய்யப்பா!” என்று பரிதவித்தாள்.

ஆனால், சித்தரின் தரிசனத்திற்குப்பிறகு குதம்பையாரின் மனசு முற்றிலும் மாறிப்போயிருந்தது. அன்றிரவே நடுநிசியில் – இல்லம் தவிர்த்து அடவி சென்றான். அங்கு அவனுக்காக ஒரு அத்தி மரம் காத்து நின்றது. அதற்குள்ளாக ஒரு பொந்தும் இருந்தது.

பூர்வ ஜன்மம் நினைவுக்கு வந்தது. அவ்வளவே! அந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். எவருமே வெளியிலிருந்து பார்க்க முடியாத இடமாகிப் போனது. ஒரு வேளை அன்னையோ, தந்தையோ தேடிவந்து விட்டால்?

மிகவும் எச்சரிக்கையுடன் தன் உடலை முழுவதுமாக மறைத்தபடி தவம் தொடர்ந்தார்.   நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் கடந்தன…! உணவு ஒன்றுமில்லை, கண்களோ உறக்கம் கண்டதில்லை… பிடிவாதமோ தளரவில்லை.

குதம்பையின் பிடிவாதம் முன்பு பரந்தாமனின் பிடிவாதமே நசிந்து போனது.

“அசரீரியை விடுத்தார். ‘நீ வைகுண்டம் வரத்தேவையில்லை… குமாரா! இந்த அண்டத்திற்கு உன்னால் பெற வேண்டிய உபகாரங்கள் வெகுவாக உள்ளன. சரியாக நீ இங்கு வந்தமர்ந்த பிரதேசம் விந்தியமலை. இங்கு வாரணங்களின் சஞ்சாரம் அதிகம்… மிக அதிகம் (யானைக்கூட்டம்). அவற்றுக்கு மந்திரங்களை கிரஹிக்கும் சக்தியும் மிக அதிகம். நான் இப்போது உனக்கு வருண ஜப உச்சாடனத்தை உபதேசிக்கிறேன். நீ அதை மனதில் ஏற்றி யானைக் கூட்டங்களுக்கு செவியில் தீர்க்கமாக கேட்கும்படி உச்சாடனம் செய்… பிறகு நடப்பதைப்பார்…! “

அசரீரி மறைந்து உபதேசம் அரங்கேறியது. குதம்பையார் கஜ கூட்டங்களின் நடுவே சென்று நின்றபடி மந்திர உச்சாடனம் செய்யச் செய்ய யானைக் கூட்டம் பிளிறத் தொடங்கின.

அந்தப் பிளிறல் ஓசையே மந்திரமாக மாறி ஒலிக்க மழை கொட்டித் தீர்த்தது.

கொட்டிய மழையில் காடு செழித்தது!.. கானகம் செழித்தால் ஊர் செழிக்கும் அல்லவா? குதம்பையாரின் உதவியால் ஊரும் செழித்தது.

தவமியற்றும்போது மரப்பொந்தினில் தானே ஊன் உறக்கமின்றி இருந்தார் என்று பார்த்தோம். அப்போது அவரால் அதி அற்புதமான பாடல்கள் இயற்றப்பட்டு இன்றும் அவை சாகா வரம் பெற்றவையாக கருதப்படுகின்றன.

1 – பூரணங் கண்டோர் இப்பூமியிலே வரக்

      காரணம் இல்லையடி குதம்பாய்

      காரணம் இல்லையடி

2 – போங்காலம் நீங்க நற்பூரணம் கண்டோர்க்குச்

      சாங்காலம் இல்லையடி குதம்பாய்

      சாங்காலம் இல்லையடி

3 – செத்துப் பிறக்கின்ற தேவை துதிப்போர்க்கு

      முத்திதான் இல்லையடி குதம்பாய்

      முத்திதான் இல்லையடி….

-உதாரணத்திற்கு இந்த பாடல்களைப் பார்த்தீர்களென்றாலே குதம்பையாரின் மகத்துவம் தெரிந்து விடும்.

அவர் மேலும் சொல்லிச்சென்ற ஒன்று மறக்க இயலாதது.

“அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால்காயம்) இருக்கிறது. மிளகும் உள்ளது. சுக்கும் உள்ளது. இவற்றை கலந்து மருந்தாக உட்கொண்டால் ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படும்? பெண் இன்பத்தால் சிந்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சிந்திக்காதோ…” என்று பாடிச் சென்றுள்ளார்.

இவர் பிறந்தது என்னவோ யாதவ குலம். பசுக்களை மேய்த்து வந்த தம்பதியருக்கு பிறந்திட்டார். இவர் பிறப்பிடம் தஞ்சாவூர் அருகே என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ஆனாலும் மாயூரமாகுமா என்று போற்றப்படும் மயிலாடுதுறையில்தான் இவர் ஜீவசமாதி ஆனார். அது கூட எங்கோ ஒரு மூலையில் அல்ல! மயூரநாதர் ஆலயத்தின் உள்ளே அமையப்பெற்றுள்ளது.

இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!  

நீங்கள் அவசியம் ஒருமுறை மயிலாடுதுறை சென்று மயூரநாதரை தரிசிப்பதுடன் நமது மகானையும் தரிசித்து வாருங்கள். கூடவே, “ஓம் ஶ்ரீம் சம் ஶ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி”… என்று மனதாரப் பிரார்த்தித்து 48 தினங்கள் சொல்லி வரவேண்டும் என்று ஆன்மிக வல்லுனர்கள் கூறியுள்ளனர். நீங்களும் முயற்சித்துப் பார்த்து வெற்றியைப் பெறலாம்.

 

  -தரிசனம் தொடரும்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close