[X] Close

24-சலனங்களின் எண் -25 நித்யா -ராம்


24-cable-sankar-series

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 11:42 am
  • அ+ அ-

“தம்பி ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஆன் செய்து “சொல்லுங்க டைரக்டர் சார்” என்றார்.

”அண்ணே.. நம்ம படத்துல க்ளைமேக்ஸுல ஒருத்தருக்கு ப்ராஸ்தெடிக் மேக்கப் போடணும். அதப் பத்தி பேசணும். ரெண்டு நாள்ல எப்ப ஃபீரியா இருக்கீங்களோ அப்ப ஆபீஸ் பக்கம் வந்துட்டு போனீங்கன்னா நல்லாருக்கும்.”

“இன்னைக்கு ஒரு ஷூட்டிங் இருக்குது. ஸ்டில் ஷூட். சீக்கிரம் முடிஞ்சா ஒரு நடை ஆபீஸ் வந்துட்டு போயிடறேன்”

“என்னா படம்ணே?”

“அல்லாரும் புதுசு. இன்னும் பேரு கூட வைக்கல. “ என்றார் யோசிக்காமல். எதிர்முனையில் போனை வைத்துவிட்டான் ஸ்ரீதர். உள்ளே வந்து ராமைப் பார்த்து “உங்க டைரக்டர் தான் கூப்பிட்டாரு” என்று சொல்லி சிரித்தார்.

ராம் அவரின் சிரிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் இருந்தான். ஏதாவது சொல்லியிருப்பாரோ? என்ற சந்தேகமும் அவரது சிரிப்பில் இருந்தார்ப் போல பட்டது. அவனது ஐப்ரோக்களை வெட் க்ளாத் வைத்து துடைத்துக் கொண்டிருக்கும் போது தயங்கியபடி “ஏதும் சொல்லலை இல்லேண்ணே?” என்று கேட்டான்.

அவர் சிரித்தபடி “அய்ய.. நான் ஏன் சொல்லுறன். அதான் நீங்க சொல்லிட்டீங்க இல்லே.. ஒரு வார்த்தை என் வாயிலேர்ந்து வராது” என்று சொல்லிவிட்டு, தூரமாய் அவனின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, உள்ளே வந்த அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் “சாருக்கு முடிஞ்சுருச்சு” என்றார். ராம் அசட்டுத்தனமாய் சிரித்து விட்டு, சற்றே குறைந்த சந்தேகத்தோடு ஷூட்டுக்கு கிளம்பினான்.

ஸ்பாட்டில் நித்யா பிங்க் கலர் சுடியோடு பளிச்சென இருந்தாள். தினமும் பார்க்கும் நித்யாவாய் இல்லாமல் சற்றேக்குறைய அழகாய் இருந்தாள். இவனைப் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாகி “நான் வீட்டிலேயே மேக்கப் போட்டு கிளம்பிட்டேன். எப்படி இருக்கேன்?” என்று ஒரு சுற்று சுற்றி அவளை காண்பித்தாள். தயக்கமாய் அவளை பார்த்து ஒற்றை வார்த்தையாய் “ம்ம். .ஓக்கே” என்று சொல்லிவிட்டு, ராமராஜைப் பார்த்து “சார் நான் ரெடி” என்றான். அவனது நடவடிக்கையைப் பார்த்து நித்யா சட்டென அமைதியானாள்.

அடுத்த சில நிமிடங்களில் எதையும் யோசிக்க முடியாத அளவுக்கு வேலை ஆரம்பித்தது. ராமராஜின் அனுபவம் இங்கே பெரிதாய் கை கொடுத்தது. என்னென்ன மாதிரியான போஸ்கள். எப்படி இருக்க வேண்டுமென்று அவன் மனதில் முன்பே இருக்க, எந்த ஒரு ரெபரன்ஸ் போஸ்டர் டிசைன், ஸ்டைல் என லேப்பிலோ, டேப்லெட்டிலோ தேடாமல், ஒவ்வொரு ஷாட்டின் போதும் அருகில் வந்து எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்துச் சென்றார். கம்ப்யூட்டர் , லைட்டிங் போன்ற விஷயங்களிலிருந்து சற்றே தூரமாய் இருப்பது போல தெரிந்தாலும் மேக் வைத்து எடுத்த போட்டோக்களை பத்ரியை உடன் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள ஆர்மபித்தார். மொத்தமாய் நான்கு மணி நேரத்தில் வேலை முடிந்து பேக்கப் ஆனது ஸ்டில் ஷூட்.

தயாரிப்பாளர் மணிக்கு ராமராஜின் வேலை மிகவும் பிடித்தது. ”அரை நாள் போதும் சார் “ என்ற ராமராஜிடம் திரும்பத் திரும்ப “போதுமா?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். இப்போது அவர் சொன்னபடி திருப்தியாய் வேலையை சொன்ன டைமில் முடித்திருக்கிறார். எனும் போது அவர் மேல் இன்னும் நம்பிக்கை வந்நது. ஒரு நல்ல இயக்குனரிடம் தான் தன்னை தயாரிப்பாளராய் ஒப்படைத்திருக்கிறோம் என்கிற சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

“இன்னைக்கு மட்டும் ஆர்டிஸ்ட் செலவு இல்லாமல் ஒரு ரூபாய் ஆயிருக்கு தெரியுமா?” என்றான் ரவி.

அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்தார் மணி.

நித்யாவையும், ராமையும் தன் காரிலேயே ட்ராப் செய்துவிடுவதாய் சொல்லி தன்னுடன் அழைத்து வந்திருந்தார். இருவரும் அமைதியாகவே இருக்க. “என்ன ராம் சார்.. அதான் ஷூட் முடிஞ்சிருச்சு இல்ல இன்னும் டென்ஷனாவே இருக்கீங்க?’ என்றார்.

“அய்யோ அதெல்லாம் ஓண்ணுமில்ல சார்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை இடை மறித்து “இல்ல சாரு டென்ஷனாத்தான் இருக்காரு” என்ற நித்யாவை சற்றே கோபமாய் பார்த்தான்.

இதற்குள் நித்யாவின் வீடு வர வண்டியை நிறுத்தினான் ரவி. “சார்.. நாங்க ரெண்டு பேருமே இங்க இறங்கிக்கிறோம்” என்று ராமின் பதிலை எதிர்பார்க்காமல் கதவை திறந்துஅவனின் கை பிடித்து இழுக்க, ராம் சற்றே சங்கடமாய் ஏதும் சொல்ல முடியாமல் அரைகுறையாய் சிரித்தபடி “ஆமா சார்.. கொஞ்சம் நேரம்

பேசிட்டிருந்துட்டு கிளம்பறேன்” என்றான். அனைவருக்கும் அவர்கள் ரிலேஷன்ஷிப் பற்றி தெரியுமாதலால் சிரித்தபடி “ஓகே. எனக்கு வேலை மிச்சம்” என்று சொல்லியபடி கிளம்பினார் மணி.

வண்டி போகும் வரை நின்று பார்த்து விட்டு ராமின் கை பிடித்து நித்யா இழுத்தபடி தன் வீட்டினுள் நுழைந்தாள். வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த மாத்திரத்தில் லைட், பேனைப் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்திருந்த ராமின் மிக அருகில் உட்கார்ந்தாள். “என்னாச்சு ராம் உனக்கு? என்னை அவாய்ட் பண்றே?” என்றாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நித்து”

“சும்மா நித்து புத்துன்னு கொஞ்சாதே. நீ காலைலேர்ந்து சரியில்லை”

“அட அப்படியெல்லாம் இல்லைங்குறேன்”

”அப்ப ஏன் அத்தனை பேர் முன்னாடி எனக்கு சரியா ரிப்ளை பண்ணலை?”

“எப்ப?”

“காலையில நான் ட்ரெஸ் காண்பிச்சு உன் கிட்ட பேசினப்ப?”

‘அதான் பதில் சொன்னேனே”

“எப்படி ம்.. ஓக்கே.னு அப்படித்தான் நீ என்கூட பேசுவியா?”

“எப்படி பேசுவேன் பின்ன?”

ராம் அப்படி கேட்டதும் ஒரு நிமிடம் மிக நெருக்கமாய் அவனின் முகத்தைப் பார்த்தாள். “ஒரே நேரத்தில ரெண்டு படத்துல லாஞ்ச ஆகுற. அதனால என்னை பப்ளிக்கா வெளிய ஒத்துக்க முடியலையா? கமிட்டாயிடுவியோனு பயப்படுறியா?” என்றாள்.

”லூசு மாதிரி பேசாத நித்து. நானே ரொம்ப குழப்பத்துல இருந்தேன். எங்க ஸ்ரீதருக்கு தெரிஞ்சுருமோன்னு. அவன் படத்துக்கும் இதே மேக்கப் மேன் தான். சரியா ஸ்ரீதர் வேற போன் பண்ணான். அந்த டென்ஷனோட ஸ்பாட்டுக்கு வந்தேன். அதான்”

“இது நீயா இழுத்துவிட்டுக்கிட்டது”

“ஓக்கே.. ஆமா நானா இழுத்துவிட்டுக்கிட்டதுதான். ஐவில் டேக் கேர்” என்றான் கோபமாய்.

நித்யா இன்னும் நெருக்கமாய் வந்து அணைத்து “ஓக்கே.. கூல். நான் ஏதும் கேட்கலை. பட் என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” என்றாள். என்ன என்பது போல அவளை பார்த்தான் ராம்.

“டூ யூ லவ் மீ?” என்றாள்.

உதட்டின் மேல் லேசாய் பூத்திருந்த வேர்வை ராமுக்கு கிளர்ச்சியை ஊட்டியது. அவளது கண்களில் கேள்விகள் நிறைய இருந்தது. இதற்கு பதில் சொன்னால் அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க தயாராக இருக்கும் அவளது எண்ணம் தெரிந்தது. சட்டென அவளது கீழுதட்டை கவ்வி, முத்தமிட ஆர்மபித்தான். அவனது முத்ததினால் அதிர்ச்சியடைந்த நித்யா, சட்டென விலகி ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு, அவன் மீது பாய்ந்து அவனை முத்தமிட ஆரம்பித்தாள். முத்ததின் வேகம் இருவரிடமும் அதிகமாக, சொடக்கு போடும் நேரத்தில் இருவரிம் மேலுடைகளும் கீழே இருந்தது. யாரும் யாருடைய செயல்பாடுகளை தவிர்க்க முற்படவேயில்லை. மிக இயல்பாய் இரண்டு இளமை திமிரும் உடல்களின் சரசரப்பும், முத்த சத்தங்களும், சோபா துவையும் ஒலி மட்டுமே அங்கேயிருந்தது.

சோபா அசெளகரியமாய் இருக்க, அவளை அப்படியே அவளது அறைக்கு தூக்கிக் கொண்டு போனான். கொஞ்சம் சினிமாத்தனமாய் அவளை பெட்டின் மேல் தூக்கிப் போட்டான். அவளும் மிக சினிமாத்தனமாய் ஒரு முறை அங்கும் இங்கும் உருண்டு, கண்களை மிகையாய் சிமிட்டி டீஸ் செய்தாள். இருவரின் செயல்களும் அவர்களுக்கே சிரிப்பாய் தோன்றினாலும் பிடித்திருந்தது. நித்யாவின் மீது ராம் பாய்ந்தான். எந்தவிதமான மிகையான நடிப்போ, வசனமோ இல்லாமல், இரு உடல்கள் அதனதன் தேவையை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆதிமனித காதல் வெளிப்பாடு. பெரிதாய் மூச்சு விட்டு அவள் மீது படர்ந்திருந்துவிட்டு, மெல்ல அவளின் வலப்பக்கமாய் படுத்தவன் நித்யாவின் கைகளை தன் கைகளோடு வைத்துக் கொண்டு “பப்ளிக்குல நம்ம க்ளோஸா இருக்கிறதா காட்ட வேணாம் நித்து” என்றான் ராம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close