[X] Close

குரு மகான் தரிசனம் 13 : ஒரு பிடி விபூதி


gurumahan-dharisanam-13

பாடகச்சேரி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 20 Sep, 2018 10:21 am
  • அ+ அ-

திருவை குமார்

ஶ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

கும்பகோணம் நாகேஸ்வரன் ஆலய திருப்பணியை மேற்கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள்.  தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலமான இந்த ஆலயத்திற்கு தரிசனம் செய்ய சுவாமிகள் சென்றிருக்கிறார். ஆனால், அவர் கண்ட காட்சியே வேறாக இருந்தன. கடும்புதர்கள் மண்டிப்போய் காடாக காட்சியளித்தது. சுவாமிகள் மனம் நடுங்கியது. “நமச்சிவாயம்! உமக்கா இந்நிலை?” என்று வெதும்பிய சுவாமிகள் அந்த நிலையிலேயே ஒரு சபதம் செய்தார்... “ஆலயத்தை திருப்பணி செய்தே தீருவேன்!”

இடுப்பில் ஒரு பித்தளைச் சொம்பினை கயிறால் கட்டிக் கொண்டு எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் நாகேசுவரரின் நிலையைக் கூறி வசூல் செய்தார். நமச்சிவாயம்… என்ற சொல் நிற்காது நடந்தபடியே இருந்தார்.

இவர் மாத்திரம் – சித்து வேலையைக் காட்டியிருந்தால் நிமிட நேரத்தில் இரும்பைத் தங்கமாக மாற்றி விற்றே கட்டியிருக்கலாம். ஆனால், அவரது மனம் அதை விரும்பவில்லை. பக்தர்களின் கைங்கர்யமும் இதில் இருந்தால்தான் சர்வேஸ்வரன் மனம் குளிரும் என்ற ஒரே நோக்கில் அலையாய் அலைந்தார்.

நமசிவாயத்தின் பணி நின்றாபோய்விடும். நினைத்ததை சாதித்து 1928-ல் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதேசமயம் பொதுப்பணி – திருப்பணிதான் என்றாலும் ஏதோ ஒரு அபஸ்வரமிருக்கத்தான் செய்யும்.

ஆலய நிர்மாணத்தில் ஈடுபட்ட விஸ்வகர்மா இனத்தவருக்கும் ஆலய அர்ச்சகர்களுக்குமிடையே பெருத்த விவாதம் தொடங்கியது. இருதரப்பினரும் தாங்களே கும்பாபிஷேகத்தை நடத்திடுவோம் என்று முஷ்டி உயர்த்தினர். முக்காலமும் உணர்ந்த மகானுக்கு பிரச்சினையின் தீவிரம் விளங்கவே, விஷயத்தை காஞ்சி மகானின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவரோ சாட்சாத் பரமேஸ்வரனாயிற்றே! உடனடியாக தீர்ப்பளித்தார். முதல் உரிமை விஸ்வகர்மாவினருக்கே! அதன்பிறகு அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் செய்யட்டும் என்றார். இருதரப்பினரும் அமைதியாகி அவர் வாக்கினை உண்மையாக்கினர்.

இந்த குழப்படிகளுக்கு மத்தியில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கலாகியிருந்தது. வழக்கு இழுபறியில் சென்றதாலும் கும்பாபிஷேக தேதி நிர்ணயிக்கப்படவில்லை.

மகானின் ஆலோசனை தீவிரமாகியது. தனது நெருங்கிய பக்தர்களை அருகில் அழைத்து தன்னை அக்கோவிலின் உள்ளே இருக்கும் பெரியநாயகி அன்னையின் அருகில் உள்ள ஆடிப்பூர அம்மன் சன்னதியின் உள்வைத்து பூட்டிவிடும்படி கட்டளையிட்டார்!

அவர்களோ செய்வதறியாமல் திகைத்து பரிதவித்தார்கள்.

மகானையாவது, பூட்டுவதாவது?... ஆனால், இறுதியில் மகான் உத்தரவே நிறைவேறியது… காலையில் பூட்டிய பிறகு மாலை நேரமே திறக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டு வைத்தாராம்.

மாலை நெருங்கியது… பதைபதைப்புடன் பக்தர்கள் சன்னதி கதவுகளைத் திறந்தபோது சுவாமிகளின் திருக்கரத்தில் நீதிமன்ற உத்தரவு கடிதம் படபடத்தது. உயர்நீதிமன்ற நீதிபதியின் கையொப்பமுடன் கும்பாபிஷேக தேதியும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. பூட்டப்பட்டிருந்த அந்த சில மணிநேரங்களில் ஆகாய மார்க்கமாக சென்று நீதிபதியிடம் பேசித்தீர்த்து உத்தரவைப் பெற்று வந்துவிட்டார். எப்பேர்ப்பட்ட சாதனை!... எத்தனை ஆன்மபலம்.

இந்த காட்சியைக் கண்ட ஊர்மக்கள் மகானை இன்னும் ஒருபடி மேலாக வணங்கி வந்தார்கள்.

இந்நிலையில், ஒருநாள் சுவாமிகள் திடீரென கும்பகோணத்திற்கு வருகை தந்தார். (அவர் சமாதி நிலையை அடைய இன்னும் ஏழு தினங்களே அவகாசம் உள்ள நிலை). தனது ஒப்பற்ற பக்தரும் கும்பகோணத்தின் முன்னாள் தலைவருமான  ராமநாத ஐயரின் வீட்டிற்குள் பிரவேசித்தார். அவர் வந்த நேரம் அந்த வீடே சோக வெள்ளத்தில் தத்தளித்தது. ஐயர்வாளின் மனைவி காலமாகி இருந்தார்.

தனது ஒப்பற்ற மகானைக் கண்ட ஐயர் கதறித்தீர்க்கவே, “ அடேய்! ராமநாதா… உன் மனைவி எங்கேடா மரணித்தாள்?... இல்லையே… என்றவாறே “இதுதான் கயிலாய விபூதி” என்று கூறியபடியே அவரது மனைவியின் நெற்றியில் பட்டையாய் விபூதியை இட்டுவிட்டாராம்.  அடுத்த நொடி, உறக்கத்திலிருந்து மீண்டவளாக எழுந்தமர்ந்து கொண்டாளாம் ஐயரின் மனைவி! அதன்பிறகு பலகாலம்  ஐயர்வாள் இருந்தாராம். அவர் காலமான பிறகே 1982-ல் மனைவி காலமானாராம்.

ஒரு பிடி விபூதியால் அந்த அம்மாளின் ஆயுளையே மாற்றி அமைத்திட்ட அந்த மகான் எப்போதுமே ஒன்றை தன் பக்தர்களுக்குக் கூறி வந்திருக்கிறார். “நானில்லாவிட்டாலும், என்னை நம்பி உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் உற்ற துணையாகயிருப்பேன்” என்று.

இப்பேர்ப்பட்ட மகான் 1949-ஆம் ஆண்டில் ஆடிப்பூர தினத்தில் ஜீவசமாதி நிலையை அடைந்தார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தாரின் சமாதிக்கு அருகே – கருங்கற்களின் உதவியுடன் கலை அழகு பொருந்திய சத்திய ஞானசபையை சுவாமிகள் ஏற்கெனவே நிறுவியிருந்தார். அங்கேயே தனது ஜீவசமாதியையும் அமைத்துக்கொண்ட அந்த ஜீவன்முக்தர்… தன்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அருள்பாலித்து இன்றும் கூட தீராத வினைகளை தீர்த்து அருள்கிறார்.

மாதாமாதம் வரும் பூரம் நட்சத்திரத்தில் சென்று மகானை வழிபட்டு மனசாந்தி பெறுவோம்!

- தரிசிப்போம்

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close