[X] Close

தொங்கட்டான் 28: செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி


thongattan-28

சரோஜ் நாராயண சாமி

  • மானா பாஸ்கரன்
  • Posted: 19 Sep, 2018 18:55 pm
  • அ+ அ-

துணி துவைக்கும் கல்லு மீது உட்கார்ந்திருந்தாள் பாப்பாத்தி. வாய் நிறைய சாம்பலை வைத்துக்  கொதப்பிக் கொண்டு இருந்தாள். காலை நேரத்தில் அவள் அப்படி செய்தால், அவள் பல் விளக்குகிறாள் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

‘’என்ன சோவ பட்டற… என்ன பண்ணிக்கிட்டுருக்கே…’’ என்றான் பக்கிரி.

‘’ம்… பாத்தா தெர்ல, பல்லு வெளக்கறது?”

’’ஓ.. இதுதான் பல்லு வெளக்கறதா… சாம்பல திங்க இப்புடி ஒரு வழியா?”’ என்ற பக்கிரியைப் பார்த்து முறைத்த பாப்பாத்தி, ‘’நம்ம புள்ள ஊரான் வூட்டுல வேல கத்துக்குது… ஊரான் வூட்டு புள்ள நம்ம வூட்டுல வேல கத்துக்குது… அதப் பத்தின நெனப்பே இல்ல ஒங்களுக்கு…’ என்றாள்.

’ஆஹா…  வீட்டு கோழி காலையிலேயே ஏதோ பிராது கொண்டுட்டு வருது.. உஷாருடா பக்கிரி’ என்றது அவனது அடிமனசு.

தான் அப்படி சொன்னதற்கு எதுவும் பேசாமல் நின்ற பக்கிரியை உற்றுப் பார்த்த பாப்பாத்தி, ‘ஊமக்  குசும்பனாட்டம்  நீ நிக்கிறதுலேர்ந்தே எனக்குத் தெரியுது… நீ மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுற ஆளுன்னு..’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள்.

பத்தர்கள் பொதுவாக தங்களுடைய சொந்த பிள்ளைகளை தன் கூடவே வைத்துக் கொண்டு வேலை கற்றுத் தர மாட்டார்கள். மாமனோ, மச்சானோ இல்லேன்னா உடன் பங்காளியோ யாரிடமாவதுதான் நகை வேலை கற்றுக்கொள்ள அனுப்புவார்கள். அப்படித்தான் தன் புள்ளை பாலுச்சாமியை முருகவேல் பத்தரிடம் வேலை கற்றுக் கொள்ளவும், தன் தங்கை மகன் சேப்பரசனை தன்னிடம் வேலை கற்றுக்கொள்ளவும் வைத்துக்கொண்டான்.

’இந்த பேருண்மை புரியாமல் இந்த  குந்தாணீ இப்படி பேசுகிறாளே’ என்று மெல்லிய கோபம் பக்கிரிக்குள் படமெடுத்து  ஆடினாலும், ‘புள்ள பாசத்துல ஏதோ பிலாக்கணம் வைக்கிறாள்” என்று சாதாரணமாக அதை எடுத்துக் கொண்டான் பக்கிரி.

இப்படித்தான் தனது வாழ்வெனும் பொதுவெளியில் தென்படும் கரடு முரடுகளை, தனக்குள் இருக்கும் ஒரு நியாயத் தராசில் போட்டு நிறுத்துப் பார்த்து மனசை சமவெளியாக்கிக் கொள்வான் பக்கிரி. அது அவனுக்கு கைவந்த கலை. இந்தக் கலை தன்னோடு கூடவே வாழ்வில்  பயணிக்கும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பான். நினைப்பது எல்லாமா வாழ்வில் நடந்துவிடுகிறது?

******
நாகை ரஸ்தாவில் இருக்கிற அத்தை கோகிலா வூட்டுக்கு வாரத்துக்கு ரெண்டு தடவை போய் வருவான் பாலுச்சாமி. அப்படி அடிக்கடி அத்தை வீட்டுக்கு அவன் போக இன்னொரு காரணமும் இருந்தது.

கோகிலா வீட்டுக்கு பக்கத்து வீடு ஆனந்த பத்தர் வீடு. அவரிடம்  வீட்டுலேயே  பட்டறை வைத்து நகை வேலை செய்து வந்தார் அவர். நிறைய வேலை நடக்கும். அதனாலேயே தன்னோட சொந்தக்கார பிள்ளைகளை பட்டறக்குடத்தானாக வைத்திருந்தார். அதில் சாமிநாதன், பாஸ்கர், செல்வராஜ் என்கிற அவரது சொந்தக்கார பசங்க அவரிடம் வேலைக்கு  இருந்தார்கள்.

அதில் முருகவேலு பத்தர் தகட்டாலைக்கு தகடு போடவோ, கம்பி போடவோ சாமிநாதன் வரும்போது பாலுச்சாமிக்கு கூட்டாளியானான். சிரிக்க சிரிக்க ப் பேசுவான் சாமிநாதன். ரொம்ப நல்லவன்.  அவனுக்கு பிடித்துவிட்டதென்றால் சட்டுன்னு தோள் மீது கை போட்டு பேசிவிடுவான். அப்படி ஒரு சுபாவம் அவனுக்கு.

வாயத் திறந்தால் சகட்டு மேனிக்கு பத்தர் பாஷை பேசுவான். இதெல்லாம்தான் பாலுச்சாமியையும் சாமிநாதன் மீது பதிலுக்கு அவன் தோள்பட்டை மீது கைபோட்டுப் பேச வைத்தது. ராத்திரி ரெண்டாமாட்டம் சினிமாவுக்கு போற அளவுக்கு கூட்டாளியாக்கியது.

அத்தை கோகிலா வீட்டுக்கு போகும்போதெல்லாம் பாலுச்சாமிக்கு அவள் எதையாவது திங்கக் கொடுப்பாள். கோகிலா கெட்டி உருண்டை ஸ்பெஷலிஸ்ட். பொரிவிளங்காய் உருண்டை  என்கிற நாகரிகப் பெயர் தரித்த அதை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் கெட்டி உருண்டை என்பார்கள். அரிசி மாவு, பயித்தம் பருப்பு மாவு, எள்ளு, தேங்காய் பல்லு போட்டு… அதில்  அச்சு வெல்லப் பாவு ஊற்றி  உருண்டையாக பிடித்தால், அதுதான் கெட்டி உருண்டை.

தீபாவளி பலகாரங்களில் கட்ட கடைசியாக தீர்ந்து போகிற அயிட்டம் இதுவாகத்தான் இருக்கும். கையிலும் வாயிலுமாக ரொம்ப நேரம் வைத்து தின்னலாம். பாலுச்சாமிக்கு கெட்டி உருண்டை என்றால் மனசு சப்புக்கொட்டும். அதனாலேயே கோகிலா அத்தையையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

அப்படித்தான் ஒரு தடவை கோகிலா வீட்டுக்கு போயிருந்தபோது, ‘’பாலு பேசாம எங்க வூட்டுல தங்கிகிட்டு, தகட்டாலைக்கு வேலைக்கு போயேன்..’’ என்றாள் கோகிலா.

‘’இல்ல அத்தே… முருகவேலு மாமா புள்ள மாதிரி என்ன வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வருஷத்துல அவர்கிட்டே வல்லிசா வேலை கத்துக்குவேன். இப்ப போயி நான் எங்க அத்த வூட்டுலேர்ந்து வேலைக்கு வர்றேன்னு சொன்னா கிரிசல்கெட்டுப் போயிடும்…வேணாம் அத்தே…’ என்றான்.

பக்கத்தில் நின்ற சாமிநாதன், ‘’ என்ன அண்ணன் புள்ளைக்கு வயனமா நசுவ, நடையான் செஞ்சு போட்டு அவன சாப்பாட்டு ராமனாக்கலாம்னு பாக்கறீங்களா…’’ என்றான் எகத்தாளமாக.

சும்மாவே சிரித்துக்கொண்டார்கள் மூவரும்.

**** ***
வெறும் தங்கத்தையோ, பவுனையோ வைத்து மட்டும் ஒரு நகை தயாரித்துவிட முடியாது.  அதற்கு   நுணுக்கமாக  பல  பொருட்கள் தேவைப்படும். பட்டியல் போட்டால் மாளாது.  அந்தப் பொருட்களுக்கு பட்டறை சாமான்கள் என்று பெயர். அவற்றை விற்பனை செய்வதற்கு என்றே  பிரத்தியேகமான கடைகள் நகர் பகுதிகளில் இருந்தன. அவை – பட்டரை சாமான் விற்கும் கடை என்றழைக்கப்பட்டன.

எல்லையம்மன் கோயிலில் அன்றைய நாட்களில் புகழ்பெற்றிருந்த அருணாச்சல செட்டியார் அண்ட் கோ கடைக்கு  பட்டரை சாமான் வாங்க அடிக்கடி போவான் பாலு. மயில் மார்க் வாள் கம்பி,  சிங்க மார்க் வாள் கம்பி,,  சேப்பு அரக்கு,  மெழுகு உருண்டை, வெங்காரம்,  துருசு என்கிற துத்தநாகம், கரவடிக்கட்டை, நயவடிக் கட்டை,  பித்தள புருசு,, பட்டை அரம்  வாங்க என்று போவான் பாலு.

அப்படி அவன்போகும் போதெல்லாம் அவனை அந்தக் கடை முதலாளி கோவிந்தராஜ் செட்டியார்,  ’’வாடா… பறக்கா வெட்டி..’’ என்றழைப்பார். அவர் என்னமோ அவனை செல்லமாக அப்படி அழைப்பதாக பாலுச்சாமி நினைத்துக்கொண்டிருந்தான். அப்படி அவர் அழைக்கும் போதெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்துக்கொள்வான் இவன்.  ஒரு தடவை அப்படி பட்டறை சாமான் வாங்கப் போகும்போது அந்த முதலாளியிடம் ’’பறக்காவெட்டின்னா.. என்ன செட்டியாரய்யா..? என்று கேட்டே விட்டான்.

’’அதுவாடா… ஒங்கூட வேல கத்துக்கிறான் பாரு செவராமன்… அவன்கிட்டே கேளு…’’என்றார்.

பட்டற சாமான் வாங்க பாலு விருப்பமுடன் செல்ல ஒரு காரணமும் இருந்தது. அதுவும் நடு மத்தியானம் பண்ணெண்டே முக்கால் மணிக்கு போவதென்றால் அவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அந்தக் கடையில் அந்த செட்டியார் ஒரு டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோ வைத்திருப்பார். பேட்டரியில் பாடும்  கையோடு  குளிக்கிற இடத்துக்குக் கூட எடுத்துட்டுப் போகலாம். எல்லா இடங்களிலும் அப்போது ரேடியோ இருக்காது. ரேடியோ என்பது வசதிப் பண்டம். அது வாங்க பலபேரிடம் காசு இருக்காது. செட்டியாரிடம் இருந்த டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவுக்கு சின்னதா பூ போட்ட சட்டை தெச்சிப் போட்டிருந்தார். அந்த ரேடியோவில் வரும் ஒரு குரலை கேட்கத்தான் அவன் அந்த நேரத்துக்கு செட்டியார் கடைக்கு போக விரும்பினான்.

தினமும் சரியாக பண்ணெண்டே முக்கால் மணிக்கு ரேடியோவில் ’டெல்லி அஞ்சல்… செய்திகள்  வாசிப்பது சரோஜ் நாராயண சாமி…’ என்கிற  கணீர்க் குரலை கேட்பதுதான் அந்த விருப்பம்.

-  தொங்கட்டான் அசையும்…

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close