[X] Close

ஆண் நன்று பெண் இனிது 29 : சாய்ந்துகொள்ள தோள்!


aan-nandru-pen-inidhu-29-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 19 Sep, 2018 09:35 am
  • அ+ அ-

அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒத்தாசையாக இரண்டு நாட்கள் உடனிருந்தேன். அங்கே காவலாளி பணியிலிருக்கும் கண்ணபிரான் என்பவரோடு அவ்வப்போது  பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு அமைந்தது. அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர், மெலிந்த தேகத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தார். அந்த மருத்துவமனையில் அவரைத் தவிர நான்குபேர் காவல் பணியினைச் செய்தார்கள். அங்கிருக்கும் மற்ற காவலாளிகள்போல இல்லை இவர்.  

தான் கொஞ்சம் அதிகம் படித்தவன் என்று காட்டிக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதுபோலத் தோன்றியது.. ஏதாவது அரசு பதவியொன்றில் தனக்குக்கீழ் பணிபுரியும் பலரை வேலைவாங்கியே பழக்கப்பட்ட தோரணை அவரிடமிருந்தது. ஆனால் கதவைத் திறக்க, மூட அல்லது அங்கே வருபவர்கள் கழற்றி விடுகிற காலணிகளை ஒழுங்குசெய்து வைக்க  சலிப்படையவே மாட்டார். ஆங்கிலப்புலமையை வெளிப்படுத்துவதன் வழியாக தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்கிறாரோ என்று தோன்றும்படியாக பெரும்பாலான நேரங்களில் அவரது உரையாடல் இருக்கும். ஆனால் கிராமத்திலிருந்து வருபவர்களிடம் மதுரைக்கே உரிய உரிமையான குரலுடன் தமிழில் பேசுவதையும் கவனித்தேன். அதிகாரமான உடல்மொழியும், பிரத்யேக பணிவும், வயதை மீறிய சுறுசுறுப்பும் என தோற்றத்திற்கும் செயலுக்குமிடையே ஒன்றுகொன்று வேறுபாடு இருந்ததால் அவரின் மீதான கவனம் எனக்கு ஏற்பட்டது. .

ஒருநாள் மதியம் அம்மாவின் ரத்தப்பரிசோதனை அறிக்கையை வாங்கிக்கொண்டு வருவதற்காகச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனையின் ரத்தப்பரிசோதனை மையத்தின் அருகேதான் கண்ணபிரானுக்கு இருக்கை இருந்தது. உள்ளே செல்லும்போது, ‘சாப்பாடெல்லாம் ஆச்சா மேடம் ?’ என்று சிரித்தபடியே கேட்டவரிடம் பதில் சொல்லிவிட்டு, அவரிடம், ‘நீங்க சாப்பிட்டீங்களா?’ என்று கேட்டேன். ‘ஒரு மணிக்கெல்லாம் மதியச் சாப்பாடு  சாப்பிட்ருவேன். இங்க எங்கூட வேல செய்யுறவங்க, ’கண்ணபிரானுக்கு வயித்துகுள்ள மணியடிக்குதோ இல்லையோ, இவரு வீட்டம்மா மனசுக்குள்ள அடிச்சிரும்’ன்னு நம்மள கிண்டல் செய்வாங்க’ அந்தளவுக்கு நம்ம வீட்டம்மா சரியா பன்னெண்டேமுக்காலுக்கு சாப்பாட்டோட ‘டாண்’ன்னு வந்து நிப்பாங்க’ என்று சொன்னார். ‘அப்படியா, அவங்கதான் தினமும் சாப்பாடு கொண்டு வருவாங்களா, உங்க வீடு எங்க இருக்கு?’ என்று கேட்டேன். இங்கதான் நாலே  எட்டு, இந்தத்தெரு முடிஞ்சதும் திருப்பத்துல நம்ம வீடு, இவ்வளோ பக்கம்ங்குறதாலதான் இங்க வேலைக்கு வந்தேன்’ என்று சொன்னார்.

‘இதுக்கு முன்னால எங்க வேலை பாத்தீங்க?’ என்று கேட்டேன். ‘பொதுப்பணித்துறையில வேலை பாத்தேன்’ என்று சொன்னார். இந்த வேலைக்கு வரணும்னு எப்படித் தோணுச்சு?’ என்று கேட்டேன். ‘ரிடையர்டானதிலிருந்து பேப்பர் படிக்க, வாக்கிங் போக, டீவி பாக்கன்னு வீட்லயே இருந்தேன். சும்மாவே இருக்கமேன்னு நெனைச்சிட்டு இருந்தப்ப, பாதுகாப்பு மேலாண்மைப்பணிக்கு ஆள் எடுக்கிற ஒரு நிறுவனத்தோட விளம்பரம் பாத்துட்டு அங்கே நேர்காணலுக்குப் போனேன். அவங்க என்னோட அனுபவத்தைக் கேட்டுத் தெரிஞ்சிகிட்டு, தனியார் வங்கி ஏடிஎம், சில தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைன்னு ஒரு லிஸ்ட் குடுத்து, தேர்வு செய்யச் சொன்னாங்க. எல்லா இடத்துலயும் சொல்றதென்னவோ ‘செக்யூரிட்டி’ன்னு ஒரே ஒரு சொல்தான், ஆனா நாம எந்த இடத்துக்கு இல்லேன்னா எந்தப்பொருளுக்கு அதுவுமில்லேனா எந்த மனுஷருக்குக் பாதுகாப்பா  இருக்கோமோ அதப்பொறுத்து நம்ம மீதி வாழ்க்கைய வச்சுக்க முடியும்னு தோணுச்சு. நம்மள யாராவது பாத்துகிற காலம் வர்றவரைக்கும் நாம யாரையாவது பாதுகாப்புப் பண்ணிட்டு இருக்கோம்ங்குறதுதான நாம வாழ்ற இந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தத் தரும். நான் வேலையில இருந்த காலம் முழுசும், கட்டடம் கட்டுறது, ரோடு போடுறதுன்னு சிமின்ட், ஜல்லி, மணல், தார்னு அதுக்குள்ளேயே இருந்தாச்சு. ஆனா அப்பவும்கூட நெடுஞ்சாலைக்கோ, கட்டடத்துக்கோ எம்மனசுகுள்ள ஒரு வரைபடம் உருவாகுறப்பவே, அதைப் பயன்படுத்துற மனுஷங்களோட பாதுகாப்புதான் என்னோட நினைவுக்கு வரும். மத்த எல்லா இடங்களையும்விட இங்க பலதரப்பட்ட மக்கள் வருவாங்கன்னுதான் ‘மருத்துவமனை’ன்னு தேர்வு செஞ்சேன், அதுவும் நம்ம வீட்டுக்கு இவ்வளோ பக்கமாவே அமைஞ்சுபோச்சு. நானும் இங்க வந்து நாலு வருஷமாச்சு’ என்று சொன்னார். ஒரு சிறிய கேள்விக்கு மிக நீளமாக பதில் சொல்வது அவரது சுபாவம்போல இருந்தாலும் அவரிடம் பேசுவதற்கான சுவாரஸ்யம் எனக்கு பிடிபட்டுவிட்டது.. வயோதிகம் அல்லது உடல்கூறு காரணமாக அவருடைய வாயிலிருந்து எச்சில் சுரந்து கொண்டேயிருந்தது. ஆனால் அவருடைய ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமிடையே அவரது உதடுகளில் படிந்து வெளியே தெறித்துவிடாத ஈரத்தின் மினுக்கத்தோடு அது இருந்தது.

‘இங்க வந்ததுலயிருந்து உங்க மனசுக்குள்ள பதிஞ்ச சம்பவம் ஏதாவது இருக்கா?’ என்று கேட்டேன். ‘தினம் தினம் ஒரு சம்பவம் இல்லேன்னா யாராவது ஒரு மனுஷர்னு மனசுல பதிஞ்சிடும். ஆனா நான் இங்க வந்த புதுசுல இந்த ரத்தப்பரிசோதனைக்கு வந்த ஒருத்தர், இங்க வேலைபாத்திட்டிருக்கிற ராஜஸ்வரின்னு ஒரு பொண்ணுகிட்ட சத்தம்போட்டுப் பேசிட்டு இருந்ததக் கேட்டுட்டு, ஏதோ பிரச்சினைபோலன்னு பக்கத்துல வந்து விசாரிச்சேன். ‘அவரு பேரு ‘பரமசிவம்’ ஆனா அந்தப்புள்ள காதுல ‘பரமேசுவரன்’ன்னு  விழுந்திருக்கும்போல, எழுதி வச்சிருச்சு. டாக்டர் குடுத்த சீட்டையும் பாக்கல. ரிப்போர்ட் வாங்க வரும்போது ‘பரமசிவம்’ங்குற பேர்ல ரிசல்ட் இல்லாம தடுமாறிருச்சு. அன்னைக்கு வந்தவங்க பெயரெல்லாம் பாத்து ஒரேயொரு ஆண் பெயர் இருக்க, மத்தவங்கல்லாம் பெண்ங்குறதால ‘பரமேசுவரன்’ன்னு இருக்கேன்னு கேட்டிருக்கு. அவரு’பரமசிவன், பரமேசுவரன்’ எல்லாம் ஒண்ணுதான், அதுவாத்தான் இருக்கும் கொடுங்க’ன்னு கேட்டிருக்கிறார். ‘அதெப்படி ரெண்டும் ஒண்ணாகும்’ன்னு அந்தப்புள்ள கேக்க, இவரு,’ இங்க வந்தப்பின்னாடி பேரு மட்டுமில்லைங்க எல்லாருமே ஒண்ணுதான்’ன்னு சொல்லிருக்கிறார். அந்தப்புள்ள மறுபடியும்,’சார், இது மருத்துவமனை, அப்படிஎப்படி நீங்க சொல்வீங்க, ஒவ்வொருத்தர் உடம்புலயும் என்ன வியாதி இருக்குன்னு தனித்தனியாத் தெரிஞ்சுக்கத்தான் அவங்கவங்க உடம்புலயிருந்து ரத்தம் எடுக்கிறோம், இங்க வந்து நின்னு தத்துவம் பேசிட்டு இருக்கீங்க’ன்னு கேட்டுருச்சு. அதுக்கு அவர், ‘தத்துவம் இல்லை மேடம், இவ்வளோதான் வாழ்க்கை, காலம்பூரா ஓடியாடி உழைக்கிறோம், நம்மகிட்ட உறவா இல்லாத யார்யார்மேலயோகூட காரணமேயில்லாத பகைய நமக்குள்ளேயே  வளத்துகிறோம், ஆனா நம்ம உடம்பு நம்ம சொல் கேக்காமப் போயி, யாரு கையவாவது புடிச்சுக்கும்போதுதான் தெரியும், ‘இவ்வளோதானா, இதுக்கா இவ்வளோ ஆர்பாட்டம்’னு, அதான் மேடம் சொன்னேன். அதுவுமில்லாம ’பரமசிவன், பரமேசுவரன்’ ரெண்டுமே ஒண்ணுதான் மேடம், எல்லாம் அவன் செயல்தானே’ன்னு சொல்லிக்கொண்டிருந்தார். அந்தச் சம்பவம் என்னோட மனசுக்குள்ள பதிஞ்சி போயிருச்சு. அதனால இங்க வர்ற எல்லோருமே எனக்கு ஒண்ணுதான். அதுவுமில்லாம எல்லோரும் ஒருநாள் யார் கையவாவது புடிச்சிகிட்டுத்தான நடக்கணும். அதுவரைக்கும் நம்மளால முடிஞ்ச அளவு மத்தவங்கள கையைப் புடிச்சு தூக்கி விடுவோம்ன்னு தோணிடுச்சு’ என்று சொன்னார்.

‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்டேன். ‘ரெண்டு பசங்க, ரெண்டு பேருமே கல்யாணமாகி அவங்கவங்க குடும்பத்தோட யூஎஸ்ல இருக்காங்க. ஒரே ஒரு பொண்ணு, திருச்சியில கல்யாணம் பண்ணிக்குடுத்தோம். ரெண்டே மணிநேரம்தான, நெனைச்சப்பல்லாம் ஒரு எட்டு வந்து பாத்துட்டு போகும்.. மத்தபடி நாங்க ரெண்டுபேர் தான் இங்க .’ என்று சொன்னார்.

‘அரசாங்கத்துல உத்தியோகத்துல இருந்துருக்கீங்க. குடும்பமும் நல்ல நிலையில இருக்கு. இங்க வந்து ‘செக்யூரிட்டி’யா இருக்கிறதுக்கு உங்க பிள்ளைங்க ஒண்ணும் சொல்லலையா?’என்று கேட்டேன்.

‘இங்க பெரும்பாலும் மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னுதான் நாம வாழறோம். நமக்காக வாழணும்ல. பசங்களுக்கு நம்ம குணம் தெரியும். வீட்டுக்கு வந்த மருமகபுள்ளைங்களுக்குத்தான் கொஞ்சம் வருத்தம். ஏதோ அவங்களை அவமானப்படுத்துறதா நினைக்குறாங்க.’உங்க அப்பாவுக்கு பணமா இல்ல’ ன்னு கேட்டு அப்பப்ப முகத்தைத் திருப்பிக்குவாங்க. வேலைய பணத்தோடதான நாம தொடர்புபடுத்திப் பாத்துப் பழகியிருக்கோம். ஒரு பையன் பிறந்து வளரும்போதே, ‘நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப்போயி, நல்லபடியா கல்யாணமாகி’ன்னுதான் சொல்லி வளக்குறோம். கை நிறைய சம்பளத்துல வேலைக்குப்போனவுடனே அதுக்குமேல படிப்புத் தேவையில்லனு நிறையப்பேர் நெனைச்சுகிறாங்க. தான் வேலை பாக்குற துறை சார்ந்துகூட மேல படிச்சுத் தெரிஞ்சுகிறதுல்ல. அதனால ரிட்டையர்டானவுடனே உலகமே கைவிட்டுட்ட மாதிரி ஆகிடுவாங்க. ஒருபக்கம் இப்படின்னா இன்னொருபக்கம் எம்பதுதொண்ணூறு வயசுக்கும்கூட  ஓய்வே இல்லாம வேலை செய்றவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. முதியோருக்காக ஒரு சில நாடுகள்ல குடுக்கிற கவனம் நம்ம நாட்ல இல்ல. எப்படியோ இந்த மனிதவள மேலாண்மைனு ஒரு தொழில்நுட்பம் வந்தபிறகு அவங்கவங்க திறமைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் தக்க லட்சக்கணக்கானவங்க இந்தத் தொழில்ல ஈடுபட்டிருக்காங்க, இப்படியொரு தொழில் இல்லேன்னா நிறைய ஆண்களோட ஆரோக்கியம் ரொம்பவே கெட்டுப்போயிருக்கும்’ என்று சொன்னார்.

‘உங்களுக்கு இங்கே பொழுது நல்லபடியா போகுது, வீட்ல இந்த வயசுல அவங்க தனியா இருக்கும்போது அவங்களுக்கு என்னவோ போல இருக்கும்ல?’ என்று கேட்டேன். ‘நீங்க கேக்குறது சரிதான். பெண்கள் பெரும்பாலும் தங்களை வீட்டோடவே பொருத்தி வச்சுக்குவாங்க. ஆனா ஆண்கள் வேலைவேலைன்னு வெளியவே சுத்திப் பழக்கப்பட்டிருப்பாங்க. வயசான காலத்துல வீட்டோட இருந்தா ஏதோ தண்டனை மாதிரி நினைச்சுக்கிற ஆட்கள் நிறையப்பேர் இருக்காங்க. அரசாங்கம், வங்கின்னு நல்ல உத்தியோகத்துல இருந்து ஓய்வுபெறுகிற அன்னைக்கு ஒடம்புல இருந்து உசுர உருவி அங்கேயே குடுத்துட்டு வெளிய வந்து விழுகிற மாதிரி இருக்கும். அழுது தவிச்சு உள்ளுக்குள்ளேயே குமைஞ்சு வாழறவங்க ஒருபக்கம் இருக்காங்கன்னா, அதுவரைக்கும் ஆரோக்கியமா இருந்தவங்க அதுக்கப்புறம் கொஞ்ச நாளல்ல ஏதேதோ நோய் வந்து இறந்து போறவங்க இன்னொருபக்கம் இருக்காங்க. ஆண்களைப்பொருத்த வரைக்கும் குடும்பம் முக்கியம்தான், குடும்பத்துகாகத்தான் சம்பாதிக்கிறான், ஆனா என்னைக்கு அவனால வேலையின்னு ஒண்ணு செய்யமுடியாம போகுதோ அன்னையோட அவன் முடிஞ்சிடுவான். அதனால முதுமை ஆண்களுக்கு வேறமாதிரியும், பெண்களுக்கு வேற மாதிரியும் மாறிடுது. நம்ம வீட்டப்பொறுத்த வரை, ஒருவாரம் பகல், ஒருவாரம் ராத்திரின்னு  வேலைக்கு வந்துட்றேனா, இந்த இடைவெளி எங்க ரெண்டுபேருக்கும் முன்னவிட கூடுதலான பிரியத்தைக் குடுத்திருக்கு’ என்று சொன்னார்.

 ‘மற்ற எல்லாரையும் விட நீங்க இங்க வர்ற எல்லார்கிட்டேயும் ரொம்ப இணக்கமா நடந்துகிறதப் பாத்தேன். அதான் உங்ககிட்ட பேசத்தோணுச்சு, உங்களை சந்திச்சது சந்தோசம்’ என்று சொன்னேன். ‘இது போதாதா நான் இங்க வேலை பாக்குறதுக்கு?’ என்று சிரித்தபடியே சொன்னவர், ‘நோய் வந்தபிறகு எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் யார் மேலயாச்சும் சாஞ்சுக்க மாட்டோமான்னு இருப்பாங்க. யாராவது நம்மள தாங்க மாட்டாங்களான்னு எதிர்பாத்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு கேட் திறந்து விடுறதுல இருந்து, கொண்டு வந்திருக்கிற பொருள்கள தூக்கிட்டுப்போய் கொடுக்கிறதுல வரைக்கும் என்னால முடிஞ்சத செஞ்சுடுவேன். இப்படியே இங்க போட்டுருக்கிற ஸ்டூல்ல சும்மா உக்காந்துட்டு இருக்க என்னால முடியாது. கதவத்திறந்து விடுறது, மூடுறது மட்டும்தான் என்னோட வேலையின்னு இருக்க முடியல. இப்படி நான் இருக்கிறது  எங்கூட இருக்க மத்தவங்களுக்குப் புடிக்காது. ‘இதெல்லாம் நம்ம வேலையில்லப்பா’ன்னு சொல்வாங்க. அவங்ககிட்ட,’ நம்ம ஒடம்புல எந்த உறுப்பும் இருக்கறதாவே நமக்கு உறுத்தக்கூடாது. எப்ப நம்ம ஒடம்புல ஒரு நோய் வருதோ, அதுக்கப்புறம் நம்ம கண்ணுக்குத் தெரிஞ்ச கை, காலு, கண்ணுன்னு மட்டுமில்லாம நுரையீரல், இதயம்னு கற்பனைபண்ணிகிட்டே இருக்கத்தோணும். நம்மகூட இருக்கிற உறவோ அல்லது  நம்ம உடம்புல இருக்கிற ஒரு உறுப்போ இருக்கிறது தெரியாம இருக்கிறதுதான்  ஆரோக்கியமானது. அதனால ஆரோக்கியமா இருக்க முயற்சி செய்றேன்ப்பா’ ன்னு’ சொன்னேன்’ என்று சிரித்தவரின் சொற்களில் ஈரம் மினுங்கியது. 

- அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close