[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 24 - ரெட்டைச் சவாரி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 14 Sep, 2018 17:19 pm
  • அ+ அ-

ஸ்ரீதர் கிட்டேயிருந்து போன். என்ன ஏதுன்னு கூட சொல்லலை. உடனே வான்னாரு. இது மாதிரி ஊருக்கு போய்ட்டிருக்கேனு சொன்னேன். எங்க இருக்கேன்னு கேட்டதுக்கு செங்கல்பட்டுன்னேன். உடனே இறங்கி இந்த அட்ரஸ் கொடுத்து வரச் சொன்னான்.

நான் நிறைய வாட்டி வாய்ப்பு கேட்டு அவனோட போயிருக்கேன். சரி சொன்னா கேட்க மாட்டேன்குறான்னு அம்மா அப்பாகிட்ட நீங்க போங்க பின்னாடி வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொல்லி அடுத்த பஸ் பிடிச்சு வந்தா ஸ்டில் ஷுட்டுங்கிறாங்க. என்னால ஏதும் சொல்ல முடியலை. சரின்னு ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். உங்க கிட்ட சொல்ல கூடாதுனு எல்லாம் கிடையாது அண்ணே” என்று ஒரே மூச்சாய் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு பேசினான் ராம்.

ராமராஜ் புகையை ஆழமாய் இழுத்து சிறிது நேரம் தம் கட்டி அவனையே பார்த்தபடி இருந்துவிட்டு, மெல்ல புகையை வெளியே விட்டார். அவனது முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ராம் இன்னமும் முகத்தை பாவமாக்கினான்.

“தம்பி.. உன் பிரச்சனை எனக்கு புரியுது. சினிமாவுல யாரையும் வேணாம்னு பகைச்சுக்க முடியாது. சினிமா ரொம்பவே சின்ன உலகம். ஈஸியா தெரிஞ்சுரும். என்ன வருத்தம்னா என் கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம். உன்னை ஹீரோவா தூக்கிட்டு திரிஞ்சவன் நானு.

என் படத்துல ஹீரோவா புக் ஆனவுடனேயே இன்னொரு படம் கிடைக்குது அதுவும் நல்ல பெரிய டீமோடங்குற போது சந்தோஷம்தான்படுவேன். என்ன.. எனக்கு கொஞ்சம் டேட்ஸ் பிரச்சனை வராம பார்த்துக்க அது போதும். டைரக்டர விட நடிகனுக்கு வாய்ப்பும் வயசும் முக்கியம். பார்த்துக்க தம்பி.” என்று சொல்லியபடி எழுந்தார்.

“தம்பிக்கு காஸ்ட்யூமர் கிட்ட சொல்லி ட்ரெஸ் ரெடி பண்ணச் சொல்லு. நாளன்னைக்கு நம்ம பட ஸ்டில் ஷூட்” என்று  பத்ரியை பார்த்து கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு வெளியே போனார். ராம் என்ன சொல்வது என்று புரியாமல் அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

***********************

ஸ்ரீதர் தன் செல்போனில் வந்திருந்த டிசைன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு டிசைனாய் பெரிதுபடுத்தி பார்த்தபடி, அதில் இருக்கும் நிறை குறைகளை சொல்லிக் கொண்டிருக்க, கார்க்கி அதை நோட் செய்து கொண்டிருந்தான்.

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன்  கார்க்கி எழுதியிருந்த கரெக்‌ஷன் பாயிண்டுகளை ஒரு முறை படித்துப் பார்த்தான்.

“சார்.. நீங்க சொன்ன கரெக்‌ஷன்களை எல்லாம் வச்சி பார்க்கும் போது இந்த மாதிரி நீங்க எதிர்பார்க்குறீங்கன்னு புரியுது. ரெபரன்ஸுக்கு இதை அனுப்பிவைக்கலாமா?” என்று சடுதியில் இண்டர்நெடிட்டில் தேடி ஒரு டிசைனை எடுத்துக் காட்டினான்.

கார்க்கியை பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ஓகே சொன்னான்.

அடுத்தடுத்த நடந்த வேலைகள் புயலாய் நடந்தது. பைனல் டிசைன் எல்லாம் தயாராகி போட்டோ கார்ட்டாய் ஆபீஸின் முகப்பில் மாட்டப்பட்டது. ஒர் அமாவாசை சுப தினத்தில் தந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

ராமுக்கு முதலில் வந்த கால் ராமராஜிடமிருந்து. “வாழ்த்துக்கள். ஆபீஸ் வாங்க கொண்டாட்டத்த முடிச்சிட்டு” என்று வைத்துவிட்டார்.

ராம் சற்றே குழம்பினாலும், அடுத்தடுத்து வந்த கால்கள் அவனின் குழப்பத்தை மறக்க வைத்துவிட்டது. சந்தோஷமாய் இருந்தது. ஸ்ரீதரைப் பார்க்க அலுவலகம் போன போது ப்ரேமியை சுற்றி ரெண்டு மூன்று பேர் நின்றிருந்தார்கள்.

ப்ரேமியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுரேந்தர். ராமை பார்த்ததும் “வாங்க ஹீரோ” என்று வரவேற்றார்.

”என்ன சொல்றாங்க என்னப் பத்தி?” என்று கேட்டார்.

ராமுக்கு எதுவும் புரியவில்லை. அவன் முழிப்பதைப் பார்த்துவிட்டு, சேது உதவிக்கு வந்தார் “இல்ல நம்ம விளம்பரத்தைப் பார்த்துட்டு மக்கள் இவரைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு கேட்குறாரு?’ என்று விளக்கிக் கொடுக்க, ராமுக்கு இப்போதும் என்ன சொல்வது என்று புரியவில்லை “விளம்பரம் நல்லாருக்குன்னு எல்லாரும் பாராட்டுனாங்க. சார். “ என்றான்.

“சார் படம்னாலே பரபரப்பா , நல்லாத்தான் இருக்கும்னு சொன்னாங்கன்னு சொன்னீங்களே போன்ல. அதச் சொல்லுங்க” என்று சற்று அழுத்தம் கொடுத்து சொல்ல ராமுக்கு புரிந்தது. “அட ஆமா சார். எல்லாரும் அப்படித்தான் சொன்னாங்க. இந்த வாட்டி விள்மபரத்துல நம்ம கம்பெனி லோகோவ விட உங்க போட்டோ தான் சூப்பாரா இருக்குன்னு சொன்னாங்க” என்றான். சுரேந்தருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது.

கட்டிப்பிடித்துக் கொண்டார். அதை ஸ்ரீதர் பார்த்தான். அவனுக்கு அவர்களின் நெருக்கம் பிரிக்கவில்லை. அவரிடமிருந்து விலக்க அவனை ஸ்ரீதர் அழைத்தான்.

“சார்.டைரக்டர் கூப்பிடுறாரு.. போய்ட்டு வந்திடறேன்” என்று கிளம்பியவனை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு “இருங்க அவன் சும்மா கூப்பிடுவான். என்னோட எவன் க்ளோசா இருந்தாலும் அவனுக்கு ஆகாது” என்று சொல்லி இருக்கி உட்கார வைத்தார்.

அப்போது இன்னொரு நண்பர் ஒருவர் உள்ளே வர, சுரேந்தர் “வாங்க வாங்க” என வரவேற்றார்.

வந்தவர் விஸ்தாரமாய் சிரித்தபடி “கலக்கிட்டீங்க சார்.. என்னா விள்மபரம். இண்டஸ்ட்ரியே பேச வச்சிட்டீங்க. யார்டாதுனு பார்த்தா நம்ம சுரேந்தர் சார். உங்க சிரிச்ச முகம் இருக்கே.. அட அட” என்று தொடர்ந்து பாராட்ட, சுரேந்தரின் முகம் ரொம்பவே சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.

“ராம்.. உன் ப்ரெண்டு கூட போன்ல என் போட்டோவப் பத்தி சொன்னாங்கன்னு சொன்னியில்ல. அதச் சொல்லு” என்றார்.

ராமுக்கு என்ன சொன்னோம் என்று மறந்தேவிட்டது. புரியாமல் முழிக்க “அதான் தம்பி.. லோகோவ விட சாரோட புது போட்டோ..” என்று மீண்டும் சேது உதவிக்கு வர “ஆமாம் ஆமாம். எல்லாரும் சார் போட்டோ செம்மையா இருக்குன்னு சொன்னாங்க. எனக்கே காண்டாயிருச்சு. ஹீரோ நம்பளைப் பத்தி பேச மாட்டேன்குறாங்கன்னு” என்று எக்ஸ்ட்ரா பிட் போட்டான்.

சுரேந்தர் பல்பாய் பிரகாசித்தார். இப்போது ஸ்ரீதர் மீண்டும் அழைக்க, ராம் அவனை நோக்கி போனான். சட்டென கையை பிடித்து தன் அறைக்கு அவனை அழைத்துச் சென்று “மொகரக்கட்டய எப்படி அடுத்த விளம்பரத்துல தூக்குறதுன்னு யோசிட்டிருக்கேன். அவனை நீ ஏத்தி விட்டிட்டு இருக்கே?.” என்று கடிந்தான்.

“சார்.. எனக்கும் பிடிக்கல தான். உப்புமா பட விளம்பரம் போல ஆயிருச்சு. நீங்க அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு டிசைன் பண்ணது. இந்த ஒரு போட்டோவுனால காலியாயிருச்சுனு. என்ன பண்ண அவரு அதத்தான் விரும்பறாரு. எனக்கென்னவோ அவர் படமெடுக்குறதே விள்மபரத்துக்காகவும்.. என்று இழுத்தான்.

“ரொம்ப ஒட்டாத. கேடி அவன்” என்று எச்சரித்துவிட்டு, “வாழ்த்துக்கள். நல்லா கோவாப்ரேட் பண்ணா உனக்கு ப்ரைட்டான எதிர்காலம்” என்று சொல்ல்விட்டு வெளியே போனான்.

***********************

அடுத்த ரெண்டு நாட்களில் ராமராஜின் ஸ்டில் ஷூட் அதே செட்பயரில். அதே தெலுங்கு சீப் மேக்கப் மேன். அவனுக்கு மேக்கப் போட ஆர்மபித்தார்.

“எனிக்கு சந்தோஷம் சார். என் லைஃப்ல ஒரே வாரத்துல ரெண்டு படத்துல ஸ்டில் ஷூட் ஆரம்பமானது உங்களுக்குத்தான். அன்னி மஞ்சிதி. என் கை ராசி நீங்கோ பெரிய ஆளா வரணும். அண்ணனை மறந்துறாதீங்க” என்று லேசாய் குழைந்தார்.

ராமுக்கு சந்தோஷமாய் இருந்தது. ஆனால் ஓரத்தில் இந்த ஷூட் பற்றி ஸ்ரீதருக்கு தெரிந்தால் என்ன ஆவது என்று பயமும் வந்தது.

“அண்ணே ஒரு உதவி”

“என்னா தம்புடு சொல்லுங்க”

“இன்னைக்கு இங்க நான் ஸ்டில் ஷூட்ல வந்தேனு அந்த கம்பெனில சொல்லிராதீங்க. ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் கேட்டான். அவருக்கு புரிந்தது. நிச்சயமாய் இவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக அரிதான ஒன்று.

ஒரே நேரத்தில் ரெண்டு படங்களில் முதலீடு போடாமல் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் அதே நேரத்தில் ஆரம்பத்துலேயே இத்தனை குழப்பங்கள் ஆகாது. அது பெயரைக் கெடுக்கும். ஆனால் அதை இப்போது சொன்னால் புரியாது. புரிந்தாலும் கேட்கும் மனநிலை இருக்காது. பார்ப்போம் இவன் எப்படி இதை டீல் செய்கிறான் என பார்க்க வேண்டும்.

இவனுக்கு படக்குழுவினருக்குமிடையே ஆன நெருக்கம் எப்படி என்று புரிந்தால் தான் தன் கருத்தை நுழைக்க முடியும். சுரேந்தரைப் பற்றி அவருக்கு தெரியும். சபலன். பெண் பித்தன். குடிகாரன். பீத்த பெருமைக்காரன். துதி பாடினால் காசு கரக்க கூடியவன். ஆனால் நண்பன் ராம்ராஜ் அப்படியானவன் இல்லை.

நல்லவன். நேர்மையானவன். தயாரிப்பாளரும் நல்லவராகவே தெரிகிறார். உள்ளதை உள்ளபடி பேசுகிறார். இங்கு குழம்பியடித்துவிடக் கூடாது ராமின் முடிவு என்று நினைத்துக் கொண்டார். ரவி நினைக்கும் போது மட்டும் லேசாய் பதட்டமாய் இருந்தது. எப்போதும் பணம், பெண் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்.

“அட.. நான் ஏன் சொல்லப் போறேன் தம்பி” என்றவருக்கு ஸ்ரீதரிடமிருந்து போன் வந்தது.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 23 - https://bit.ly/2MuDQCj

பகுதி 22 - https://bit.ly/2wSlRQp

பகுதி 21 - https://bit.ly/2oA8IHS

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close