[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 27: தோற்றப் பிழை


chinnamanasukkul-seena-perunchuvar-27

  • நாகூர் ரூமி
  • Posted: 14 Sep, 2018 14:13 pm
  • அ+ அ-

ஒருமுறை நபிகள் நாயகத்தைப் பார்த்து தோழர் ஒருவர் சொன்னார்: ‘உங்களைவிட நான் அழகானவரைப் பார்த்ததில்லை’! அதே நபிகள் நாயகத்தைப் பார்த்து அபூஜஹல் என்பவன் சொன்னான்: ‘நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்’. அப்போது நபிகள் நாயகம் ஒரு அற்புதமான பதிலைச் சொன்னார்கள். அது என்ன தெரியுமா?

‘நான் ஒரு கண்ணாடியாக இருக்கிறேன்’!

என்ன அர்த்தம்? என்னைப் பார்ப்பவர் என்னில் தன்னையே பார்த்துக்கொள்கிறார்! அவருடைய அசிங்கத்தையோ அழகையோ நான் பிரதிபலிக்கிறேன், அவ்வளவுதான்! எவ்வளவு ஞானம் பொருந்திய வார்த்தைகள்! இன்று நமக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும் காரணம்  கண்ணாடிமுன் நாம் நிற்கும்போது தோன்றும் நமது பிம்பங்களையெல்லாம் இது நாமல்ல, அவர்தான், இவர்தான் என்று நினைத்துக்கொள்வதால் வருவதுதான்.

ஒருமுறை ஆசிரியர்  ஒருவர், பள்ளிக்குக் காலதாமதமாகச் சென்றார். தலைமை ஆசிரியர் ரொம்ப ’ஸ்ட்ரிக்ட் டைப்’. உடனே அந்த ஆசிரியரை அழைத்து கடுமையாகத் திட்டிவிட்டார். இனிமேல் இப்படி வந்தால் விடுப்பு கொடுக்கவேண்டி வரும் என்று குண்டை வேறு தூக்கிப்போட்டார். பதிலுக்குத் தலைமை ஆசிரியரைத் திருப்பித்திட்ட முடியுமா என்ன?! தாமதமாகச் சென்றது தவறுதானே? ஒன்றும் சொல்லாமல், ‘ஸாரி சார்’ என்று சொல்லிவிட்டு வகுப்புக்குள் நுழைந்தார் ஆசிரியர். ஆனால் உள்ளே கொதித்துக்கொண்டிருந்தது. கையாலாகாத கோபம். அல்லது வாயாலாகாத கோபம்.

வழக்கம்போல வருகைப்பதிவை சோதிக்க ஆரம்பித்தார். அப்போது யாரோ ஒரு மாணவன் பேசிக்கொண்டிருந்தான். அவ்வளவுதான். வந்ததே கோபம் அவருக்கு. பிரம்பை எடுத்து அவனை பின்னித்தள்ளிவிட்டார்! ஏன்? அவன் பேசியதுதான் காரணமா? இல்லை. அவரால் தலைமை ஆசிரியரை எதிர்த்து ஒன்றும் பேசமுடியாமல் போனதுதான் காரணம். தலைமை ஆசிரியர்மீது காட்டமுடியாத கோபத்தை அப்பாவி மாணவனின்மீது காட்டினார். இம்மாதிரியான செயல்பாடுகளை உளவியல் Projection என்று பெயரிடுகிறது. 

நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல பிரச்சினைகளுக்கு நமக்கே தெரியாமல் நாம் செய்யும் இந்த இந்த ’ப்ரொஜக்‌ஷன்’தான் காரணம்.

அன்றொருநாள், நான் தலைமுடி வெட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் எனக்கதில் திருப்தி ஏற்படவில்லை. நாவிதன்  அண்ணன், இன்னும் சரியாக வெட்டியிருக்கலாம், சொதப்பிவிட்டானே என்ற எண்ணத்திலும் அவன்மீது கொஞ்சம் கோபத்திலும், இனிமேல் அவனிடம் போகக்கூடாது என்ற சங்கல்பத்தோடும் வீடு திரும்பினேன். வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். என் மனைவி வந்து திறந்தாள்.

‘சரியா வெட்டலை இல்லே?’ என்று கேட்டேன்.

அவள் என் தலையை அப்போது கவனித்திருக்கக்கூட மாட்டாள். ஆனால் என் சிந்தனை பூராவும் என் தலையைச் சுற்றியே இருந்தது. ‘மயிரே போச்சு’ என்று அதை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் பிரச்சினை அதுவல்ல. என் மனைவி என்னைப் பார்த்ததுமே சரியாக வெட்டப்படாத என் தலையைத்தான் அவள் பார்க்கிறாள்  என்று நான் நினைத்தேனே அதுதான் ’ப்ரொஜக்‌ஷன்’! என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நினைப்புதான் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அந்த நேரம் ஓடிக்கொண்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்! அந்த நேரத்தில் லேசான ‘சைக்கோ’ ஆகியிருக்கிறேன்!

ஒருமுறை காமராஜர் அவர்கள் வழக்கத்துக்கு மாறாக அவரது தோள் மாற்றி துண்டைப் போட்டிருந்ததைக் கவனித்த ஒரு பத்திரிக்கையாளர் அதுபற்றி அவரிடம் கேட்டிருக்கிறார். பெருந்தலைவர் ஏதேதோ சொல்லி மழுப்பப் பார்த்திருக்கிறார். ஆனால் பத்திரிகையாளர் விடவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் காமராஜர் துண்டைத் தோளில் இருந்து எடுத்துக் காட்டியிருக்கிறார். சட்டையின் தோள்பட்டைப் பக்கம் ஒரு ஓட்டை இருந்திருக்கிறது! அதை மறைக்கத்தான் அவர் துண்டை தோள்மாற்றிப் போட்டு வந்திருக்கிறார்.

அதுசரி, ஆனால் அவர் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? இதுஎன்ன கேள்வி என்கிறீர்களா? ஓட்டை உள்ள சட்டையை அணிந்துகொண்டு யாராவது வெளியில் வருவார்களா? வரமாட்டார்கள்தான். அதுசரி. சட்டையைப் போடும்போதே ஓட்டை பார்க்கப் பட்டிருந்தால் வேறு சட்டை அணிந்து வந்திருக்கலாம். ஆனால் போட்டுக்கொண்டு வெளியில் வந்தபிறகு ஓட்டை கண்ணில் பட்டால் என்ன செய்வது? அதை மறைக்கத்தானே வேண்டும்?

சரி, ஆனால் அதை ஏன் நாம் மறைக்க விரும்புகிறோம்? இதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.  ஏன் எனில், நாம் அந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியில் போகும்போது ஊரில் உள்ள எல்லாரும் அந்த ஓட்டையைத்தான் பார்க்கிறார்கள் என்று நாம் நினைப்பதுதான் காரணம்! ஆனால் உண்மையில் அப்படி யாருமே பார்ப்பதில்லை. அப்படி நினைப்பது நம்முடைய ’ப்ரொஜக்‌ஷன்’. புரிகிறதா?

இது காமராஜர் காலத்து ப்ரொஜக்‌ஷனுக்கு உதாரணம். ஆனால் இந்தக்காலத்தில் இப்படியொரு ’ப்ரொஜக்‌ஷன்’ நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்? இப்போதெல்லாம் ஆங்காங்கே கிழிந்த மேல்சட்டைகளையும் கால்சட்டைகளையும்தானே விரும்பி, அதிக விலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள்! உடலை மறைப்பதற்காக ஆடை அணிந்த காலம் போய், உடலைக் காட்டுவதற்காக அணிகிறார்கள் இப்போது! இப்போது இளம் ஆண்களும் இளம் பெண்களும் தோள்பட்டை, தொடை, முட்டி என்று ஓட்டை போட்டு உலகுக்குக் காட்டுகிறார்கள். ஓட்டை போடப்பட்ட, கிழிசலான ஆடைகளை அணிந்து செல்வதில் பெருமை வேறு!

ஆங்காங்கே கிழித்து உடலைக்  காட்டுவதுகூட ஒருவிதமான ’ப்ரொஜக்‌ஷன்’தான்! ஆனால் அந்த உடலியல் ப்ரொஜக்‌ஷனுக்குப் பின்னால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற தமிழர் பண்பாட்டுக்குரிய மிக உயர்ந்த பண்புகளை இழந்துவிட்டோம் எனும் உளவியல் ப்ரொஜக்‌ஷனும் உண்டு.

சமீபத்தில் ஒரு ஊரில் கலவரம் வெடித்தது. சில அப்பாவிப் பொதுமக்களை காவல் துறையினர் தடியடி கொடுத்து விரட்டிக்கொண்டிருந்தனர். பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் காமிரா, மைக் சகிதமாக அவற்றையெல்லாம் படம்பிடித்துக்கொண்டும் பேட்டி எடுத்துக்கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சின்னப்பையனை பத்து போலீஸ்காரர்கள் சேர்ந்து மாறிமாறி அடித்தனர். அதைப்பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், ‘சார், உங்க கோவத்தை அந்த பையன் மேல காட்டாதீங்க’ என்று சொன்னார். அதற்கு ஒரு போலீஸ்காரர் கடுப்பாக, ‘எங்களை மட்டும் பொதுமக்கள் நெஞ்சிலே கல்லால் அடிக்கலாமா?’ என்று நெஞ்சை நிமிர்த்தி ஆவேசமாகக் கேட்டார்.

ஒவ்வொரு கலவரத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் காணக்கிடைக்கும். அல்லது கேட்கக் கிடைக்கும். இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. அது என்ன? பத்து போலீஸ்காரர்களால் நையப்புடைக்கப்பட்ட அந்தப் பையன் அவர்கள்மீது கல்லெறிந்தவனல்ல. கல் எறிந்தது யாரோ. ஆனால் அந்தக் கோபத்தையும் வலியையும் காவல்துறையினர் அந்தப் பையன்மீது காட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர். அதாவது ஒருவர் மீதிருந்த ஆத்திரத்தை இன்னொருவர்மீது ’ப்ரொஜக்ட்’ செய்து திருப்தி கொண்டனர்! வீடு முழுவதும், ரோடு முழுவதும், நாடு முழுவதும் நடந்து கொண்டிருப்பது இதுதான். ப்ரொஜக்‌ஷன், ப்ரொஜக்‌ஷன், ப்ரொஜக்‌ஷன்.

இந்த வகையான ப்ரொஜக்‌ஷன்களை உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்டு Defence Mechanism, அதாவது ஒருவிதமான தற்காப்பு நடவடிக்கை என்று வர்ணிக்கிறார். உண்மைதான். இந்த திட்டத்தில் ஊழல் இருக்கிறது என்று சொல்கிறார்களே அது உண்மையா என்று ஒரு அரசியல்வாதியைக் கேட்டால் உடனே அவர் என்ன சொல்வார்? ’இதைச் சொல்வதற்கு அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அவர்கள் ஊழல் செய்யவில்லையா?’ என்று தொடங்கி முழங்குவார்! அரசியலில் இந்த ’ப்ரொஜக்‌ஷன்’ விளையாட்டை நிறைய பார்க்கலாம். என்னைக் குற்றம் சொல்வதற்கு உனக்கு அருகதை இல்லை, நீயே அந்தக் குற்றத்தைச் செய்தவன்தான் என்று சொல்வது நம் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்குச் சமம் என்பது அரசியலில் உள்ள பலருக்குப் புரிவதில்லை!

நம்முடைய உணர்வுகளை அடுத்தவர்மீது கொட்டுவது, நம்முடைய விரும்பத்தகாத குணாம்சங்கள் அடுத்தவருக்கு இருப்பதாக நினைப்பது, நாம் நினைப்பதுபோல்தான் அடுத்தவரும் நினைக்கிறார் என்று நினைப்பது – இப்படி நம் அன்றாட வாழ்வில் நாம் செய்துகொண்டிருக்கும் ’ப்ரொஜக்‌ஷன்கள்’ ஏராளம். அதில் பத்தில் ஒன்பது எதிர்மறையானவை. ஒன்றுதான் நேர்மறையாகதான் இருக்கும்.

ஒரு பெண்ணின்மீது நமக்கு ஒரு ’க்ரஷ்’ வந்துவிட்டால், அவள் எங்காவது பார்த்தால்கூட நம்மைத்தான் பார்க்கிறாள் என்று தோன்றும்! நாம்தான் அவளைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால் அவள் நம்மைப் பார்க்க விரும்புவதாக நினைப்போம்.

நடிகைகள், தொலைக்காட்சிகள் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் போன்றவர்களின் திருமண வாழ்க்கை ஆறுமாதங்களைத் தாண்டுவதில்லையே ஏன்? இவள் விரும்பும் குணங்களெல்லாம் அவனிடம் இருப்பதாக இவளும், அவன் விரும்பும் குணங்களெல்லாம் இவளிடம் இருப்பதாக அவனும் நினைத்துக்கொண்டு கோதாவில் இறங்குவதுதான் காரணம். ‘கோதா’ என்ற சொல் பிடிக்காவிட்டால் கட்டில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்! கொஞ்ச நாளில் ப்ரொஜக்‌ஷன் சாயம் வெளுத்து காயம் ஆகிவிடுகிறது!

கணவனைத்தவிர வேறு ஆண்மகன்மீது ஒரு மனைவிக்கு விருப்பம் வந்துவிட்டால் கணவன் நேர்மையாக இல்லை என்று அவனைக் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிடுவாள். அதேபோல மனைவியல்லாத வேறு பெண்களின்மீது ஆசை கொண்ட ஒரு கணவன் தன் மனைவியை சந்தேகக் கண்களோடு பார்ப்பான். தங்களுடைய குணாம்சம் அடுத்தவருக்கு இருப்பதாக நினைக்கின்ற ப்ரொஜக்‌ஷனில் மாட்டிக்கொண்டு இவர்கள் தவிக்கிறார்கள்.

இவன் ரொம்ப ஒல்லி, அவள் ரொம்ப குண்டு, அவன் ரொம்ப உயரம், அவள் ரொம்ப ஊதாரி – இப்படியெல்லாம் நாம் சொல்வதற்கும் நினைப்பதற்கும்கூட காரணம் நமக்கே தெரியாமல் நம் உடலைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் நமக்குள்ளே இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள்தான் காரணம் என்று உளவியலாளர் கூறுகின்றனர். அடுத்தவரைக் குறைகூறும் குணங்களாக அந்த ’ப்ரொஜக்‌ஷன்’கள் வடிவெடுக்கின்றன என்று அவர்கள் விளக்குகின்றனர்.

ஆம்பளைன்னா சம்பாதிக்கணும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஏன் சொல்லப்படுகிறது? அப்படிச் சொல்பவர்கள் ஒரு காலத்தில் சம்பாதிக்காமல் அவதிப்பட்டும் அவமானப்பட்டும் போயிருப்பார்கள். தனக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை அடுத்தவர்களுக்கான ஆலோசனையாக வெளிப்படும்.   

இருக்கட்டும். மனிதர்கள் ஏன் ’ப்ரொஜக்ட்’ செய்கிறார்கள்?

இக்கேள்விக்கு உளவியலாளர்கள் கூறும் பதில் இதுதான். அப்படிச் செய்வதால் மற்றவர்களைவிட தான் ‘ஒஸ்தி’ என்ற உயர்வு உணர்வை அது அவர்களுக்குக் கொடுக்கிறது. இரண்டாவது காரணம் தன்னுடைய குறைகள் அடுத்தவருக்குத் தெரியாமல் அது தடுக்கிறது. அடுத்தவர்மீது பழியைப் போடும்போது நாம் தப்பித்துக்கொள்கிறோம் அல்லவா?!

இவ்வுலகில் நடக்கும் வன்முறைகளுக்கெல்லாம் காரணம் ’ப்ரொஜக்‌ஷன்’தான். தான் விரும்புவதுபோல இவ்வுலகம் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருக்கவே கூடாது என்று நினைக்கின்ற ’ப்ரொஜக்‌ஷன்’தான் வன்முறையாக வெளிப்படுகிறது. கடவுள் இல்லை என்று சொல்வது கருத்து ரீதியான ப்ரொஜக்‌ஷன். கடவுளுக்கு உருவம் உண்டு, இல்லை என்று வாதிடுவது மதரீதியான ப்ரொஜக்‌ஷன்.

இந்த சமாச்சாரங்களெல்லாம் நம் ஆழ்மனதில் நடப்பதால் நம்மால் இவற்றைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

தமிழிலக்கணத்திலும் அறிவியலிலும் இடமாறு தோற்றப் பிழை என்ற ஒன்றைப் பற்றிப் பேசுவார்கள். ஓரிடத்தில் இருக்கும் ஒரு பொருள் வேறு இடத்தில் இருப்பதைப் போன்ற தோற்றம் தரும். நம்மிடத்தில் உள்ளது அடுத்தவரிடத்தில் இருக்கிறது என்று நினைப்பதும் இடமாறு தோற்றப் பிழைதான். ஆனால் அப்பிழைகளைப் புரிந்துகொள்வதால் ப்ரொஜக்‌ஷனிலிருந்து நாம் தப்பிக்கலாம். அது நமக்குத்தான் லாபம்.

புரிந்துகொள்ளலாமா?

  - இன்னும் தாண்டுவோம்…

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close