[X] Close

தொங்கட்டான் 27: தமிழ்நாடுன்னு அண்ணா மாத்தின காலம் அது!


thongattan-27-mana-baskaran

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Sep, 2018 09:31 am
  • அ+ அ-

ஜாம் ஜாம் என்று திருவாளூருக்கு ஜாகை மாற்றினான் முருகேசு மாப்பிள்ளை. திருவாரூரில் நாகை ரஸ்தாவில் ஒரு காலனி கட்டி விட்டிருந்தார் பாய் ஒருத்தர். அஞ்சே அஞ்சு வீடுதான்.  அதில் முதல் வீட்டுக்குத்தான் முருகேசு போயிருந்தான்.

அந்தக் காலனியில் வசிக்கும் பெண்கள் மட்டும் அந்தக் காலனியில் பின் பக்கம் இருக்கும் கிணற்றடியில் குளிக்கப் போகலாம்.  மல ஜலம் கழிக்கப் போகலாம். ஆம்பிளைகளுக்கு அனுமதி மறுப்பு. ஆம்பிளைகள் பக்கத்தில் இருக்கிற ஓடம்போக்கியாத்துக்குப் போயி குளிக்க வேண்டியதுதான். அதே மாதிரிதான் மலஜலம் கழிக்க அதே ஆத்தங்கரைக்கு ஓட வேண்டியதுதான். அதுதான் கண்டிசன். அதுக்கு கட்டுப்பட்டா அந்தக் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கும்.

வெறும் நாப்பது ரூவாய்தான் வாடகைன்னா அப்படித்தான் கண்டிசன்லாம் இருக்கும் என்று கோகிலாவை சமாதானம் செய்திருந்தான் முருகேசன்.

புருசன்… பொண்டாட்டி… ரெண்டு புள்ளைங்க… என முருகேசன் அந்த இருள் கூண்டில் ஒண்டிக்கொண்டான். வீட்டில் கரண்ட்டெல்லாம் கிடையாது. ராத்திரியானா மண்ணெண்ணெய் வெளக்குத்தான். கோகிலா பித்தளையில் ஒன்றும் தகரத்துல ஒன்றுமாக ரெண்டு சிம்னி வெளக்கு வைத்திருந்தாள்.

இப்படித்தான் கோகிலாவின் குடும்பம்  அந்த  ஊரில் சின்னதாக வெளிச்சம் பெறத் தொடங்கியது.  

வடவேரில் இருந்து மாட்டு வண்டியில் வீட்டு சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டுவந்து இறக்கியாயிற்று.  ஒரு வியாழக்கிழமையன்று விடிகாலையில் கோகிலாவும், முருகேசும் பால்காய்ச்சி குடி புகுந்தார்கள். பாப்பாத்தி வரவில்லை என்று முறுக்கிக்கொண்டாள். பக்கிரி மட்டும்   ராஜன் படக்கடையில் கண்ணாடி பிரேம் போட்ட  ஒரு புள்ளயார் படம் வாங்கி தங்கச்சியிடம் கொடுத்து பெருகி வாழணும் என்று வாழ்த்திவிட்டு வந்தான்.

முருகேசன் தனது மகன் குணசேகரனை கமலாலய குளக்கரை யில் இருந்த வ.சோ.ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்து விட்டான். சின்னது பொண்ணு. பேரு ராணி. அதை  பக்கத்திலேயே இருந்த மோசஸ்  பள்ளிக்கூடத்தில் ஆறாவது சேர்க்க அழைத்துப் போனான். எங்க பள்ளிக் கூடத்தில் இடையில் வந்து சேர்க்க முடியாது என்று அந்தப் பள்ளிக்கூடம் கைவிரித்துவிட்டது. அப்புறமாய் வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த அல்வா துண்டு பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்துவிட்டான் முருகேசு.

 ****

து அறுபத்தொன்பதாவது வருசம்.  அண்ணா முதலமைச்சராகியிருந்தார். வெலைவாசி எல்லாம் கொஞ்சம் குறைந்திருந்தது.  கருணாநிதி  பொதுப்பணித்துறை அமைச்சர், நாவலரு நெடுஞ்செழியன் கல்வி மந்திரி… நிச்சயம் நாடு சுபிட்சமாகும் என்று மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள். சாமி இல்லன்னு சொல்றவங்கதான். ஆனா ஆட்சி நிர்வாகம் கன் மாதிரி நல்லா நடக்கும் என்று மக்கள் பரவசம் பேசினார்கள்.

அண்ணா முதலமைச்சரானவுடன் மெட்ராஸ்  மாகாணம் என்கிற பேரை தூக்கிக் கடாசிவிட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.  முதலமைச்சரான அண்ணாவோட மொத கையெழுத்தே ‘தமிழ்நாடு’ என்று பெயர்  மாற்றிவிட்டு, அதன் கீழே சி.என்.அண்ணாதுரை என்று பச்ச இங்குல கையெழுத்துப் போட்டதுதான்.  மெட்ராஸ் ஸ்டேட், சென்னை மாகாணம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று பல பேர் போராடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. சவுந்தர பாண்டியன் என்பவர் அதற்காக உண்ணாவிரதம் இருந்து

செத்தே போனார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிரச்சினையும் தீரவே இல்லை.  அண்ணா முதலமைச்சரானதும்  முதல் உத்தரவாக ‘தமிழ்நாடு’ என்று  பெயர்மாற்றி கையெழுத்துப் போட்டுவிட்டுச் சொன்னார்: ’’ஒரு துளி மையில்  தீர்ந்தது பிரச்சினை!”

பக்கிரிக்கும் முருகேசனுக்கும் ரொம்ப சந்தோஷம். என்னமோ அவங்களே பதவி நாற்காலியில ஏறி சம்மணம் போட்டு ஒக்காந்துக்கிட்டது போல மூஞ்செல்லாம் பல்லு.   

அந்நாளில் – இதோ இவர்களைப் போல மனசுக்குள் சந்தோசம் எய்திய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான முருகேசன்களும் பக்கிரிகளும் தமிழ்நாட்டில் இருந்தார்கள்.
****  ****

ங்கக்கட்டுப்பாடு சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்துபோயிருந்தது. மறுபடியும் பத்தர்கள்  தங்க வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.  மக்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு தங்கத்தின் மீதிருக்கிற காதல் அபரிமிதமானது. ஏதாச்சும் மிதமிஞ்சி காசு வந்தால் அவர்கள் தங்கம்தான் வாங்கிப்போட்டார்கள். அந்த அடங்காத தங்கக் காதல் இருக்கிற வரை, பத்தர்களுக்கு நகை வேலைக்கு எந்த பங்கமும் வரப்போறதில்லை என்று கையால் சுத்தியல்  பிடித்து அந்தத்  தொழில் செய்கிற எல்லோரும் நம்பினார்கள்.

பக்கிரிக்கு இப்போதெல்லாம் வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருந்தாலே தும்மல் போட ஆரம்பித்துவிடுகிறான்.  

‘’மானம் மூடாக்குப் போட ஆரம்பிச்சாச்சுல்ல…பக்கிரி தும்ம ஆரம்பிச்சிடுவான்…’’ என்று எதிர்வீட்டு அண்ணாமலை பத்தர் சொல்வதில்  துளியும் பொய்யில்லை. ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட்டான் பக்கிரி. அதுதான் பின்னாளில் பிரச்சினையாகிவிட்டது.

இப்போதெல்லாம் பச்ச தண்ணீரில் குளித்தால் சல்ப் பிடித்துக் கொள்கிறது. விடாத தும்மல்தான். கனமான தலைவலி வேறு.  அவனுக்கு  நன்னாரி சர்பத் என்றால் அவ்வளவு உயிர். திருவாளூர் போறப்பல்லாம் ஜங்சனுக்கு போற வழியில் இருக்கிற பெத்தா கடையில் சர்பத் வாங்கிக் குடிக்காமல் ஊருக்கு திரும்பவே மாட்டான். இப்பவெல்லாம் அந்தப் பக்கம் தலைவெச்சிக்கூட படுக்கிறதில்லை. அல்ப சந்தோஷம் பிராண சங்கடம்ங்கிற கதையாயிடுது.

தும்மல்,  மாரு சளியோட சர்ரு புர்ருன்னு மூச்சை இழுக்கவும் செய்கிறது. தூங்க முடியவில்லை.  அவஸ்தைப்பட்டான் பக்கிரி.

சன்னாநல்லூரில் இருந்து ஒரு நோக்கச்சி வருவாங்க. கை வைத்தியம் பார்க்கிற பாட்டி அது. வீடு வீடா வரும். கையில் சின்னதா  ஒரு மஞ்ச பை வெச்சிருக்கும். அதில் ஒரு தகர டப்பா. அதுக்குள்ள சின்ன சின்னதா சீஸாக்கள் இருக்கும். அதில்தான் மருந்துகள் இருக்கும். சூரணம். பொடி, கோரோசனை  உருண்டைகள்லாம்தான் மருந்து.

அந்த நோக்கச்சி கையை பிடித்து நாடிப் பார்த்து என்ன செய்யுதுன்னு சொல்லிடும். அப்படித்தான் ஒரு நாள் வந்திருந்த நோக்கச்சிடம் தன் கையை நீட்டினான் பக்கிரி. கையைப் பிடித்து நாடிப் பார்த்தது. கொஞ்சம் நேரம் சும்மாவே எதுவும் பேசாமல் இருந்தது. அப்புறம் மெல்ல வாய் திறந்தது.

‘’எப்பா பக்கிரி ஒனக்கு வந்திருக்கிறது மந்த காசம்னு பேரு. அடிக்கடி சிலேட்டுமம் மாதிரி மூச்சு இழுக்கும். மூச்சி சொகமா  தானா போயி வராது. நீ மெனக்கட்டு  உள்ளுக்குள்ள இழுக்கணும் வெளிய உடனும்.   மழ காலம் பனி காலம் ஒனக்கு ஒத்துக்காது. வெய்யிலு ஒன்ன எதுவும் பண்ணாது. குளுந்ததா எதுவும் தொடவே தொடாதே. எல்லாம் சூடாத்தான் சாப்பிடணும். சுடுதண்ணியில குடி, சுடுதண்ணியில குளி. வெதுவெதுப்புதான் ஒனக்கு நல்லது பண்ணும். ஊமத்த எலையை காய வெச்சி, காய்ஞ்சோன்ன எடுத்து சுருட்டு மாதிரி பத்தவெச்சி புகைய இழுக்கலாம். இப்ப நான் கோரோசனை உருண்டை தர்றேன்.

சாப்பிட்டத்துக்கு அப்புறம் தெனம் மூனுவேள சாப்பிடு. கொஞ்சம் சரியாயிரும். ஆனா ஒண்ணு… இந்த மந்தகாசத்துக்கு முழுசா மருந்து இல்லப்பா. ஒரு தடவ வந்திருச்சின்னா கட்டயில போற கடைசி வரைக்கும் போவவே போவாது. என்ன பண்றது அவஸ்தைதான். வேணுமுன்னா திருவாளூரு மாயாரம் போயி இங்கிலீஷ் டாக்டருக்கிட்டே காட்டி பாரு. இங்கிலீஷ் வைத்தியத்துல வேணா இதுக்கு மருந்து இருக்கலாம்….’’ என்று நொக்கச்சி பாட்டி சொன்னபோது பாப்பாத்திக்கும் புருசன் பக்கிரியைக் குறித்த கவலை சூழ்ந்தது.

  •        தொங்கட்டான் அசையும் 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close