[X] Close

எதிரே நம் ஏணி! 27: விரும்பிச் செய்யுங்கள்; விரும்பியதைச் செய்யுங்கள்!


ethire-nam-yeni-tirupur-krishnan

  • திருப்பூர் கிருஷ்ணன்
  • Posted: 10 Sep, 2018 10:16 am
  • அ+ அ-

எளிதாக முன்னேறுவதற்கு உரிய முக்கியமான ஒரு வழி - நீங்கள் விரும்பியதையே நீங்கள் செய்யவேண்டும் என்பதுதான். அதாவது நீங்கள் விரும்பாததைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற பொருளும் இந்த வாக்கியத்தில் மறைமுகமாக அடங்கியிருக்கிறது.

வாழ்வில் விரும்பியதையே செய்து வாழ்வது சாத்தியமா என்றொரு கேள்வி எழுகிறது.

கட்டாயம் சாத்தியம்தான். ஆனால் முன்னேற்றம் என்பது எது என்பதை உங்கள் மனம் எப்படி வரையறுக்கிறது என்பதையும் பொறுத்தது அது.

ஒருவருக்குத் தமிழ் இலக்கியம் படிக்க அளவற்ற ஆர்வம். ஆனால் பொருளாதார ரீதியாக அதில் முன்னேறுவது என்பது ஓர் எல்லைக்குட்பட்டதுதான் என்று பெற்றோர் கருதுகிறார்கள். தங்கள் மகன் தமிழ் இலக்கியம் படிப்பதைப் பெற்றோர் விரும்பவில்லை.

பெற்றோருக்குத் தங்கள் பிள்ளை மருத்துவராகவோ பொறியியலாளராகவோ வரவேண்டும் என்று விருப்பம். மகன் நல்ல பொருளாதார வளத்தோடு வாழ வேண்டும் என அவர்கள் விரும்புவது இயல்புதான். அதைத் தவறென்று சொல்ல இயலாது.

இப்போது அவர் முன் உள்ள கேள்வி இதுதான். அவர் தாம் விரும்பியபடி தமிழ் இலக்கியம் படிக்கவும் வேண்டும். அதே நேரம் பெற்றோர் விரும்பியபடி பொருளாதார ரீதியாக தமிழ் இலக்கியம் படித்து முன்னேறிக் காட்டவும் வேண்டும்.

இதற்குக் கடின உழைப்பு தேவைப்படலாம். அந்த உழைப்புக்கு அவர் அஞ்சக் கூடாது.

இன்னொன்றையும் அவர் மனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் விரும்பிய அளவு பொருளாதார முன்னேற்றத்தை அவரால் அடைய முடியாமல் போனாலும், தான் விரும்பியபடி வாழ்கிறோம் என்ற நிறைவோடு அவர் வாழ வேண்டும். தானே விரும்பி ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அதன் விளைவுகளால் சலிப்படையக் கூடாது.

வாழ்க்கை என்பது நம் மனம் நம் வாழ்வைப் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறதே தவிர வெறும் பொருளாதாரத்தில் மட்டுமில்லை என்பதை அவர் புரிந்துகொண்டால் போதுமானது. இது ஒரு பேருண்மை. இந்தப் பேருண்மை பலருக்குப் புரியாததால்தான் வாழ்வில் பலர் நிம்மதியை இழக்கிறார்கள்.

மிக ஆனந்தமாக வாழ்கிற பூக்காரப் பெண்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்டு. பெரும் பணக்காரர்கள் சோகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளுக்கும் நாளிதழ்களில் பஞ்சமே இல்லை. எனவே எது மகிழ்ச்சி என்பதைப் புரிந்துகொண்டால் எது முன்னேற்றம் என்பதையும் புரிந்துகொண்டு விட முடியும்.

காதலித்த ஆணை மணக்க என்ன தடை வந்தாலும் அதைத் தகர்த்து, தாய் தந்தையரை எதிர்த்து, காதலித்தவரையே மணக்கும் பெண்கள் உண்டு. பொருளாதார ரீதியாகச் சில சிக்கல்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிக்கனமாக வாழ்வு நடத்தி, தான் காதலித்த கணவனுடன் மகிழ்ச்சியாகவே வாழ்பவர்கள் உண்டு.

பொருளாதாரச் சிக்கல்கள் வரும் என்றறிந்து, தான் காதலித்தவனைக் கைகழுவி விட்டு, வசதியானவருடன் வாழ்க்கை நடத்தும் பெண்களும் உண்டு. அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று சொல்லிவிட முடியாது. வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவர்கள் இயங்குகிறார்கள் என அவர்கள் சமாதானம் சொல்லக் கூடும்.

காதலித்தவன் அதிகம் சம்பாதிக்கத் திராணி இல்லாதவனாக இருந்தால் அவனைத் தொடர்ந்து காதலிக்கத் தாங்கள் என்ன முட்டாள்களா என அவர்கள் கேள்வி எழுப்பினால் நம்மிடம் அதற்கு பதில் இல்லை. எல்லாம் வாழ்வைப் பார்க்கும் கண்ணோட்டம் வேறுபடுவதால் தோன்றும் வித்தியாசம்தான்.

இந்த இரு தரப்புப் பிரிவினரும் ஏதோ ஒருவகையில் சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் சமாளித்துக் கொள்ள முடியாத பிரிவினர் யார் தெரியுமா? பொருளாதார ரீதியாக அவ்வளவு பெரிய முன்னேற்றம் வராது என்று தெரிந்தும் காதலித்தவனையே மணந்து கொண்டு, ஆனால் அப்படித் தாங்கள் முடிவெடுத்ததைப் பற்றி வாழ்நாள் முழுதும் வருந்துபவர்கள்! இன்று இப்படிப் பட்டவர்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதனால் பலரது வாழ்க்கை அலுப்பும் சலிப்பும் நிறைந்ததாக ஆகியுள்ளது.

ஒரு பெண் தான் காதலித்தவனைத்தான் மணப்பேன் என்று ஒருவாரம் உண்ணாவிரதம் இருந்து பெற்றோரைச் சம்மதிக்க வைத்துப் பிடிவாதத்துடன் காதலனை மணந்தாள். திருமணம் நடந்த சில மாதங்களில் என்ன துரதிர்ஷ்டம்! அவனுக்கு வேலை போய்விட்டது.

இந்தக் காலத்தில் எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை போவது என்பது இயல்பாகி விட்டது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, வேறு வேலை தேடுவதா, சற்றுக் குறைவான சம்பளம் என்றாலும் ஒப்புக்கொண்டு அவசரத்திற்கு எந்த நிறுவனத்திலாவது போய்ச் சேர்வதா, அல்லது சொந்தத்தில் தொழில் தொடங்குவதா எனக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பெண் தன் கணவனை அந்த வகையில் எல்லாம் சிந்திக்கவே விடவில்லை. `போயும் போயும் அரைக் காசுக்குத் துப்பில்லாத உன்னைப் போய்க் காதலித்து உனக்காக உண்ணாவிரதம் இருந்து மணந்துகொண்டேனே, என் முட்டாள்தனத்தை என்ன சொல்ல!` என்று நாள்தோறும் சலித்துக் கொள்ளத் தொடங்கினாள்.

இதைக் கேட்டுக் கேட்டுக் கணவன் வெறுப்படைந்தான். இத்தகைய எதிர்மறை விமர்சனத்தை எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்ள இயலும்? இப்போது கணவன் `அப்படியானால் என்னை விவாகரத்து செய்துவிடு!` என்று சொல்லுமளவுக்குக் கடுப்படைந்து விட்டான்.

மனைவியிடமிருந்து ஆதரவான வார்த்தைகள் இல்லாததால் அவன் வாழ்வே கசந்து விட்டது. கசந்தது அவன் வாழ்வு மட்டுமல்ல, அவள் வாழ்வும்தான்! இத்தனைக்கும் அது காதல் திருமணம்!

வாழ்க்கை கசக்கக் காரணம் என்ன? காதலித்தவனுக்குக் கஷ்டங்கள் வந்தால் அந்தக் கஷ்டங்களோடும் சேர்த்து அவனைக் காதலிக்க வேண்டும் என்ற விஷயத்தை அவள் புரிந்து கொள்ளாததுதான். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் எல்லோர் வாழ்விலும் வரத்தான் வரும். அன்பையும் நேசத்தையும் அதற்காகத் துறந்துவிட முடியுமா?

காதலைப் போன்றதுதான் வாழ்வில் எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும்! நாம் தேர்ந்தெடுக்கும் துறை வாழ்நாள் முழுவதும் நம்மோடு வரப் போகிறது. ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் அப்படித் தேர்வு செய்ததைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் இன்று பலர்.

`எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு!`

என இத்தகைய மன நிலையைக் கண்டித்து அன்றே திருக்குறள் எழுதி விட்டார் வள்ளுவர். அவர் அறியாத உளவியலா? ஆனால் இந்தத் திருக்குறளைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் மிகச் சிலர்தான்.

ஒருவர் தாவரவியலில் எம்.எஸ்ஸி பட்டம் வாங்கினார். அவருக்குத் தாவரவியல் சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கவில்லை. பணி கிடைத்ததோ வங்கியில். கைநிறையச் சம்பளம். அவர் தம் தாவர இயல் ஆர்வங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டார். வங்கிப் பணியை மனமார நேசித்து வாழலானார்.

இப்படி முடிவெடுத்து வாழ்வது புத்திசாலித்தனமானது. `விரும்பியது கிடைக்குமா என்று பார். இல்லாவிட்டால் கிடைத்ததை விரும்பத் தொடங்கு!` என்ற தத்துவம் நடைமுறையில் பெரும் பயன்தரக் கூடியது. சில சமயம் கிடைத்ததற்காகவும் பல சமயம் கிடைக்காததற்காகவும் சலித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் நிம்மதி என்றும் ஏற்படாது.

வாழ்வின் அதிகபட்ச உச்சம் என்பது நிம்மதியை அடைவதுதான். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதுதான். நிம்மதிக்கும் ஆரோக்கியத்திற்கும் இணையானது வேறேதும் இல்லை. பணமோ பதவியோ புகழோ வாழ்வின் பிரதான நோக்கமாக இருக்கவே இயலாது. நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு வரும் எதனாலும் எந்தப் புண்ணியமும் இல்லை.

இதை நாம் புரிந்துகொண்டோமானால் நாம் ஒவ்வொருவரும் இன்றுள்ள நம் நிலைக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இன்றைய கணத்தின் மகிழ்ச்சியை ஆனந்தமாக அனுபவிப்போம். இன்று இப்போதுள்ள இந்தக் கணத்தைப் போன்ற கணங்களால்தான் வாழ்க்கை முழுவதும் அமைகிறது என்பதைப் புரிந்துகொள்வோம். அந்தந்தக் கணத்து மகிழ்ச்சியை அனுபவிப்பதே சரியான மனநிலை என்பதையும் அதுவே முன்னேற்றம் என்பதையும் உணர்வோம். ஆனந்தமாக வாழ்வோம்.

பெரிதாக எந்தத் துறை சார்ந்தும் எந்த விருப்பமும் இல்லாமல் ஏதோ பெற்றோர் சொன்னதற்காகவோ நண்பர்கள் சொன்னதற்காகவோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டு ஏனோதானோ என வாழ்பவர்கள் பல கோடிப் பேர். சாதனையாளர்களுக்கானது அல்ல அத்தகைய போக்கு.

தீரம் நிறைந்தவர்கள் ஒன்றை மனமார விரும்புவார்கள். அதைத் தேர்வு செய்வார்கள். அதில் ஈடுபடுவார்கள். சாதிப்பார்கள். அவர்கள் அடையும் மனநிறைவுக்கு ஈடு இணை இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் உற்சாகத்தோடு வாழ்வார்கள்.

எனவே விரும்பியதையே செய்வது என்பது சாதாரணமானதல்ல. அது சவால்கள் நிறைந்தது. ஆனால் சவால்களைச் சந்திப்பதில் உள்ள ஆனந்தத்தை அது கொடுத்துக் கொண்டே இருக்கும். கடின உழைப்பிருந்தால் எந்தத் துறையிலும் முன்னேற்றம் என்பது உத்தரவாதமானது தான். சற்றுப் பொறுமையும் காத்திருத்தலும் தேவைப்படலாம். அதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை.

பெரும் சாதனையாளர்கள் எல்லோரும், தாம் விரும்பியதைச் செய்தவர்கள்தான். பெற்றோர் சொன்னதற்காகவோ நிர்பந்தகளுக்காகவோ ஒன்றைச் செய்பவர் ஏதோ வாழ்வார். ஆனால் சாதனையாளராக ஆகும் சிறப்பு அவருக்குக் கிட்டுவதில்லை.

சரி, விரும்பியதை என்ன எதிர்ப்பு வந்தாலும் செய்வது, விரும்பாததை ஒருபோதும் செய்யாதிருப்பது, விரும்பியது கிட்டாவிட்டால் அதற்காக வருந்தாமல் புதிய சூழலை ஏற்பது எனப் பல்வேறு மனநிலைகள் இருக்கின்றன.

ஆனால் விரும்பியதைச் செய்தல் என்ற கோட்பாட்டில் இன்று சில பெண்ணியவாதிகள் அதிரடியாக ஒரு வகைப்பட்ட பெண்ணியத்தை முன்வைக்கிறார்கள். நம் நாட்டு மண்ணுக்கே சொந்தமில்லாத பெண்ணியம் அது. அந்த வகைப்பட்ட பெண்ணியம் நடைமுறைக்கு வருமானால் என்னென்ன விளைவுகளைத் தோற்றுவிக்கும்? குடும்ப முன்னேற்றம் என்பதும் சமூக முன்னேற்றம் என்பதும் அத்தகைய பெண்ணியத்தின் மூலம் சாத்தியமாகுமா?

 இப்படிப்பட்ட பல சிந்தனைக்குரிய கேள்விகளைத் தோற்றுவிக்கும் அந்தப் பெண்ணியப் போக்கு என்ன தெரியுமா?

- இன்னும் ஏறுவோம் ​​​

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close