[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 23 - ஸ்டில் ஷூட் @செட்ஃபயர்.


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 08 Sep, 2018 13:25 pm
  • அ+ அ-

தான் யார், என்ன செய்கிறோம்  என்பதை, அன்னைக்கு கேட்டியே இதோ பார்த்துக்க, என்பது போல  ஸ்ரீதர் கம்ப்யூட்டர் திரையில் விளக்கிக் கொண்டிருந்தான்.

சுரேந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை என்றாலும் புரிந்தது போல பார்த்துக் கொண்டிருந்தார். டெக்னாலஜி புரியவில்லையே தவிர வியாபாரியான அவருக்கு அவனின் ஆட்டிட்யூட் புரிந்தது.

நான் தொழில் தெரிந்தவன் என்று அழுத்தமாய் சொல்லிக் கொண்டிருந்த ஸ்ரீதரின் பேச்சை நிறுத்தி, “சேதுவ கூப்பிடுங்க” என்றார்.

ஸ்ரீதர் கதவை திறந்து சேதுவை அழைத்தான். உள்ளே வந்த சேதுவிடம். “இன்னும் பழங்கஞ்சியாவே இரு. அப்டேட் ஆகு சேது.” கம்ப்யூட்டரை அவர் பால் திருப்பி, “பாரு. எல்லா பேப்பர் ஒர்க்கையும் பேப்பர் செலவு இல்லாம அத்தனையும் இங்க இருக்கு. இண்டர்நெட் செலவு அதிகம் ஆகத்தான் செய்யும். இதப் போய் கம்ப்ளெயின் பண்ணிட்டு. பார்த்துக்கங்க. தம்பி அதுக்காக சிக்கனமா இருக்கிறேன்னு படத்துல சிக்கனம் பண்ணிராதீங்க’ என்றார்.

சேது கொஞ்சம் அடிப்பட்டதாய் உணர்ந்தார். இப்படி நேரடியாய் இயக்குனரிடம் போட்டுக் கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை.

 ஸ்ரீதர் அதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார்.

”எல்லாம் சரி. எப்ப ஷூட்டிங் போகலாம். ஹீரோ அந்த புதுப் பையனையே பிக்ஸ் பண்ணிரலாமா? ப்ரேமி என்ன சொல்லுது? போன் அடிச்சா எடுக்கவே மாட்டேன்குறா? அவ பேசாம இருக்க இருக்க, எனக்கு செம்ம இண்ட்ரஸ்டிங்கா ஆயிட்டேயிருக்கு” என்று ஆபாசமாய் ஸ்ரீதரைப் பார்த்து கண்ணடித்தார்.

“அந்த புதுப் பையன் உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கும் ஓகேதான் சார். வர்ற புதன் கிழமை ஸ்டில் ஷூட் போகலாமா?” என்றான்.

சுரேந்தர் தலையசைத்த அடுத்த நிமிடம் ஆபீஸ் பரபரத்தது. செட் பயருக்கு போன் செய்து புதன்கிழமை பிக்ஸ் செய்யப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில் மேக்கப் மேன், காஸ்ட்யூமர், கேமராமேன் என எல்லாரும் அசெம்பிள் ஆக, ராமை காசியை விட்டு கூப்பிட சொன்னான். ப்ரேமிக்கு கம்பெனி கார் போனது. 

ராம் ஆபீஸுக்குள் நுழைந்த போது, எல்லாரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். கார்க்கிதான் அவனைப் பார்த்து ரிஸீவ் செய்து உட்கார வைத்தான். அறைக்குள் சென்று அவன் வந்திருப்பதை ஸ்ரீதருக்கு தெரிவித்தான்.

அதற்குள் காஸ்ட்யூமர் “தம்பி உங்க சர்ட் சைஸ்? பேண்ட் ஹிப் சைஸ் என்னான்னு சொல்லுங்க?” என்று வினவ, சொன்னான். கேமராமேன் வின்செண்ட் அறையிலிருந்து வெளியே வந்தவன் “வாங்க ஹீரோ சார்..” என்று வரவேற்க, உடன் வெளிவந்த ஸ்ரீதர் எதுவும்  பேசாமல் அவனை சுற்றி வந்து பார்த்தபடி “என்ன மாதிரி கலர்ஸ்னு நீங்க சூஸ் பண்ணிருங்க வின்செண்ட்” என்று சொல்லிவிட்டு, சுரேந்தரின் அறைக்குள் சென்றான். 

தன்னை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்று ராமுக்கு புரிந்தது. அவமானமாய் உணர்ந்தான். ராமராஜ் தன்னை எப்படி எல்லாம் பெருமையாய் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவார் என்று நினைத்துப் பார்த்தான்.

“என்ன யோசனையாய் இருக்கீங்க ஹீரோ? வாங்க உங்களை மொபைல்ல ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போம் எந்த ஆங்கிள் உங்களுக்கு ப்ளஸ், மைனஸுன்னு” என்று அவனை வின்செண்ட் கூப்பிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.

காசி, இயக்குனர் உள்ளே கூப்பிடுவதாய் சொல்ல, வின்செண்ட்டிடம் சொல்லிவிட்டு, உள்ளே போனான். சுரேந்தரும், ஸ்ரீதரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர். சுரேந்தர் எழுந்து வரவேற்று கை கொடுத்து உட்காரச் சொன்னார்.

ஸ்ரீதர் அதீதமாய் சேரில் சாய்ந்திருந்தான். “வர்ற புதன்கிழமை ஸ்டில் ஷூட் செட் பயர்ல. தயார் ஆகிக்க. அக்ரிமெண்ட் இன்னும் ஒன் அவர்ல ரெடியாயிரும்” என்றான்.

ராமுக்கு திடுக்கென்றது. ராமராஜ் சொன்ன அதே நாள். அதே இடம். ஊரில் இல்லை என்று சொல்லி எங்கேயாவது போய்விடலாம் என்று ப்ளான் செய்திருந்தான். அவன் யோசனையாய் முழிப்பதைப் பார்த்து ஸ்ரீதர் “என்ன யோசனை?” என்றான்.

”ஒண்ணுமில்லை அன்னைக்கு எனக்கு ஒரு பேமிலி பங்ஷன். அதுக்கு போகணும். ஃபேமிலியோட. அதான் என்று இழுக்க, “ராம். நீ என்ன ஆபீஸ் வேலையா செய்யுற? ஹீரோவாகப் போற. சினிமால எல்லாமே திடீர் திடீர்னுதான் நடக்கும். உங்க வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கெல்லாம் நம்ம வேலைய தள்ளிப் போட முடியாது. அப்படி போடுற அளவுக்கு நீயும் பெரிய ஆள் இல்லை. வாய்ப்பு வர்றதுக்குள்ளேயே இப்படி கட்டை போடுறியே? வேற ஆளைப் பாக்கட்டுமா?” என்றான்.

அவன் குரலில் இருந்த எகத்தாளத்தைப் பார்க்க ஆத்திரமாய் வந்தது. ராம் அடக்கிக் கொண்டான். ஸ்ரீதரின் பேச்சு சுரேந்த்ருக்கு கொஞ்சம் அசெளகரியமாய் இருந்தது. இருந்தாலும் அமைதியாய் இருந்தார்.

“சரி ஸ்ரீதர் வீட்டுல பேசி அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்.” என்றான் ராம்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் முன் அக்ரிமெண்ட் இருக்க, வாங்கிப் படித்துப் பார்க்க ஆரம்பித்தான். “என்ன உன் சொத்தையா எழுதி வாங்கப் போறோம். ஆஸ்யூஷுவல் அக்ரிமெண்ட் தான்” என்றான் ஸ்ரீதர்.

இருந்தாலும் ஏதுவும் பேசாமல் முழுக்க படித்துவிட்டே கையெழுத்துப் போட்டான். வில்லங்கமாய் ஏதுமில்லை. அவனை கொஞ்சம் வெளியே இருக்க சொன்னான் ஸ்ரீதர். 

வெளியே வந்த ராமை அனைவரும் சூழ்ந்து கை குலுக்கினார்கள். பாராட்டினார்கள். உள்ளே இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.

“என்ன  தம்பி ஸ்ரீதர். ஹீரோவை இப்படி சத்தாய்க்கிறீங்களே?” என்றார் சுரேந்தர்.

“ஆரம்பத்துலேர்ந்தே தட்டி வைக்கணும் சார். .இல்லாட்டி பாதி ஷூட்டிங்கில எகிறுவாங்க. கண்டுக்காதீங்க” என்ற ஸ்ரீதரை ஆழமாய் பார்த்தார் சுரேந்தர்.

***********************
புதன் கிழமை. மொத நாள் இரவே ராம் அவனுடய நண்பருடய அறையில் போய் தங்கிவிட்டான். ஏற்கனவே ஃபேமிலி விஷேஷம் இருந்ததால் அவனுடய அம்மாவும், அப்பாவும் ஊருக்கு கிளம்பியிருந்தனர். வழக்கம் போல நேரே செட் பயருக்கு அவனை வரச் சொல்லியிருந்தார்கள்.

வண்டியை எடுத்துக் கொண்டு போனால் யாராவது தலைப்பட்டு தெரிந்துவிடும் என்பதால் நண்பணின் வீட்டிலிருந்து கால் டாக்ஸியில் போய் இறங்கினான். அவன் இறங்கியதைப் பார்த்ததும் சேது பரப்பாய் வந்து “நான் கட் பண்ணிக்கிறேன் தம்பி” என்று அவனை உள்ளே அனுப்பிவிட்டு கால்டாக்ஸியிடம் “எவ்வளவுப்பா” என்று கேட்டு செட்டில் செய்தார்.

செட்பயர் பரபரப்பாய் இருந்தது. “ஹீரோ ஆயிட்ட கால்டாக்ஸியில தான் வருவ போல” என்று ஸ்ரீதர் கிண்டலடித்தான்.

அசட்டுத்தனமாய் சிரித்தபடி “ஷூட்டுக்கு வர்றோம் ப்ரெஸ்ஸா வரலாமேன்னுதான்” என்றான்.

“போ.. போ.. மேக்கப் ரூமுக்கு. ரெடியாகு. வின்செண்ட் நீங்க கேட்ட லைட்ஸ் எல்லாம் வந்துருச்சா?” என்று வின்செண்டை நோக்கிப் போனான். கார்க்கி ஆதரவாய் அவனை அழைத்துப் போய் மேக்கப் ரூமில் உட்காரவைத்து ‘கங்கிராட்ஸ் பாஸ்” என்று கை குலுக்கினான்.

ப்ரேமிக்கு மேக்கப் நடந்து கொண்டிருந்தது. அவளுடன் பேசிக் கொண்டிருந்த காசி, ராமைப் பார்த்ததும் “வாங்க ஹீரோ சார்” என்று வாழ்த்தி வரவேற்று “ரெடியாயிருங்க” என்று கிளம்பினான்.

ராமுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாய் இருந்தது. இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு கடவுளை வேண்டி கொண்டான்.

மேக்கப் மேன் கடவுளை வேண்டி நெற்றியில் முதல் பேன்கேக் தடவலை ஆரம்பித்து வைக்க, தன் சட்டை பையிலிருந்து ஒரு 500 ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்து ஆசி வாங்கினான்.

ஸ்ரீதரின் இயக்கத்தில் சுரேந்தரின் தயாரிப்பில், ராம், ப்ரேமி நடிக்கும் புதிய படத்தின் ஸ்டில் ஷூட் ஆரம்பமாகியது.

மேக்கப் போட்டுவிட்டு சற்றே ரிலாக்‌ஸாக தம் அடிக்க வெளியே வந்தார் சீஃப் மேக்கப் மேன். அவர் பெரும்பாலும் மேக்கப் போடும் போது தம் அடிப்பதில்லை. சில பேருக்கு அந்த வாசனை பிடிக்காது. முக்கியமாய் ஹீரோயின்களுக்கு..

ஆனால் சமீபகாலங்களில் பல ஹீரோயின்கள் ரெண்டாவது படம் ஆரம்பிப்பதற்குள் அவரிடமிருந்தே சிகரெட் வாங்கி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இருந்தாலும் பழக்கத்தை மாற்றிக் கொண்டதில்லை.

ஒரு சிகரெட்டை எடுத்து பெட்டியின் மேல் ரெண்டு தட்டு தட்டி, எரியூட்டி, புகையை ஆழமாய் இழுத்து நிமிர்ந்த போது போன் வந்தது “ சொல்லு. எப்டி இருக்குறீங்கோ? படமெல்லாம் ஆரம்பிக்கப் போறதா கேள்விப்பட்டேன். நல்லகாலம் வந்திருச்சு உனக்கு. அண்ணனுக்கு வேலை கொடு” என்று உரிமையாய் பேச ஆரம்பித்தார். “இங்க தான் ஒரு ஸ்டில்ஷூட். செட் பயர்ல”

“நம்ம பழைய கம்பெனி. டைரக்டரு புதுசு. ஸ்ரீதர்னு. ஹீரோ, ஹீரோயினு கூட புதுசுதான். ராம், ப்ரேமியனி.. மறக்காம என்னை உன் படத்துக்கு கூப்டியே சந்தோஷம். கலக்குவோம்” என்று சொல்லி போனை கட் செய்து மீண்டும் ஆழமாய் புகையை இழுத்துவிட்டார்.

எதிர்முனையில் அதே போல ஆழமாய் புகையை இழுத்தபடி யோசனையாய் போனை கட் செய்தார் ராமராஜ்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 22 - https://bit.ly/2wSlRQp

பகுதி 21 - https://bit.ly/2oA8IHS

பகுதி 20 - https://bit.ly/2o3q1kD

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close