[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது…


chinnamanasukkul-seena-perunchuvar-26

  • நாகூர் ரூமி
  • Posted: 06 Sep, 2018 09:47 am
  • அ+ அ-

 

கதவைத் தட்டினார் ஒருவர்.

யாரது? உள்ளிருந்து குரல் கேட்டது.

நான் வந்திருக்கிறேன் என்றார் கதவைத் தட்டியவர்.

இரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று சொன்னார் உள்ளே இருந்தவர்.

மறுபடியும் கதவு தட்டப்பட்டது.

யாரது? உள்ளிருந்து குரல் கேட்டது.

நான்தான் என்றார் கதவைத் தட்டியவர்.

இரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று மீண்டும் சொன்னார் உள்ளே இருந்தவர்.

மறுபடியும் கதவு தட்டப்பட்டது.

யாரது? உள்ளிருந்து குரல் கேட்டது.

நீதான் என்றார் கதவைத்தட்டியர். கதவு திறக்கப்பட்டது!

இது ஒரு சூஃபிக்கதை. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ’மஸ்னவி’ என்ற ஆன்மிக காவியத்தில் இக்கதை வருகிறது.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா? உங்களுக்காகத்தான். அல்லது நமக்காகத்தான். நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று இந்த கதை சூசகமாகச் சொல்கிறது. அப்படி என்ன காரணம்?

நான் என்ற அகங்காரம்தான்.

நான் எனும் அகந்தைதான் நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த அகந்தை அழகால், உயரத்தால், நிறத்தால், பணத்தால், புகழால், படிப்பால், பதவியால், ஜாதியால், மதத்தால் – இப்படி எதனால் வேண்டுமானாலும் கெட்டிதட்டிப் போயிருக்கலாம். அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று நாம் நினைக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது.

ஒரு குரு தன் மாணவனைப் பரிசோதிப்பதற்காக மாறுவேஷத்தில் வந்தாராம். அப்போது அந்த ஊரின் ராஜா யானை மீது ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார். சாலையோரம் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த சீடர். அவர் அருகில் சென்ற குரு, ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்று சீடரைக் கேட்டார்.

‘ராஜா யானை மீது அம்பாரியில் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சீடர் சொன்னார்.

’இதில் ராஜா யார் யானை எது?’ என்று குரு கேட்கவும் சீடர் கடுப்பாகி, என்ன இவ்வளவு மடையனாக இருக்கிறானே என்றெண்ணியவராக, ‘மேலே இருப்பவர்தான் ராஜா, கீழே இருப்பது யானை’ என்று சொன்னார்.

‘புரிகிறது, புரிகிறது, ஆனால் மேலே என்றால் என்ன கீழே என்றால் என்ன?’ மீண்டும் கேட்டிருக்கிறார் குரு!

பயங்கரக் கடுப்பாகிப்போன சீடர் சட்டென்று அவர் தோளின்மீது ஏறி அமர்ந்து, ‘இப்போது நான் மேலே, நீ கீழே’ என்றார்.

‘புரிகிறது, புரிகிறது, ஆனால் நான் என்பது யார், நீ என்பது யார்?’ என்று கேட்டிருக்கிறார் குரு!

அப்போதுதான் சீடருக்கு அவர் யார் என்று பொறிதட்ட, ’மன்னித்துவிடுங்கள் குருவே’ என்று மரியாதை செய்திருக்கிறார்! இந்த அழகான கதையை ரமண மகரிஷி கூறுகிறார்.  நான், நீ என்று பிரித்துப் பார்ப்பதனால்தானே எல்லாப் பிரச்சினைகளும் வருகின்றன! இந்த உலக வரலாற்றில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அதுதானே?

நாம் எப்போதுமே அடுத்தவரைப்போல வாழ விரும்புகிறோம். அவரைப்போலவும் இவரைப்போலவும் இருக்க ஆசைப்படுகிறோம். ஜூஸியா என்று ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார்.

’நீங்கள்தான் ஒரு ஞானியாயிற்றே, ஏன் அழுகிறீர்கள்?’ என்று சீடர்கள் கேட்டனர்.

‘நான் இறக்கப்போகிறேன். என் இறைவனைக் காணப்போகிறேன். அப்போது அவன் என்னிடம் நீ ஏன் ஒரு மோசஸைப்போல வாழவில்லை என்றோ, ஏன் நீ ஒரு ஜீசஸைப்போல வாழவில்லை என்றோ கேட்கப் போவதில்லை. அப்படிக் கேட்டால், என் இறைவா, அவர்களைப்போன்ற குணங்களை நீ எனக்குக் கொடுக்கவில்லையே என்று நான் பதில் சொல்லிவிடுவேன். அவர்களெல்லாம் ஏற்கெனவே வாழ்ந்து சென்றுவிட்டார்கள்.

’ஆனால், நீ ஏன் ஒரு ஜூஸியாவைப்போல வாழவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? நான் நானாக வாழவில்லையே’ என்று சொல்லி அழுதாராம்!

அடடா, அற்புதமான கதை. நமக்கானது. நாம் நாமாக வாழவில்லை. நம்முடைய பிரத்தியேகமான, நமக்கான சிறப்புக் குணங்கள் எவை என்று நமக்கே தெரியவில்லை. கலைஞரின் குரலில் பேச முயற்சி செய்பவர்களும், நாகூர் ஹனிபாவின் குரலில் பாட முயற்சி செய்பவர்களும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். தேர்தல் காலங்களில் ஓட்டுக்கேட்டு ஆட்டோவில் மைக் பிடித்து பேசுபவர்களைக் கேட்டால் தெரியும்! அப்படியெல்லாம் ஏன் செய்கிறார்கள்? கலைஞரைப்போலப் பேசத்தான் கலைஞர் இருந்தாரே?! நாகூர் ஹனிபாவைப்போல பாடத்தான் நாகூர் ஹனிபா இருந்தாரே?! பின் எதற்கு இத்தனை கேவலமான எதிரொலிகள்?

நாம் நம்மைப்போல வாழ பயப்படுகிறோம். பூனைக்குப் பயந்த எலி, ஒரு மந்திரவாதியின் உதவியால் பூனையாகி, நாயாகி, புலியாகி, கடைசியில் மீண்டும் எலியான கதை தெரியுமல்லவா? பூனைக்கு பயந்தது எலி. நாய்க்கு பயந்தது பூனை. புலிக்கு பயந்தது நாய். வேடனுக்கு பயந்தது புலி. கடுப்பாகிப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாக்கிவிட்டான். ஏன்? நீ எதுவாக இருந்தாலும் ஒரு எலியின் மனதோடே இருக்கிறாய், எனவே நீ எலியாகவே இரு என்பதுதான் அவனது தீர்ப்பு!

நமது நிலையும் அப்படித்தான் உள்ளது. நாம் எதுவாக இருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதனால் சந்தோஷம், நிம்மதி, அமைதி எல்லாம் போய்விடுகிறது. அவரை மாதிரியும், இவரை மாதிரியும் வாழ முயற்சி செய்து தோற்று ஒரு மாதிரியாகிப் போகிறோம்! நாம் நாமாகவே வாழவேண்டும் என்ற துணிச்சல் நமக்கு வர மறுக்கிறது. நமது சந்தோஷத்தை அதனால் நாமே கெடுத்துக்கொள்கிறோம்.

நாம் நாமாக வாழ்ந்தால்தானே நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அவரைப் போலவும் இவரைப் போலவும் இருக்க முயலும்போது பொய்யான சுயம் ஒன்று நமக்குள் உருவாகிறது. அதுதான் நாம் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். அதைத்தான் அகந்தை என்று நான் குறிப்பிடுகிறேன். ஆங்கிலத்தில் Ego என்று அதைச்சொல்கிறார்கள்.

Ego என்பதற்கு கற்பனை வளமிக்க, கருத்தாழமிக்க ஒரு விளக்கம் சொல்கிறார்கள். Ego என்றால் Edging God Out என்று பொருளாம்! ஆஹா, அருமை! அகந்தை உள்ளே இருக்கும்போது கடவுள் வெளியில் போய்விடுகிறான்! கடவுளின் இடத்தை சாத்தான் ஆக்கிரமித்துக்கொள்கிறான்!

அப்படியானால் இன்னொருவனைப்போல வாழாமல் தானாகவே இருக்கும் ஒரு மனிதனுக்கு அகந்தையே இருக்காதா என்று நீங்கள் கேட்பதை உணர்கிறேன். இருக்கும். அப்போதும் நான் சொன்னதுதான் சரி. எப்படி என்கிறீர்களா? இப்படி வைத்துக்கொள்ளுங்களேன்.

நமக்குள் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றி அடுத்தவர் என்ன நினைக்கிறாரோ அவர். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அவர். மூன்றாவது, உண்மையாக நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அவர்!

அந்த மூன்றாவது மனிதன்தான் உண்மையான நீங்கள். மற்ற இருவரும் உங்கள்மீது உங்களாலும் அடுத்தவர்களாலும் திணிக்கப்பட்ட ஒரு மனிதன்! அவன் பொய்யானவன். மாயையானவன். ஆனால் அந்த பொய்யானவனை உண்மைப்படுத்தத்தான் நாம் அனைவரும் வாழ்நாள் பூராவும் முயன்றுகொண்டே இருக்கிறோம். புத்தனைப்போல அமர்ந்து, விவேகானந்தரைப்போல உடுத்தி, மஹாவீரரைப்போல நீங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால் நடு ராத்திரியில் குப்புறப்படுத்து, குறட்டை விட்டு, வேஷ்டி விலகித் தூங்கும்போதுதான் நீங்கள்தான் உண்மையான நீங்களாக இருப்பீர்கள்! மற்றதெல்லாம் உங்கள்மீது நீங்களே திணித்துக்கொண்ட புனித வேஷங்கள்!

ஆங்கிலத்தில் personality என்று ஒரு சொல் உள்ளது. ‘ஆளுமை’ என்று தமிழில் சொல்லலாம். ஆனால் அச்சொல்லின் வேரில் ஒரு கதை உள்ளது. கிரேக்க நாடகங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிப்பார்கள். அந்த முகமூடிகளுக்கு persona என்று பெயர்! அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் personality என்ற சொல்லே வந்துள்ளது! அப்படியானால் நாம் இந்த சமுதாயத்துக்கு நம்மை இன்னார் என்று காட்டிக்கொள்ளும் நம்முடையை ’பெர்சனாலிட்டி’யே ஒரு வேஷம்தான்! இது எப்படி இருக்கு?! ஆனால் இதுதான் உண்மை.

அந்த வேஷங்களிலேயே, அந்த வேஷங்களுக்காகவே வாழ்ந்து கடைசிவரை நாம் யார் என்று நமக்குத் தெரியாமலே போய்விடுகிறோம்! அதனால்தான் உண்மையான சந்தோஷம் என்பது நமக்கு எட்டாத கனியாகிவிடுகிறது. உண்மையான சோகமே அதுதான். ’நான்’ என்பது பெரும்பாலும் பொய்யான சுயமாக இருப்பதனால்தான் ’நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னதும் ‘இரண்டு பேருக்கு இடமில்லை’ என்று ரூமியின் ஆன்மிகக்கதையில் வீட்டுக்கு உள்ளிருந்து ஞானி சொல்கிறார். ‘நீதான்’ என்று சொன்னதும் அனுமதி கிடைக்கிறது. ஏன்? நான் வேறு, நீ வேறு என்ற நிலையிலிருந்து நானும் நீயும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டதால் ஞானக்கதவு திறக்கிறது. 

’நான் என்பதும் நீ என்பதும் என்ன’ என்று ரமணரின் கதையில் கேட்கப்படுவதும் அதையே சுட்டுகிறது. உண்மை என்பது காலம், மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்ததுதானே! எல்லா ஞானிகளும், எல்லாக் கதைகளும் ஒரே பாதையையே காட்டுகின்றன. எல்லாமே நிலவைச் சுட்டும் விரல்கள்தான்!

எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரியில் ஒரு துறைத்தலைவர் இருந்தார். அவர் இப்போது உயிரோடு இல்லை. பழைய முதல்வர் பணி ஓய்வு பெற்றதும் நிர்வாகம் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது. ஆனால் புதிய முதல்வரை அந்தத் துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் முதல்வராகும் தகுதியும் ஆசையும் அந்த துறைத்தலைவருக்கும் இருந்தது! அதில் மண் விழுந்ததாலோ என்னவோ அவருக்கு புதிய முதல்வரைப் பிடிக்காமல் போனது. அவரது துறையில் இருந்த உதவிப்பேராசிரியர் ஒரு விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை எழுதி, பெறுநர் என்று புதிய முதல்வரின் பெயரைப் போட்டார். அவன் பெயரைப் போடாதே என்று அந்த உதவிப்பேராசிரியரிடம் விதண்டாவாதம் செய்தார் துறைத்தலைவர்! ’He is not our principal’  என்று எல்லாருக்கும் கேட்கும்படி சப்தம் போட்டார்! கடைசியில் அவருடைய விடுப்பு விண்ணப்பக் கடிதத்தில் புதிய முதல்வரின் பெயரை அவரே போடவேண்டி வந்தது!

அவ்வளவு டென்ஷன், அவ்வளவு கொதிப்பு, அவ்வளவு சப்தம், அவ்வளவு வெறுப்பு, -- எல்லாம் அத்துறைத்தலைவரின் பொய்யான நானுடைய வெளிப்பாடுகள்! தென்னை மரம் உயரமாகத்தான் இருக்கும். வாழை மரம் அப்படி வளராது. வானம் மேலேதான் இருக்கும். பூமி கீழேதான் இருக்கும். மாற்றி இருக்க முடியாது. இருந்தால் மனிதர்கள் வாழ முடியுமா? ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை மாற்ற முடியாது. மாற்றவும்  கூடாது.

உயரமாக இருந்தால் ஜெயித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அது ஒரு காம்ப்ளான் நம்பிக்கை. காம்ப்ளான் குடிக்கக் குடிக்க காம்பளான் குப்பியிலிருந்த காம்ப்ளானின் உயரம்கூடக் குறையவே செய்யும்! உயரம் என்பது உடல் சம்பந்தப்பட்டதே அல்ல என்பது பலருக்குப் புரியவில்லை. ராபர்ட் வாட்லோ என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவர் எட்டடிக்கு மேல் உயரமாக இருந்தார். இல்லினாய்ஸ் நகரின் ராட்சசன் என்று அவர் வர்ணிக்கப்பட்டார். ஆனால் என்ன பயன்? பாவம் 22 வயதில் இறந்து போனார்.

அறிஞர் அண்ணா, லால் பகதூர் சாஸ்திரி, டெண்டுல்கர், கவாஸ்கர், ஆமிர் கான், நெப்போலியன் போன்றவர்களெல்லாம் குள்ளமானவர்கள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த உயரங்களை வரலாறு பெருமையுடன் பதிவு செய்து வைத்துள்ளது. உயரம் என்பது உருவத்தில் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய மிக உயர்ந்த மனிதர்கள் அவர்கள். நான் என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர்கள். பொய்யான நானிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள். ’முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்ச ரூபாய் கடிகாரமும் சரி, ஒரே நேரம்தான் காட்டும்’ என்று சொன்னாரே ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் ’நான்’ பற்றிய உண்மையைக் கடைசிநேரத்தில் புரிந்துகொண்டவர்.

நாமும் பொய்யான சுயத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். அல்லவா?

இன்னும் தாண்டுவோம்…

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close