[X] Close

தொங்கட்டான் - 26 : திருவாரூருக்கே வந்துடுறோம்!


thongattan-26-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 03 Sep, 2018 12:36 pm
  • அ+ அ-

 ’முருகேசு மாப்பிள்ளை திடுதிப்பென்று தருப்பு கேட்டுவிட்டார். எங்கேன்னு போயி அவரு கேட்ட தருப்பை நான் தயார் செய்வேன்.  பாப்பாத்திக்கிட்டேதான் கேக்கணும். அவ வானுக்கும் பூமிக்கும்ல குதிப்பா... ம்.. என்னதான் நடக்கட்டுமே, தங்கச்சி  கோகிலாவுக்கும்  முருகேசு மாப்பிள்ளைக்கும் நம்மள விட்டா வேறு யாருதான் ஒதவி செய்வா...’ வாய்க்குள் முனகிக்கொண்டான் பக்கிரி.

 வெளியில் யாருக்கும் தெரியாது என்று பக்கிரி முனகிக்கொண்டாலும் அவனது முனகலில் சாரம் கொஞ்சநஞ்சம் பாப்பாத்திக்குப் புரிந்துதான் போனது.

‘’என்னங்க... ஒங்க தங்கச்சி புருசன் எதுக்கு வந்திருக்காராம். பொண்டாட்டியோட வந்திருக்காரு. அப்படில்லாம் சட்டுப்புட்டுன்னு வந்திட மாட்டாரே அந்த மனுசன். இப்ப என்னவாம்...’’ பாப்பாத்தியின் பேச்சு வம்பு வளர்க்க ஆகுதியாய் கொழுந்துவிட்டெழுந்து நிற்பது பக்கிரிக்கு நன்றாகவே தெரிந்தது.

ஆனால் மனசுக்குள் இருக்கிற கொந்தளிப்பை வாய்வாசல் வழியே துப்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த பக்கிரி, ‘’ஆமாம் பாப்பா, முருகேசு மாப்பிள்ளைக்கு தொழில் படுத்திடுச்சாம். அதான் திருவாளூருக்குப் போயி  புதுசா பட்டறப் போட்டு பொழைச்சிக்கலாம்னு பாக்கறேன்னார்...’’

‘’அதுக்கு ஏன்  ஒங்களத் தேடி வந்திருக்காரு...?’’

‘’சொந்தபந்தம்னு நம்பி வந்து ஆலோசனை கேக்க வந்திருக்காரும்மா...’’

‘’பணம் காசு கேட்டு வந்திருப்பாரு. வெறென்ன ஆலோசனை வேண்டி கெடக்கு... அதான் புளி போட்டு வெளக்குன செம்படம் போல புருசன் பொண்டாட்டியுமா வந்து நிக்கிறாங்க... தெரியாதா எங்களுக்கு?’’ 

‘’ஆமாண்டி பணம் காசு வேணும்னுதான் வந்திருக்காங்க... நாமதான் எதாச்சும் பாத்துக் குடுக்கணும்!’’

‘’என்னாத்த குடுப்பீங்களாம். கடவுடன் வாங்கி வயல்ல கொண்டுட்டுப் போயி காசெல்லாம் போட்டிருக்கு. அது வெளஞ்சி வந்தாதான் போச்சி. இதோ கழுத்துல கெடக்கிற தாம்புச் செயின்ல தாலியும் ரெண்டு குண்டும்தான் கெடக்கு... அதுல போட்டிருந்த  நாலு கிராம்  தங்கக் காசை வித்துட்டுத்தான் பாக்டாம்பாஸ் ஒரம் வாங்கி வயலுக்கு  தெளிச்சீங்க... மிச்சம் என்னா வெச்சிருக்கீங்க, அவங்களுக்கு குடுக்க?’’ 

பாப்பாத்தி சொல்வதில் நிறைய நிஜம் இருந்தது.

இப்போது என்ன செய்வது என்று பக்கிரிக்குத் தெரியவில்லை. விழி பிதுங்கி நின்றான். மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

*** *** ****

ர அலமாரியில் வைத்திருந்த எளங்காடு, நாயங்கரும்பு வயல்களின் பத்திரத்தைத் தேடினான் பக்கிரி. அவன் அந்தப் பத்திரங்களைத் தேடும்போதே பாப்பாத்தி அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை கணக்குப்பண்ணிவிட்டாள்.

’என்னதான் செய்கிறான் இந்த மனுசன்...’ என்று எதுவும் வாய்வார்த்தையாக பேசாமல் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள்.

பக்கத்தில் இருந்தபடியே தான் செய்கிற காரியத்தை நோட்டம்விட்டுக்கொண்டிருந்த பாப்பாத்தியை கை சாடையாகவே அருகே அழைத்தான்.

அவளும் அவன் பக்கத்தில் போய் நின்றாள்.

‘’பாப்பா இந்த சென்னைக்கா,  பொழக்கட வயலோட தாய் பத்திரமெல்லாம் பத்திரமாயிருக்கு. ஆனா நாயங்கரும்பு, எளங்காடு வயலோட தாய் பத்திரத்தைக் காணமே... பாத்தியா?’’ என்றான் அவளிடம்.

‘’இப்போ அதெல்லாம் எதுக்காம்?’’

‘’இதொரு கேள்வியா இப்ப. எங்கருக்கு அதெச் சொல்லு இப்ப?’’என்றான் கொஞ்சம் அதட்டலாகவே.

‘’ம்... அதெல்லாம் மச்சி மேல இருக்குற டிரெங்கு பெட்டியில இருக்கு... மர அலமாரில கரையான் கிரையான் ஏறிச்சுன்னா பத்திரமெல்லாம் அம்போவாயிடும்னு ஒங்கம்மாதான் மேலே எடுத்து பத்திரப்படுத்தி வெச்சிருக்கு...’’

’’அப்டியா... சரி சேப்பரசன கூப்பிடு. மச்சி மேல ஏறி, அந்தப் பெட்டிய கீழே எறக்கச் சொல்லுவோம்..’’

சேப்பரசன் வந்தான். அவனிடம் ஏணி எடுத்துவரச் சொன்னான் பக்கிரி.

மூங்கில் ஏணி எல்லா வீடுகளிலும் இருக்காது. தெருவுக்கு நாலஞ்சு வீடுகளில்தான் இருக்கும். எப்போதும் ஏணி யார் யார் வீட்டுக்கோ இரவலாக போய்க்கொண்டே இருக்கும். யாரும் யாருக்கும் ஒத்தாசை செய்வார்கள். இல்லாத  சாமான்களை அங்கே பரணில்தான் வைப்பார்கள். 

‘’நம்ம வூட்டு ஏணி நாட்டாம்பி வூட்டுக்கு எரவ போயிருக்கு..’’ என்கிற தகவல் சொன்ன சேப்பரசனை கடிந்துகொண்டான் பக்கிரி.

‘’டேய்... போயி எங்கிருந்தாலும் கேட்டு வாங்கிட்டு வாடா.. இங்கருக்கு அங்கருக்குன்னு வெவரம் சொல்லிட்டுருக்கான் கம்னாட்டி...’’

நாட்டாம்பி வீட்டுக்கு ரெண்டு கால் பாய்ச்சலாக ஓடினான் சேப்பரசன்.

ஏணி வந்தது.

ஏணியை எரவாணத்தில் சாத்தி... அதில் கிடுகிடுவென  மச்சிக்கும் ஏறினான் சேப்பரசன். மச்சியில் இருந்த அந்த டிரெங்க் பெட்டியை  கீழிறக்கினான். அதை பத்திரமாக பக்கிரியும் பாப்பாத்தியும் கைக்கொடுத்து வாங்கி,  கீழிறக்கினார்கள்.

டிரெங்க் பெட்டியில் இருந்த நாயங்கரும்பு, எளங்காடு வயல்களின் தாய் பத்திரத்தைத் தேடியெடுத்தான் பக்கிரி. அவன் பத்திரத்தைத்  தேடியெடுத்தபோது முகம் அநியாயத்துக்கு கோணிக்கொண்டது  பாப்பாத்திக்கு.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்துபவனாக பக்கிரி இல்லை.

அந்த தாய் பத்திரங்களை எல்லாம் எடுத்து ஒரு ஜவுளிக் கடை பைக்குள் வைத்துக்கொண்டு குருந்துப்பிள்ளையைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றான்.

குருந்து பிள்ளைதான்  அந்தக் கிராமத்தில் இதுபோல வயல், வரப்பு, கொல்லைகளின் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு கடன் கொடுப்பவர்.

பக்கிரி நீட்டிய தாய் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் குருந்து பிள்ளை.

அந்தப் பணத்தில் ஒரு ஆயிரம் ரூபாயை தனக்கென்று  தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, நாலாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் முருகேசு மாப்பிள்ளையிடம் கொடுத்தான் பக்கிரி.

அண்ணன்காரன் தனது புருசனிடம் கொடுத்த பணத்தை தான் வாங்கி வைத்துக்கொண்ட கோகிலா... அண்ணன்காரனைப் பார்த்து கேவலுடன் கையெடுத்துக் கும்பிட்டு ‘’அண்ணே நீ செய்ற இந்த ஒதவிய மறக்கவே மாட்டேண்ணே.... நீ நல்லாயிருக்கணும்ணே...’’என்றாள்.

இதை எல்லாவற்றையும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்த பாப்பாத்தி எதுவும்  பேசாமல் இருந்தாள். அவளுக்குத் தெரியும், பக்கிரி ஒன்றில் மனசு வைத்தால் அதை முடிக்காமல் கண் தூங்க மாட்டானென்று.

கோகிலாவும் முருகேசு மாப்பிள்ளையும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வடவேருக்கு புறப்பட்டார்கள்.

*** *** ***

க்கிரி திருவாரூருக்குச் சென்றவன் விஜயபுரம் எல்லையம்மன் கோயில் தெருவுக்குச் சென்று முருகவேல் தகட்டாலையில் பாலுச்சாமியை பார்க்கப் போயிருந்தான்.  

பயல் கொஞ்சம் நீண்டு போயிருந்தான். அங்கங்கே சதை வைத்து பார்க்க புஷ்டியாக இருந்தான். 

கஸ்தூரி நன்றாக சாப்பாடு போடுகிறது என்று மனசுக்குள் கஸ்தூரியைப் பாராட்டிக்கொண்டான் பக்கிரி.

பொதுவாக பத்தர்கள் வீட்டில் தங்கி  நகை வேலை கற்றுக்கொள்ளும் பட்டறக்குடத்தானுக்கு அந்த பத்தர்களின் வீட்டுக்காரப் பெண்கள் அவ்வளவாக சோறுத் தண்ணியைக் காட்ட மாட்டார்கள். இட்லியை பார்ப்பதே பூர்வ ஜென்ம லாபமாகத்தான் இருக்கும். அப்படியே இட்லி வந்தாலும் நாலு இட்லிக்கு மேல் தட்டுக்கு வரவே வராது. பெரும்பாலும் பட்டறக்குடத்தான்களுக்கு காலை உணவு என்பது பழைய சோறுதான். அதுவும் அந்த எவர்சில்வர் சட்டியில் வழிய வழிய தண்ணிதான் இருக்கும் சோற்றை  தேடித்தான் எடுக்க  வேண்டும்.  வாசனைக்குக் கூட மோர் தயிர் ஊற்ற மாட்டார்கள். 

‘என்ன செய்வது? நாம் நகை வேலை கற்றுக்கொள்ளத்தானே வந்திருக்கோம்... மூக்கு முட்ட சாப்பிடவா வந்திருக்கோம்...’ என்கிற நினைப்பில்  வேலை கற்றுக்கொள்ள வந்த பையன்கள் இருப்பார்கள். ஆனால் அது போன்ற பத்தர் வீட்டுப் பெண்மணிகளைப் போல அல்லாமல்  பாலுச்சாமியை கஸ்தூரி நன்றாக வைத்துக்கொண்டது. நன்றாக சோறுபோட்டு, தன்னுடைய சொந்தப் பிள்ளை மாதிரியே வளர்த்தது. அந்த வகையில் பக்கிரிக்கு மகன் பாலுச்சாமியைப் பற்றிய கவலைவிட்டது.

’’டேய் பாலு, நம்ம கோகிலா அத்தையும் முருகேசு மாமாவும் வடவேர்லேர்ந்து திருவாளூருக்கு வரப் போறாங்களாம். வாடகைக்கு  வூடு பார்த்துட்டுக்காங்கடா.  இங்கதான் எங்கேய்யோ முருகேசு மாமா பட்டற வைக்கப் போறாருடா...’’ என்றான் பக்கிரி.

‘அப்படியாப்பா... அப்டீன்னா  கோக்கி அத்தைய அடிக்கடி  போயி  பாக்கலாம்...’’ என்றான் பாலுச்சாமி.

‘’ஆமாண்டா... அவுங்க முன்னாடி வரட்டும்... கொஞ்ச நாளு கெழிச்சு நானும் அம்மாவும் திருவாளூருக்கே வந்துடறோம்,,,’’ என்றான் பக்கிரி.

’கொஞ்ச நாளு கெழிச்சு நானும் அம்மாவும் திருவாளூருக்கே வந்துடறோம்,,,’’ என்று  யதேச்சையாக  மகனிடம் தான் சொன்ன விஷயம்.... திரும்பத் திரும்ப பக்கிரியின் மனசுக்குள் ஊர்வலம் போய்கொண்டே இருந்தது.

-  தொங்கட்டான் அசையும்.... 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close