[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 22 - குழப்பம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 31 Aug, 2018 23:14 pm
  • அ+ அ-

”ராம் வர்ற புதன் கிழமை ஸ்டில் ஷூட். நாளைக்கு காஸ்ட்யூமர் கிட்ட அளவு சொல்லிரு. நித்யாவுக்கு எடுத்தாச்சு.. செட் ஃபயர்ல போட்டிருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என ராமராஜ் லேசான பதட்டதோடு பேசினார். வருவதாய் சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்த போது போன் அடித்தது. நித்யா.

“சொல்லு நித்யா”

“புதன்கிழமை ஸ்டில் ஷூட்டாம். ராமராஜ் சார் சொன்னாரா?. உனக்கு சொல்லாம இருப்பாரா.. ஹீரோவாச்சே” என்று கிண்டல் தொனிக்கும் குரலில் பேசினாள்.

எதிர் முனையில் ஏதும் பதில்லாததை பார்த்து “ஏய். என்ன ஆச்சு? எக்ஸைட்டாவே இல்லை?” என்று ஆச்சர்யத்துடன் வினவினாள்.

“நான் ரொம்பவே குழப்பத்துல இருக்கேன் நித்து.”

நித்யாவுக்கு தன் பெயரை நித்து என்று சொன்னது பிடித்திருந்தது. “ஏய்.. எங்க திரும்ப சொல்லு பார்க்கலாம். சொல்லு ..சொல்லு” என்று பரபரத்தாள்.

“என்ன.. என்னத்த சொல்லச் சொல்லுறே?”

”இப்ப கூப்பிட்டியே செல்லமா.. அப்படி..”

“ம்ம்.. ஓ.. நித்துன்னா..” என்று சற்று வெட்கமாய் சிரித்தான். ராமின் கண்களுக்குள் அவளது முகம் எப்படி போகுமென்ற விஷுவல் ஓடியது. அவளைப் பற்றி நினைப்பது சற்றே சந்தோஷமாய் இருந்தாலும் அவனது தற்போதைய குழப்பம் அதை கொண்டாட முடியாமல் செய்து கொண்டிருக்கிறது என்பதை ராம் உணர்ந்தான்.

“என்ன ராம் சத்தத்தையே காணோம்?”

‘ஆமா ஸ்டில் ஷூட் பத்தி சொன்னாரு. அதான் யோசனையாவே இருக்கு.”

“இதுல என்ன யோசனை?”

“ஸ்டில் ஷூட் முடிச்சா.. விளம்பரம் பண்ண ஆரம்பிப்பாங்க.  விளம்பரம் பண்ணா ஸ்ரீதர் படத்துல சான்ஸ் கிடைக்காது.”

“ராம். நீ ராம்ராஜ் சாரா இல்லை ஸ்ரீதரான்னு முடிவு பண்ணிக்க வேண்டிய நேரம் வந்திருச்சுன்னு தோணுது. எது எப்படின்னாலும், உன்னை ஹீரோவா கன்ஸிடர் பண்ணி நாலு எடத்துக்கு அனுப்பி வளர்த்தவரே அவருதான். ஸோ..உன்னோட பர்ஸ்ட் பிரபரன்ஸ் அவரோட படமாத்தான் இருக்கணுங்கிறது என்னோட அபிப்பிராயம். அது மட்டுமில்லாம நீ இருக்குறதுனாலத்தான் நானும் நடிக்க ஒத்துக்கிட்டேன்” என்றாள் சீரியஸாய்.

“நீ சொல்றது உண்மைதான். பட்.. நிஜத்துல ஸ்ரீதர் கொஞ்சம் ட்ரெண்டுல உள்ளவன். பட்ஜெட் பெரிய படம். ராம்ராஜ் சாருக்கு இந்த படம் சின்ன பட்ஜெட். படம் எடுக்குறது ஒரு கட்டம்னா. அதை ரிலீஸ் பண்றது இன்னொரு கட்டம். அதை இவங்க ஒழுங்கா பண்ணுவாங்களான்னு யோசனையாவே இருக்கு”

”த பாரு ராம். நீ யார் படத்துல நடிக்க நினைச்ச போதே  ஸ்ரீதர் படத்துல நடிக்கிறதுக்காக பொறந்து வரலை. அத்தோட அவன் உன்னை மட்டுமே கன்சிடர் பண்ணல. நாலைஞ்சு ஹீரோவோட பேசி பார்த்துட்டு அங்க வேலைக்கு ஆகலைன்னு தன உன்னை கன்ஸிடர் பண்ணியிருக்கானே தவிர இன்னும் கன்பர்ம் பண்ணலை.

அத்தோட அவன் கொஞ்சம் நஞ்சம் ஆட்டிட்யூட் காட்டுற ஆளில்லை. வச்சி செய்வான். கொஞ்சம் கொழைஞ்சாலே. இது எல்லாத்தையும் மீறி யோசி. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய். பட் குழப்பாதே.. மத்தவங்களுக்கு இடைஞ்சலா போயிரும்.” என்று சொல்லிவிட்டு சிறிது மெளனத்தை தொடர்ந்து “நீயே யோசிச்சு பாரு நான் வேற யாரோடயாவது ரொமான்ஸ் பண்றது நல்லாவா இருக்கும்” என்று சொல்லி சிரித்துவிட்டு போனை வைத்தாள்.

ராமுக்கு அவளின் கிண்டல், கேலி எதுவும் மண்டைக்கு ஏறவில்லை. ஸ்ரீதர் படம் ஏதோ அவனை விட்டில் பூச்சியாய் இழுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு புரிந்தாலும் அதை விட மனசு கேட்க மாட்டேன் என்கிறது ஏன் என்று புரியவில்லை. ஸ்ரீதருக்கு போன் அடித்தான். எடுக்கவில்லை. சி

றிது நேரத்தில் மெசேஜ் வந்தது. “டூ கால் காசி ஃபார் பர்தர்” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் ஸ்ரீதர். கடுப்பாய் இருந்தது. படத்தின் ஹீரோவாகப் போகிறவனுக்கான மரியாதை இதுவா? என்று கோபம் வந்தது. அதே நேரத்தில் சட்டென தணிந்து ஏதாவது பிசியா இருப்பான் போல எனவும் தோன்றியது.

அமைதியாய் மூச்சை இழுத்துவிட்டான். புதிய ஆக்ஸிசன் மூளை வரைக்கும் ஏற, லைட்டாய் புத்துணர்வு ஏற்பட்டதாய் உணர, இன்னும் நான்கைந்து முறை அதையே செய்தான். சற்றே ரிலாக்சானான். போனை எடுத்து ராம்ராஜுக்கு அடித்தான்.

“சொல்லு ராம்”

“சார்.. ஒரு சின்ன ஹெல்ப்”

“என்னா ராம் சொல்லு”

“ஒண்ணுமில்லை. வர்ற புதன் கிழமை ஊருல இருக்க மாட்டேன். ஒரு முக்கியமான ட்ராவல். பேமிலி விஷயமா. ஒரு ரெண்டு நாள் ஸ்டில் ஷூட்டை போஸ்ட் போன் பண்ண முடியுமா?” என்று கேட்ட அவன் குரலில் அனுமதி கேட்கும் தொனியில்லை. பண்ணுங்க என்கிற ஆர்டர் இருந்ததை ராம்ராஜ் உணரவில்லை.

“பேமிலி மேட்டராப்பா.. அப்ப சரி.. அடுத்த வாரம் போஸ்ட் போன் பண்ணிரலாம்.” என்று மிக சகஜமாய் சொல்லிவிட்டு போனை வைத்தார். ராம் சற்றே ரிலாக்ஸாகி மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.

******************************

“ஏம்பா ராம் போனை கட் பண்றே?”

“ஹீரோவா கமிட் ஆக்கப்  போறோம்னு அட்வான்டேஜ்  எடுக்க ஆர்மபிப்பான். கொஞ்ச தூரத்துலேயே வச்சிக்கணும். அவனை ஹீரோன்னு நாம தான் செலக்ட் செய்திருக்கோம். இன்னும் பிக்ஸ் ஆகலை. நடுவுல வேற யாராச்சும் நல்ல் ஆள் கிடைச்சா இவனை கடாசிட்டு போய்ட்டே இருக்கணும்.

க்ளோஸாயிட்டா அத பண்ண முடியாது. கமிட் ஆயிருவோம் அதனாலத்தான்” என்று சொல்லிவிட்டு, கார்க்கியைப் பார்த்து, “நீ ஒரு எக்ஸெல் ரிப்போர்ட் எடு. எத்தனை சீன் இண்டோர், அவுட்டோர். காஸ்டியூம், செட் ப்ராப்பர்டி, ஆர்டிஸ்ட், ஜூனியர் ஆர்டிஸ்ட் என எல்லாத்தையும் சீன் வாரியா, எடு.” என்றான்.

“ரெடியா இருக்கு சார்” என்ற கார்க்கியை ஆச்சர்யமாய் பார்த்தான் ஸ்ரீதர்.

“எப்படி?”

“நீங்க ஸ்கிரிப்ட் படிக்க சொன்னவுடனேயே படிச்சி  அதை டேட்டா எடுக்க ஆர்மபிச்சிட்டேன். அத்தோட, செல்டெக்ஸுலேயே எல்லா ஆப்ஷனும் இருக்கு சார். ஏன் ஸ்டோரிபோர்ட் கூட போட்டுக்கலாம். அவ்வளவு எஃபீஷியண்டா சப்போர்ட் பண்ணுது இந்த சாப்ட்வேர். இருந்தாலும் அதை தனியா எக்ஸெல் சீட்டுல போட்டு வச்சிட்டேன்.

டேட்ஸ் காம்பினேஷன், யார் யார் என்னைக்கு வேணும். எத்தனை நாள் வேணும் இப்படி எல்லாமே டேட்டாவ வச்சிட்டேன் ஒரு வாட்டி பார்த்துருங்க” என்று சொன்னபடி கார்க்கி எக்ஸெல்ஷீட்டையும் செல்டெக்சையும் ஓப்பன்  செய்து காட்ட, எல்லா விஷயங்களையும் உள்வாங்கி, மிக அருமையாய் தொகுத்திருந்தான். சின்னச் சின்ன க்ரெக்‌ஷன்கள் தான் இருந்தது.

அதை சொன்னான். சொன்ன மாத்திரத்தில் எக்ஸெல் பார்முலாவோடு அதை சரி செய்தான். ஸ்ரீதர் சொன்னதை அவுட்புட்டாய் காட்டினான். ஸ்ரீதர் அவனையும் அறியாமல்  “குட்..குட்” என்று தட்டிக் கொடுத்ததை காசி கவனித்தான்.

“எல்லா க்ரெடிட்டும் உங்களுக்குத்தான் சார். நான் வெறும் டேட்டா பொறுக்கி இதுல  போட்டிருக்கேன். பட் நீங்க உங்க ஸ்கிரிப்ட்ல எல்லாத்தையும் டீடெயில் பண்ணீயிருக்கீங்க. அதான் ஈஸியா செட் பண்ணிட்டேன்” என்றான் கார்க்கி.

ஸ்ரீதருக்கு சற்றே நிம்மதியாய் இருந்தது. இதை யாரிடம் காட்டினாலும் அசந்து போய்விடுவார்கள். எத்தனை தெளிவான ப்ரீ ப்ரொடக்‌ஷன் என. முக்கியமாய் சேதுவிடம் காட்ட வேண்டும். ஏனென்றால் இங்கே அலுவலகம் தொடங்கியதிலிருந்து “ஸ்டேஷனரி ஏதாச்சும் வேணுமா? வேணுமா” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

அனைவரிடமும் லேப்டாப் , இண்டர்நெட் இணைப்பு வைஃபையுடன் இருந்தாலும் எல்லா பரிமாற்றங்களும் ஆன்லைனிலேயே நடக்க, “ஒரு டஜன் பேனா, மார்க்கர், ஒரு குயர் பேப்பர் மட்டும் போதும் என்று வாங்கி வைத்துக் கொண்டான். அவர் கிளம்பும் போது “சார். நெட் என்ன பேக்கேஜுல இருக்குனு சொல்லுங்க.. ஸ்பீடும், பேக்கேஜும் நல்லதா போடுங்க யூஸ் ஆகும்” என்றான்.

சேது மேலிடத்தில் என்ன சொன்னார் என்றே தெரியவில்லை. அடுத்த நாள் சுரேந்தரிடமிருந்து போன் வந்தது.

“என்ன ஸ்ரீதர் ஒர்கெல்லாம் எப்படி போவுது?”

“நல்லா போயிட்டிருக்கு சார்”

“இண்டர்நெட் பேக்கேஜ் எல்லாத்தையும் மாத்த சொன்னீங்களாம்?”

“ஆ.. ஆமா சார். ரொம்ப ஸ்லோவா இருக்கு. அத்தோட மாசத்துல பாதி வரும் போதே பேக்ஜேஜ் முடிஞ்சிருது அதான்”

“ஆளாளுக்கு லேப்டாப்ல படம் பாக்குறதுக்கு எதுக்கு பேக்கேஜ் மாத்தணும்” என்றார். சட்டென கோபம் வந்தது.

“சார்..  படம் பாக்குறதுக்காக இல்லை எங்க வேலை எல்லாத்தையும் ஆன்லைன்ல தான் பண்ணுறேன். மெயில் டேட்டா ஆக்ஸஸ்னு தான் வச்சிருக்கோம் :

“ஸ்ரீதர் நானும் நாலு படம் எடுத்திருக்கேன். ஒவ்வொரு படத்துக்கு இருநூறு முன்னூறு பேனா, இருபது மூப்பது கொயர் பேப்பர் எல்லாம் செலவு செய்திருக்கோம். பேப்பர் செலவில்லாமல் படமெடுக்கிறதுக்கு எப்படின்னெல்லாம் எனக்கு பாடமெடுக்காதீங்க” என்றார்.

இவனெல்லாம் என்னத்த வெளிநாட்டுல இருந்துட்டு பிஸினெஸ் பண்ணுறான் என்று ஸ்ரீதருக்கு தோன்றியது. அவருக்கான பதில் இப்போது கார்க்கியின் லேப்டாப்பில் இருக்கிறது. அதை அவருக்கு காட்டி அவருடய ரியாக்‌ஷன் எப்படி போகிறது என்று பார்க்க ஆசையாய் இருந்தது.

“கார்க்கி இதை அப்படியே என் மெயிலுக்கு அனுப்பிருங்க” என்றான் ஸ்ரீதர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 21 - https://bit.ly/2oA8IHS

பகுதி 20 - https://bit.ly/2o3q1kD

பகுதி 19 - https://bit.ly/2N1J3lW

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close