[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 27: என்னடா பொல்லாத வாழ்க்கை...


kalamellam-kannadasan-27

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 31 Aug, 2018 10:17 am
  • அ+ அ-

படம்    : தப்பு தாளங்கள்
இசை    : விஜயபாஸ்கர்

குரல்    : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
* * *

என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யாரை நெனச்சி நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இதுதாம்பா
நம்ப நிலை தேவலையப்பா
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சும் பார்த்துப்புட்டேன் விடியலே
பொழைக்க வேறு வழி தெரியலே
நடந்தேன் நான் நினைச்ச வழியிலே
இதுக்கு காரணம்தான் யாரு
படைச்ச சாமியைப்போய் கேளு
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

நான் செய்யறேன் தப்புத்தண்டா
வேற வழி ஏதும் உண்டா
ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா
ஓடிப் போயி என்னிடம் கொண்டா
கிடைச்சா கிடைக்கிறவரைக்கும் வாரு
பிடிச்சா திருட்டுப் பட்டம் நூறு
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
* * *

வறுமையினால் உடலை விற்று வாழும் இருமல் பெண்ணாக சரிதா. விரலுக்கு, கைக்கு, காலுக்கு, ஆளையே `காலி' செய்ய என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்து பிழைப்பு நடத்தும் முரடனாக ரஜினி.

வாடிக்கையாளனோடு சரிதா இருக்கும் நேரம், அவரது குடிசைக்குள் அதிரடியாக (போலீசுக்கு பயந்து) நுழையும் ரஜினி, ``இன்னும் ரெண்டு மணிநேரம் இங்கதான் இருப்பேன். கழுத்துல இருக்குறது சைக்கிள் செயின். இப்போதான் முடிச்சிட்டு வரேன்'' என்று சொல்ல... வாடிக்கையாளன் கெட்டவார்த்தையால் ரஜினியைத் திட்டியபடி வெளியே செல்கிறார்.

``அவன் உன்னைத் தே... பயலேன்னு சொல்லிட்டுப்போறான். உனக்குக் கோபமே வரலையா?'' என்கிறார் சரிதா.

`நான் அதானே...'' என்கிறார் ரஜினி.

ஆமாம்... பாலசந்தர் படம்தான். தன் படங்கள் முழுக்க சாதி, மத அச்சுறுத்தலுக்கு எதிராகவும், பெண்ணுரிமைக்காகவும், உறவுச் சிக்கல்களையும் அலசிய, இயக்குநர் சிகரத்தின் படம். தப்பு தாளங்கள். தலைப்பைக் கவிதையாகவும் தலைப்பிலேயே கதையையும் சொல்லக்கூடியவர். படத்தின் பாடல்கள் கவியரசு கண்ணதாசன். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் `தப்புத் தாளங்கள்... வழி தவறிய பாதங்கள்...' என்னும் பாடலோடு தன் ராஜபாட்டையை ஆரம்பிக்கிறார்.

படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பிரதிபலிப்பதாகவும், அவரது தரப்பின் நியாயத்தைச் சொல்வதாகவும் அமைந்த பாடல் `என்னடா பொல்லாத வாழ்க்கை...' என்னும் பாடல். ரஜினியின் அநாயாசமான நடிப்பாலும், `இதுக்குப்போயி அலட்டிக்கலாமா' என்கிற எஸ்.பி.பி.யின் அலட்சியமான குரலாலும் பெரும் புகழ் பெற்ற பாடல்.

`யாரை நெனச்சி நம்ம பெத்தாளோ அம்மா...' என்ற பாடலின் இரண்டாம் வரியை அவ்வளவு எளிதாக யாராலும் கடந்து சென்றுவிட முடியாது. எப்படி இப்படி ஒரு வரியை அவரால் எழுதமுடிந்தது என்பது இன்னமும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, அப்படி இருக்கும் கணத்தில் யார் யாரை நினைப்பார்கள் என்பதை யார்தான் அறிவார்?ஆண் அப்படி இப்படியென எப்படியும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், தன்னுடைய கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனோடு இருக்கவேண்டும். அவனோடு உறவு வைத்துக்கொள்ளவேண்டும். அவனுக்காக பிள்ளை பெற்றுத் தரவேண்டும். காலம் முழுக்க அவனுக்காக சேவகம் செய்யவேண்டும். அவளுக்கென்று தனியே விருப்பு வெறுப்புகள் கிடையாது. `கல்லானாலும்... புல்லானாலும்' என்று பழமொழிகளுக்கு இடையே அடக்கி வைக்கப்பட்டது அவள் வாழ்வு. இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது சமூகம்.

எனில், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்கிறதா இந்தப்பாடல்? இல்லை. பெண் மனதால் இயங்குபவள். பெண்ணின் உடலோடு வாழ்வதல்ல வாழ்க்கை. அவளது மனதோடும் வாழவேண்டும். அவளது மனம், புத்தி, உயிர் என்று எல்லாவற்றோடும் நீக்கமற நிறைந்திருக்கவேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும்தான். என்றாலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள்தானே அதிகம்?

நல்லபடியாக இருப்பவர்களைக் கண்டால் `உனக்கென்னடா, ராஜா மாதிரி வாழ்க்கை' என்று சொல்வோம். முதல் சரணத்தில் அந்தக் கருத்தை வெடி வைத்துத் தகர்க்கிறார் கவியரசர். அரசர்களின் வாழ்க்கை அப்படி ஒன்றும் எளிதல்ல. அரண்மனையில் எத்தனை காலம் கழிக்கிறானோ, அதே அளவு காலத்தை அவன் போர்க்களத்திலும் கழித்தாகவேண்டும். காடாறு மாதம், நாடாறு மாதம் என்று... ராஜாக்களின் கதையே இதுதான். அதற்கு நம் நிலை எவ்வளவோ மேல்தானே?

``என்ன செய்தாலும் முன்னேறவே முடியவில்லை'' என்பவர்களிடம், ``பிழை உன்னிடம்தான் இருக்கிறது. இன்னும் முயற்சி செய். சரி செய்து கொள். வெற்றி வசப்படும்'' போன்ற அற்புதமான கருத்துகளை உதிர்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். ஒருவனால் முன்னேற முடியவில்லை என்றால் அவனிடம் பிழை இருக்கலாம். ஆனால் அவனிடம் மட்டும்தான் பிழை இருக்கிறதா என்ன? அவன்  (அவள்) அப்படி இருப்பதற்குப் பின்னணியில் இருக்கும் சமூகக் காரணிகளை எத்தனை அலட்சியமாக ஒதுக்கிவிடுகிறோம். இதற்கு என்னதான் செய்வது என்பதற்கான பதிலை நம்மைப் படைத்தவனிடம் போய்தான் கேட்கவேண்டும் என்கிறார் கண்ணதாசன்.`உங்களில் யார் உத்தமரோ அவர்கள் இந்தப் பெண்மணியின்மீது கல்லெறியுங்கள்' என்பது ஏசுபிரானின் புகழ்மிக்க வாசகம். அதையே நாயகனின் குரலில், `ஊருக்குள்ளே யோக்கியன் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களை என்னிடம் கொண்டு வா' என்கிறார் கண்ணதாசன். பிறரைக் குற்றம் சொல்லும் முன் நம் குறைகளையும் நினைத்துப் பார்க்கவேண்டும்தானே? ஆள்காட்டி விரலால் நாம் அடுத்தவனைச் சுட்டும்போது அதன் கீழ் உள்ள மூன்று விரல்களும் நம்மைச் சுட்டுவதை அறிவோம்தானே?

காரணங்கள் சூழ் உலகம் இது. எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் காரணங்கள் உண்டு. ஆனால் காரணங்கள் ஒருபோதும் நியாயங்கள் ஆகாது. நம்முடைய நியாயம் இன்னொருவருக்கு அநியாயமாகப் படும். அவருடைய நியாயங்களை நாம் ஏற்கமாட்டோம். பிறகு, நியாயம் என்பதுதான் என்ன? அது சமூக நலனைப் பொருத்தது. காரணம், எல்லா உயிர்க்கும் சொந்தமானது இந்த நிலம். நம்முடைய செயல்கள் இந்த நிலத்தை, சமூகத்தைப் பாழ் செய்வதாக இருக்கக்கூடாது. சமூக மாற்றம் என்பது தனிமனிதனிலிருந்து துவங்கவேண்டும். எனவே, நாம் ஒவ்வொருவரும் முதலில் சரிசெய்துகொள்ளவேண்டியது நம்மைத்தான்.

- பயணிப்போம்

 


Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close